திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -26

திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -26
Published on

"இசை மனிதகுலத்தை ஒன்று சேர்க்கிறது.  எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தவராக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான் என்று நிரூபிப்பது இசை."  ஜான் டென்வர்.

மிழ்த் திரை உலகின் சாதனைப் படங்களின் வரிசையில் "இதயக் கமலம்" படத்திற்கும் கண்டிப்பாக ஒரு இடம் கொடுக்கலாம்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி போன்ற உச்ச நட்சத்திரங்கள் கிடையாது.

அப்போதுதான் திரை உலகில் அறிமுகமாகி இருந்த ரவிச்சந்திரன் - கே.ஆர். விஜயா ஆகிய இருவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து - அதிவும் வண்ணத்திரைப்படமாக தயாரித்து ஒரு வெள்ளி விழப்படமாக கொடுக்க முடிந்தது என்றால் அது மகத்தான சாதனை தானே.

ரவிச்சந்திரன் - கே.ஆர். விஜயா ஆகிய இருவரையும் தவிர ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் என்றால் அது ஷீலா, ருக்மணி (நடிகை லக்ஷ்மியின் தாயார்) ஆகிய இருவர்தான் என்னும்போது அந்த வியப்பு அதிகமாகத்தான் செய்கிறது.

அந்த வெற்றிச் சாதனைக்கு சரியான பக்கபலமாக கே.வி. மகாதேவனின் பாடல்கள் அமைந்தன.

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் அனைத்தையும் காட்சிக்குப் பொருத்தமாக எழுதிக்கொடுக்க-அந்த வரிகளைப் பார்த்தவுடன் தானாகவே  கே.வி. மகாதேவனிடமிருந்து மெட்டுக்கள் துள்ளி வந்து விழுந்தன.

பாடல்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.

கதாநாயகன் ரவிச்சந்திரனுக்கு பி.பி. ஸ்ரீநிவாஸையும், இரட்டை வேடமேற்ற கே.ஆர். விஜயாவுக்கு பி.சுசீலா, எஸ். ஜானகி ஆகிய இருவரையும் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.

இரண்டாவது கதாநாயகியான ஷீலாவிற்கும் பி. சுசீலாவின் குரலில் ஒரு பாடல்.பாடல் 

"நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ"  -  பி.பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலாவின் இணைவில் ஒரு அருமையான டூயட். விறுவிறுப்பான இணைப்பிசையும் பாடலுக்கான மெட்டும் மனதை கவருகின்றன.

"தோள் கண்டேன் தோளே கண்டேன்" - பி.பி. ஸ்ரீநிவாஸின் கந்தர்வக் குரலில் பாடல் ஒலிக்க ஹம்மிங்கிலேயே அவரைத் தொடர்வார் பி.சுசீலா.  கேட்பவரை மயங்கவைக்கும் பாடலில் சரணத்துக்குச் சரணம் மாறும் இணைப்பிசையில் தான் எத்தனை பரிமாணங்கள்!

இப்போதெல்லாம் வெரைட்டி வெரைட்டி என்று பெரிதாகத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோமே அந்தச் சாதனைகளைச் சத்தமே இல்லாமல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கே.வி. மகாதேவன்.

இந்த ஒரு பாடலில் மட்டும் என்று இல்லை.  கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்களில் ஒன்றுக்கொன்று அவர் கொடுத்திருக்கும் வித்தியாசமான நுணுக்கங்களும் அசைவுகளும் "அட" என்று புருவங்களை உயர்த்தவைக்கும்.

"மேளத்தை மெல்லத்தட்டு மாமா - உன் தாளம் இப்போ சரிதானா" - எஸ். ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடலில் சரணங்கள் விருத்தமாகவும் பாடலாகவும் விரியும் அழகே தனி.

"மலர்கள் நனைந்தன பனியாலே"  -  மோகன ராகத்தில் மகாதேவன் அமைத்திருக்கும் இந்தப் பாடலின் அழகும் இனிமையும் வார்த்தைகளுக்கு அவர் கொடுத்திருக்கும் அழுத்தமும் ..  வருணிக்க வார்த்தைகளே இல்லை.

மோகன ராகத்தில் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் அமைந்திருந்தாலும் இந்தப் பாடல் முதலிடம் பெறும் முத்தான ஒரு பாடல்.

