நிரஞ்சனாவின் அலைகள்! - போதியின் நிழல் 40

நிரஞ்சனாவின் அலைகள்! - போதியின் நிழல் 40

காவி உடை அணிந்த பிக்குகள் வரிசையாக நடந்துபோய்க்கொண்டிருந்தனர். பல நூறு பேர் இருக்கக்கூடும். தொலைவில் இருந்து அக்காட்சியைப் பார்ப்பதற்கு செவ்வெறும்புகள் அணிவகுப்பு சென்று கொண்டிருப்பதைப் போல இருந்தது.அவர்களின் மழிக்கப்பட்ட தலைகள் வெயிலில் தாமிரக் குடங்களைப் போல மின்னின.அமைதியாக சென்ற நீண்ட வரிசையில் இடையிடையே குழல் ஊதுபவர்கள், மணிகளை ஒலிப்பவர்கள், பதாகைகளைத் தாங்கிச்செல்பவர்கள் என பலர் சென்றனர். ஜம்புத்வீபத்தின் பல நாடுகளைச் சேர்ந்த பிக்குகளின் குழுக்கள் அவை.அவற்றின் ஒரு குழுவின் பின்னால் யுவான் சுவாங்கின் குழுவும் சேர்ந்துகொண்டது இந்த பிரபஞ்சத்தின் ஆதிமூலமாக விளங்கும் வஜ்ராசனத்தையும் அதை யொட்டி உயர்ந்து நிற்கும் போதிமரத்தையும் காணப்போகிறோம் என்ற எண்ணமே பாடலிபுத்திரத்தில் இருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டதில் இருந்து யுவானுக்கு தூக்கத்தை கிட்டே வரவிடாமல் அடித்திருந்தது. ஒரு வளர்பிறை தினத்தில் கிளம்பிய அவர் எப்படியும் பௌர்ணமி அன்று உருவேலாவில் இருப்பது என்று திட்டமிட்டிருந்தார்.

அதையொட்டி தன் பயணத்தை அவர் வழியில் பல விஹாரங்களில் பலரை சந்திக்க நேர்ந்தபோதிலும் தன் பயணத்தின் காலஅளவை மனதில்கொண்டே அவர் தன் சந்திப்புகளை அமைத்துக்கொண்டார். அவருடைய குழுவினரும் இதை உணர்ந்து சீனப்பிக்குவின் மனவேகத்துக்கு ஏற்ப தங்கள் வேகத்தையும் மாற்றிக் கொண்டனர்.

உருவேலாவை அடைவதற்கு ஒரு நாள் முன்பாக இரவில் காட்டுப்பகுதியில் இருந்த பாழடைந்த செங்கல் மண்டபம் ஒன்றில் இரவை யுவான் கழித்தார். குளிர்ந்த காற்று வீசிய அந்த முன்னிரவில் மண்டபத்துக்கு வெளியே இருந்த
திறந்த வெளியில் மல்லாந்து படுத்து வானத்தை உற்று நோக்கினார். பொன்னால் ஆன மிகப்பெரிய பந்துபோல் இருந்த நிலவு குளிர்ச்சியான ஒளியைப் பொழிந்தது. இந்த நிலவுக்கு மட்டும் சக்தி இருக்குமானால் ததாகதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் போதிமரத்தின் அடியில் ஞானம் பெற்ற காட்சியை இப்போதே தன் கண்ணாடிப் பரப்பில் மறுபடியும் காட்சியாக நிகழ்த்தி தனக்குக் காண்பிக்கலாமே என்று எண்ணினார் யுவான். ஆனால் அந்த அரிய காட்சியை காணும் பாக்கியம் பெற்றது இதே நிலவுதானே? இல்லை அந்த நிலவு இல்லை இது. கணம்தோறும் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன அல்லவா? இந்த பிரபஞ்சம் ஒரு சலசலத்து ஒடும் நதி. ஒரு கணம் ஓடிய நதி மறுகணம் இல்லை. ததாகதர் ஞானம் பெற்றதைக் கண்ட நிலவில்லை இது; அவர் மாரனின் படைகளை எதிர்த்து அஞ்சாது நின்றதைக் கண்டதில்லை இது; மாரனின் மூன்று மகள்களையும் ஒரு முறுவலுடன் அவர் மறுதலித்ததற்கு சாட்சி இல்லை இது; பிரம்மனின் முன்பாக மாரன் ததாகதர் அமர்ந்திருக்கும் இடம் தனதென்று வாதிட்டபோது பூமாதேவியை புத்தர் பெருமான் சாட்சியாகக் காண்பித்ததைக் கண்ட நிலவில்லை இது. யுவான் சுவாங் புன்னகைத்துக் கொண்டார்.

