'திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -40

'திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -40

"காற்றில் இசை நிறைந்து இருக்கிறது.  நம்மைச் சுற்றியும் அது நிறைந்து இருக்கிறது.   இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறது.  உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு அதனை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்"  - எட்வர்ட் எல்கர்



ஒரு எழுத்தாளனாக  ஆனந்த விகடன் பத்திரிகையில் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு பத்திரிகையாளராக மாறிய 'இதயம் பேசுகிறது" மணியன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் விழுந்த பிறகு அவரது தூண்டுதலால் 'உதயம் புரொடக்சன்ஸ்" என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி எம்.ஜி.ஆரே கதாநாயகனாக நடிக்க "இதயவீணை", "சிரித்து வாழவேண்டும்" என்ற இரண்டு படங்களையும்,  கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்ற வெற்றிப் படத்தையும் கொடுத்த பிறகு மணியன் தயாரித்த நான்காவது படம் தான் "பல்லாண்டு வாழ்க".



ஹிந்தியில் மகத்தான சாதனை படைத்த வி. சாந்தாராம் அவர்களின் மாபெரும் வெற்றிப் படைப்பாக 1957இல் வெளிவந்த படம் தான் "தோ ஆங்கேன்  பாரா ஹாத்".  



சாந்தாராமின் இந்த சாதனைப் படைப்பை தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்கும் உரிமையை வாங்கிய மணியன் அதனை "பல்லாண்டு வாழ்க" என்ற வண்ணப் படமாக தயாரித்தார்.   இந்தப் படத்தை கே. சங்கர் இயக்கினார்.  



எம்.ஜி.ஆர். - கே.வி. மகாதேவன் - கே. சங்கர் கூட்டணியின் இரண்டாவது படம்.



கே.வி. மகாதேவனின் இசையில் பாடல்கள் எல்லாமே பிரபலமடைந்தன.



அப்போது கே.ஜே. ஜேசுதாஸ் பிரபலமடைந்த நேரம்.  படத்தில் எம்.ஜி.ஆருக்காக நான்கு பாடல்களை ஜேசுதாஸ் பாடினார்.  என்றாலும் தனக்காக டி.எம்.எஸ்.ஸும் பாடவேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பியதன் பேரில் "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற பாரதிதாசன் பாடலை டி.எம்.எஸ். - வாணி ஜெயராம் இணைந்து பாடினார்கள்.   மற்ற பாடல்களை புலமைப்பித்தன், நா. காமராசன் ஆகிய இருவரும் எழுத, ஜேசுதாசுடன் பி.சுசீலா, வாணிஜெயராம், டி.கே. கலா ஆகியோர் இணைந்து பாடினார்கள்.



"இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன" என்று இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதியது ஆனந்த விகடன்.



உண்மையிலேயே பாடல்கள் எல்லாமே இன்றளவும் பிரபலமானது விகடன் விமர்சனத்தின் சரியான மதிப்பீடு.



"ஒன்றே குலமென்று பாடுவோம்"  -  படத்தின் தீம் சாங் இதுதான்.  கே.ஜே. யேசுதாஸின் வருடும் குரலில் பாடலை இனிமையாக அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.  பாடலின் மெட்டு "ஏ மாலிக் தேரே பந்த் ஹம" என்ற மூலப்பாடலின் மெட்டை நினைவு படுத்தினாலும் இணைப்பிசையிலும் தொடரும் சரணங்களிலும் வேறுபடுத்தி தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.



'போய் வா நதி அலையே" -  யேசுதாஸ் - டி.கே. கலா இணைந்து பாடி இருக்கும் பாடல்.  இந்தப் பாடல் பாடகி டி.கே. கலாவுக்கு ஒரு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தது.  அதற்கு முன்பே அவர் பாடி இருந்தாலும் அவரை பிரபலமாக்கியது இந்தப் பாடல் தான்.



"என்ன சுகம் என்ன சுகம்"   -  யேசுதாஸ் - பி. சுசீலாவின் இணைவில் ஒரு இனிமையாக மனதை வருடும் பாடல்.



"இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா"  - யேசுதாஸ் - வாணி ஜெயராம் இணையும் பாடல்.   



"மாசி மாசக் கடைசியிலே"  -  வாணி ஜெயராம் குரலில் கதாநாயகியின் அறிமுகப் பாடல்..  என்று எல்லாவற்றையுமே ஹிட் பாடல்களாகக் கொடுத்தார் கே.வி.மகாதேவன்.



 "சின்ன பாப்பா உன்னை ஒன்று கேட்பேன் சொல்லு பாப்பா"  - வழக்கமாக எம்.ஜி.ஆர். படத்தில் தத்துவப் பாடல் என்றால் அவர் பாடுவதாக இருக்கும்.  இந்தப் பாடலோ கதாநாயகி பாடுவதாக அமைந்த பாடல்.  வாணி ஜெயராமின் இனிய குரலை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக பாடல்களை அமைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.



