திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் - 41

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் - 41

"கணக்கற்ற பிறவிகளைக் கடந்தபிறகு கிடக்கும் ஸ்வர்கானுபவமானது ஸ்வரங்களையும், ராகங்களையும் கலந்து பக்தி உணர்வோடு இனிய இசை அமுதத்தைப் பருகும் வாய்ப்பு மட்டும் கிடைத்து விட்டால்...  ஓ.. மனமே!  இப்பிறப்பிலேயே வாழும்போதே அந்த ஜீவன் முக்தி நிலையை நீ அடைவாய்.  -   ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்.  

"சங்கராபரணம்"  -  மொழி எல்லைகளைக் கடந்து மாநிலங்களைக் கடந்து இந்தியா முழுவதும் அனைவராலும் பெரிதும் ரசிக்கப் பட்ட தெலுங்குத் திரைப்படம்.

ஆந்திர தேசத்தில் வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்த படம்.

1979ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் அந்த வருடத்திய தேசிய விருதுகளை ஒட்டுமொத்தமாக வாரிக் குவித்த படம்.

சிறந்த படத்துக்கான தங்கத் தாமரை விருது,  சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது,  சிறந்த பின்னணிப் பாடகர், பாடகி, இயக்குனருக்கான விருது ஆகிய விருதுகளை அப்படியே அள்ளிய படம்.

"இந்த ஒரு படம் நூறு திரைப்படங்களுக்கு சமம்" என்று தமிழ்த் திரை உலக வசனகர்த்தா கலைவித்தகர் ஆரூர்தாஸ் பற்றிய தனது மதிப்பீட்டை சொல்கிறார்.  அவரது கருத்து நூற்றுக்கு நூறு சரியான ஒன்றுதான்.

கர்நாடக சங்கீதத்தின் பெருமையை பாமரரும் உணரும் வண்ணம் செய்த படம்.   இளைய தலைமுறைக்கு இந்தப் படத்தின் மூலம் நமது தொல்லிசையில் ஒரு பிடிப்பையும் ஈடுபாட்டையும் உண்டாகச் செய்த பெருமை கே.வி.மகாதேவனையே சாரும்.

தியாகராஜ ஸ்வாமிகள், மைசூர் வாசுதேவாச்சார், பத்ராசல ராமதாஸ் ஆகியோரின் கீர்த்தனைகளை பாடல்களாக வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்றால்..  அதுவும் அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெரும் வண்ணம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு தனி தைரியம் வேண்டும்.

அந்த தைரியம்  படத்தின் இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இருந்தது.  அதே துணிச்சல் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனுக்கும்   இருந்தது. 

அதுவும் எப்படி?   கர்நாடக சங்கீத வாசனையே இல்லாத எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை ஒரு கர்நாடக இசை வல்லுநர் கதாபாத்திரத்துக்கு பின்னணி பாடவைக்கும் அளவுக்கு துணிச்சல் இருந்தது.

சங்கராபரணம் சங்கர சாஸ்திரி என்ற கர்நாடக இசை மேதைக்கும், தேவதாசி குலத்தில் பிறந்த துளசி என்ற நடன மங்கைக்கும் இடையில் ஏற்பட்ட குரு சிஷ்யை பந்தத்தையும் மீறி துளசி அவர் மீது வைத்திருக்கும் புனிதமான பக்தியையும் மூலக் கருவாகக் கொண்டு பின்னப்பட்ட கதை.

சங்கர சாஸ்திரியாக கே.வி. சோமயாஜுலு நடிக்கவில்லை..வாழ்ந்தே காட்டி இருந்தார்.  அதுவரை சினிமாக்களில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடும் க்ரூப் டான்ஸ் ஆர்டிஸ்டாக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த மஞ்சு பார்கவி  (ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த "பில்லா" படத்தில் இடம்பெற்ற "மை நேம் இஸ் பில்லா"  பாடல் காட்சியில்  ரஜினியோடு சேர்ந்து ஆடிவிட்டுப் போவாரே அவரேதான்) கதாநாயகி துளசியாக நடித்தார்.  மொத்தப் படத்துக்கும் சேர்த்து இவர் பேசிய வசனம் கால் பக்கம் இருந்தாலே அதிகம்.  கண்களாலேயே பேசி நடித்து அனைவர் கவனத்தையும் வெகுவாகக் கவர்ந்தார்.

