திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்-6

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்-6
Published on

"இசை என்பது இறைவன் மனிதகுலத்துக்கு அளித்த பரிசு.  சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு கொடுக்கப்பட்ட ஒரே கலை.  பூமியிலிருக்கும் நம்மை சுவர்க்கத்தை உணரவைக்கும் ஒரே கலையும் இசைதான்."  -  வால்டர் சாவேஜ் லண்டர்.

முதல் பாடலுக்கு மகாதேவன் எப்படி இசை அமைத்தார்?

அவரே இதைப் பற்றி “சினிமா எக்ஸ்பிரஸ்”  பத்திரிகைக்காக திரு. வாமனன் அவர்களுக்கு அளித்த பேட்டி (1.4.1999) ஒன்றில் குறிப்பிடுகிறார்.

"அந்தப்பாடலைப் போட எனக்கு நாதஸ்வர மேதை டி.என். ராஜரத்தினம் பிள்ளை வாசிச்ச நாதஸ்வரம் உதவியா அமைஞ்சது.  அவர் கானடா ராகத்துலே கொடுத்த ரெக்கார்டு அப்போதான் ரிலீஸ் ஆச்சு.  அதன் அடிப்படையிலே தான் கானடா ராகத்துலே நான் மெட்டுப் போட்டேன்."

1942-இல் அவர் இசை அமைத்த முதல் பாடல் எப்படி இருக்கிறது என்று கேட்டுப்பார்க்க ஆவல் எழுந்தது.  

யு-டியூபில் "மனோன்மணி" படமே பார்க்கக் கிடைத்தது. 

கர்நாடக சங்கீதம் கோலோச்சிய காலமல்லவா? 

அதுவும் பி.யு. சின்னப்பாவின் குரலில் கே.வி. மகாதேவனின் பாடலைக் கேட்கலாமே என்று பார்த்தால்...

அந்தப் பாடல் காட்சி அடியோடு நீக்கப்பட்ட பிரதியாக எனக்கு காணக்கிடைத்தது. 

ஆகவே கே.வி. மகாதேவனின் முதல் பாடலை கேட்கமுடியவில்லை.  ஆனால் அது கண்டிப்பாக அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்து வெகுஜன ரசனையைக் கவர்ந்திருக்கவேண்டும் என்பது நிச்சயம்.

தொடர்ந்து டி.ஏ. கல்யாணத்துடன் இணைந்து மாயஜோதி, சிவலிங்க சாட்சி ஆகிய மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களுக்கு பணியாற்றினார் கே.வி. மகாதேவன்.

மாடர்ன் தியேட்டர்ஸில் மகாதேவன் பணிபுரிந்து வந்த சமயத்தில் ஒரு நாள் அவரிடம் ஆபீஸ் பையன் ஒரு பதினான்கு வயது சிறுவனை அழைத்து வந்தான்.

"அய்யா.  இந்தப்பையன் சினிமாவிலே பின்னணி பாட சான்ஸ் கேட்டு முதலாளியை பாக்க வந்தான். அவர்தான் உங்க கிட்டே அனுப்பி வாய்ஸ் நல்லா இருக்கான்னு டெஸ்ட் பண்ணச் சொன்னாரு."  அழைத்து வந்தவன் அந்த சிறுவனை மகாதேவனிடம் விட்டுவிட்டு சென்றுவிட்டான். 

அந்தச் சிறுவனையே ஒருகணம் கண் கொட்டாமல் பார்த்தார் மகாதேவன்.

குள்ளமான உருவம்.  அலைபாயும் கண்கள்.  வாழ்வின் அடித்தட்டிலிருந்து விடுபட்டு முன்னேறி வரவேண்டும் என்ற வைராக்கியம் அவனது முகத்தில் சுடர் விட்டது.  

எப்படியாவது சினிமாவில் அதுவும் இசைத் துறையில் முன்னேறிவரவேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் இருந்ததை கணிக்க அவரால் முடிந்தது.

