திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 36

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 36

"இசை நமது ஆன்மாவில் நிதமும் சேரும் மாசுகளை தினம்தோறும் அகற்றுகிறது."  -  பெர்தோல்ட் ஆர்பேக்

கணவன் - முருகக் கடவுள் மீது அசைக்க முடியாத பக்தி கொண்ட ஒரு ஆத்திகன்.  
மனைவியோ கடவுளே இல்லை என்னும் நாத்திகவாதி.  இருவருக்கும் பிறக்கும் குழந்தையோ சலனமே இல்லாமல் ஊனமாகப் பிறக்கிறது.  இப்படிப்பட்ட ஒரு சூழலை வைத்து பின்னப்பட்ட கதைதான் துணைவன்.



ஏ.வி.எம். ராஜன் - சௌகார் ஜானகி இருவருடன் திருப்புமுனையான ஒரு கதாபாத்திரத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களை நடிக்க வைத்தார் சின்னப்பா தேவர்.



முருகனைப் பற்றிய பாடல்கள் சிறப்பாக இருக்கவேண்டும்.  ஆகவே முருக பக்தையான திருமதி. கே.பி. சுந்தராம்பாள் அவர்களையும் பாட வைத்தார்.  டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலாவும் இருந்தார்கள்.



கண்ணதாசன், மருதகாசி இருவரும் பாடல்களை எழுதினார்கள்.



இசையைப் பொறுத்தவரை பாடல்கள் அனைத்துமே அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப் பட்டன.  கே.வி.மகாதேவனின் இசையில் அருமையான முறையில் சிறப்பாக அமைந்தன.



பொதுவாக புராணக் கதைகளுக்கு இசை அமைப்பது என்பது வேறு.  அதே சமயம் சமூகக் கதையோடு பின்னப்பட்ட பக்திக் கதைக்கு இசை அமைப்பது என்பது வேறு.



புராணப் படங்களில் இடம் பெறும் பாடல்களுக்கு தெய்வீக மணம் கமழ இசை அமைத்தால் போதும்.  காட்சி அமைப்பே பாடலை வெற்றிபெறச் செய்துவிடும்.



ஆனால் "துணைவன்" போன்று ஆன்மிகம் கலந்த குடும்பக் கதைக்கு இசை அமைக்கும்போது பாடல்கள் கேட்பவரின் உள்ளத்தைத் தொடும் வண்ணம் இசை அமைந்தால் தான் பாடல்கள் வெற்றி பெறும்.



துணைவன் படப் பாடல்கள் கேட்பவரின் உள்ளத்தைத் தொட்டன.



முற்பகுதியில் கதைப் போக்கை விறுவிறுப்பாக அமைத்து இருவரின் கருத்து மோதல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பின்னப்பட்ட காட்சிகளால் பாடல்களுக்கு அதிகம் வேலையே இல்லை.  பின்னணி இசை தான் காட்சிகளைத் தாங்கி நின்றன.



ஆனால் பிற்பகுதியில் ..  கே.வி. மகாதேவனின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது.



அசைவே இல்லாத ஒரு குழந்தை பிறக்க அதனை மீட்க அறிவியல் ரீதியாக மனைவி மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, குழந்தைக்காக தனது கருத்தை மாற்றிக்கொண்டு தன் கணவனின் வழிக்கு வருகிறாள் மனைவி.



இருவரும் சேர்ந்து கொண்டு குமரக்கடவுள் கோவில் கொண்டிருக்கும் தலங்கள் அனைத்துக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்கின்றனர்.



"மருதமலை மீதிலே குடிகொண்டிருப்பவனே" என்று விருத்தமாகத் துவங்கும் பாடலில் டி.எம்.எஸ். அவர்களும் - பி.சுசீலாவும் நாதோபாசனை செய்திருக்கிறார்கள்.

பெரிய பாடல்.  நிறைய சின்னச் சின்ன சரணங்கள்.  ஒவ்வொரு சரணத்துக்கும் ராகம் மாறும் பாடல்.  சரணங்களுக்கு இடையே வரும் இணைப்பிசையாக ஆலய மணியின் ரீங்காரத்தை மட்டுமே பயன்படுத்தி அற்புதமாக பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.  இருவரின் குரலிலும் தென்படும் உருக்கம் துல்லியமாக வெளிப்படும் வண்ணம் உணர்ச்சி பூர்வமான பாடல் .



