நிலவு தேயாத தேசம் – 13

நிலவு தேயாத தேசம் – 13
Published on

ஒரு தேசத்தைக் காண்பது என்றால் அந்த தேசத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வரலாற்றையும் நிலத்தையும் அரசியலையும் அறிய முயல்வதே ஆகும்.  பயணத்துக்கும் சுற்றுலாவுக்கும் அதுதான் வேறுபாடு.  நான் வளர்ந்த இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியே துருக்கியை நோக்கி என்னைச் செலுத்தியது எனலாம்.  என்னுடைய இசை ஆர்வத்தைப் பற்றி பல நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்பதுண்டு.  நாகூரில் வளர்ந்ததுதான் அதற்குக் காரணம்.  இன்னொன்று, தஞ்சாவூர் மாவட்டம்.  அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் குருதியிலேயே இசை கலந்திருக்கிறதாகத் தோன்றுகிறது எனக்கு.  


உங்களுக்கு எம்.கே.டி. பாகவதரைப் பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் துருக்கியில் உள்ள கப்படோச்சியா என்ற பகுதிக்குப்  போயிருக்கும் போது அந்த பாகவதரை துருக்கியைச் சேர்ந்த ஒரு ஆள் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?  “எனக்கு மிகப் பிடித்த பாடகர் இப்ரஹீம் தத்லிஸஸ்” என்று நான் சொன்னபோது லார்பிக்கு அப்படித்தான் இருந்தது.  என்னதான் இப்ரஹீம் துருக்கியின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஏதோ ஒரு ஆசிய நாட்டிலிருந்து வந்த ஒரு பயணி அவரது பாடல்களைப் பற்றி மயிர்க்கூச்செறியப் பேசும் போது அது ஒரு மறக்க முடியாத தருணம் தானே?  


இப்ரஹீமை துருக்கியில் எந்த அளவுக்கு வெறி பிடித்தாற்போல் ரசிக்கிறார்கள் என்பதற்கு இந்த காணொளி ஒரு உதாரணம்.  

இது 1987-ஆம் ஆண்டு இப்ரஹீம் கலந்து கொண்ட நிகழ்ச்சி.  எனக்கு இப்ரஹீமைக் கேட்கும் போதெல்லாம் கண்கள் கலங்கி விடுகின்றன.  இப்ரஹீம் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இது:

’பேரரசன்’ என்று அழைக்கப்படும் இப்ரஹிம் தத்லிஸஸ் மீது 1990-இல் ஒரு கொலை முயற்சி நடந்தது.  காலில் காயமடைந்ததோடு பிழைத்துக் கொண்டார்.  பிறகு 1998-இல் மீண்டும் ஒரு கொலை முயற்சி.  அதன் பிறகும் மூன்றாவது முறையாக  மார்ச் 2011-இல் கலாஷ்னிகோவ் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டதில் குண்டு தலையில் பாய்ந்தது.  ஆனாலும் உயிர் போகவில்லை.  நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.   ஐந்து நாட்கள் கழித்தே அவருக்கு நினைவு திரும்பியது.  பின்னர் அரசு விமானத்தில் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டு அஜீத் சாமே என்ற உலகப் புகழ் பெற்ற நியூரோசர்ஜனிடம் சிகிச்சை பெற்ற பிறகே அவர் உயிருக்கு உத்தரவாதம் தரப்பட்டது.  அதை இப்ரஹீமின்  மறுபிழைப்பு என்றே சொல்ல வேண்டும்.  ஆனாலும் தலையில் குண்டு பாய்ந்ததால் இடது கால் இடது கை இரண்டும் ஓரளவு செயலிழந்து விட்டது.  மற்றொருவர் துணையின்றி அவரால் நடக்க இயலவில்லை.  பெர்லினில் அஜித் சாமேயிடம் அவர் சிகிச்சை பெற்று மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த போது மருத்துவமனையிலேயே இல்திஸ் என்ற பெண்ணோடு காதல் ஏற்பட்டு செப்டம்பர் 2011-இல் அவரை மணந்து கொண்டார்.  அப்போது இப்ராஹிமின் வயது 60.  இதற்காகத்தான் என்னைப் பார்த்துக் கண்ணடித்தான் லார்பி.   


