திரை இசைத் திலகம்" கே.வி. மகாதேவன் - 32

திரை இசைத் திலகம்" கே.வி. மகாதேவன் - 32
Published on

"ஒரு நாடு நல்ல முறையில் ஆளப்படுகிறதா, அதன் கோட்பாடுகள் நல்லவையா அல்லது கெட்டவையா என்று யாராவது தெரிந்து கொள்ள விரும்பினால் அந்த நாட்டில் உலவும் இசையின் தன்மை அதற்கான விடையைச் சொல்லிவிடும்"  - கன்பூசியஸ்

சென்னை அரசினர் பொதுமருத்துவமனையில் பேராபத்தான நிலையில் எம்.ஜி.ஆர். அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம்.

அந்த நேரத்தில் வெளியான "தாய்க்கு தலைமகன்" படம் தாய்மார்களின் பேராதரவோடு வெற்றிப் படமாக என்பது நாட்களைக் கடந்து விட்டிருந்தது.

ஆனால் அதோடு அவருடைய கலையுலக வாழ்வே அஸ்தமித்துவிட்டதைப் போன்ற ஒரு மாயத்தோற்றம் அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் செயற்கையாக உருவாக்கப் பட்டுவிட்டிருந்தது.

"தொண்டைக் குழியிலே குண்டு பாய்ஞ்சு விட்டுருக்குன்னா சும்மாவா?  ஆளு பிழைக்கறதே கஷ்டமாம்."

"அப்படியே மீண்டு வந்தாலும் அவராலே இனிமே முன்போல வசனம் எல்லாம் பேசி நடிக்க முடியாது"

“அவ்வளவுதான்.  அவரோட கதை முடிஞ்சமாதிரிதான்."

வதந்திகள்!  கற்பனைகள்!  ஆளாளுக்கு காட்டுத்தீயாகப் பற்றவைத்துப் பரவிக்கொண்டிருந்தன.

பாதியில் நின்றுவிட்ட படங்களில் தயாரிப்பாளர்கள் கலங்கிப் போயிருந்தார்கள்.

புதிதாக அவரை ஒப்பந்தம் செய்யத் தயங்கினார்கள்.

ஆனால் - அந்தச் சூழலிலும் அசராமல் நம்பிக்கையோடு எம்.ஜி.ஆருக்கு ஒரு தூணாக நின்றவர் சாண்டோ சின்னப்பா தேவர் ஒருவர் தான்.

எம்.ஜி.ஆர். படுத்த படுக்கையாக மருத்துவமனையில் இருந்த நேரத்திலேயே தி.நகர் அகஸ்தியர் கோவிலில் அவர் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து அந்தப் பிரசாதத்தோடு அவரைக் காண மருத்துவமனைக்கு வந்தவர் திருநீற்றுப் பிரசாதத்தை அவர் நெற்றி முழுக்க பூசிவிட்டு, "முருகா.  கவலைப்படாதீங்க.  உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. கண்டிப்பா நல்லபடியா குணமாகி வருவீங்க.  அப்படி வந்ததும் முதல்லே நம்ம படத்துலே தான் நடிக்கப் போறீங்க.  ஒண்ணு இல்லே ரெண்டு படம்.  தலைப்புக் கூட தயார் பண்ணிட்டேன்.  மறுபிறவி, விவசாயி - அப்படீன்னு ரெண்டு படம்."  என்று சொன்னதோடு நிற்காமல் கத்தை கத்தையாக பணக்கட்டுகளை அவரது படுக்கையிலேயே வைத்து அட்வான்ஸ் கொடுத்தவர் தேவர் ஒருவர்தான்.

சொன்னதோடு நிற்காமல் "விவசாயி" படத்தை எம்.ஜி.ஆர். - கே.ஆர். விஜயாவை நடிக்கவைத்து தயாரித்து 1967 தீபாவளிக்கு வெளியிட்டுக் காட்டினார் தேவர்.