இந்தப் படம் நமது பாடகர் எஸ்.பி.பி. அவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம்.   ஆரம்பத்தில் எஸ்.பி.பி. யின் பெயரை பின்னணி பாடகருக்காக பரிந்துரைத்தபோது அனைவரும் அதிர்ந்துதான் போனார்கள்.

"வேண்டாம் இந்த விஷப் பரீட்சை.  கர்நாடக சங்கீதம் மேலோங்கிய கதை. பேசாம பாலமுரளி கிருஷ்ணாவைப் பாடவைத்து விடலாம்." என்ற கருத்தும் மேலோங்கியது.  ஆனால் கே.வி.மகாதேவனிடம் கேட்டபோது "மணியை (எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை "மணி" என்றுதான் மகாதேவன் அழைப்பார்.)  நான் பாட வச்சுடறேன்.  அவன் சம்மதிச்சான்னா போறும்." என்றார்.

இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களின் சிற்றப்பா மகன் தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.  ஆரம்பத்தில் பாலுவிடம் அவர் கேட்டபோது "ஆளை விடுங்க சாமி.  நம்மால முடியாது" என்று அவர் மறுத்துவிட்டார்.

தினமும் காலையில் வாக்கிங் போகும் போது பாலுவின் வீட்டுக்கும் விஸ்வநாத் போவது வழக்கம்.  ஒருநாள் அப்படிச் சென்றபோது "சங்கராபரணம்" படத்தின் கதையை தனது சிற்றப்பாவிடம் விஸ்வநாத் சொன்னபோது அதைக் கேட்டு பெரியவர் நெகிழ்ந்து போனார்.  பின்னணி" பாடுவதற்கு யாரை போடலாம் என்று இருக்கே?" என்று அவர் கேட்க,  "நம்ம பாலுவைத்தான் நான் செலெக்ட் பண்ணி இருக்கேன்.  ஆனால் அவன் தயங்கறான் சித்தப்பா"  என்றார் கே.விஸ்வநாத்.

"இப்படி ஒரு வாய்ப்பை அவன் இழந்துட்டான்னா   இனிமே ஜென்மத்துக்கும் அவனுக்கு அது கிடைக்கவே கிடைக்காது. கவலையை விடு.  பாலு பாடுவான்" என்று அவர் வாக்கு கொடுக்க பயத்துடனே சம்மதித்தார் எஸ்.பி.பி.  அசுர சாதகம் என்பார்களே அதற்கு அர்த்தம் அப்போதுதான் அவருக்கு புரிந்தது.  

"இருபத்தைந்தே நாட்களுக்குள் அவரைத் தயார் பண்ணவேண்டும்" என்பதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டு மகாதேவனும் புகழேந்தியும் இயங்கினார்கள்.

ஒலிப்பதிவில் அவருடன் பாடிய வாணி ஜெயராமும், எஸ். ஜானகியும் கர்நாடக இசையில் நன்கு தேர்ந்தவர்கள்.  இவர்களுடன் சேர்ந்து அவர் பாடிய சங்கராபரணம் பாடல்கள்  காலங்களைக் கடந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் "மாமாவும், புகழேந்தியும் தான்" என்பார் எஸ்.பி.பி.

"ஓம்கார நாதானு சந்தான சௌபாக்யமே சங்கராபரணமு"  -  சங்கராபரண ராகத்தில் அமைந்த வேட்டூரி சுந்தரமூர்த்தியின் பாடல் தான் படத்தின் "தீம் சாங்". கச்சேரி மேடையில் இந்தப் பாடலை சங்கர சாஸ்த்ரி பாட,  அதனை முதல் வரிசையில் அமர்ந்து கேட்கும் துளசி அபிநயத்தாலேயே அவருக்கு வணக்கம் சொல்வதும் தன மனக்கண் முன்னால் அந்தப் பாடலுக்கு அவள் நடனமாடிப் பார்ப்பதும் என்று காட்சி விரிகிறது.   பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் அழகு  - சொன்னால் புரியாது - கேட்டுத்தான் உணரவேண்டும்.  