இப்ரஹீம் துருக்கி மொழிப் பாடகர்; நடிகர், சூப்பர் ஸ்டார். நாற்பது படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.  அவர் பாடலைக் கேட்டால் பெண்கள் ஆவேசத்தில் மயங்கி விழுகிறார்கள்.  அதனால்தான் தாஹர் பென் ஜெலோன் Leaving Tangier நாவலில் இப்ரஹீம் பற்றி அப்படி எழுதினார்.  அந்த மேற்கோள்:
“His name’s Ibrahim Tatlises,” which means ‘sweet voice’!  He’s from Urfa, southeastern Turkey, not for from the Syrian border.  He’s a lady-killer.  Wherever he sings, husbands hide their wives.  Touria cries at the very sound of his voice.”

துருக்கி மொழியில் பாடினாலும் இப்ரஹீம் குர்து இனத்தைச் சேர்ந்தவர்.  பள்ளிப் படிப்பு இல்லாததால் இப்ரஹீமுக்கு எழுதப் படிக்க தெரியாது.  எண்பதுகளில் துருக்கி அரசு குர்து மொழியைத் தடை செய்த பிறகு இப்ராஹீம் குர்து மொழியில் பாடுவதில்லை.  ஆனாலும் ஒருமுறை ஸ்வீடனில் நடந்த இசை நிகழ்ச்சியில் குர்து மொழியில் பாடியதால் அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. அதிலிருந்து அவர் எக்காரணம் கொண்டும் குர்து மொழியில் பாடுவதில்லை.
குர்திஸ்தானின் வரலாறு காஷ்மீர் வரலாறு போன்றதுதான்.  துருக்கியின் சுதந்திரப் போரின் போது பெருமளவில் ஈடுபட்ட குர்துகளுக்குத் தனிநாடு உண்டு என்று வாக்களித்து விட்டு சுதந்திரம் கிடைத்ததும் அவர்களை ஏமாற்றி விட்டனர் துருக்கிய தேசாபிமானிகள்.  பின்னர் 1923-இல் துருக்கி, ஈராக், சிரிய அரசுகள் உருவானபோது குர்திஸ்தான் மட்டும் உருவாக்கப்படவில்லை.  வாக்குறுதி காற்றில் விடப்பட்டது.  அப்போதிருந்து இன்று வரை குர்துகள் துருக்கியில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  1924-இல் குர்து என்ற வார்த்தையை உச்சரித்தாலே தண்டனை என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  

கலகம், காதல், இசை என்ற நூலில் அல்ஜீரியாவின் வடகிழக்கில் உள்ள கபீலியா என்ற பிரதேசத்தில் கபீலிய மொழி பேசினாலே அபராதம் என்று அல்ஜீரிய அரசு சட்டம் போட்டது பற்றியும் (அரசாங்க மொழி அரபி), கபீலிய விடுதலைப் போராட்டத்துக்காகப் பாடிய ரய் இசைப் பாடகர் ஷாப் ஹாஸ்னி பற்றியும் எழுதியிருக்கிறேன்.  அதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்தல் நலம்.   

ஒருமுறை இப்ரஹீமை பிரபலமான ஒரு வர்த்தகர் குர்து மொழியில் பாடச் சொன்ன போது ”நான் குர்து தான்; ஆனாலும் குர்துவில் பாட அரசாங்கத் தடை இருப்பதால் பாட மாட்டேன்” என்று சொன்னதற்காகவே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் இறுதியில் அவர் மீது குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் தண்டனையிலிருந்து தப்பினார்.   