கண்ணதாசனும், மருதகாசியும் இணைந்து இந்தப் பாடலை எழுதி இருக்கிறார்கள்.



பாடலின் முடிவில் "திருப்பரங்குன்றத்து நாயகனே" என்ற வரிகளுக்கு சுசீலா கொடுக்கும் அழுத்தம் ..  குறை தீர்த்துவைப்பாய் வடிவேலவனே" என்று முடிக்கும் போது "வேலவனே" என்ற வரிகளை   உச்சத்தில் அமைத்து இருவரின் குரல்களையும் சிகரத்தில் ஏற்றிப் பாடலை முடிக்கிறார் கே.வி.மகாதேவன்.



அதன் பிறகு முருகனடிமை கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் ராஜ்ஜியம் தொடங்குகிறது.

"பழனி மலை மீதிலே குழந்தை வடிவாகவே" என்ற விருத்தத்துடன் தொடங்கி "ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்"  என்று ஷன்முகபிரியாவில் அவர் பாடும் பாடலும்,


உச்சகட்டத்தில் அவர் பாடும் "கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது" என்ற பாடலும் அதைத் தொடரும் " அன்று நீ வேலூன்றி நீரெடுத்த " விருத்தமும்..   படத்தின் முடிவில் அவர் பாடும் "குன்றாடும் திருச்செந்தூர்க் குமரா குகா ஷண்முகா"  என்ற விருத்தமும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட பாடல்கள். 

"துணைவன்" படத்தில் கே.பி. சுந்தராம்பாள் கே.வி. மகாதேவனின் இசையில் பாடிய இந்தப் பாடல்கள் அவருக்கு அந்த வருடத்தின் மிகச் சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தன என்பது குறிப்பிடப் படவேண்டிய ஒரு செய்தி.



பக்திப் படங்களில் தேவர் தொடங்கி வைத்த இந்தப் புதிய பாணி ஒரு முதல் தொடக்கமாக மாறியது.   அதன் பிறகு சமூகப் பின்னணியில் புற்றீசல்களாக பல படங்களை வெளிவரவைத்து இன்று அம்மன் கையில் வேப்பிலையை சுமந்துகொண்டு குத்தாட்டம் போடும் அளவுக்கு வந்து நிற்கிறது.




"துணைவன்" வெளிவந்த 1970ஆம் ஆண்டில் தொடர்ந்து கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றிப்படங்களும் இருந்தன. சுமாரான ஓட்டம்  கண்ட படங்களும் இருந்தன. ஏன்? படுதோல்வி அடைந்த படங்களும் இருந்தன.



சுமாரான ஓட்டம் கண்ட படங்களின் வரிசையில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "தபால்காரன் தங்கை" முக்கிய இடம் பிடித்தது.



ஜெமினி கணேசன்,  முத்துராமன், வாணிஸ்ரீ ஆகியோரின் நடித்திருந்த இந்தப் படத்திற்காக கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் கண்ணதாசன் எழுதிய "கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை" என்ற பாடல் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.  டி.எம்.எஸ். - பி. சுசீலா பாடியிருந்த இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டும், இணைப்பிசையும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.



"நூறாண்டு காலம் வாழ்க" - ஏ.வி.எம். ராஜன் - காஞ்சனா, எம்.என்.நம்பியார் - வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தப்படம் வந்த வேகத்திலேயே சுருண்டு போனதால் பாடல்களின் தரம் பற்றி அறியமுடியவில்லை.



ஆனால் அதே ஆண்டில் வெளிவந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - நடிகர் திலகம் ஆகியோரின் படங்கள் மகாதேவனின் திறமைக்கு மீண்டும் வெற்றிமாலை சூட்டின.



 வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த "என் அண்ணன்" படத்திற்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்த பாடல்கள் அனைவரையும் முணுமுணுக்க வைத்தன.  கண்ணதாசன் - வாலி இருவரின் கற்பனையில் மிதந்துவந்த வார்த்தைகளுக்கு தன் இசையால் உயிர் கொடுத்தார் கே.வி.மகாதேவன்.