ஆற்றங்கரையில் தன் சிறுவயது மகளுக்கு பாட்டுச் சொல்லிக்கொடுக்கிறார் சங்கரசாஸ்திரி.  புலரும் பொழுதுக்கே உரிய பூபாளத்தில் அவர் ஸ்வரங்களைச் சொல்லிக்கொடுப்பதும் கழுத்தளவு தண்ணீரில் நடுங்கிக் கொண்டே சிறுமி அதைக் கற்பதும், அங்கு வந்த துளசி அந்த ஸ்வரங்களுக்கு ஆற்று மணலில் நடனமாடிப் பார்ப்பதும்,  அவள் ஆடுவதைக் கண்டு அவர் பாடுவதை நிறுத்த அவள் தயங்கிச் செல்ல,  அவர்  அவளை தனது சிஷ்யையாக ஏற்றுக்கொண்டதை குறிப்பால் உணர்த்தும் விதமாக ஸ்வரங்களைத் தொடர அவளும் ஆட இறுதியில் பூபாள ராகத்தின் மைய ஸ்வரங்களோடு அவர் முடிக்க அவள் அவரிடம் வந்து காலைத் தொட்டு வணங்கிச் செல்வதும் அருமையான காட்சிகள்.  (முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேனே.  இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு சமீபத்தில் காலம் சென்ற இயக்குனர் பாலுமகேந்திரா).   வெறும் ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு பாடல்.   பாலசுப்ரமணியமும், எஸ். ஜானகியும்  பாவங்களை நுணுக்கமாக வெளிப் படுத்தி இருக்கிறார்கள்.  மகாதேவன் இந்தப் பாடலை அமைத்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.

"ராகம் தானம் பல்லவி"  என்ற ஒரு ராகமாலிகைப் பாடல்.  ராகமாளிகையே கட்டியிருக்கிறார் கே.வி.மகாதேவன். 

ஊர்ப் பெரிய மனிதரால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகிறாள் துளசி.  இந்தக் கட்டத்திலும் பின்னணி இசையாக சங்கராபரண ராகத்தில் ஸ்வரக் கோர்வைகளையே கே.வி.மகாதேவன் பயன்படுத்தி இருந்தார்.  எஸ்.பி.பி.யின் இந்திர ஜாலக் குரலை இப்படி எல்லாம் கூடப் பயன்படுத்திக் கொள்ளமுடியுமா?  என்று வியக்கவைத்தார் அவர்.   

"சங்கரா நாதசரீராபரா"  -  மத்யமாவதி ராகத்தில் பாவம் மிளிரப் பாடினார் எஸ்.பி.பி. 

பத்ராசல ராமதாசரின்  கீர்த்தனைகளும்,  மைசூர் வாசுதேவாச்சாரியாரின் "ப்ரோசெவாரெவருரா" என்ற கமாஸ் ராகக் கீர்த்தனையும் இடைவேளைக்குப் பிறகு நம் செவிகளை எஸ்.பி.பி. - வாணி ஜெயராமின் குரல்களில் நிறைத்தன.

"மானச சஞ்சரரே"  -  சதாசிவ பிரம்மேந்திரரின் இந்தக் கீர்த்தனை "சாமா" ராகத்தில் வாணி ஜெயராமின் மயக்கும் குரலில் துவங்க, எஸ்.பி.பி இடையில் இணைய இறுதியில் வாணியின் தேன்குரலிலேயே பாடல் முடிகிறது.  இந்தப் பாடலுக்காகத்தான் சிறந்த பாடகிக்கான 1980 வருடத்துக்கான தேசிய விருது வாணிஜெயராம் அவர்களுக்குக் கிடைத்தது.

சங்கர சாஸ்திரியின் மகளைப் பெண் பார்க்க வரும் படலம்.  

"சாமஜ வரகமனா" என்ற தியாகராஜா கீர்த்தனையின் பல்லவியை மட்டும் எடுத்துக்கொண்டு சரணங்களை காதல் வயப்பட்ட அந்தப் பெண்ணின் கற்பனைக் கனவுகளாக வேட்டூரி சுந்தரமூர்த்தி பாடல்லாக வடிக்க மகாதேவன் கையாண்ட ஹிந்தோளம் கேட்பவரை உற்சாகச் சிறகடித்துப் பறக்க வைத்தது. 

"மாணிக்ய வீணாம்"  என்ற மகாகவி காளிதாசரின் ச்யாமளா தண்டக சுலோகம் கல்யாணி ராகத்தில்..  இதனை விருத்தமாக அமைத்து எஸ்.பி. பி.யை சிறப்பாக பாடவைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.

உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் பாடலில் "தொரகுணா இட்டுவண்டி சேவா" என்ற பல்லவியின் ஆரம்ப வரிகள் மட்டுமே தியாகராஜருடையதாகவும் மற்றவை வேட்டுரி சுந்தர மூர்த்தி அவர்கள் எழுதியவையாகவும் இருந்ததால் "தொரகுணா" கீர்த்தனையின் ஒரிஜினல் ராகமான பிலஹரியில் அல்லாமல் கல்யாணி ராகத்தில் இசை அமைத்து இருந்தார் கே. வி. மகாதேவன் . 

இசையை மையமாகக் கொண்ட படத்தில் பாடல்கள் மட்டும் இசை மயமாக இருந்தால் போதாது.  பின்னணி இசையிலும் நாதம் சுநாதமாக இருக்கவேண்டும்.  இல்லாவிட்டால் பட்ட சிரமங்களுக்கு பலனே இருக்காது.  இந்தப் படத்தில் பின்னணி இசையில் மகாதேவன் எடுத்துக்கொண்ட கவனமும் ஈடுபாடும் வளரும் இசை அமைப்பாளர்களுக்கு ஒரு பாடமாக இருந்தது என்றால் அது மிகையே அல்ல.

தனது தாயும் மாமனும் தங்கள் குலத்தொழிலில் தன்னையும் ஈடுபடுத்த முயலும்போது வீட்டிலிருந்து வெளியேறி ரயில் வண்டியில் முதல் வகுப்பில் ஏறிவிடுகிறாள் துளசி.   அந்த வகுப்பில் சங்கர சாஸ்திரி பயணம் செய்கிறார்.  மறுநாள் கர்நாடகாவில் கச்சேரி.  அவரை வரவேற்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் ரயில் நிலையத்துக்கு வருகிறார்கள்.  ரயில் வண்டியிலிருந்து சங்கர சாஸ்திரி இறங்குகிறார்.  இறங்கியவர் அடுத்து கை காட்ட துளசியும் கையில் பெட்டியுடன் இறங்குகிறாள்.   பக்க வாத்தியக் காரர்கள் உட்பட அனைவருக்கு அதிர்ச்சி.  இந்தச் சூழலில் அனைவரும் என்ன நினைப்பார்கள்.   எவ்வளவு பெரிய வித்வானாக இருந்தால் என்ன?  எத்தனைதான் பேரும் புகழும் பெற்றவராக இருந்தால்தால் என்ன? இப்படி ஒரு தாசிகுலப் பெண்ணின் மீது மோகம் கொண்டுவிட்டாரே.  என்றுதானே நினைப்பார்கள்?  அந்த நினைப்பை படம் பார்ப்பவர்களும் உணரவேண்டும்.  அதுவும் வசனமே இல்லாமல் பின்னணி இசையால் மட்டுமே உணரவேண்டும்.  உணர்த்தமுடியுமா?  செய்துகாட்டி இருக்கிறார் கே.வி.மகாதேவன்.  அந்த அர்த்தத்தில் துவங்கும் தியாகராஜரின் "எந்த நேர்ச்சினா"  என்ற நளின காந்தி ராகத்தின் பல்லவியை பின்னணியில் வீணையில் இசைக்கவைத்து காட்சியின் தன்மையை அனைவருக்கும் உணர்த்திவிட்டிருக்கிறார்.

தன்னைக் கெடுத்தவனை துளசி கொலைசெய்துவிட அவளை தவறான வாழ்க்கையில் ஈடுபடுத்த அவளது தாயும் மாமனும் முயன்ற குற்றத்தை நிரூபித்து அவளை விடுதலை செய்ய முயற்சி எடுத்துக் கொள்கிறார் சங்கர சாஸ்திரி.  

