திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 38

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 38

மீண்டும் என் வாழ்க்கையைத் துவங்கவேண்டும் என்றால் நான் அதனை இசைக்கே அர்ப்பணிப்பேன்.  அதுதான் மிகவும் எளிமையாக ஆனந்த பரவசத்தில் என்னை ஆழ்த்தக் கூடியது "  - ஸிட்னி ஸ்மித்  

"ஆதி பராசக்தி"  -  அதுவரை குடும்பக் கதைகளாகவே தயாரித்து இயக்கி கொண்டிருந்த "இயக்குனர் திலகம்" கே.எஸ். கோபாலகிருஷ்ணன் முதல் முதலாக எழுதி இயக்கித் தயாரித்த புராணப் படம்.

"பணமா பாசமா" படத்தில்  ஆணவம் மிகுந்த தாயாக நடித்த எஸ். வரலக்ஷ்மியின் நடிப்பில் புதிய பரிமாணத்தை கே.எஸ்.ஜி. வெளிக்கொண்டுவந்த படம்.

ஆரம்பத்தில் வரலட்சுமியை பராசக்தியாக நடிக்க ஒப்பந்தம் செய்த போது பலத்த எதிர்ப்பையும் விமர்சனங்களையும் கே.எஸ்.ஜி. எதிர்கொள்ள நேர்ந்தது.  "பணமா பாசமா" படத்துலே ஆணவம் மிகுந்த பெண்ணா நடிச்சவரை சாந்தம் நிறைந்த பராசக்தியா ஜனங்க ஏத்துக்குவாங்களா?"  என்ற கேள்வி எழுந்தது.  நடிகை எஸ்.வரலட்சுமியே தயங்கத்தான் செய்தார்.

"கண்டிப்பா எடுபடும்.  பணமா பாசமாவிலேயும் நீங்க ஒரு தாயாகத் தான் நடிச்சீங்க.  இந்தப் படத்துலேயும் நீங்க தாயாகத்தானே நடிக்கப் போறீங்க.  தாயோட கருணையும் சாந்தமும் கண்டிப்பா உங்க நடிப்பிலே தெரியும்.  ஜனங்க ஏத்துக்குவாங்க." என்று ஒரே போடாகப் போட்டு அவரைத் தவிர வேறு யாரையும் தன்னால் பராசக்தியாகக் கற்பனை கூட செய்யமுடியாது என்று உறுதியாக நின்று ஆதி பராசக்தியாக வரலட்சுமியை தோன்ற வைத்தார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.

பாடல்களை கவியரசு கண்ணதாசனும், உடுமலை நாராயண கவியும் புனைய அருமையான இசையை அற்புதமாகக் கொடுத்து அனைத்துப் பாடல்களையும் காதுக்கு ரம்மியமாக அமைத்தார் கே.வி. மகாதேவன்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணனைப் பொறுத்தவரையில் அவரது இயக்கத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் வெளிவந்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்றன.  அவ்வளவு ஏன்?  ஒரு இயக்குனராக அவர் இயக்கிய முதல் படமான "சாரதா" கூட கே.வி.மகாதேவனின் இசையில் வெளிவந்ததுதானே? முற்றிலும் மாறுபட்ட அந்த புதுமைப் படைப்பை அவர் இயக்கிய போது அவருக்கு இசையால் கைகொடுத்தவர் கே.வி.மகாதேவன்.

"ஆதிபராசக்தி"யும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு முதல் புராணப் படம்.  ஏற்கெனவே "மாமா மியூசிக் போட்டா படம் சில்வர் ஜூப்ளி நிச்சயம்" என்ற பெயர் வேறு மகாதேவனுக்கு இருந்தது.  அவரது இசையில் தனது முதல் புராணப் படம் வெளிவந்தால் அது மகத்தான வெற்றிப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை கே.எஸ்.ஜிக்கு இருந்தது.

அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.  என்னதான் வசனங்களும், கதை அமைப்பும் சிறப்பாக இருந்தாலும் பக்திப் படங்களைப்  பொறுத்தவரை பாடல்கள் எடுபட்டால்  வெற்றியைப் பற்றிக் கவலைப் படவே வேண்டாம்.

ஆதிபராசக்தி படத்திலும் பாடல்கள் அனைத்துமே ஈடுபட்டன.

