திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் - 16

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் - 16
Published on

"என் மனது இசையால் நிரப்பப்பட்டிருக்கும் பொழுது வாழ்க்கைப் பயணமே எந்த பிரயாசையும் இல்லாமல் எளிதாகச் சென்றுவிடுகிறது."  -  ஜார்ஜ் எலியட்.

 இந்த இடத்தில் "இசைச் சக்ரவர்த்தி" ஜி. ராமநாதன் அவர்களைப் பற்றி  இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள ஒரு சிறு அறிமுகம்.

திரை இசையின் ஆரம்பகாலத்தில் அதாவது பேசும் சினிமா அறிமுகமான காலகட்டத்தில் திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர்.  இசை என்பது அவரது ரத்தத்தோடு கலந்த ஒன்று.

"பறவைகள் எழுப்பும் ஒலிக்குக் கூட ஸ்வரம் சொல்லக்கூடியவர்" என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார் பிரபல கதை வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் அவர்கள்.

மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடிய மாபெரும் வெற்றிச் சித்திரமான "ஹரிதாஸ்"  அவரது இசை அமைப்பில் வெளிவந்ததுதான்.

"மந்திரிகுமாரி",  "தூக்குத்தூக்கி",  உத்தமபுத்திரன் (பி. யு. சின்னப்பா நடித்த முதல் படத்துக்கும், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த அதன் மறுபதிப்பான இரண்டாவது படத்துக்கும்),  மதுரை வீரன், சக்கரவர்த்தி திருமகள், அரசிளங்குமரி ஆகிய பல வெற்றிச் சித்திரங்களுக்கு இசை அமைத்து காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடல்களைக் கொடுத்தவர்.

அது மட்டும் அல்ல.  ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த இசை அமைப்பாளர் என்ற விருதை தமிழ்ப் படத்துக்கு இசை அமைத்து வாங்கிய பெருமைக்குரிய ஒரே இசை அமைப்பாளர் அவர்தான்.

"வீரபாண்டிய கட்டபொம்மன்"  படத்துக்கு இசை அமைத்து அப்படி ஒரு விருதை அவர் கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் வாங்கினார்.

இப்படிப்பட்ட ஒரு மாமேதை கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் பாடினார் என்றால் அது பெருமைக்குரிய விஷயம் தானே?

ரவீந்தரநாத் தாகூரின் "டாங்கே வாலா"  என்ற கதை கே. சோமு அவர்களின் இயக்கத்தில் ஏ.பி. நாகராஜனின் கதை வசனத்தில் "அல்லி பெற்ற பிள்ளை" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.  எஸ்.எஸ். ராஜேந்திரன், ராஜசுலோச்சனா, எம்.என்.ராஜம் மற்றும் பலர் நடித்திருந்த இந்தப் படத்தில் மருதகாசி எழுதிய ஒரு பாடலை தனது இசை அமைப்பில் ஜி. ராமநாதன் அவர்களைப் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.

ஏற்கெனவே ராமனாதனின் மெட்டுக்கு இணைப்பிசை கொடுத்த அனுபவம் கே.வி. மகாதேவனுக்கு இருந்தது. அது எப்போது என்றால்...

மந்திரி குமரி படத்துக்காக "ஹர ஹர தேவ தேவா" என்ற அற்புதமான பக்திப் பாடல் ஒன்றை டி.எம். எஸ். அவர்களைப் பாடவைத்தார் ஜி. ராமநாதன். படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்கள் பாடுவது போல காட்சி அமைப்பு இருந்தது. ஆனால் அப்போது தான் இருந்த திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது என்பதால் அந்த பக்திப் பாடல் காட்சிக்கு வாயசைத்து நடிக்க முடியாது என்று எம். ஜி. ஆர். நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடவே அந்தப் பாடல் அப்படியே நின்று போனது.