(ஆனால் "மறுபிறவி" படம் மட்டும் என்ன காரணத்தினாலோ நின்று போய்விட்டது.  எம்.ஜி.ஆருக்காக தயார் செய்துவைத்திருந்த அந்தக் கதையை பின்னாளில் ரஜினிகாந்த் அவர்களை நடிக்கவைத்து "தாய் மீது சத்தியம்" என்ற பெயரில் தேவர் தயாரித்ததும், ஆனால் படம் முடிந்து வெளிவருவதற்கு முன்பே அவர் மாரடைப்பால் மரணமடைந்ததும் தனிக் கதை)

"விவசாயி" படத்தில் எம்.என்.நம்பியார், விஜயகுமாரி அசோகன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், எஸ்.என். லட்சுமி, மனோரமா, வி.கே. ராமசாமி ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகக் கொடுத்திருந்தனர்.

பாடல்களை உடுமலை நாராயண கவிராயரும், மருதகாசியும் எழுதி இருந்தனர்.  கருத்தாழமிக்க பாடல்களுக்கு காதுக்கு ரம்மியமான முறையில் அற்புதமாக இசையமைத்துக் கொடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.

"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" - விவசாயப் பெருமக்களின் உயர்வை இதனைவிடச் சிறப்பாக யாராலும் இவ்வளவு அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யமுடியாது என்னும் அளவுக்கு சிறப்பாக பாடலை அமைத்திருக்கிறார் மருதகாசி.

பாடலின் தரத்தை உணர்ந்து தனது பொறுப்பை உணர்ந்து அற்புதமாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.  டி.எம்.எஸ். அவர்களையும் இந்தப் பாடலுக்காக பாராட்டித்தான் ஆகவேண்டும்.

முதலில் படத்தின் ஆரம்பமே இந்தப் பாடல் காட்சியாகத்தான் இருக்கவேண்டும் என்று தேவர் நினைத்திருந்தார்.

ஆனால் எம்.ஜி.ஆரோ படம் ஆரம்பித்து ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகுதான் தன் அறிமுகமும் இந்தப் பாடல் காட்சியும் வரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

அதற்கு அவர் சொன்ன காரணம்:

"படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது.  சில பல காரணங்களாலே ஐந்து நிமிடங்கள் தாமதமா வரவங்க கூட இருப்பாங்க.  அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டை அப்படி வரவங்க தவற விட்டுடுவாங்க.  இந்தப் பாட்டு எல்லாரையும் போய்ச் சேரணும்.  அதனாலே ரெண்டாவது சீனோட ஆரம்பமா இந்தப் பாடல் காட்சி இருக்கட்டும்."

அவாது விருப்பப்படியே இந்தப் பாடல் காட்சி படம் ஆரம்பித்து ஐந்து நிமிடங்களைக் கடந்த பிறகே படத்தில் இடம் பெறும் வண்ணம்  அமைக்கப்பட்டது.

ஆணித்தரமான வரிகள் -  பாடல் நிதானமான நடையில் அமைக்கப்பட சரணங்களுக்கு இடையில் வரும் இணைப்பிசையோ விறுவிறுப்பான வேகத்துடன் அமைக்கக்ப் பட்டிருக்கிறது.

வரிகள் தெள்ளத் தெளிவாக ஒருமுறை கேட்டாலே மனதில் பதியும் வண்ணம் அமைந்த பாடல்.

"முன்னேற்றப்பாதையிலே மனதை வைத்து

முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து

மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ

வழங்கும் குணமுடையோன் விவசாயி"

"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும்  வெளிநாட்டில்"

இன்றளவும் படத்தின் பெயர் சொன்னாலே பளிச்சென்று வாய் தானாகவே முணுமுணுக்கும் பாடல் இது.

"நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்

நாட்டு மக்கள் மனங்களிலே  நாணயத்தை வளர்க்கணும்.

பள்ளி என்ற நிலம் தனிலே   கல்வி தன்னை விதைக்கணும்.

பிள்ளைகளைச் சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்."

-   பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை மாணவர்களும் பெற்றோரும் விதித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்துக்கு அவசியம் பொருந்தவேண்டிய ஒரு பாடல்.