ஆரம்பக் காட்சியே மகாதேவனின் இசையில் தான்.  ஓம் ஓம் ஓம்..  என்று மூன்று முறை ஓம்காரம் முழங்க "ஆதிபராசக்தி".. என்று டி.எம். சௌந்தரராஜனின் எடுப்பான கம்பீரக்குரலில் பாடல் துவங்கும் போதே கே.வி.மகாதேவனின் ஆளுமை ஆரம்பமாகிவிடுகிறது.

உடுமலை நாராயணகவியின் இந்தப் பாடலை மோகனம், காபி, கானடா என்ற ராகங்களில் அருமையான ராகமாலிகைப் பாடலாக வடிவமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.

ஏ.பி.என். பாணியில் பிளாஷ்பாக் உத்தியில் பராசக்தியின் அற்புத திருவிளையாடல்கள் சொல்லப்பட்டிருந்தன.

ஆரம்பக் காட்சிக்கு அருமையாக கே.எஸ்.ஜி.க்கு கை கொடுத்தது அபிராமி பட்டரின் கதை.  அமாவாசையை பௌர்ணமி என்று சரபோஜி மன்னரிடம் சொல்லி மன்னரின் கோபத்துக்கு ஆளாக அமாவாசை அன்று நிலவை வரவழைக்கவேண்டிய நிர்ப்பந்தம்.

"மணியே மணியின் ஒளியே"  .. என்ற அபிராமி அந்தாதிப் பாடலை மாயாமாளவ கௌளையில் விருத்தமாக அமைத்து .. தொடரும் பாடல்..  "சொல்லடி அபிராமி"  -  விருத்தமும் பல்லவியும் மாயாமாளவ கௌளையில்.  "பல்லுயிரும் படைத்த பரமனுக்கே"  என்ற அடுத்த சரணம் கேதாரகௌளை ராகத்தில்.   இறுதியாக வரும் "வாராயோ ஒரு பதில் கூறாயோ"  என்ற சரணமோ காம்போஜி ராகத்தில்.  .  மகாதேவனின் அமைப்பில் ராகங்கள் ஒவ்வொன்றும் தனி அழகுடன் மிளிர்கின்றன. 

சும்ப நிசும்பர் கதையில் "அழகாக.. கண்ணுக்கு அழகாக.."  பாடல்  எஸ்.ஜானகியின் குரலில் - சும்ப நிசும்பரை மட்டுமல்லாமல் கேட்பவரையும் மயங்கத்தான் வைக்கிறது. 

சமயபுரம் மாரியம்மனின் திருவிளையாடல் சம்பவத்தில் வெள்ளைக்கார துரையின் ஆணவத்தை அடக்க  "மாயி மகமாயி மணிமந்திர சேகரியே"  - என்ற பி.சுசீலாவின் குரலில் மாரியம்மன்  தாலாட்டுப் பாடல் வரிகளைக் கையாண்டு தனது தனிமுத்திரையையும் சேர்த்து கவியரசர் புனைந்த பாடல் வரிகள்  மகாதேவன் இசையில் பாடலுக்கு தனி இடத்தைக் கொடுக்கின்றன. 

"நானாட்சி செய்துவரும் நான்மாடக் கூடலிலே"  -  பாடலின் துவக்கமே  சாந்தம் நிறைந்த பாவத்துடன் மனதை வருடிக்கொடுக்கிறது.  ஆனந்த பைரவியில் துவங்கும் பாடலை  -  முதல் சரணம் முடிந்ததும் வரும் இணைப்பிசையோடு சாரங்கா ராகத்துக்கு மாற்றி "ஆறென்றும் நதியென்றும்... "  என்ற சரணத்தை சாரங்காவில் அமைத்து பாடலை கம்பீரமாக முடிக்கும் அழகும் லாவகமும் கே.வி.மகாதேவன் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம்.  