துருக்கியில் 1925-இலிருந்து 1939 வரை பதினைந்து லட்சம் குர்துக்கள் அரசுப் படையினரால் கொல்லப்பட்டனர்.  ஆயுதப் போராட்டத்தின் மூலம் துருக்கியரிடமிருந்து  குர்து இனத்தை விடுதலை செய்வோம் என்ற பிரகடனத்துடன் 1974-இல் குர்திஷ் தொழிலாளர் கட்சி (பி.கே.கே.) தொடங்கப்பட்டது.   அக்கட்சியைச் சேர்ந்த மஸ்லூம் தோகன் என்பவர் 1982-இல் சிறையிலேயே தீக்குளித்து இறந்தார்.  அவரைத் தொடர்ந்து மேலும் நான்கு பிகேகே போராளிகள் தீக்குளித்து இறந்தனர்.  அதே ஆண்டு மேலும் நான்கு போராளிகள் பட்டினிப் போராட்டம் நடத்தி சிறையில் இறந்தனர்.  


    
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில்தான் குர்துக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள்.  (படத்தில் ஆரஞ்சு நிறமெல்லாம் குர்து இனத்தினர் வசிக்கும் பகுதிகள்.)
குர்திஷ் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்ட 1974-இலிருந்து இன்று வரை அந்தக் கட்சியினருக்கும் துருக்கி ராணுவத்துக்கும் தொடர்ந்த ஆயுத யுத்தம் நடந்து வந்து கொண்டிருக்கிறது.  இந்த நூற்றாண்டில் யுத்தம் என்பதன் பொருள் மாறி விட்டதை நாம் உணர்ந்திருக்கிறோம்.  இரண்டு தேசங்களுக்கு இடையே யுத்தம் என்றால் முன்பு இரு தேசத்து ராணுவத்தினரும் போர் முனையில் பொருதுவார்கள்.  ஆனால் இன்றைய யுத்தம் அப்படியல்ல.  அமெரிக்காவைத் தாக்க வேண்டுமானால் அங்கே ஒரு நகரத்தில் உள்ள வானளாவிய கட்டிடத்தின் மீது ஒரு விமானத்தைக் கொண்டு போய் மோதினால் ஒருசில நிமிடங்களில் 3000 பேரைக் கொன்று விடலாம்.  மும்பை குண்டு வெடிப்பு மற்றொரு உதாரணம்.  இப்போதைய போர்முறையில் சாவது அப்பாவிப் பொதுமக்களே.  குர்திஷ் தொழிலாளர் கட்சியை ஒடுக்குவதற்காக தொண்ணூறுகளில் துருக்கி ராணுவம் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காடுகளை அழித்தது; 3000 குர்திய கிராமங்களை அழித்தது.  இந்த வாக்கியத்தை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்.

துருக்கி ராணுவம் 3000 குர்திய கிராமங்களை அழித்தது என்றால் அதன் பொருள் என்ன?  ஒரு மாபெரும் மானுட அவலம் அது.  குர்திய கிராமங்கள் எரிக்கப்பட்டன;  அவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன.  ஒரு நாட்டின் ராணுவம் தன் சொந்த நாட்டின் மீதே போர் தொடுத்து தன் நாட்டு மக்களையே அகதிகளாக்கிய கொடுமை அங்கே நடந்தது.  இப்படியாக மொத்தம் 20 லட்சம் குர்தியர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.  இதனால் குர்திஷ் தொழிலாளர் கட்சியினரின் ஆவேசம் அதிகமாயிற்று.  அதற்கிடையில் ’குர்திஷ் விடுதலை வல்லூறுகள்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.  இந்தக் கட்சியின் நோக்கம், துருக்கியை நரகமாக்குவோம் என்பதுதான்.  ஒருமுறை இஸ்தாம்பூலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கூட குண்டு வெடித்தது என்றால் குர்திய விடுதலைப் போராட்டத்தின் தீவிரத்தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.  மாற்றி மாற்றி ராணுவமும் விடுதலைப் போராட்ட ஆயுதக் குழுக்களும் துருக்கியை ரத்தக் களரியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.   கடந்த நாற்பது ஆண்டுக் கால தென்கிழக்குத் துருக்கியின் வரலாறு என்னவென்றால் –