அந்தப் பாடலுக்கான மெட்டின் பிரதி பாடகர் டி.எம். சௌந்தரராஜனிடம் இருந்தது. வாய்ப்புகளைத் தேடி அவர் அலைந்து கொண்டிருந்த காலமல்லவா அது.? அப்போது எச். எம். வி.யில் இசை அமைப்பாளராக இருந்த கே.வி. மகாதேவனைச் சந்தித்து அவரிடம் அந்தப் பாடலை கொடுத்தார் டி.எம்.எஸ். (அவ்வப்போது சௌந்தரராஜனுக்கு எச்.எம்.வி.யில் பாடல்கள் பாட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவருக்கு மகாதேவன் ஆதரவளித்து வந்ததைத்தான் நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டிருக்கிறோமே!)

அந்தப் பாடலுக்கான  ஜி. ராமநாதனின்  மெட்டை இன்னும் மெருகுபடுத்தி அருமையான முறையில் இணைப்பிசை கொடுத்து இசைத் தட்டாக டி.எம். எஸ். அவர்களைப் பாடவைத்து பதிவு செய்தார் கே.வி. மகாதேவன்.

அந்தவகையில் கே.வி. மகாதேவனின் மீதும் அவரது திறமையின் மீதும் பெருமதிப்பு ஜி. ராமநாதனுக்கு இருந்தது.

அதனால் தானோ என்னவோ, கே.வி. மகாதேவன் இசை அமைத்த "அல்லி பெற்ற பிள்ளை" என்ற படத்தில் ஒரு சோகமான சூழலுக்கு பின்னணி பாட அழைப்பு வந்தபோது சந்தோஷத்துடன் அதனை ஏற்றுக்கொண்டார் ராமநாதன்.

பாடல் பதிவுக்கு ஜி. ராமநாதன் வந்தபோது அந்த இசை மேதையை எப்படி வேலை வாங்குவது என்ற தயக்கம் மகாதேவனுக்கு ஏற்பட்டது.

பாடல் வரிகளைப் படித்துப் பார்த்த ஜி. ராமநாதன்"நான் பாடவேண்டிய நோட்ஸ் எங்கே?" என்று கேட்டார்.

"நீங்க பாடறபடி  பாடிடுங்கோ. அதுவே சரியா இருக்கும்" என்றார் மகாதேவன்.

"அதெல்லாம் கிடையாது. நான் இங்கே ஒரு பாடகனாகத் தான் வந்திருக்கேன். அதனாலே நீங்க போட்டிருக்கிற டியூனுக்கு தகுந்தபடிதான் நான் பாடியாகணும்" - என்று பிடிவாதமாக கூறி மகாதேவன் அமைத்த நோட்ஸை ஒரு முறை படித்து மனதில் வாங்கிக்கொண்டு பாட ஆரம்பித்தார் ராமநாதன்.

"எஜமான்  பெற்ற செல்வமே என் சின்ன  எஜமானே.

பசும்பொன்னே என் கண்ணே அழாதே அழாதே" - பாடல் படத்தில் இடம்பெறும் சூழலுக்கேற்ற சோகம் ததும்ப ஒரே டேக்கில் பதிவானது. 

ராமநாதன் பாடி முடித்ததும் அவரது குரலில் வெளிப்பட்ட உணர்ச்சிப்பெருக்கு அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த கே.வி. மகாதேவன், படத்தின் இயக்குனர் ஏ.பி. நாகராஜன் உட்பட அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

கீரவாணி ராகத்தில் இந்தப் பாடலை வெகு நேர்த்தியாகச் செதுக்கி இருக்கிறார் கே.வி. மகாதேவன் என்று தான் சொல்லவேண்டும்.

அதனை ஜி. ராமநாதன் பாடியிருக்கும் அழகோ..அதை விட நேர்த்தி.

கர்நாடக இசை உலகிலும் சரி, திரை இசை உலகிலும் சரி இரண்டு ராமநாதன்களின்  பாவம்  மறுபேச்சில்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.

ஒருவர்  எம்.டி. ராமநாதன்.   மற்றவர்  ஜி. ராமநாதன்.

