திரை இசைத் திலகம்" கே.வி. மகாதேவன் - 42

திரை இசைத் திலகம்" கே.வி. மகாதேவன் - 42

"யாகம் யோகம் தியானம் தியாகம் ஆகிய கடினமான முயற்சிகளால் அடையப்படும் போகம், மோட்சம் ஆகிய பலன்கள் ராக அமிர்தத்தின் சாற்றுடன் கூடிய சங்கீதத்தைப் பருகுவதால் சுலபமாகக் கிடைத்துவிடும்.  ஆகையால் மனமே அதனை பருகுவாயாக."  - ஸ்ரீ தியாகராஜர்.  ("ராக சுதா ரஸ" - கீர்த்தனையில்)

எத்தனை புதியவர்கள் வந்தாலும் எனக்கென்று இருக்கும் இடத்தை யாரும் அசைக்கவே முடியாது என்று சொல்லாமல் சொல்வது போல எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த படங்களில் கே.வி.மகாதேவனின் இசை ஆளுமை தனித்துத் தெரிந்தது.  சின்னப்பா தேவரின் முருகன் அடிமை - 1977இல் வெளிவந்து மகாதேவனின் திறமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

திருமங்கை மன்னன் கதையையும் மார்க்கண்டேயன் கதையையும் கலந்து கட்டி இடையில் பொய்யாமொழிப் புலவர் கதையையும் சிறுத்தொண்டர் கதையையும் புகுத்தி சமூகப் படமாகவும் இல்லாமல் புராணப் படமாகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக ஒரு கதையை சின்னப்பாதேவர் அமைத்து முத்துராமன், கே.ஆர்.விஜயா, ஏ.வி.எம்.ராஜன், ஜெயா, அசோகன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன் என்று அவரது ஆஸ்தான நடிகர் நடிகைகளோடு  குழந்தை நட்சத்திரமாக பின்னாளைய கதாநாயகர் கரணை அறிமுகப் படுத்தினார் தேவர்.

படுத்துவிடுமோ என்று தோன்றிய படத்தை கொஞ்சமாவது காப்பாற்றி ஐம்பது நாட்கள் வரை ஓடவைத்ததே கண்ணதாசனின் பாடல்களும் அதற்கு கே.வி. மகாதேவன் அமைத்த இசையும் தான்.

டி.எம்.எஸ். - பி. சுசீலா இருவரும் முருகன் புகழை நெக்குருகிப் பாடினார்கள். 

"பூமியெல்லாம் காத்துநிற்கும் மன்னவனே பொன்மலரே ஷண்முகா".

"சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா"

"சத்தியம் சிவம் சுந்தரம்" - பி. சுசீலாவின் இந்தப் பாடலை இணைப்பிசை எதுவுமே இல்லாமல் துரித கதியில் அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

"ஆனந்தத் தொட்டிலுக்கு அப்பாலும் இப்பாலும் ஏனிந்த வேடிக்கை இறைவா" என்ற பி.சுசீலாவின் பாடல் மனதை வருடியது.  கே.வி.மகாதேவனின் அருமையான மெலடி இந்தப் பாடல்.  

"தாய் காத்த பிள்ளை என்னை"  - சிறுவன் கரண் பாடுவதாக அமைந்த இந்தப் பாடலுக்கு மகாதேவனின் இசையும், பி.சுசீலாவின் குரலும், கவியரசரின் வரிகளும் மனதை மீட்டுகின்றன.  

டி.எம்.எஸ். - பி.சுசீலா மாறி மாறிப் பாடும் "அம்மையானவன் எனக்கு அப்பனானவன்" பாடலும் அப்படியே.  இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவனைத் தவிர வேறு யார் இசை அமைத்திருந்தாலும் கண்டிப்பாக படம் படுத்திருக்கும் என்பது நிச்சயம்.

தொடர்ந்து தேவர் சங்கர் கணேஷ் பக்கம் சென்றதாலும், அதை தொடர்ந்து சில வருடங்களுக்குள்ளேயே யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் மாரடைப்பால் மரணம் அடைந்தாலும், முருகன் அடிமை படத்தோடு தேவர் பிலிம்சுக்கும் கே.வி. மகாதேவனுக்கும் இருந்த தொடர்பு முடிந்து போனது.

திருஞான சம்பந்தரின் கதை "ஞானக் குழந்தை" என்ற பெயரில் வெளிவந்தது.  மாஸ்டர் ஸ்ரீதர், சுஜாதா, எஸ்.வி.சுப்பையா, ஜெய் கணேஷ், லதா, ஜெமினி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடீக்க வெளிவந்த இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் அமைத்த அனைத்துப் பாடல்களும் இனிமை.