யுவானுடன் வந்தவர்கள் சற்றுத்தள்ளி நெருப்பைக் கொளுத்தி தண்ணீரை சூடாக்கிக் கொண்டு ஏதோ ஊர்க்கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். நிலவுக்கு சற்று கீழாக பெரிய மேகம் ஒன்று பால் நிறத்தில் வழிந்த ஒளியை ஏந்தி பிரகாசம் கொண்டிருந்தது. உருவேலாவில் நிரஞ்சனா நதியின் நீர்ப் பரப்பு இந்த ஒளியில் எப்படி பிரகாசிக்கும்? ததாகதரின் மேனியைத் தழுவி மகிழ்ந்த அந்த நதிநீரில் தானும் இறங்கும் பாக்கியம் நாளை எனக்குக் கிடைக்கவிருக்கிறதே யுவானின் மேனி சிலிர்த்தது.

அவர் மெல்ல தன் கண்களை மூடி மூச்சின் மீது கவனத்தை செலுத்தினார். எவ்வளவு நேரம் அப்படிக் கண்ணை மூடிக்கிடந்தாரோ தெரியவில்லை. திடீரென யாரோ ஓடிவரும் சப்தம் கேட்டது. அச்சப்தம் அவருக்கு மிக அருகே நின்றது. அடுத்த கணம் ஆட்கள் அதிர்ச்சியுடன் கூக்குரலிடும் ஓசை கேட்டது. யுவான் சட்டென்று கண்ணை திறந்தார்.

அருகில் ஒரு பிக்கு நின்றார். அவரது மழித்த தலையில் நிலவொளி பட்டு எதிரொலித்தது. அவரது முகத்தைக் கண்டதும் யுவான் மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளானார். அதை விட அவரது கையில் நெளிந்த வஸ்து யுவானை ஸ்தம்பிக்க வைத்தது. அது ஒரு கருநாகம். அந்த மனிதர் யுவானை விட்டு விலகி காட்டை நோக்கி நடந்தார். பாம்பை காட்டுக்குள் பத்திரமாக விட்டுவிட்டு யுவானை நோக்கி உற்சாகமாக நடந்துவந்தார். அவரது நடையில் பெரும் உற்சாகத் துள்ளல் இருந்தது.

யுவானும் அவரை நோக்கி வேகமாக நடந்து கட்டித் தழுவிக்கொண்டார்.

‘‘பாலவர்மர்!’’

யுவானின் குழுவில் அவரை அடையாளம் கண்டு உற்சாகக் கூக்குரல் போட்டார்கள். தழுவல்கள் பரஸ்பர விசாரணைகள் முடிந்த பின்னால் பாலவர்மர் தன் கதையை சுருக்கமாகக் கூறினார்: கங்கை நதியில் கொள்ளையர்களை எதிர்கொண்டு வீழ்த்தப்பட்ட பிறகு ரத்த காயத்துடன் பாலவர்மர் கண்விழித்தபோது ஒரு குடிசைக்குள் இருந்தார். அவரை ஒரு மூதாட்டி கங்கைக் கரையோரமாகக் ரத்தவெள்ளத்தில் கண்டு தூக்கிவந்து சிகிச்சை அளித்து பிழைக்க வைத்திருந்தாள். அம்முதாட்டியின் பேரன்கள் கொடுத்த கஞ்சி, பால் போன்றவற்றை அருந்தி சில நாட்களில் பாலவர்மர் தேறிவிட்டார். காயம் முழுக்க ஆற ஒரு மாதகாலம் ஆனது. பின்னர் யுவானை எங்குபோய்த் தேடுவது என்று யோசித்த பாலவர்மர், நேரடியாக உருவேலாவுக்குப் போய்விட்டால் அங்கு எப்படியும் யுவான் வந்து சேர்வார் அவரைக் கண்டுகொள்ளலாம் என்று நேரடியாக இங்கு வந்துவிட்டார். இந்த பகுதியின் கிராமங்களில் பிட்சை ஏற்று வாழ்ந்துவந்த அவர் எல்லா பௌர்ணமிக்கும் கட்டாயம் போதிமரத்தின் வஜ்ராசனத்தையும் அதன் உயர்ந்த ஆலயத்தையும் காண வந்துவிடுவார். எப்படியும் ஏதோ ஒரு பௌர்ணமி அன்று யுவானைக் காணமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அப்படிச் செல்கையில்தான் இந்த மண்டபத்தில் தங்கலாம் என்று அவர் வந்தார். அப்படி வந்ததும் நல்லதாகப் போயிற்று; கருநாகத்திடம் இருந்து யுவானைக் காப்பாற்றினார்.