கதைப்படி மனைவி இறந்துவிட்டதால் அவள் நினைவாகவே வாழும் கதாநாயகனின் மனதுக்கு உற்சாகம் கொடுக்க அவனது முறைப்பெண்ணாக வரும் இரண்டாவது கதாநாயகி நடனமாடிப் பாடுவதாக ஒரு காட்சி.

அவள் ஆடிப்பாடும்போது அவளுடைய இடத்தில் கதாநாயகனின் மனக்கண் முன்னால் அவன் மனைவி தோன்றுவதாக காட்சி விரியும்.

இப்படிப்பட்ட சூழலில் அமைந்த பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதமே தனி.

முறைப்பெண் பாடும்போது ஒரு ராகத்திலும், அவனது கற்பனை நாயகி பாடுவதாக அமையும்போது வேறு ஒரு ராகத்திலும் அமைத்து ஒரே பாடலில் இரு வேறு சூழ்நிலைகளையும் வேறுபடுத்திக் காட்டி இருக்கிறார் கே.வி. மகாதேவன்.

ராகம் மட்டும் என்று அல்ல.  தாளக் கட்டும், இணைப்பிசையுமே மாறுபடும்.

"என்னதான் ரகசியமோ இதயத்திலே.." என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சியில் ஷீலா, கே.ஆர். விஜயா ஆகிய இருவருமே நடித்திருப்பார்கள்.  பி.சுசீலாதான் இருவருக்குமே பாடி இருப்பார்.

ஷீலா பாடுவதாக அமைந்த பல்லவியும், சரணங்களும் "காபி" ராகத்திலும்,  கே.ஆர். விஜயா பாடும் சரணங்கள் "திலங்" ராகத்திலும் முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்த பாடல் இது.

இப்படி எல்லாம் பாடல்கள் இருந்தாலும் படத்தின் பெயர் சொன்னாலே பளிச்சென்று செவிகளில் வந்து அலைமோதும் பாடல் "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடல் தான்.

"பாட்டைப் பார்த்ததுமே தானாகவே மெட்டு வந்து விழுந்த பாட்டு" என்று கே.வி. மகாதேவன் சிலாகித்துக் கூறிய பாடல் இது.

சுசீலாவின் தேன்குரலில் இனிமையாக ஒலிக்கும் இந்தப் பாடலின் இணைப்பிசையில் தான் சிதாரும், குழலும், வயலினும் தான் எவ்வளவு ரம்மியமாக தபேலாவுடன் இணைந்து மனத்தைக் கவர்கின்றன.!

படத்தில் பலமுறை இடம்பெறும் பாடல் இது.  தீம் சாங் என்பார்களே அது இந்தப் பாடல்தான்.  படம்  முடிவதும் இந்தப் பாடலுடன் தான்.

ஆகமொத்தம் "இதயக் கமலத்தில்" இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றளவும் வாடாமல் திரை இசை ரசிகர்களின் மனங்களை நிறைத்துக் கொண்டு மணம் வீசிக்கொண்டே இருப்பது மறுக்க முடியாத உண்மை.

மீண்டும் தேவர் பிலிம்ஸ்.

எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக "எங்க வீட்டுப் பிள்ளை" படத்தில் அவருடன் நடித்திருந்த ரத்னா நடிக்க இதில் இரண்டாவது கதாநாயகியாக கே.ஆர்.விஜயா.  இவர்களுடன் தேவர் பிலிம்சின் ஆஸ்தான நடிகர்களான அசோகன், எம்.ஆர்.ராதா, எம்.என். நம்பியார், நாகேஷ் - மனோரமா என்று திறமைசாலிகளின் அணிவகுப்பு.

படம்:  தொழிலாளி.

கவிஞர் மாயவநாதனின் கற்பனையில் ஒரு அருமையான டூயட் பாடல்.

"என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்." பாடல்.  டி.எம்.எஸ். - பி.சுசீலா இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடலின் சரணங்களில் சுசீலா பாடும் வரிகளை ஏற்ற இறக்கங்களுடன் அமைத்து அவரது குரலை பல பாவங்களில் சஞ்சாரம் செய்ய வைத்து ..   கேட்கும் நமக்கு "சுசீலாம்மா தான் என்னமா பாடி இருக்காங்க?" என்று தோன்றும்.  ஆனால் அப்படிப் பாடவைத்த பெருமைக்குரிய மகாதேவன் மட்டும் பின்னணியிலே தான் இருப்பார்.