அப்பர், சம்பந்தர் தேவாரங்களுக்கு தனது இனிய இசையால் மெருகூட்டினார் கே.வி.மகாதேவன்.

கைத்தாளமிட்டுக்கொண்டு பாடி வரும் ஞான சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுக்க பரமனும் அம்மையும் நடத்தும் நாடகமும் அப்படி பொற்தாளம் பெற்றுக்கொண்ட சம்பந்தர் பாடும் "ஓசை கொடுத்த நாயகியே" என்ற பாடல் பி.சுசீலாவின் இனிய குரலில் "பா"வ பூர்வமாகப் பாடும் பாடல் இனிய இசை விருந்து.   

கவியரசு கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுத மூன்று இசை அமைப்பாளர்கள் இசை அமைக்க வெளிவந்த திரைப்படம் "தெய்வத் திருமணங்கள்."  மூன்று தேவியரின் திருமணங்களை சித்தரிக்கும் இந்தப் படத்துக்கு மூன்று இயக்குனர்கள்.  மீனாட்சி திருமணம் பகுதிக்கு இசை அமைத்தார் கே.வி. மகாதேவன்.  இந்தப் பகுதியை ப. நீலகண்டன் இயக்கினார்.  வள்ளித் திருமணத்துக்கு இசை ஜி.கே. வெங்கடேஷ்.  இயக்கம் கே.காமேஸ்வரராவ்.  மூன்றாவதாக வந்த பத்மாவதி கல்யாணம் பகுதியை கே.சங்கர் இயக்க எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். 

மீனாட்சி கல்யாணம் - பகுதியில் இடம் பெற்ற 'திருமாலே சீராரும் மணிவண்ணா"  என்ற வாணி ஜெயராமின் பாடல் கே.வி.மகாதேவனின் சிறப்பான இசையால் முதலிடம் பிடித்த முத்தான பாடலானது.

இப்படி பிற இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்ற கே.வி.மகாதேவன் தயங்கியதே இல்லை. 

இதற்கு இன்னொரு உதாரணம் பாடகர் ஏ.எல். ராகவன் சொந்தமாகத் தயாரித்த 'கண்ணில் தெரியும் கதைகள்" படம்.  இந்தப் படத்துக்கு ஐந்து இசை அமைப்பாளர்கள். 

கே.வி.மகாதேவன், டி.ஆர். பாப்பா, சங்கர்-கணேஷ், ஜி.கே. வெங்கடேஷ், இளையராஜா. 

படத்துக்கு பின்னணி இசை அமைத்தவர் இளையராஜா.

இந்தப் படத்தில் "வேட்டைக்காரன் மலையிலே" என்ற டி.எம். சௌந்தரராஜனின் பாடலுக்கு இசை அமைத்தார் கே.வி. மகாதேவன்.

ஆனால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்களாக சங்கர்-கணேஷ் அமைத்த "நான் உன்னை நினைச்சேன்"  பாடலும், இளையராஜா அமைத்த "நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்" பாடலும் அமைந்து விட்டன.  பெருத்த வரவேற்பை இந்த இளம் தலைமுறை இசை அமைப்பாளர்கள் பெற்று விட்டதால் மற்றவர்களின் பாடல்கள் அப்படியே மறக்கப் பட்டுவிட்டன.

ஒரு கதைவசனகர்த்தாவாக படவுலகில் நுழைந்த எஸ்.ஜெகதீசன் "ஓம் சக்தி" ஜெகதீசன் என்ற அடைமொழியோடு ஒரு இயக்குனராக உயர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் அருமைபெருமைகளை சொந்தமாகத் தயாரித்து இயக்கினார்.  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, மேல்மருவத்தூர் அற்புதங்கள், சமயபுரத்தாளே சாட்சி, பதில்சொல்வாள் பத்ரகாளி, ஒரே தாய் ஒரே குலம் என்று அவரது ஓம்சக்தி சினி ஆர்ட்ஸ் நிறுவத்தின் பெயரில் வெளிவந்த படங்கள் எல்லாமே கே.வி.மகாதேவனின் இசையைத் தாங்கி வந்தன.

"மேல்மருவத்தூரில் வளர் மரகதமே"  - (மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி)  வாணி ஜெயராம்.

"அம்மா உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள்" (வாணி ஜெயராம்,  "உன்னைத்தானே சரணம் என்று நம்பிட்டேன்"  "பெற்றவளே பெரியவளே"  (கே.ஜே. யேசுதாஸ்)  -  (மேல்மருவத்தூர் அற்புதங்கள்)

"சமயபுரம் ஆத்தா  நீ சகலத்துக்கும் சாட்சி"  (வாணி ஜெயராம்),

"ரங்கநாதன் தங்கச்சி ரெண்டுங்கெட்டான் உன் கட்சி" (கே.ஜே.யேசுதாஸ்) 

(சமயபுரத்தாளே சாட்சி)

"பத்ரகாளியே பதில் சொல்லடி" வாணி ஜெயராம் (பதில்சொல்வாள் பத்ரகாளி)  - ஆகிய பாடல்கள் இன்றளவும் உயிர்ப்புடன் இயங்கும் பாடல்கள்.