அன்றிரவு முழுக்க பாலவர்மரும் யுவானும் பேசிக்கொண்டே இருந்தனர். நண்பர்கள் இருவரும் கண்ணுறங்கியபோது பொழுது விடிவதற்கு சில நாழிகைகளே இருந்தன. விடிந்து எழுந்து தங்கள் பயணத்தை உருவேலா நோக்கித் தொடர்ந்தனர்.

‘‘சகோதரரே... உங்கள் வாள்வீச்சைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டாமல் போய்விட்டது..’’ என்று யுவானின் குழுவில் இருந்த ஒருவர் பாலவர்மரைப் பார்த்து நகைப்புடன் கூறினார்.

‘‘ஆம். என் வாழ்நாளில் அதை மிகுந்த முட்டாள்தனமான காரியமாக உணர்ந்தேன். ஒரு பிக்கு வாள் ஏந்துவது எவ்வளவு தவறு? அதுவும் சீனச்சகோதரர் போன்ற ஞானவான்கள் இருக்கையில் நான் அப்படிச் செயல்படத்துணிந்தது மிகவும் தவறுதான். அதனாலன்றோ எம் சகோதரரை நான் பிரியநேர்ந்தது?’’ என்றார் பாலவர்மர்.‘‘கவலை கொள்ளாதீர்கள் பாலவர்மரே கங்கையின் முதலைகளுக்கு உம்மைப்பிடிக்கவில்லை போலிருக்கிறது. அல்லது நீரங்கள் வாளேந்தி நின்ற கோலம் பார்த்து அவை வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடி ஒளிந்துவிட்டனவா?’’ என இன்னொருவர் கேட்டார். பாலவர்மர் வந்ததும் யுவானின் குழுவிடத்தில் தனித்துவமான மகிழ்ச்சி ஏற்பட்டிருநப்பதை. யுவான் கண்டார். கதிரவன் உச்சியை அடைந்த வேளையில் உருவேலாவை அவர்கள் அடைந்தார்கள்.

மரங்களுக்கு நடுவே தொலைவிலிருந்து பார்க்கையில் ஆலயத்தின் உச்சிதெரிந்தது. யுவானுக்கு உடல்முழுக்க சிலிர்ப்பு ஊடுருவியது. அவரது நடை மெதுவான ஓட்டமாக மாறியது. பாலவர்மர் அவரது உணர்வுகளைப் புரிந்து கொண்டபடியால், போதிமரத்துக்குச் செல்லும் வழியைக் காண்பிப்பதற்காக அவருக்கு முன்பாக வேகமாகச் சென்றார். உயரமான செங்கல் சுவர்களின் இடையே இருந்த வாயில் வழியாக அகன்ற, புல்பரவிய வளாகத்துக்குள் பிரவேசித்தார்கள்.எதிரே மேகங்களைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நின்ற கோபுரம் அவர்களைக் கனிவுடன் பார்த்தது. யுவான் அப்படியே தரையில் வீழ்ந்து கண்ணீர் வடித்தார். அவருடன் வந்தவர்களும் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளானார்கள். பின் சமாளித்து எழுந்து கொண்ட யுவான் மூன்றடி முன்னோக்கி எடுத்துவைப்பது, பின்னர் தரையில் விழுந்து வணங்குவது என்கிற தங்கள் நாட்டு வணக்க முறையைப் பின்பற்றி கோபுரத்தின் வாயிலை நெருங்கி உள்ளே ஒளிபொருந்திய பீடத்தில் இருந்த எல்லையற்ற அமைதிவழியும் ததாகதரின் உருவைக் கண்டார். பூமிஸ்பாரா முத்திரையில் ததாகதரின் வலதுகையின் ஆட்காட்டி விரல் பூமியைச் சுட்டிக் கொண்டிருந்தது. கனவிலும் நினைவிலுமாக யுவான் கண்டு கொண்டிருந்த காட்சி அல்லவா அது? வெகுநேரம் கழித்து பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு மெல்ல எழுந்து வெளியே வந்து வலப்புறமாக நடந்து கோபுரத்தின் பின்னால் வந்தபோது போதிமரம் தன் பசுமையான இலைகளை அசைத்து அவரை ஆசிர்வதித்தது. அதன் அடியில் பகவான் புத்தர் அமர்ந்து ஞானம் பெற்ற வஜ்ராசனம் சிவந்த பூக்களின் இதழ்களால் அலங்கரிக்கப் பட்டு சிறிய தடுப்புக்குள் இருந்தது. பிக்குகளும் சாமானிய மக்களும் அதை வணங்கியவாறு நின்றுகொண்டிருந்தனர்.