கோர்ட்டிலிருந்து அவளை சாரட் வண்டியிலயே ஏற்றிக்கொண்டு தனது வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்து அடைக்கலம் கொடுக்கிறார் சங்கர சாஸ்திரி.  ஆச்சாரமான அவரது வீட்டில் மறுநாள் காலை பூஜைக்காக அவரது சிறு பெண் குளித்து ஈரத்துணியுடன் பெரிய குடத்து நீரைச் சுமந்து வந்து விழுந்துவிட, செய்வதறியாமல் நிற்கும் துளசியைப் பார்த்து  "நீயே கொண்டுவருவதற்கென்ன?  மனசு சுத்தமாக இருந்தால் போதும். ஆசாரம் எல்லாம் மனசுலே தான் இருக்கு" என்று அவர் தன் வீட்டில் அவள் தாராளமாகப் புழங்க அனுமதி அளிக்க பெருமிதத்துடன் அவள் கிணற்றடியில் குளித்துவிட்டு ஈர உடையோடு சுத்தமாக ஆச்சாரமாக சமையலறைக்குள் நுழையும் காட்சிக்கான பின்னணியில் "பண்டுரீதி கொலு" என்ற தியாகராஜரின் நளினகாந்தி ராகக்  கீர்த்தனை வீணையில் ஒலிக்கிறது.  உனது அரசாங்கத்தில் ஒரு சேவகனாக சேவை செய்யும் பாக்கியத்தை எனக்குக் கொடு" என்ற பொருளில் அமைந்த இந்த கீர்த்தனை காட்சிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.  

பிற்பகுதியில் துளசியின் எட்டு வயது மகன் சங்கர சாஸ்திரியிடம் சங்கீதம் பயில அந்த வீட்டுக்குள் நுழைகிறான்.  நிலைப்படியை வருடும் போது தம்பூராவின் ஸ்ருதியை அவன் உணர்கிறான்.  "அந்த இல்லமே சங்கீத தேவதை வாசம் செய்யும் வீடு " என்று அவனிடம் துளசி சொல்லி அனுப்புகிறாள்.  அதனை உணரும் வண்ணம் அந்த வீட்டுக்குள் அவன் நுழைந்து அவன் திரும்பும் பக்கம் எல்லாம் தியாகராஜரின் "ஸ்வரராக சுதா" என்ற சங்கராபரண ராகக் கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது.

இப்படி பார்த்து பார்த்து நுணுக்கமாக காட்சியோடு ஒன்றும் வண்ணம் பின்னணி இசையை செதுக்கி ஒரு முழுமையான இசை நயம் மிகுந்த ஒரு படத்தை நாம் உணரும் வண்ணம் செய்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

பட்ட பாட்டுக்கு கை மேல் பலன்.  படம் வெளிவந்ததும் ஆந்திரப் பிரதேசத்தில் தேநீர்க் கடைகள் தோறும் "சங்கராபரணம்" படப் பாடல்களே ஒலித்துக்கொண்டிருந்தன.  

இதே படம் ஹிந்தியிலும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை மையமாக வைத்துக்கொண்டு "சுர்சர்கம்" என்ற பெயரில் கிரீஷ் கர்னார்ட், ஜெயப்ரதா நடிக்க வெளிவந்தது.  ஆனால் படுதோல்வியைத் தழுவியது.

அந்த அளவிற்கு முன்னரே வடநாட்டிலும் சங்கராபரணம் படத்தின் பாடல்கள் கொடிகட்டிப் பறந்தன.  

பாராட்டுக்கள் எந்த அளவுக்கு இருந்ததோ அதே அளவுக்கு கண்டனங்களும் இருந்தன.  

"சங்கராபரணத்தில்" சங்கீதம் சரியாக இல்லை" என்று குமுதம் வார இதழில் விளாசினார் வீணை மேதை எஸ். பாலசந்தர்.  

"எஸ்.பி.பால சுப்ரமணியத்தைத்  தவிர வேற யாராவது சங்கீதம் நன்றாகத் தெரிந்தவர்களைப் பாடவைத்திருக்கலாம்"  என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

"என்னை விட மற்றவர்கள் பாடி இருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கலாம்.  ஆனால் எனக்குத் தெரிந்ததை சொல்லிக்கொடுத்ததை நான் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்குப் பாடி இருக்கிறேன்" என்று அவையடக்கத்தோடு சொன்னார் எஸ்.பி.பி.   சங்கீதத்தில் முக்கியமான அம்சம் 'பா’வம். அது எஸ்.பி.பி.யின் குரலில் நிறைந்திருக்கிறது என்பதை சங்கீதம் அறிந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பாடல்கள் அமைந்தன.

எது எப்படியோ கே.வி. மகாதேவனின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு கோஹினூர் வைரமாக "சங்கராபரணம்"  படத்துக்கு அவர் அமைத்த இசை பிரகாசித்தது என்பது நிஜம்.

(இசைப் பயணம் தொடரும்..)
 

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

பிப்ரவரி   04 , 2015  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com