இது பாடல் அல்ல.  பாடம்.  உடுமலையாரின் இந்தப் பாடல் வரிகள் வேறு எந்த இசையமைப்பாளரிடம் சிக்கி இருந்தாலும் இந்த அளவுக்கு சிறப்பாக  அவர்களால் கண்டிப்பாக  அமைத்தே இருக்க முடியாது.  அந்த அளவுக்கு சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

"இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை"  -  டி.எம். எஸ். - பி. சுசீலாவின் இணைவில் உடுமலையாரின் இந்தப் பாடலின் சிறப்பே அதன் இனிமையான இசை தான்.  இணைப்பிசையில் அதகளப்படுத்தி இருக்கிறார் கே.வி.மகாதேவன்.

"காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது"  - கிராமிய மனம் வீசும் ஒரு அருமையான டூயட். 

இந்தப் பாடல் என்று இல்லை படத்தில் இடம் பெறும் பாடல்கள் அனைத்திலுமே கிராமிய மனம் வீசும் வண்ணம் - காதுகளை உறுத்தாத வகையில் சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

"என்னம்மா சிங்காரக் கண்ணம்மா"  -  டி.எம்.எஸ். ஸுடன் பி.சுசீலா ஹம்மிங்கில் மட்டுமே இணையும் இனிமையான பாடல்.

"எவரிடத்தும் கவலை இல்லை. எனக்குத்தான் தொல்லை"  -  பி.சுசீலாவின் குரலில் சோகம் இழையோடும் ஒரு பாடல்.

"விவசாயி"  படப் பாடல்கள் அனைத்துமே வெற்றிகரமாக காற்றலைகளில் உலாவந்து அமோகமான விளைச்சலை கே.வி. மகாதேவனின் காட்டில் கொடுத்த பாடல்களாக அமைந்து விட்டன.

**

பீம்சிங்கின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர். விஜயா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் "பாலாடை".

கே.வி. மகாதேவனின் இசையில் பி. சுசீலா பாடும் "பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும்" என்ற பாடல் காதுகளுக்கு ரம்மியமாக ஒலித்தத்து.  மற்றபடி பெரிதாக எதுவும் அமையவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

*****

சரஸ்வதி சபதம் படத்தை அடுத்து தனது அடுத்த சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கினார் ஏ.பி. நாகராஜன்.

இம்முறை பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு நாயன்மார்களின் வரலாற்றை "திருவருட்செல்வர்" என்ற பெயரில் தயாரித்து இயக்கினார் அவர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - வில்லவன் என்ற மன்னனாகவும், தொடர்ந்து சேக்கிழார், திருக்குறிப்புத் தொண்டர், சுந்தரர், அப்பர் ஆகிய நாயன்மார்களை கண்முன்னே நடமாடவிட்டிருந்தார்.

அவருடன் ஜெமினி கணேசன், முத்துராமன், பத்மினி, கே.ஆர். விஜயா, சாவித்திரி, நாகேஷ், மனோரமா என்று நட்சத்திரக்கூட்டமே படத்தில் இருந்தது.

கண்ணதாசனின் காவியப் பாடல்களுக்கு மகாதேவன் வார்த்துக் கொடுத்த இசை பாடல்களை இறவாப் புகழ்பெற்ற பாடல்களாக்கி விட்டன.

படத்தின் பெயர் சொன்னாலே நினைவுக்கு வரும் பாடல்  "மன்னவன் வந்தானடி"  -     இந்தப் பாடலைப் பற்றி ஏகப்பட்ட நபர்கள் சொல்லியாயிற்று. எழுதியும் ஆயிற்று. 

படத்தின் ஆரம்பக் காட்சியே வழக்கம் போல கே.வி.மகாதேவனின் இந்தப் பாடல் காட்சியுடன் தான்.

ஆரம்பத்தில் வரும் விருத்தங்களை ராகமாலிகையாக அமைத்தவர்

"நின் கொடி வாழ்க படை வாழ்க குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க" என்று கோரஸ் பாடகியர் முடித்ததும் துவங்கும் இணைப்பிசையில் வீணையில் இடம் பெரும் ரஞ்சனி ராக பிட்.  அதைத் தொடர்ந்து "மன்னவன் வந்தானடி தோழி" என்று பி. சுசீலா எடுப்பாகத் தொடங்கும் போதே ஆரம்பிக்கும் கல்யாணி ராகம் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறது.  சொக்கவைத்துவிடுகிறது. 