யுவான் மிகுந்த பக்தியுடன் தரையில் வீழ்ந்து கண்ணீர் விட்டார்.


‘‘பகவான் புத்தர் ஞானம் அடைந்த போது நான் எந்த வடிவில் இருந்தேனோ அறிகிலேன். கல்லாக இருந்தேனோ, கொடும் விலங்காக இருந்தேனோ, காட்டு மனிதனாக இருந்தேனோ அறிகிலேன். பிறப்பு இறப்பின் சுழலின்பிடியில், துக்கத்தின் சுழற்சியில் இருந்த எனக்கு இன்று இப்படியொரு பாக்கியம் கிடைத்துள்ளது. என் பிறவிகளின் பாவமூட்டையை எண்ணுகையில் என் இதயம் கனக்கிறது’’ தேம்பினார் அவர்.

போதிமர வளாகத்தின் தென்பகுதியில் அழகிய பூக்கள் நிரம்பிய குளம் இருந்தது. வடக்குப் பக்க வாயில் ஒரு குன்று. வடக்குப்புற வாயில் பெரியவிஹாரத்துக்குள் இட்டுச் சென்றது. கிழக்குப் பகுதி வாயில் சரிந்து படிகள் கீழ் இறங்கிச் சென்றன. பாலவர்மரும் யுவானும் அப்படிகள் வழியாக இறங்கி வழியில் இருந்த ஒரு மண்டபத்துக்குள் நுழைந்து வெளியேறி ஒரு மேட்டின் மீது ஏறினர். யுவான் மீண்டும் தரையில் வீழ்ந்து விசும்பினார்.விரிந்து, நுரைத்து, குளிர்ந்து ஓடிக்கொண்டிருந்தது நிரஞ்சனா நதி.தொலைவில் அதன் அக்கரையில் பசுமையான மரங்களைத் தாண்டி, பகவான் புத்தருக்கு பால்சோறு அளிக்கும் பேறு பெற்ற சுஜாதாவின் கிராமம் இருப்பதை யுவான் அறிவார். பகவான் புத்தர் ஞானம் பெறுவதற்கு முன்னும் பின்னும் அவர் முழ்கி எழுந்த நதிக்கரையில் தானும் எங்கோ சீனதேசத்திலிருந்து வந்து சேரும் வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி உவகை கொண்டார். கூப்பிய கரங்களுடன் நதியில் முழ்கி எழுந்தார். மாலை ஆகி முழுநிலவு கிழக்கு வானில் தெரிந்தது.திரும்பி வந்து யுவான் போதிமரத்தின் நிழலில் கால்களை மடக்கி அமர்ந்தார். வானில் நிலவு வேகமாக மேலேறி வந்து போதியின் அடியில் அமர்ந்திருந்த யுவானைக் காண முயன்றது. தொலைவில் நிரஞ்சனாவில் ஓர் அலை கரையைத் தாண்டி வரத் துடித்தது. பின் எங்கும் அமைதி சூழ்ந்த அந்த இரவின் தனிமையில் போதிமரத்தின் உச்சியில் அணில் ஒன்று திடீரென கண்களை விழித்துக் கீழே பார்த்தது. அம்மரத்தில் இருந்து பழுத்த இலை ஒன்று ரகசியமாய் உதிர்ந்து, யுவானின் மடியில் மெல்ல வந்து விழுந்தது.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com