ஆனால்...

மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற கெடுபிடிகள் அதிகம் உள்ள நிறுவத்தில் இந்தச் சின்னப்பையன் தாக்குபிடிக்க முடியுமா?

வேண்டாம்.  பொங்கிப்பாயவேண்டிய காட்டாற்று வெள்ளம் போன்ற இந்த வயதில் அதிதீவிரக் கட்டுப்பாட்டு அணைக்குள் இவனை முடக்கி வைக்கவேண்டாம்.

அந்தப் பதினான்கு வயது பாலகனுக்கு புத்திமதிகள் சொல்லி "இங்கே வேண்டாம்பா.  உன்னாலே சமாளிக்க முடியாது. நானே இங்கே இருந்து போலாம்னு நெனைச்சுண்டு இருக்கேன்."  " என்று பலவாறாக சொல்லிவிட்டு  "ஒரு நிமிஷம் இருப்பா" என்று உள்ளே சென்று வெளியே வந்தவர் கையில் ஒரு புதிய சட்டை இருந்தது.  அதையும் கூடவே வழிச்செலவுக்கு இரண்டு ரூபாயையும் கொடுத்து அந்தச் சிறுவனை திருப்பி அனுப்பி வைத்தார் கே.வி. மகாதேவன்.

அந்தப் பதினான்கு வயதுச் சிறுவன் வேறு யாருமல்ல.

பின்னாளில் மெல்லிசை மன்னர் என்று புகழ்பெற்று திரை இசை சாம்ராஜ்யத்தில் கோலோச்சிய எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் தான் அன்று மகாதேவனால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட சிறுவன்.

*******

னோன்மணி" வெளிவந்த அதே 1942ஆம் ஆண்டு கே.வி. மகாதேவனின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டு பண்ணிய ஆண்டு என்றே சொல்லவேண்டும்.

அந்த ஆண்டு தான் அவருக்கு தனியாக முழுப் படத்துக்கும் இசை அமைக்கும் மகத்தான வாய்ப்பு கிடைத்தது.

ஆம்.  யோகி பிலிம்ஸ் நிறுவனம் கவிஞர் ச.து. சுப்பிரமணிய யோகியார் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த "ஆனந்தன் அல்லது அக்னிபுராண மகிமை" என்ற படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்கு கிடைத்தது.  படத்தின் கதாநாயகனாக கிருஷ்ணகாந்தன் என்பவரும், நாயகியாக பி. சரஸ்வதியும் நடித்தனர்.  (இதைத் தவிர படத்தை பற்றிய இதர விபரங்கள் கிடைக்கவில்லை).  ஆகவே சேலத்தை விட்டு சென்னைக்கு வந்தார் கே.வி. மகாதேவன்.

கே.வி. மகாதேவன் அவர்கள் இசை அமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் எப்படி இருந்தன?  யார் யார் பாடி இருந்தனர்?  படத்தின் இசை எப்படி இருந்தது? படம் வெற்றிப்படமா? என்ற  விபரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.  படத்தின் பிரதியே கூட புழக்கத்தில் வராமல் வழக்கொழிந்து போய்விட்டிருக்கிறது.  

மகாதேவன் அவர்கள் இசைஅமைப்பில் வெளியான முதல் படத்தின் இசை அவரது தலைமுறைக் காலத்திலேயே மறக்கடிக்கப் பட்டது காலத்தின் கொடுமைதான்.

எது எப்படியோ ஒரு இசை அமைப்பாளராக கே.வி. மகாதேவனின் வாழ்வு ஆரம்பமாகிவிட்டது.

ஆனால் தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை.  அதற்கு காரணம்...

இரண்டாம் உலகப்போர்.

இரண்டாம் உலகப்போரின் காரணமாக இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசு  படத்தயாரிப்புக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது.

அதனால் படத்தயாரிப்புகள் வெகுவாகக் குறைந்தன.