ஏழை மீனவனின் நம்பிக்கை பெரிதா..  அவனது ஆணவ குருவின் ஆடம்பர பக்தி பெரிதா?  என்ற கேள்விக்கு விடை பகரும் காட்சியில் "பூவாடைக்காரி பொன்னழகி"  என்று உடுக்கை ஓசையோடு தொடரும் பாடல் "ஆத்தாடி மாரியம்மா"  ...  சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் அருமையான பாடல்.  பாடலில் சரணங்களுக்கு இடையே வரும் இணைப்பிசையாக லலிதா சஹஸ்ரநாமத்தின் தியான சுலோகம்,  லக்ஷ்மி அஷ்டோத்திரத்தின் தியான சுலோகம் ஆகியவற்றை மட்டுமே எந்த வாத்திய இசையும் இல்லாமல் கோரஸ் குரல்களை மட்டுமே பயன்படுத்தி அமைத்திருக்கும் துணிச்சல் மகாதேவனுக்கு மட்டுமே சாத்தியம். 

"தந்தைக்கு மந்திரத்தை சாற்றிப் பொருளுரைத்த"  என்று  ஊமைச் சிறுவன் பாடும் சக்தியே பெறும் காட்சிக்கான பாடல் காட்சியில்  சரணத்தில் திரும்பத் திரும்ப வரும் "கந்தன் வந்தான் கவிதை தந்தான்"  -  மகாதேவனின் கூண்டுக்கிளியில் இடம்பெற்ற "சரியா தப்பா" என்ற வரிகளை நினைவு படுத்தினாலும் சிந்துபைரவியில் இடம்பெற்ற ஒரு சிறப்பான பாடலாக பாடல் அமைந்துவிட்டது.  இந்தப் பாடலை ராதா-ஜெயலக்ஷ்மியைப் பாடவைத்திருந்தார் கே.வி.மகாதேவன். 

"வண்டார்க் குழற்கண்ணி மலையத்துவசன் பெற்ற மாமதுரை இளங்குயிலே வருகவே"  -  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அருமையான இசை வடிவம் கொடுத்து நீலாம்பரியில் அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.  தொடரும் சரணங்கள் சுருட்டி, நடபைரவி, ஹம்சானந்தி ஆகிய ராகங்களில் அற்புதமாக விரிகின்றன.

பாடலின் முடிவில் சிறுகுழந்தையாக வந்த அன்னை மீனாட்சி குமரகுருபரரின் கழுத்தில் மட்டும் முத்துமாலை அணிவிக்கவில்லை.  அருமையான இசையை அமைத்துக் கொடுத்த கே.வி.மகாதேவனுக்கும் ஒரு வெற்றி மாலையைக் கண்டிப்பாக சூட்டி இருப்பாள் என்பது நிச்சயம்.

இறுதியில் வரும் சிவசக்தி நடனப் பாடல் காட்சி..  "வருகவே வருகவே"..  சிவரஞ்சனி ராகத்தில் இந்தப் பாடலை அருமையாக அமைத்து பி.சுசீலாவின் குரலில் தாட்சாயணியின் அலட்சியம், காதல், ஆளுமை, வெட்கம், பரபரப்பு என்று பலவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி பாடவைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.  பாடலின் இறுதியில் வரும் தனி ஆவர்த்தனத்தில் சிவனின் தாண்டவத்திற்கு உடுக்கை, கொம்பு ஆகிய வாத்தியங்களையும் சக்தியின் லாஸ்யத்திற்கு மிருதங்கத்தையும் பயன்படுத்தி இரண்டையும் அற்புதமாக வேறுபடுத்திக் காட்டி அமைத்திருக்கும் வித்தை கே.வி.மகாதேவனுக்கு கைவந்த கலை.  

விளைவு  ..  படம் மத்தான வெற்றி பெற்று வெள்ளிவிழாக் கொண்டாடியது.

*****

தொடர்ந்து கே.எஸ்.ஜியின் படங்களில் மகாதேவனின் இசையில் குறிப்பிடத்தக்க படங்களாக அமைத்தவை "குலவிளக்கு" படமும், "குலமா குணமா" படமும்.