படம் நூறுநாட்கள் ஓடி வெற்றி பெற்றதென்னவோ உண்மைதான்.



ஆனால் விமர்சனங்கள் என்னவோ மிகக் கடுமையாக இருந்தன.  

விகடன் ஒன்று தான் ""எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்"  என்று பாராட்டு மழை பொழிந்தது.



சாந்தாராம் கூட "நான் செய்த பெரியதப்பு என் படத்தோட ரீ-மேக் உரிமையை உங்களுக்கு கொடுத்ததுதான்" என்று மணியனிடம் தனது அதிருப்தியை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.



ஆகக்கூடி வி. சாந்தாராமின் படம் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர். படமாகி அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம்  சரியான தீனி போட்ட படமானது எனபதுதான் நிஜம்.



கே.வி.மகாதேவன் எம்.ஜி.ஆருக்காக இசை அமைத்த படங்கள் மொத்தம் 36.  அவற்றில் பல்லாண்டு வாழ்க தான் அவர் இசையமைத்த கடைசி எம்.ஜி.ஆர். படம்.

**
தொடர்ந்து வருடத்துக்கு இரண்டு, ஒன்று   என்ற அளவில் மகாதேவனின் எல்லை சுருங்க ஆரம்பித்தது.



சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில் எஸ்.ஏ. கண்ணன் எழுதி பலமுறை அரங்கேறிய நாடகம் "விதி" .  இந்த நாடகம் "சத்தியம்" என்ற பெயரில் படமாக 1976-இல் வெளிவந்தது.  சிவாஜி கணேசன் - தேவிகா ஜோடியாக நடிக்க இரண்டாவது கதாநாயகனாக கமலஹாசன் நடித்தார்.  அவருக்கு இணையாக ஜெயசித்ரா - மஞ்சுளா ஆகிய இருவரும் நடித்தனர்.


கே.வி. மகாதேவன் இசையில் 1976-இல் வெளிவந்த இந்தப் படத்தில்



"கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம்"  என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலாவின் பாடல் இன்றளவும் கேட்கத் திகட்டாத பாடல்.



படம் சுமாராகப் போனது.

***

"ஆ கலே லக் ஜா"  -  சஷிகபூர் - ஷர்மிளா தாகூர் - சத்ருகன் சின்ஹா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படம்.  



இந்தப் படத்தை தழுவி சிவாஜி கணேசன் - மஞ்சுளா நடிக்க வி.பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த படம் "உத்தமன்".  



கண்ணதாசன் பாடல்களை எழுத, கே.வி.மகாதேவனின் இசை அமைப்பில் டி.எம்.எஸ். - பி. சுசீலா - எஸ். பி. பாலசுப்ரமணியம் ஆகியோர் பாடல்களைப் பாடி இருந்தனர்.



"நாளை நாளை என்றிருந்தேன்"  - டி.எம்.எஸ். - சுசீலா பாடிய இந்த பாடல் படத்தில் இரண்டு முறை ஒலிக்கும்.  உற்சாகமான டூயட் பாடலாக ஒருமுறை - சோகச் சூழலில் இன்னொரு முறை.  இரண்டுமே இன்றளவும் மறக்க முடியாத பாடல்களாக காற்றலைகளில் உலா வருகின்றன.


"தேவன் வந்தான்டீ" -டி.எம்.எஸ். - சுசீலாவின் இந்த டூயட்டும் அப்படியே.



"படகு படகு" - பாடல் எஸ்.பி.பி - பி.சுசீலாவின் இணைவில் வந்த புதிதில் வானொலியில் அடிக்கடி கேட்கப்பட்ட பாடல்.  தற்சமயம் ஓரளவு மறக்கப்பட்ட பாடல்.  



படத்தில் இடம் பெற்ற வெகு அருமையான பாடல் என்றால் அது டி.எம். எஸ். தனித்துப் பாடும் "கனவுகளே கனவுகளே" என்ற கண்ணதாசனின் பாடல்தான்.



பாடல்கள் அனைத்தையுமே தனது திறமையால் ஹிட் பாடல்கலாக்கினார் கே.வி.மகாதேவன் என்றாலும் இந்தப் பாடல் நெஞ்சைத் தொட்டது.



ஆனால் படமோ எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் சுமாரான அளவுக்கே போனது.

**

"கஜ்ஜெ பூஜா"  - கன்னடத்தில் பெருவெற்றி கண்ட படம்.  டி.ஆர்.ராமண்ணா இந்தப் படத்தை தமிழில் "தாலியா சலங்கையா" என்ற பெயரில் தயாரித்து இயக்கினார்.  முத்துராமன், வாணிஸ்ரீ நடித்திருந்த தேவதாசி குலத்தில் பிறந்துவிட்டு ஒரு பிராமண வாலிபனைக் கைபிடித்து ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ ஆசைப்படும் ஒரு பெண்ணின் கதை.