இந்தப் பாடல் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் பி.சுசீலா.

"ரெக்கார்டிங் அன்னிக்கு அரை நாள் நான் காத்துக்கிட்டு இருக்கவேண்டியதாகி விட்டது.  டான்ஸ் பாட்டுங்கறதாலே நெறைய வாத்தியங்கள்.  அவற்றுக்கான ரிகர்சல்கள்.  ஜதிகள் அமைப்பு என்று மாமாவுக்கு நெறைய வேலை.  ரெக்கார்டிங் முடியறதுக்கு நாலுமணி நேரமாகி விட்டது.  பாடி முடிச்சதும் மாமா என் கிட்டே வந்து "சுசீம்மா. ரொம்ப நல்லா பாடினே.  நல்லா இருந்துது" என்று பாராட்டினார்."  என்றார் பி.சுசீலா.

சரணங்களில் சுசீலாவின் குரல்களுக்கிடையே வரும் நாட்டிய ஜாதிகளைப் பாடியவர் நடன இயக்குனர் பி.எஸ். கோபாலகிருஷ்ணன்.

பாடலுக்கு பிரபல கடம் வித்வான் டி.எச். விநாயக்ராம் அவர்கள் கடம் வாசித்திருக்கிறார்.

கடைசியில் வரும் சரண வரிகளை கவியரசர் இப்படி எழுதி இருப்பார்.

"விரைவினில் நீ. மணமலர் தா. திருமார்பா.  தாமதமா. மயிலெனை கா."

இந்த வரிகளை ஸ்வர அட்சரங்களாக வரும்படி ஒவ்வொரு வார்த்தையின் கடைசியில் ஒற்றெழுத்துக்களை ஸ்வரங்களாக அமைத்து கடைசியில் "நீ த ப ம க " என்று ஸ்வரங்களாக துரித காலத்தில் சுசீலாவைப் பாடவைத்து கேட்பவரை வியக்கவைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

கல்யாணி ராகத்தின் சொரூபம் முழுவதுமாக வெளிப்படும் பாடல் இது.  இந்த ராகத்தில் எத்தனையோ பாடல்கள் திரைப்படங்களில் வெளிவந்தாலும் முதலில் நிற்பதென்னவோ கே.வி.மகாதேவனின் இந்தப் பாடல் தான்.

பிரபல வீணை இசை மேதை காலம் சென்ற திரு. எஸ். பாலச்சந்தர் அவர்கள் அடிக்கடி தன் நண்பர்களிடமும் சிஷ்யர்களிடமும் இப்படிச் சொல்லுவாராம்.:

“கல்யாணி ராகம் கேக்கணுமா.  கே.வி. மகாதேவனோட "மன்னவன் வந்தானடி" பாட்டைக் கேளு.  அதுதான் கல்யாணி" 

இதைவிடச் சிறந்த பாராட்டை வேறு ஒருவர் தரமுடியுமா என்ன?

இதை அவர் கே.வி.மகாதேவனிடமே குறிப்பிட்டுச் சொன்னார்.

அவரது பாராட்டைக் கேட்ட கே.வி. மகாதேவனோ மிகுந்த கூச்சத்துடன் இப்படிச் சொன்னாரார்:

"இதைப் போய்ப் பெரிசாச் சொல்லறேளே!  அம்பிகாபதி படத்துலே ராமநாத அய்யர் (இசைச் சக்ரவர்த்தி ஜி.ராமநாதன்) "சிந்தனை செய்மனமே" என்று போட்டிருப்பாரே அது கல்யாணி.  அதுக்கு முன்னாலே நான் போட்டதெல்லாம் ஒண்ணுமே இல்லே" 

இந்த அளவுக்கு பணிவும் தன்மையும் வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியுமா என்ன?

(பயணம் தொடரும்...)

(இசைப் பயணம் தொடரும்..)

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

நவம்பர்   24 , 2014

logo
Andhimazhai
www.andhimazhai.com