ஆகவே வருடத்துக்கு ஒரு படம்தான் கே.வி.மகாதேவனின் இசையில் வெளிவர நேர்ந்தது.

1944-இல் சி.வி. ராமன் அவர்கள் இயக்கத்தில் "பக்த ஹனுமான்",  

1945-இல் மாடர்ன் தியேட்டர்ஸின் "பர்மா ராணி"

ஆகிய படங்கள் வந்த வேகத்திலேயே மறைந்தன.

அதன்பிறகு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு 1947-இல் புகழ்பெற்ற எழுத்தாளரும் இலக்கியவாதியுமாக அடையாளம் காணப்பட்ட பி. எஸ். ராமையா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த "தன அமராவதி" என்ற படத்துக்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார்.

பாய்ஸ் கம்பெனி மூலம் வளர்ந்த நடிகர், பாடகர் வி.என். சுந்தரம் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் தான் ஜே.பி. சந்திரபாபு ஒரு சிறுவேடத்தில் அறிமுகமானார்.

1948-இல் எம்.எல். டாண்டன் இயக்கத்தில் வெளிவந்த "தேவதாசி" அவரது பெயர் சொல்லவைத்த படமாக இருந்தது.

இந்தப் படமும் தற்போது வழக்கத்தில் இல்லாமல் மறைந்துபோய்விட்டது.

ஆனால் ஒன்று.  ..  நாற்பதுகளில் திரை இசையில் கர்நாடக சங்கீதம் கோலோச்சிய காலம்.  இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன், எஸ்.வி. வெங்கட்ராமன் போன்ற ஜாம்பவான்களின் ஆதிக்கத்தில் திரை இசை இருந்த காலம்.  

பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாகமுடியும் என்ற நிலைமை இருந்த காலம்.

ஆகவே இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த கே.வி.மகாதேவனின் இசை அமைப்பிலும் கர்நாடக சங்கீதமே முக்கிய இடம் பெற்று இருந்திருக்கவேண்டும் என்று யூகிக்க முடிகிறது.

தியாகராஜ பாகவதர் என்ற பாடும் நிலவின் பிரகாசத்தின் முன்பு மற்றவர்களின் பாடல்கள் எதுவும் ரசிகர்களின் மத்தியில் எடுபடவில்லை.

ஆகவே என்னதான் உயிரைக்கொடுத்து ஒருவர் பாடி நடித்தாலும் அது எடுபடாமல் போனதுதான் நிதர்சனம்.

எனவே தானோ என்னவோ..  கே.வி. மகாதேவன் இசை அமைத்த ஆரம்ப காலப் படங்கள் எதுவுமே எடுபடாமல் போய்விட்டன. 

அதனால் ஆரம்பகால இசையில் வெளிவந்த பாடல்கள் ஒன்றைக்கூட நம்மால் கேட்க முடியவில்லை.

ஒரு இசை அமைப்பாளரின் வெற்றி என்பது அவரது பாடல்கள் மக்களால் முணுமுணுக்கப் படவேண்டும்.  அவர்களது உதடுகளில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும்.  அதற்கு படம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

அந்த ரீதியில் தன் இசை அமைப்பில் வெளியான படங்கள் அப்படி ஒன்றும் பெரு வெற்றி பெற்ற படங்களாக அமைந்து விடவில்லை.

ஆகவே படவாய்ப்புகளை மட்டும் நம்பிக்கொண்டிருக்க முடியாது.  அவை வரும்போது வரட்டும்.  அதுவரை சும்மா இருக்கக் கூடாது. வேறு ஏதாவது செய்தாகவேண்டும் என்று தோன்றியது அவருக்கு.   

அப்போது சென்னையில் வயலின் மகாதேவன் என்பவர் எச். எம். வி.யில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் .  அவர் மூலமாக சென்னையில் எச். எம். வி. யில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்கு கிடைத்தது.  கணிசமான சம்பளமும் கிடைத்தது. 

எச். எம். வி. யில் மகாதேவனின் இசையில் பக்திப் பாடல்கள் வெளிவர ஆரம்பித்துக் கொண்டிருந்தன.