பேராசிரியர் ஏ.எஸ். பிரகாசத்தின் கதை வசனம் இயக்கத்தில் சாரதா இரட்டை வேடங்களிலும்  முத்துராமன், ஸ்ரீகாந்த் ஆகியோர் இணையாக நடிக்க வெளிவந்த படம் "மழை மேகம்".    இந்தப் படத்தில் இடம் பெற்ற "ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது" என்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி.சுசீலா பாடிய பாடல் மகாதேவனின் இசையால் வெற்றி பெற்ற பாடல்.

"நான் நானேதான்"  -  ராஜேஷ், வடிவுக்கரசி நடித்த படம்.  இந்தப் படத்துக்கு மகாதேவன் அமைத்த இசையில் "காயா குறிஞ்சி மலை" என்ற வாணிஜெயராமின் பாடல் படம் வந்த புதிதில் அடிக்கடி வானொலியில் கேட்ட பாடல்.

இப்படி எண்பதுகளிலும் சுறுசுறுப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தார் கே.வி. மகாதேவன்.

ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், ரத்தி நடித்து வெளிவந்த படம் "காதல் கிளிகள்"  கே.வி.மகாதேவனின் இசையில் "நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகைப் பாருங்களேன்"   '"செவ்வானமே  சீர் கொண்டுவா வெண்மேகமே தென்கொண்டுவா"  ஆகிய பாடல்களை கே.ஜே. யேசுதாஸ். எஸ்.பி. ஷைலஜா ஆகியோர் இணைந்து பாடினார்கள்.  "காதல் கிளியே நீ ஏன் பேசமறந்தாய்"  - என்று மனதை உருக்கும் சோககீதம் பொழிந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.  இந்த மூன்று பாடல்களுமே இன்றளவும் காற்றலைகளில் நிலைத்து நிற்கின்றன.

சுதாகர் - சரிதா நடிப்பில் வெளிவந்த "குருவிக்கூடு"  என்ற படத்தில் இடம் பெற்ற "வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி அழைக்குது"  என்ற பாடல் எஸ்.பி. பாலசுப்ரமணியம் - பி.சுசீலாவின் குரல்களில் மகாதேவனின் மகத்தான இசையில் மயக்கின.

இதே படத்தில் கே.வி. மகாதேவனின் இசையில் எஸ்.பி.பி. தனித்துப் பாடிய "பொன்னி நதி ஓரத்திலே ஏலேலேலோ"  என்ற பாடல் இன்றளவும் எஸ்.பி.பாலசுப்ர மணியத்தின் ஹிட் பாடல்கள் லிஸ்டில் இடம் பிடித்த பாடல்.

பாடகர் ஜெயச்சந்திரனுக்கு கே.வி.மகாதேவனின் இசையில் மறக்கமுடியாத சிறப்பான பாடல் ஒன்று அமைந்தது.  அதுதான் "எங்கெங்கும் அவள் முகம்.  அங்கெல்லாம் என் மனம்"  இந்தப்பாடல் ஜெயச்சந்திரனின் சிறப்பான பாடல்களில் ஒன்று   இடம் பெற்ற படம் "நெருப்பில் பூத்த மலர்".  நீங்களும் கேட்டுப்பாருங்கள்.  நீங்களே உணர்வீர்கள் பாடலின் சிறப்பை.  படம் வெளிவந்த ஆண்டு 1981.

தெலுங்கில் மகத்தான வெற்றிபெற்ற "சிரிவெண்ணிலா" தமிழில் டப் செய்யப்பட்டு "இசைக்கு ஒரு கோவிலா'க  வெளிவந்தது.  மகாதேவனின் கர்நாடக சங்கீத ஆளுமையை ஒரிஜினல் "சிரிவெண்ணிலாவி"லேயே ரசிகர்கள்  ரசித்துவிட்டதால் படமும் எடுபடவில்லை.  இசையோ அபாரம். 

இளம் இயக்குனர்களும் விரும்பப்படும் இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவன் இருந்தார் என்பதற்கு சாட்சியாக அமைந்த படங்கள் ஆர். சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளிவந்த "அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை"  "தூங்காத கண்ணின்று ஒன்று"  ஆகியவை.

"எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே"  (அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை) - விரகதாபத்தை குரலில் தேக்கி எஸ்.பி.பியைப் பாடவைத்தார் கே.வி.மகாதேவன். 