"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா"  - டி.எம்.எஸ். பாடும் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளுக்கு பாடலின் நோக்கம் சிதையாத வண்ணம் அருமையாக மெட்டமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.

"நீல நிறம் வானுக்கும் மண்ணுக்கும் நீல நிறம்"  - டி.எம்.எஸ். - எஸ். ஜானகியின் இணைவில் ஒரு அருமையான மெலடி என்றால்,


நாட்டுப்புறத்து காதலை அருமையாக சித்தரிக்கும் துள்ளல் மெட்டில் ஒரு "சலக்கு சலக்கு சிங்காரி" என்று இருவேறுபட்ட எல்லைகளையும் தொட்டார் மகாதேவன்.



"கடவுள் ஏன் கல்லானான்?"  பாடலை மறக்க முடியுமா?  இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டு பாடலை இன்றளவும் உயிர்த் துடிப்புடன் உலவ வைத்திருக்கிறது.

 மக்கள் திலகம் - கே.வி.மகாதேவனின் வெற்றிக்கூட்டணி ஒரு வெள்ளிவிழாப் படத்தையும் தந்தது.



அதுதான் "மாட்டுக்கார வேலன்".  



எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் அமைத்த இசை மறக்கமுடியாத பாடல்களை தந்தது.



"சத்தியம் நீயே தர்மத் தாயே"  - நாட்டுப்புற மெட்டில் ஒரு கோமாதாவின் புகழ் பாடும் பாடல்.  முன்பு முழுக்க முழுக்க கர்நாடக இசையில் அவர் கொடுத்த கோமாதா என் குலமாதா பாட்டுக்கு முற்றிலும் வேறுபட்ட நடை.

கிராமியக் கதாநாயகன் தன்னிடம் காதல் வயப்பட்ட பட்டணத்து நங்கையின் நடவடிக்கைகளை தன்னைப்போன்ற தோற்றத்தில் இருக்கும் படித்த நாகரீக வாலிபனுக்கு விளக்கும் பாடல் "ஒரு பக்கம் பாக்குறா"  -  டி.எம்.எஸ். பாடும் இந்தப் பாடலுக்கு மகாதேவனின் டியூனும், இணைப்பிசையும் சபாஷ் போட வைக்கின்றன.



"பட்டிக்காடா பட்டணமா"  - டி.எம்.எஸ்- எல்.ஆர். ஈஸ்வரியின் பாடல் விறுவிறுப்பான இணைப்பிசையாலும் அமைப்பாலும் சிறந்த இன்னொரு பாடல். 


மாடு மேய்க்கும் மாட்டுக்காரன் - சட்டம் படித்த வாலிபன் இருவரும் தத்தம் ஜோடியுடன் இணைந்து பாடும் டூயட் பாடல் "பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா"  டி.எம்.எஸ். - பி.சுசீலா - எல்.ஆர்.ஈஸ்வரி ஆகிய மூவரும் பாடும் பாடல்.   பாடலுக்கான அமைப்பிலேயே இரு வேறுபட்ட கதாபாத்திரங்களையும் அவர்கள் பாடும் பாடலின் மெட்டிலேயே  வேறுபடுத்திக் காட்டி இருப்பது மகாதேவனின் தனித் திறமைக்கு ஒரு சான்று. 


"தொட்டுக்கொள்ளவா"  - டி.எம்.எஸ். - பி.சுசீலாவின் இணைவில் ஒரு அருமையான மெலடிப் பாடல்.  இந்தப் பாடலின் மெட்டு இன்று ஒரு ஊறுகாய் விளம்பரத்தில் கேட்கிறது



இப்படி மக்கள் திலகத்துடன் இணைந்து சாதித்த கே.வி.மகாதேவன் நடிகர் திலகத்துடன் இணைந்த படம் "வியட்நாம் வீடு".  ப்ரெஸ்டீஜ் பத்மநாப அய்யராக நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய படம்.  