"அழகன் அழகன் ஆணழகன்." என்று ஒரு பாடல்.  பி. சுசீலா - எஸ். ஜானகி இணைந்து பாடி இருப்பார்கள். 

பாடலின் பல்லவியை மேற்கத்திய இசையில் தொடங்கி,  அடுத்து வரும் சரணங்களில்  ஒன்றைக் கிராமிய மெட்டிலும், அடுத்ததை பஞ்சாபி கவாலி நடன மெட்டிலும் கையாண்டு கடைசியில் மீண்டும் மேற்கத்திய மெட்டிலேயே முடித்திருப்பார் கே.வி. மகாதேவன்.

"மலர்வது கண்ணுக்கு தெரியலே கொடி மலருது"  பாடல் விறுவிறுப்பான நடைக்காகவே கேட்கப்படவேண்டிய பாடல்.  டி.எம்.எஸ். - பி. சுசீலா பாடியிருக்கும் பாடல் இது. 

"கலை வந்த விதம் கேளு கண்ணே"  - பி.சுசீலாவின் குரலில் இனிமையாக ஒலிக்கும் பாடல்.      

என்றாலும் இன்றளவும் காலங்களை வென்று நிலைத்திருக்கும் பாடல் "ஆண்டவன் உலகத்தின் முதலாளி" என்று தொடங்கும் பாடல்தான். 

கே.வி. மகாதேவனின் இசையில் மென்மையாக மனதை வருடும் ஒரு பாடலை கம்பீரக் குரல் மன்னன் டி.எம். சௌந்தரராஜனை எந்த அளவுக்கு மென்மையாக்க முடியுமோ அந்த அளவுக்கு மென்மையாக்கி குறைந்த அளவுக்கு இசைக் கருவிகளைப் பயன்படுத்தி கே.வி. மகாதேவன் அமைத்துக் கொடுத்த வெற்றிப்பாடல் தான் "ஆண்டவன் உலகத்தில் முதலாளி" பாடல்.

ஆரம்பத்தில் மகாதேவன் அமைத்த பாடலைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு லேசான சந்தேகம் தோன்றியது.  இந்தப் பாடல் படத்தில் எடுபடுமா என்ற சந்தேகம்தான் அது.

ஆனால் மகாதேவன் உறுதியாக நின்றார்.  "இந்தப் பாட்டு கண்டிப்பா ஹிட் ஆகும்.  நீங்க தைரியமா வாயசைச்சு நடிங்க." .- என்று எம்.ஜி.ஆருக்கு உற்சாகமூட்டி அவரது சந்தேகத்தைப் போக்கினார் அவர்.

அவர் சொன்னது நடந்தே விட்டது.

தொழிலாளி படம்தான் ரசிகர்களிடம் எடுபடவில்லையே தவிர இந்தப் பாடல் இன்றளவும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக அமைந்து விட்டது. 

அதுமட்டும் அல்ல.  தனது மனம் கவர்ந்த பாடல்களாக மக்கள் திலகம் அவர்கள் தேர்வு செய்த பத்துப் பாடல்களில் இந்தப் பாடலும் அடக்கம். 

மீண்டும் மக்கள் திலகத்தின் படத்தில் அவருடன் இணைந்தார் கே.வி.மகாதேவன்.

படம் : தாழம்பூ.

எம்.ஜி.ஆர். - கே.ஆர்.விஜயா, அசோகன், மணிமாலா, நம்பியார், எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் இன்றளவும் இனிமையான பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனத்தைக் கவர்ந்தார் கே.வி.மகாதேவன்.

“ஏரிக்கரை ஓரத்திலே எட்டுவேலி நிலமிருக்கு" - டி.எம்.எஸ். - பி.சுசீலா.

"தாழம்பூவின் நறுமணத்தில் தரமிருக்கும் நல்ல தரமிருக்கும்" - டி.எம். எஸ். - சுசீலா குழுவினருடன் பாடிய பாடல்.

"தூவானமிது தூவானமிது தூவானம்"  -  பாடலில் விறுவிறுப்பான அமைப்பு தாளமிடவைக்கும் வண்ணம் அமைந்த பாடல். 

டி.எம்.எஸ். குரலில் துவக்கத்திலேயே உச்சத்துக்குக் கொண்டு செல்லும் தன்னம்பிக்கைப் பாடல் "எங்கே போய்விடும் காலம். அது என்னையும் வாழவைக்கும்"  பாடல்.  வாலி அவர்களின் வைரவரிகள் தன்னம்பிக்கையை அழுத்தமாக பதியன் போடுகின்றன.   