இணைப்பிசையே இசை அமைத்தாவர் "மாமா"தான் என்று காட்டிக்

கொடுத்துவிடும். 

'நீ அழைத்ததுபோல ஒரு ஞாபகம்"  தூங்காத கண்ணின்று ஒன்று படத்தின் உச்ச கட்ட காட்சியில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்த இசை காட்சிக்கே உயிர் கொடுத்தது. 

"அலைபாயுதே" பாணியில் யாருக்கும் தெரியாமல் தாலிகட்டிக்கொண்ட கணவனைக் காண சென்னைக்கு ரயிலில் விரைகிறாள் மனைவி.  அதே சமயம் ஒரு படத்துக்கு கதை எழுதும் வாய்ப்பை பெற்று தனது லட்சியத்தில் வெற்றி பெற்ற பூரிப்பில் அவளைக் கண்டு அழைத்துப் போக எதிர் ரயிலில் பயணிக்கிறான் அவன்.  தவறுதலாக ரயில் புறப்படும் அவசரத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறிவிட்ட அவளை அந்தப் பெட்டியில் இருந்த நான்கு காமுகர்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்.  தனது பெண்மையை இழந்த அவள் ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள்.  எதிரே வரும் அவளது நாயகன் பயணிக்கும் ரயில் அவளைச் சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது.

நாயகியின் நினைவால் ரயிலில் பாடிக்கொண்டு வருகிறான் அவன்.  அவனது பாடலும், அவள் சூறையாடப்படுவதும் இணைக்கப்பட்ட காட்சி.

இந்தப் பாடலுக்கு "தர்மவதி" ராகத்தில் அற்புதமாக இணைத்து இணைப்பிசையில் மகாதேவன் காட்சியின் கொடூரத்தை படத்தைப் பார்க்காமலே இசையால் நம்மை உணரவைக்கிறார்.  படத்தோடு பார்க்கும் போதோ இணைப்பிசை நம்மைப் பதற வைக்கிறது.

இப்படி எல்லாம் இசை அமைக்க கே.வி.மகாதேவனால் மட்டுமே முடியும் என்று அப்போது நுழைந்த / ஏற்கெனவே இருந்துகொண்டிருந்த இசை அமைப்பாளர்களுக்கு சவால் விடுவது போல ஈடுகொடுத்தார் கே.வி. மகாதேவன்.

1984-இல் மகாதேவனின் இசையில் வெளிவந்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, பிரபு, ராதா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த "சிம்ம சொப்பனம்".  சிவாஜி கணேசனின் மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்ட நேரத்தில் வெளிவந்த காரணத்தால் படமும் எடுபடவில்லை.  பாடல்களும் அப்படியே. 

இப்படி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக படவுலகில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த வேளையில் ..  கே.வி. மகாதேவனை திடீரென்று பக்கவாதம் வந்து தாக்கியது.

உடலின் ஒரு பகுதி செயலிந்து போய்விட்ட நிலையில் படுக்கையில் விழுந்தது அந்த இசைச் சிம்மம்.

ஞாபக சக்தியும் கிட்டத்தட்ட மங்கியே போய்விட்டது.  தான் பெற்ற மகனைக் கூட அடையாளம் காணமுடியாத நிலை.

அந்த நேரத்தில் தன் மனைவி எம்.என். ராஜத்துடன் அவரைப் பார்க்க வந்தார் பின்னணிப் பாடகர் ஏ.எல். ராகவன்.  தனது பெயருக்கும் புகழுக்கும் பெருமளவு காரணகர்த்தா என்ற நன்றியை மறக்காத ஏ.எல். ராகவனுக்கு மகாதேவனைப் பார்க்க வந்தபோது சிறு தயக்கம்.

"சொந்த மகனையே மறந்துபோன நிலையிலே இருக்காராம் மாமா.  நம்மை எல்லாம் எப்படி நினைப்புலே வச்சுக்கப்போறார்.?  அவரைப் பார்த்துட்டு வந்தா அதுவே போதும்"  இந்த நினைப்போடு அமைந்தகரையில் இருந்த மகாதேவனின் வீட்டுக்குள் நுழைந்தார் அவர்.

படுக்கையில் விழுந்து கிடந்த கே.வி.மகாதேவனின் அருகில் நெருங்கினார் அவர்.

யாரோ வந்திருப்பதை உணர்ந்து  திரும்பிய கே.வி. மகாதேவன் ஏ.எல். ராகவனைப் பார்த்ததுதான் தாமதம்.

"டே.  ராகவா"  - என்று பெரிதாகக் குரலெடுத்துக் கூவிய அந்தப் பெரியவரின் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

(அடுத்த இடுகையில் முடியும்...)           

பிப்ரவரி   09 , 2015  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com