"பாலக்காடு பக்கத்திலே" பாடல் அடைந்த வெற்றி - இன்று "யாரடி நீ மோகினி" படத்தில் ரீ-மிக்ஸ் செய்யப்படும் அளவுக்கு அல்லவா அமைந்திருக்கிறது.

சரணங்களுக்கு இடையேயான இணைப்பிசையில் மிருதங்கம், கடம், மோர்சிங் என்று தாளவாத்தியங்களைப் பயன்படுத்தி ஒரு தனி ஆவர்த்தனமே அமைத்து தனது கற்பனைத் திறமையால் வியக்க வைக்கிறார் கே.வி.மகாதேவன்.



"உன் கண்ணில் நீர் வழிந்தால்" - டி.எம்.எஸ். பாடும் இந்த உருக்கமான பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டும், இணைப்பிசையும் மெய்மறக்க வைக்கும் அளவுக்கு அமைந்து விட்டிருக்கிறதே. 



என்றாலும் இந்த இரண்டு பாடல்கள் மட்டும் தான் படத்தில் நிற்கும் பாடல்களாக அமைந்துவிட்டன.



இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் முதல்முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்த படம் "எதிரொலி".   நடிகர் திலகத்தோடு மட்டும் அல்ல.  கே.வி.மகாதேவனுடனும் கே.பாலச்சந்தர் இணைந்த ஒரே படமும் இதுதான்.   மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்திவிட்டு பரிசாக பெரிய ஏமாற்றத்தை தந்த படம்.



பாலச்சந்தர் படமாகவும் இல்லாமல், சிவாஜிகணேசன் படமாகவும் இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் படம் அமைந்து விட்டதால் "எதிரொலி" வெற்றியை எதிரொலிக்க தவறிவிட்டது.  பாடல்களும் அப்படியே அமைந்துவிட்டன.



என்றாலும் இப்போது வசந்த் தொலைக்காட்சியின் தயவால் "குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன" என்ற டி.எம்.எஸ். பாடல் மட்டும் அவ்வப்போது கேட்கவும் பார்க்கவும் கிடைக்கிறது.  (பாடல் காட்சியில் இடம்பெறுபவர்கள் சிவகுமார் - லக்ஷ்மி)



தொடர்ந்து நடிகர் திலகம் - பத்மினி - சிவகுமார் - காஞ்சனா ஆகியோர் நடிப்பில் ஏ.பி. நாகராஜனின் கதை வசனம் இயக்கத்தில் வெளிவந்த படம் "விளையாட்டுப் பிள்ளை".  முதல் முதலாக ஜெமினி நிறுவனத்தில் எஸ்.எஸ். வாசனின் தயாரிப்பில் கே.வி. மகாதேவன் இணைந்த முதலும் கடைசியுமான படம்.  



கிராமியப் பின்னணியில் அமைந்த கதையில் பாடல்கள் என்னவோ பெரிதாகச் சொல்கிற அளவுக்கு அமையவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.



"ஏறு பெரிசா இந்த ஊரு பெரிசா" என்ற டி.எம்.எஸ்-சுசீலாவின் பாடலையும், "சொல்லாமல் தெரியவேண்டுமே" என்ற எஸ்.ஜானகியின் பாடலையும் படம் வந்த புதிதில் அடிக்கடி வானொலியில் கேட்ட நினைவு.  கே.வி. மகாதேவனின் இருப்பை பறைசாற்றிக்கொள்ள உதவின என்ற அளவோடு அமைந்த பாடல்கள்.



"விளையாட்டுப் பிள்ளை" படத்தோடு - யார் கண் பட்டதோ என்னவோ..



திரை உலகில் கால் பதித்த புதிதில் தன்னோடு ஒன்றி வந்த அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்களோடு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக கே.வி. மகாதேவனுக்கு இருந்து வந்த உன்னதமான நட்பில் விரிசல் கண்டு அது மிகப் பெரிய பிளவாக மாறி அந்த நட்புக்கு ஒரு மிகப் பெரிய முற்றுப்புள்ளியை வைத்தது..



(இசைப் பயணம் தொடரும்...)

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

டிசம்பர்   29 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com