இந்தப் படத்திற்கு கவித்துவமான பாடல்களை கவியரசு கண்ணதாசன் எழுதி இருந்தார்.   



அருமையான இசையை அள்ளிக் கொடுத்திருந்தார் கே.வி.மகாதேவன்.



"அலமேலு மங்கை அருகே திருமாலே" என்ற பாடல் பி.சுசீலாவின் இனிமையான குரலில் கேட்கக் கேட்கத் திகட்டாமல் இனிக்கும் பாடல்.  

"அவன் பார்க்கும் பொது அன்னம் நிலம் பார்க்கவும்.
அரைக்கண்ணில் மாலவன் முகம் பார்க்கவும்
சிவன் பார்த்த உமை போல முகம் நாணவும்
தங்கச் சிலையாகவும் வெட்கம் திரை போடவும்.."  -  கடைசி வரிகளை மெளனமாக பி.சுசீலாவின் குரல் மட்டுமே அரசாலும் வண்ணம் கே.வி. மகாதேவன் அமைத்த அற்புதமான இசைக்காகவே பாடலைக் கேட்க வேண்டும்.  
 

"மங்கலக் கண்ணகி குங்கும ஜானகி"  என்ற வாணி ஜெயராமின் பாடலும் கண்ணதாசனின் காவிய வரிகளுக்கும் மகாதேவனின் மகத்தான இசைக்கும் கட்டியம் கூறும் பாடல்.
 

என்ன செய்து என்ன?   1976-இல் வெளிவந்த "அன்னக்கிளி" படத்தின் மூலம் தமிழ்ப் படவுலகில் மையம் கொண்ட இளையராஜா என்னும் இளம் புயலின் ஆதிக்கத்தில் இந்த அற்புதமான பாடல்கள் எல்லாமே அடித்துச் செல்லப்பட்டதை என்னவென்று சொல்வது?  

**

"சீதா மஹாலக்ஷ்மி" - கே.விஸ்வநாத் அவர்களின் இயக்கத்தில் சந்திரமோகன், ராமேஸ்வரி நடித்து தெலுங்கில் பெருவெற்றி பெற்ற படம். இதற்கு இசை கே.வி.மகாதேவன் தான்.
 

இந்தப் படத்தை தமிழில் பிரபல மலையாள இயக்குனர் கே.எஸ். சேதுமாதவன் தயாரித்தார்.  பி. மாதவன் இயக்கத்தில் சிவகுமார் - மறைந்த நடிகை ஷோபா நடிக்க "ஏணிப்படிகளாக" வெளிவந்தது.  இதற்கும் கே.வி.மகாதேவனே தான் இசை.
 

"ஏனுங்க மாப்பிள்ளை இந்தச் சிரிப்பு"  - எஸ்.பி. பாலசுப்ரமணியம் - பி.சுசீலாவின் குரலில் ஒரு அருமையான டூயட்.
 

"பூந்தேனில் கலந்து"  -  எஸ்.பி.பாலசுப்ரமணித்தின் குரலில் ஒருமுறையும்,  பி.சுசீலாவின் குரலில் இன்னொரு முறையும் ஒலிக்கும் பாடல்.  இன்றளவும் மறக்கவோ மறைக்கவோ முடியாத அற்புதப் பாடலாக நிலைத்திருக்கிறது.  கவியரசு கண்ணதாசன் - கே.வி.மகாதேவனின் தன்னிகரில்லாத திறமைக்கு கட்டியம் கூறிக் கொண்டிருக்கும் பாடல் இது.
 

தொடர்ந்து வெளிவந்த ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் சிவகுமார், ரதி அக்னிஹோத்ரி நடித்த "காதல் கிளிகள்" படத்தில் "காதல் கிளியே நீ ஏன் பேசமறந்தாய்" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடலை நன்றாகத் தான் கொடுத்திருந்தார் கே.வி.மகாதேவன்.  என்றாலும் ஏற்கெனவே சொன்னமாதிரி இளையராஜாவின் ஆளுமை ஒரு ஆக்டோபஸ் போல தமிழ்த் திரை உலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததால் எடுபடாமல் போனது.
 

கே.வி.மகாதேவன் என்ற ஒரு இசை அமைப்பாளரையே கிட்டத்தட்ட தமிழ்த் திரை உலகம் மறந்து விட்டதோ என்று நினைக்கக் கூடிய காலகட்டம்..



அந்த நேரத்தில் அவருக்கு கைகொடுக்க வந்தது ஒரு தெலுங்குப் படம்.



ஆந்திர தேசத்தைத் தாண்டி தமிழகத்திலும் மறக்க முடியாத வெற்றியை கொடுத்து அவருக்கான சிம்மாசனம் என்றுமே யாராலுமே அசைக்க முடியாத ஒன்று என்று நிரூபித்த படம் அது.



அதுதான் "சங்கராபரணம்"..



(இசைப் பயணம் தொடரும்..)
 

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

ஜனவரி   26 , 2015  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com