ஆனாலும் ..  தயாரிப்பில் நேர்ந்த காலதாமதமோ என்னமோ "தாழம்பூ" அவ்வளவாக மணம் வீசி ரசிகர்களைக் கவரவில்லை.

ஆனால் கே.வி. மகாதேவனின் பாடல்கள் இன்றளவும் நிரந்தரமாக மணம் வீசிக்கொண்டிருக்கின்றன..  தாழம்பூவைப் போல.

"தொழிலாளி" படத்தின் தோல்வியால் சின்னப்பாதேவர் மனம் தளர்ந்துவிடவில்லை.

தனது அடுத்த எம்.ஜி.ஆர். படத்தை ஆரம்பித்துவிட்டார்.  முதன்முதலாக தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் கதாநாயகியாக கலைச்செல்வி ஜெயலலிதா கால் பதித்தார்.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஜோடியுடன் அசோகன், நம்பியார், கே.ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா இவர்களுடன் குழந்தை நட்சத்திரமான பேபி ஷகிலா ஆகியோர் நடிக்க கே.வி.மகாதேவனின் இசையில் வெளிவந்த தேவர் பிலிம்சின் வெற்றிப்படம்தான் "கன்னித்தாய்".

"கேளம்மா சின்னப்பொண்ணு கேளு"  - டி.எம்.எஸ். குரலில் ஒரு தனிப்பாடல்.

"மானாப் பொறந்தா"  டி.எம்.எஸ். - சுசீலா .

"வாயார ஒரு முத்தம்"  - பி. சுசீலா தனித்துப் பாடும் ஒரு இனிமையான பாடல்.

"என்றும் பதினாறு வயது பதினாறு" என்ற டி.எம்.எஸ்- சுசீலாவின் குரல்களில் ஒரு இனிமையான டூயட் பாடல் இன்றளவும் தொலைகாட்சி சானல்களில் தொடர்ந்து ஒளிபரப்பாகும் பாடல்.

இப்படி கன்னித்தாயின் பாடல்கள் அனைத்துமே பிரபலம் என்று சொல்லமுடியாவிட்டாலும், படம் வந்த புதிதில் அனைவராலும் விரும்பிக் கேட்கப் பட்ட பாடல்களாகவே அமைந்துவிட்டன.

"நவராத்திரி" படத்தின் வெற்றியால் உந்தப்பட்ட ஏ.பி. நாகராஜன் தனது அடுத்த படத்துக்கான முயற்சியில் இறங்கினார்.

ஏற்கெனவே "சம்பூர்ண ராமாயணம்" படத்துக்கு கதை வசனம் எழுதி இருந்த அவர்முதன்முதலாக ஒரு புராணப் படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கத் தீர்மானித்தார்.

நட்சத்திரத் தேர்வு ஆரம்பமானது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, முத்துராமன், தேவிகா, நாகேஷ், டி.எஸ். பாலையா, டி.ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தராம்பாள், மனோரமா, ஜி. சகுந்தலா என்று நட்சத்திரக் கூட்டத்துடன் இயக்குனர் ஏ.பி. நாகராஜன் அவர்களே ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க தீர்மானித்து படத்தை ஆரம்பித்துவிட்டார்.

தனது ஆருயிர் நண்பர் கே.வி. மகாதேவனின் இசை படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக இருந்து துணை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் படத்தை துவங்கி விட்டார் அவர்.

பாடல்கள் கவியரசு கண்ணதாசன்.

ஆர்ட் டைரக்டர் கங்கா அவர்கள் நிர்மாணித்த பிரம்மாண்டமான அரங்க அமைப்பு திருக்கயிலாயத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.

படம் வேகமாக வரைந்து 1965-இல் தமிழ் நாடெங்கும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

 அந்தப் படத்துக்காக கே.வி. மகாதேவன் அமைத்த இசையில் பாடல்கள் அனைத்துமே மகத்தான வெற்றி பெற்று காலத்தால் அழிக்கமுடியாத புகழை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தன.

திரையிடப்பட்ட அரங்குகளில் எல்லாம் வெற்றி நடை போட்டு வெள்ளிவிழாக் கொண்டாடிய மகத்தான அந்தக் காவியம் தான் ….

'திருவிளையாடல்'

(இசைப் பயணம் தொடரும்..)

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

அக்டோபர்   14 , 2014  

logo
Andhimazhai
www.andhimazhai.com