அந்தச் சமயத்தில் முன்னுக்கு வரத் துடித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பாடகர் தனது திறமைக்கேற்ற வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தார். 

அந்த இளைஞன் எச். எம். வி.க்கு வந்து கே.வி. மகாதேவனைச் சந்த்தித்தார். 

மாடர்ன் தியேட்டர்ஸில் சில படங்களுக்கு அவர் பாடிக்கொண்டிருந்தார்.  ஆனால் சென்னையில் புகழ் பெற்ற ஏ.எம். ராஜா, கண்டசாலா ஆகியோரின் வருகை அரிதாக கிடைத்த பாடல் வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டுவிட சேலத்தை சென்னைக்கு புலம் பெயர்ந்தார் அந்த இளம் பாடகர்.  வாய்ப்புகள் தேடி கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தவரின் கையில் இருந்த பணமெல்லாம் கரைந்துவிட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்தவர் எச்.எம். வி. நிறுவனத்துக்கு வந்து கே.வி. மகாதேவனைச் சந்தித்தார்.

அவரை இரண்டு பக்திப் பாடல்கள் பாடவைத்து என்பது ரூபாய் வாங்கிக்கொடுத்தார் கே.வி. மகாதேவன். 

அந்த எண்பது ரூபாய் அந்தப் பாடகருக்கு அவர் அப்போதிருந்த நிலையில் என்பதாயிரத்துக்கு சமமாகத் தோன்றியது.

கையில் கொண்டுவந்த பணமெல்லாம் கரைந்த நிலையில் எந்தத் தயாரிப்பாளரும் வாய்ப்புக் கொடுக்காத நிலையில், பேசாமல் சொந்த ஊரான மதுரைக்கே திரும்பிப் போய்விடலாமா என்று கூட நினைத்துக்கொண்டிருந்த நிலையில் கே.வி. மகாதேவன் தன் திறமை மீது நம்பிக்கை வைத்து இரண்டு பாடல்களை ரெக்கார்டில் பாட வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்து அதற்கு சம்பளமாக எண்பது ரூபாயையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றால்...

ஒரு புதிய உத்வேகமும், புத்துணர்ச்சியும், உற்சாகமும் அந்தப் பாடகரிடம் உருவாக ஆரம்பித்தன.

"அய்யா. நான் சினிமாக்களில் பாடி இருந்தும் எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லையே." என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அந்த இளம் பாடகர்.

"கவலைப் படாதே.  தைரியமா இரு.  எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று அவருக்கு தைரியம் கொடுத்துத் தேற்றினார் மகாதேவன்.

அதோடு நிற்கவில்லை அவர்.

"நீங்க ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்கு போய்ப் பாருங்க.  அவங்க நல்ல ப்ளேபாக் சிங்கர்ஸ் வேணும்னு தேடிண்டு இருக்காங்க.  கண்டிப்பா உங்களுக்கு சான்ஸ் கிடைக்கும்." என்று அவருக்கு புது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார் கே.வி. மகாதேவன்.

மகாதேவனின் வார்த்தைகள் கொடுத்த தெம்பில் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரையும்,  இசை அமைப்பாளர் சுதர்சனத்தையும் சென்று பார்த்த அந்தப் பாடகருக்கு மகாதேவன் சொன்னது போலவே இரண்டு பாடல்களைப் பாட வாய்ப்பு கிடைத்துவிட்டது.

அந்தப் பாடகர் மெல்ல வளர்ந்து விஸ்வரூபமெடுத்து அறுபதுகள் முழுக்க திரை இசையை தன்வசப் படுத்திக்கொள்ள அன்று கே.வி. மகாதேவன் காட்டிய வழி அஸ்திவாரமிட்டது.

டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்.

(இசைப் பயணம் தொடரும்..)

பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

மே   19 , 2014  

logo
Andhimazhai
www.andhimazhai.com