கர்நாடக இசை உலகில் எந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்களானாலும், எவரது பாணியைப் பின்பற்றுபவர்களானாலும் அனைவருமே “பாவபூர்வமாகப் பாடுவதில் முதலிடம் எம்.டி. ராமநாதனுக்குத்தான்” என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். 

திரை இசையில் அதே போல ஜி. ராமநாதன்.

பாவபூர்வமாக பாடுவது என்றால் என்னவென்று இன்றைய தலைமுறைப் பாடகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?   இந்த "எஜமான் பெற்ற செல்வமே" பாடலை ஒரு முறை கேட்டுப்பார்த்தால் புரிந்துவிடும்.

நன்றாக வாயைத் திறந்து பாடுவது என்பார்களே  அதாவது ஆங்கிலத்தில் "Full throated voice" என்பார்களே அப்படிப் பாடியிருக்கிறார் ஜி. ராமநாதன்.  ஆங்காங்கே அவர் கொடுத்திருக்கும் துல்லியமான சங்கதிகளும், சின்னச் சின்ன பிருகாக்களும் பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. 

(இப்படிப்பட்ட நேர்த்தியையும் அழகையும்தான் பின்னாளில் தான் இசை அமைத்த சங்கராபரணம் படத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியத்திடம் கே.வி. மகாதேவனும் புகழேந்தியும் வரவழைத்திருக்கின்றனர்.)

படம் என்னவோ படு தோல்விதான்.  ஆனால் "எஜமான் பெற்ற செல்வம்" பாடல் மட்டும் கே.வி. மகாதேவன், ஜி. ராமநாதன் ஆகிய இருவரின் திறமைக்கும் அசைக்க முடியாத சாட்சியாக இன்றளவும் நிலைத்து நின்று விட்டிருக்கிறது.

********

ஆர். எம். கிருஷ்ணசாமி  -  ஒளிப்பதிவாளர், திரைக்கதை அமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், ஸ்டூடியோவுக்கு சொந்தக்காரர் -  இப்படிப் பலமுகம் கொண்ட ஒரு திறமைசாலி.  அருணா பிலிம்ஸ் என்ற பானரில் படங்களைத் தயாரித்தவர்.  ஆர்.எஸ். மனோகர் அறிமுகமான "ராஜாம்பாள்"  இவரது சொந்தத் தயாரிப்புதான்.

மாபெரும் வெற்றி பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் "தூக்கு தூக்கி" இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான படம்தான்.

இவர் தயாரித்து இயக்கிய படம் தான் "அபலை அஞ்சுகம்".  டி.ஆர். மகாலிங்கம் இரட்டை வேடத்திலும் அவருடன் சௌகார் ஜானகி, எம்.என். ராஜம், ருஷ்யேந்திரமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் இது.

கே. வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த இந்தப் படத்தில் பாடல்களை கவியரசு கண்ணதாசன், மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவி, சுரதா ஆகியோர் எழுதி இருந்தனர்.

டி.ஆர். மகாளிங்கத்தைத் தவிர இந்தப் படத்தில் ஏ.எல். ராகவன், எஸ்.சி. கிருஷ்ணன், பி. சுசீலா, பி. லீலா, எஸ். ஜானகி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ரத்னமாலா - என்று பலரையும் பாடவைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.

படத்தின் பிரதியும், பாடல்களும் வழக்கொழிந்துபோய் விட்டாலும், டி.ஆர். மகாலிங்கம் - பி. சுசீலா இணைந்து பாடிய "வெண்ணிலா குடைபிடிக்க" என்ற உடுமலை நாராயண கவியின் பாடல் இனிமையாக நம் காதுகளை வருடுகிறது.    டி.ஆர். மகாலிங்கத்தின் கணீர் நாதமும், அதற்கு ஈடுகொடுக்கும் பி. சுசீலாவின் குரலில் தெறிக்கும் இனிமையும் பாடலுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுக்கத் தவறவில்லை. 