"குலவிளக்கு"  - முழுக்க முழுக்க ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம்.  மலையாளத்தில் "அத்யாபிகா" என்ற பெயரில் வெளிவந்த படம்.  தமிழில் சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்தது.   "பூப் பூவா பூத்திருக்கு"  - பாடல் இன்று வரை தொலைகாட்சி சானல்களை  ஆக்கிரமித்திருக்கிறது.  படத்தின் "தீம் சாங்"  என்பார்களே அதுதான் "நீ சிந்திய ரத்தத்தை"  - என்ற கண்ணதாசனின் பாடல்.   பாடல்வரிகளுக்கு ஏற்ற மெட்டு.  டி.எம்.எஸ். அவர்களின் குரலில் மறுபடி மறுபடி ஒலிக்கும் மாறுபட்ட சரணங்கள்.  கருத்தாழமிக்க வரிகள்.  - மகாதேவனின் இசையால் மனதைத் தொட்ட பாடல்.

"குலமா குணமா"  -  பாடல்கள் அப்படி ஒன்று சொல்லிக்கொள்ளும் ராகம் இல்லை என்றாலும் அமைப்புக்காகவே படம்வந்த புதிதில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல்களாக இருந்தன.   "உலகில் இரண்டு கிளிகள்"  என்ற பாடல்  - இரு ஜோடிப் பாடல்.  சிவாஜி - பத்மினிக்கு டி.எம்.எஸ். - பி.சுசீலா  -  ஜெய்சங்கர் - வாணிஸ்ரீக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி.  இளம் ஜோடிகளாக வரும் ஜெய்-வாணிஸ்ரீக்கான பகுதியை துள்ளல் நடையுடனும்,  டி.எம்.எஸ். - சுசீலா பாடும் சிவாஜி-பத்மினிக்கான பகுதியை தபேலாவின் நிதானமான மென்னடையுடன் முதிர்ச்சி அடைந்த காதலையும் இசையிலேயே வேறுபடுத்திக் காட்டி இருக்கிறார் இந்தப் பாடலில் கே.வி.மகாதேவன். 

தொடர்ந்து தெலுங்கிலிருந்து தமிழுக்கு ரீ-மேக்கான படம்  "இருளும் ஒளியும்"  -   வாணிஸ்ரீ  இரட்டை வேடங்களில் நடித்த படம்.  மகாதேவனின் இசையில் இணைப்பைசையில் வயலின்களின் வீச்சும்  ஆதிக்கமும் மேலோங்கி நின்ற படம்.  

"வானிலே மண்ணிலே"  -  பி.சுசீலாவின் துள்ளல் குரலில் அருமையான விதமாக இணைப்பிசை பின்னப்பட்ட பாடல் என்றாலும்.. "இருளும் ஒளியும்" என்றவுடன் இன்றளவும் நினைவில் நிற்கும் பாடல் "திருமகள் தேடிவந்தாள்.."  - என்ற பாடல் தான்.  பி. சுசீலா தனித்துப் பாடும் பாடலில் பக்திமணம் மனதை நிறைக்கிறது.

இதே பாடல் மறுபடி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாட வசந்தாவின் ஹம்மிங்குடன் வரும்போது இணைப்பிசையில் தான் எத்தனை வேறுபாடு.  காதல் டூயட்டாக பாடல் மாறும் ரசவாதம் மகாதேவனுக்கு மட்டுமே சாத்தியம். 

******

மீண்டும் கே.எஸ். கோபாலகிருஷ்ணனுடன் இணைந்தார் கே.வி.மகாதேவன்.  இம்முறை "குறத்தி மகன்" படத்திற்காக.  கல்வியின் பெருமையை ஆணித்தரமாகச் சொன்ன படம் என்பதால் சிறந்த படத்திற்கான மாநில அரசின் விருதைப் பெற்ற படம்.  ஆனால் யார் கண்பட்டதோ என்னவோ மகாதேவனின் இசையில் பாடல்கள் எடுபடாமல் போனதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

படம் சிறப்பாக அமைந்து பாடல்கள் எடுபடாமல் போனது "குறத்தி மகன்" என்றால் பாடல்கள் சிறப்பாக அமைந்து படம் எடுபடாமல் போன லிஸ்ட்டில் சேர்ந்த படங்கள் "திருமகள்.", "அன்னமிட்டகை"  -  ஆகிய படங்கள்.

கண்ணதாசனின் காவிய வரிகளால் புனையப்பட்டவை "திருமகள்" படப் பாடல்கள்.  "உள்ளங்கள் பலவிதம்"  என்ற டி.எம்.எஸ். - எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா பாடும் பாடலும், "புன்னகையில் பூப்பூக்கும் திருமகளே"  என்ற பி.சுசீலாவின் பாடலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கே.வி.மகாதேவனின் பாடல்கள்.

