தமிழன்' என்கிற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர்..!

 தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே... 6
தமிழன்' என்கிற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர்..!
Published on

எழுந்து விழும் அலைகள் தொட்டுச் செல்லும் தூரத்தில் தமிழ்வேந்தன், கபிலன், டாக்டர் செண்பா மூவரும் மெரினா கடற்கரையில் நின்றிருந்தனர்.

வானில் இருந்த முழுமதி, கடலில் குதித்து விளையாடுவது போல அலைகளுக்கு நடுவே தெரிவதும் மறைவதுமாக இருந்தது. ஒரு பெரிய அலை பாய்ந்துவர, மூவரும் பின்னோக்கி ஓட, தமிழ்வேந்தனை மட்டும் அந்த அலை முழவதுமாக நனைத்தது. செண்பா கலகல வென்று சிரித்தாள்.

"நேற்று நீங்கள் சொன்ன புதிரின் விடையை அறிவதில் இந்த கடலுக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது! உங்களை நோக்கி பாய்ந்து வருகிறது" என்றாள் செண்பா.

"என்ன புதிர் போட்டேன்" என்றான் தமிழ்வேந்தன்.

"தமிழ்மொழித் தலைவன் என்று ஒருவரை ஒரு புலவர் பற்பல ஆண்டுகளுக்கு முன்பு புகழ்ந்திருக்கிறார். யார்-யாரை என்று புதிர் போட்டீர்கள்" என்றாள் செண்பா.

"ஓ! பதில் அறிய முடியவில்லையா? திருநாவுக்கரசராம் அப்பர் பெருமானை, சேக்கிழார் இப்படி பாடி புகழ்ந்திருக்கிறார். ஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு என்ற திருத்தலம் சென்றதை கூறவந்த சேக்கிழார், 'சண்பை நாடுடைய பிள்ளை தமிழ்மொழித் தலைவரோடு மண்பயில் சீர்த்தி செல்வ மாமறைக் காட்டு வைகி' என்கிறார் தமிழ்மொழித் தலைவர் என்று நாவுக்கரசரை அழைப்பது மிகவும் பொருத்தம் தானே!"

"திருநாவுக்கரசரை நினைக்கும் போது எனக்கு உள்ளம் உருகும். ஆவருடைய நெஞ்சுறுதி அதிசயமானது. 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்..' என்றார். 'யாதும் ஊரே... யாவரும் கேளிர்' என்கிற முழக்கத்துக்கு இணையானது இது" என்றான் கபிலன்.

"திருநாவுக்கரசர் வாழ்க்கையை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும் ஏன் தெரியுமா? 'தமிழன்' என்கிற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவரே இவர்தான். தமிழ் அறிஞர் ஈரோடு விசுவநாதன் 'அப்பரடிகள்' என்கிற புத்தகத்தை தேடிப் படியுங்கள் ஆரியன் கண்டாய்... தமிழன் கண்டாய்' என்று நாம் தமிழர் என்கிற பெருமைக்கு வித்திட்டவர் நாவுக்கரசர் என்பதை தெளிவு படுத்துகிறார்" - உணர்ச்சியோடு பேசினான் தமிழ்வேந்தன்.

"அன்புள்ள செண்பா! திருக்குறளுக்கு தருமர் உரை என்று கேள்வி பட்டிருப்பாய். நாவுக்கரசர் சமண சமயத்தை தழுவி இருந்தபோது, 'தரும சேனர்' என்று அழைக்கப்பட்டார். அப்போது அவர் திருக்குறளுக்கு எழுதிய உரைதான் அது என்பார்கள்" என்றான் கபிலன்.

"சத்தியாகிரகப் போரை, மகாத்மாவுக்கு முன்னே நடத்தியவர் நாவுக்கரசர். உண்ணாவிரதம் இருந்து தன்னை வருத்திக்கொண்டு, நாட்டை திருத்திய காந்தியடிகளுக்கு முன்னோடியாக, உண்ணாவிரதம் இருந்து கோரிக்கையை நிறைவேற்றச் செய்தவர் நாவுக்கரசர். பல தலங்களுக்கு சென்று வழிபடும் நாவுக்கரசர், ஓர் ஊரில் சிவன் கோயில் சமணர்களால் மூடப்பட்டு கிடப்பதும், அதற்கு அரசர் ஆதரவு இருப்பதும் அறிகிறார். அந்த கோயில் திறக்கப்பட்டு சிவபெருமானை வழிபடுகிறவரை உண்ணமாட்டேன் என்று உண்ணாவிரம் இருக்கிறார். அரசன் பணிந்து, கோயிலை திறக்கச் சொல்கிறான்.சிவபெருமான் மன்னன் கனவில் தோன்றி உத்தரவிட்டதாக சேக்கிழார் பாடுகிறார்" - தமிழ்வேந்தன் கூறுகிற செய்திகளை கண்களை விரித்தவாறு கேட்டாள் செண்பா.

"சரித்திரத்தில் தேர்ச்சிக் கொள் என்றார் பாரதி நீங்கள் சரித்திர அறிவு நிரம்ப உடையவர்களாக இருக்கிறீர்கள்" என்றாள் செண்பா.

"சரித்திர அறிவு அல்ல... சரித்திர புத்தகங்கள் படித்த அறிவு! தமிழ்நாட்டில் சதாசிவ பண்டாத்தார், சுந்தரேச வாண்டையார் போன்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் அற்புதமான தகவல்களை கண்டறிந்து தந்தார்கள். நீலகண்ட சாஸ்திரியார், கோபிநாதராயர், வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்கள் அற்புதமான நூல்களை எழுதி உள்ளனர். தமிழர்கள் அவர்களை மறக்கலாகாது" என்றான் தமிழ்வேந்தன்.

சற்று அமைதி நிலவியது. "சதாசிவ பண்டாத்தாரைப் பற்றி நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். திருப்புறம்பயம் அவர் பிறந்த ஊர். மெட்ரிகுலேஷன் வரை படித்தவர். தமிழ் மீது அக்கறை கொண்டார். குடந்தையில் தமிழாசிரியராக வேலை பார்த்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆனார். கல்வெட்டுகளை ஆராயும் அறிவை, தானாகப் பெற்றார். கல்வெட்டுகளை கோயில் கோயிலாகப் போய் படித்தார். அவருடைய கல்வெட்டு ஆராய்ச்சிகள் பிரமிக்கவைத்தன சோழர்கள் காலம் பற்றிய அவருடைய கண்டுபிடிப்புகள் பல... ஒன்று தெரியுமா? கல்கி எழுதிய 'பொன்னியன் செல்வன்' - இவரது ஆராய்ச்சிகளை படித்ததால் எழுந்த நாவல்! கல்கி இவருக்கு விழா எடுக்க நினைத்தவர். அதற்குள் கல்கியை மரணம் தழுவியது" - தமிழ்வேந்தன் கூறினான்.

"மீண்டும் சோழர்கள் பற்றி அறிய வாய்ப்பு! ஆதித்தகரிகாலன் கொலை மர்மம் பற்றி அறிவதில் ஆர்வமாக இருக்கிறேன்" என்றாள் செண்பா.

சிகப்புச் சட்டைகளின் நடமாட்டம் அதிகரித்தது. நேரமாகிவிட்டதற்கு அறிகுறி மூவரும் எழுந்தார்கள்.

- தொடரும்

ஞாயிறு விட்டு ஞாயிறு தோறும் தமிழ்வேந்தனின் 'தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே...' அந்திமழையில் வெளிவரும்....

'தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே...பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

  ஜுன்   30 , 2008  

அடுத்து>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com