*******

"பாஞ்சாலி" - (முக்தா) வி. சீனிவாசன் "முதலாளி" படத்துக்குப் பிறகு இயக்கிய படம்.  ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக நடித்த படம்.  இந்தப் படத்தில் அவர் பாடுவதாக அமைந்த பாடல் "ஒருமுறை பார்த்தாலே போதும் - உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்

மனோகருக்கு ஏ.எல். ராகவனைப் பாடவைத்து இந்த அருமையான பாடலை கே.வி. மகாதேவன் கொடுத்திருக்கிறார். 

"மாமா"வின் இசையில் ராகவன் எத்தனயோ பாடல்களைப் பாடியிருக்கிறார்.  என்றாலும் இந்தப் பாடல் அவரது முழுத் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.  ஏ.எல். ராகவனின் "மாஸ்டர்பீஸ்" பாடல் என்று கூட இதைச் சொல்லலாம்.  -  பலமுறை கேட்கத் தூண்டும் பாடல் இது.

இதே போல "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு" என்ற பாரதியின் பாடலும் இதில் குறிப்பிடப்படவேண்டிய பாடல்.  ஏ.எல். ராகவன் -  ஆண்டாள் ஆகிய இருவரும் பாடி இருக்கும் பாடல் இது.  மிகவும் இனிமையான பாடல்.   அந்த நாளில் இலங்கை வானொலியின் உபயத்தால் அடிக்கடி கேட்டு ரசித்தபாடல்.  இப்போது அறவே புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது காலத்தின் கொடுமைதான்.

அடுத்து "பொன்னித் திருநாள்"  -  காதுகளுக்கு ரம்மியமான இசையில் பாடல்கள் என்றால் அதில் கே.வி. மகாதேவனை மிஞ்ச யாராலும் முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

அந்த வகையில் இந்தப் படத்தில் பாடல்கள் அமைந்தன என்றால் அது மிகை அல்ல.

"ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து - உன்

எழில்தனைப் பாடவா தமிழைச் சேர்த்து" -  பாடல் வரிகளைக் கேட்டதுமே மனம் துள்ளிக் குதிக்கிறதல்லவா?  இந்தப் பாடலா நான் கேட்டிருக்கிறேனே என்று கண்டிப்பாக உங்கள் மனம் சொல்லுமே.  பி.பி. ஸ்ரீனிவாஸின் குரலில் பதிவான இந்த அருமையான பாடலில் வெளிப்படும் இனிமையின் சிறப்பை எப்படிச் சொல்வது?

தமிழே இனிமை.  அதை மனதை சுகமாக வருடும் பி.பி.ஸ்ரீனிவாஸின் குரலில் கேட்கும்போது - அதுவும் மகாதேவனின் இசையில் கேட்கும்போது -  சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது என்பார்களே அப்படித்தான் இனிக்கிறது பாடலும்.

"வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு"  -  பி. சுசீலா -  பி.பி. ஸ்ரீநிவாஸ் குரலில் மற்றொரு அருமையான - இனிமையான பாடல்.  சுசீலாவின் குரலில் உற்சாகமாக துவக்கத்திலேயே உச்சத்தைத்தொடும் பாடல். 

"கண்ணும் கண்ணும் கதைபேசி" -  சுசீலா - ஸ்ரீனிவாஸ் இணைப்பில் ஒரு சோகப் பாடல்.  பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதமும் ஸ்ரீனிவாஸின் குரலில் ஆங்காங்கு தெறிக்கும் லேசான கமகங்களும், சுசீலாவின் குரலில் தொனிக்கும் லேசான விசும்பலுடன் கூடிய சோகமும் -  பாடலை இன்றுவரை நிலைநிறுத்தி விடுகின்றன.  

 இப்படி 1959ஆம் ஆண்டு மகாதேவன் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் அவரது பயணத்தை தங்க நாற்கரச் சாலைப் பயணமாக்கிக் கொண்டிருந்தன.

(இசைப் பயணம் தொடரும்..)

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

ஜுலை   29 , 2014  

logo
Andhimazhai
www.andhimazhai.com