"அன்னமிட்ட கை"  -  எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா, பாரதி நடித்த படம்.

"அன்னமிட்ட கை - என்னை ஆக்கிவிட்ட கை"  என்ற டி.எம்.எஸ். பாடல்.   "பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா"  - என்ற பி.சுசீலாவின் பாடல்.. இன்றளவும் காற்றலைகளில் தவழும் பாடல்கள்.  

இந்தப் படத்தில் இடம்பெறும் டூயட் பாடல்களில் ஜெயலலிதாவுக்கு எஸ்.ஜானகியைப் பின்னணி பாடவைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.

"அழகுக்கு மறுபெயர் பெண்ணா"  -  டி.எம்.எஸ். -  எஸ். ஜானகி பாடும் பாடலின் அமைப்பே மனதை கொள்ளை கொள்கிறது. 

இப்படி பாடல்கள் மனதை நிறைத்தாலும் படம் என்னவோ சுமாரான ஓட்டத்தையே சந்தித்தது.

****

"தெய்வச் செயல்"  - இது சின்னப்பாதேவர் தயாரித்த தமிழ்ப் படம்.  யானையை மையமாகக் கொண்டு கதையை அமைத்திருந்தார் அவர்.

ஆனால் படம் என்னவோ படுதோல்வியையே சந்தித்தது.

அதன் பிறகு,  துணைவன் - படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஆன்மீகத்தின் பக்கம் சென்ற தேவருக்குள்  "ஹிந்திப் படம்" எடுக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதை படக்குழுவினர் அனைவரையும் அதிரவைத்து அனைவர் வயிற்றிலும் "புளியைக்" கரைத்தது

தமிழில் பப்படமாகிப் போன "தெய்வச் செயல்" படத்தைத் தான் ஹிந்தியில் தான் கால்பதிக்க தேர்ந்தெடுத்திருந்தார் தேவர்.

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவே இல்லை அவர்.  "முருகன் இருக்கான். அவன் பார்த்துக்குவான்.  ஹிந்தியிலே இதுவரைக்கும் சின்னப் குழந்தைகள் பாக்கற மாதிரி எந்தப் படமும் அமையலே.  குழந்தைகள் விரும்புற மாதிரி படத்தை எடுத்துட்டா பெத்தவங்க தானாவே தியேட்டருக்கு வருவாங்க." என்று தீர்மானித்து அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்த ராஜேஷ் கன்னாவை கதாநாயகனாக நடிக்கவைத்து அவருக்கு ஜோடியாக தனுஜாவை  (நடிகை காஜோலின் அன்னை) ஒப்பந்தம் செய்து படத்தை துவக்கி ஒரே மூச்சில் வெளியிட்டு விட்டார் தேவர்.

அந்தப் படம்தான் "ஹாத்தி மேரா சாத்தி"   அவரது கணிப்பு வீண் போகவில்லை.  படம் மாபெரும் வெற்றி பெற்று திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரிக்குவித்தது.

திடீரென்று அந்தப் படத்தை தமிழில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேவர் பிலிம்ஸ் பானரில் தனது அடுத்த எம்.ஜி.ஆர். படத்தை தயாரித்தார் தேவர்.

தேவர் பிலிம்ஸ் படம் என்றால் - அதுவும் எம்.ஜி.ஆர். என்றால் -  இசை கே.வி.மகாதேவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

இப்படியாக தமிழில் படுதோல்வி கண்ட தேவரின் "தெய்வச் செயல்"  - சிற்சில மாறுதல்களுடன் "ஹாத்தி மேரா சாத்தி"  படமாக ஹிந்திக்கு சென்று வெற்றிக்கொடி பறக்கவிட்டு மறுபடி தமிழுக்கு வந்து இன்னொரு வெற்றிப்படமாக அமைந்தது. 

தேவர், எம்.ஜி.ஆர், கே.வி.மகாதேவன்  -  ஆகியவர்களுக்கு அது "நல்ல நேரமா"க அமைந்தது..

(இசைப் பயணம் தொடரும்..)

ஜனவரி   12 , 2015

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com