ராணுவம் பிகேகே போராளிக் குழுக்களின் தளங்களைத் தாக்கியது.  230 போராளிகள் கொல்லப்பட்டனர்.
இஸ்தாம்பூலில் இரண்டு இடங்களில் ஒரே சமயத்தில் குண்டு வெடித்தது.  17 பேர் மரணம்; 154 பேர் படுகாயம்.
இப்படியே ஆண்டுக்கு நான்கைந்து முறை நடந்து கொண்டே இருக்கிறது.  நாற்பது ஆண்டுகளாக மாற்றி மாற்றி இதே செய்திதான்.  இந்த யுத்தத்தில் சிரியாவில் இருக்கும் ஐ.எஸ்.ஸும் சேர்ந்து கொண்டதால் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.  குர்து இனப் போராட்டத்தைப் பற்றி யோசிக்கும் போது இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் ஆயுதங்களின் மூலம் விடுதலையும் தனிநாடும் சாத்தியமா என்றே சந்தேகமாக இருக்கிறது.  இங்கேதான் மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.   

துருக்கி மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே சிறுபான்மையினர் மொழி, மதம், இனம் போன்றவற்றின் பேரால் ஒடுக்கப்படுகிறார்கள்; அழித்தொழிக்கப்படுகிறார்கள்.  அதேதான் குர்து மக்களுக்கும் நடந்து வருகிறது.  ஆனால் ஆயுதத்துக்கு ஆயுதம், வன்முறைக்கு வன்முறை என்று உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட இனங்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினால் உலகமே ஒரு மாபெரும் படுகொலைக் களமாக மாறி விடாதா என்ற ஐயமும் ஏற்படுகிறது.
இப்ரஹீம் தத்லிஸஸ் மீது ஏன் இத்தனை கொலை முயற்சிகள் நடந்தன என்பதற்கும் மேலே விவரித்த குர்திஷ் இனப் போராட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  இப்ரஹீம் ஏன் துருக்கி அரசை ஆதரிக்கிறார், அவர் ஏன் குர்து மக்களின் போராட்டத்தின் பக்கம் நிற்கவில்லை என்ற ஆத்திரத்தில்தான் குர்திஷ் தொழிலாளர் கட்சியினர் அவரைக் கொல்ல முயற்சித்தனர்.  

உலக அளவில் தீவிரவாத இயக்கங்கள் ஒரு காலகட்டத்தில் அரசின் உதவியால்தான் வளர்கின்றன.  அமெரிக்கா ரஷ்யாவை அடக்குவதற்காக தாலிபானை வளர்த்தது.  இப்போது தாலிபான் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்.   இந்தியாவில் இந்திரா காந்தி பஞ்சாப் மாநிலத்தின் அகாலி தளத்தை ஒடுக்குவதற்காக பிந்த்ரான்வாலே என்ற தீவிரவாதியை வளர்த்து விட்டார்.  அது ஒரு காலகட்டத்தில் பஞ்சாபையே ரத்த பூமியாக்கியது. இந்திராவின் உயிருக்கும் ஹானியாயிற்று.  இதே நடைமுறையின்படி குர்திஷ் விடுதலை இயக்கங்களை ஒடுக்குவதற்காக துருக்கி அரசு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குத் தன் எல்லையைத் திறந்து விட்டது.  அதன் மூலம் அவர்கள் குர்திஷ் இயக்கங்களின் தலைமையகம் இருந்த கொபானி என்ற நகரை நிர்மூலமாக்கினர்.  கொபானி சிரியா - துருக்கி எல்லைப் பகுதியில் சிரியாவில் உள்ள ஒரு நகரம்.  

சென்ற ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி தென்கிழக்குத் துருக்கியில் உள்ள சுருச் என்ற ஊரில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கூடியிருந்தனர்.  போரில் சீரழிந்து விட்ட கொபானி நகரை சீரமைப்பது அவர்களின் திட்டம். அப்போது அந்தக் கூட்டத்தில் நுழைந்த 20 வயது குர்து இளைஞன் ஒருவன் தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து 32 மாணவர்களைக் கொன்றான்.  நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்தப் படுகொலையை நடத்தியதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டது ஐ.எஸ். அமைப்பு.  அதன் காணொளி இது:
https://www.youtube.com/watch?v=drg-jJFGVK0

சுருச் என்ற ஊர் உர்ஃபா மாநிலத்தில் கொபானியிலிருந்து பத்து கிலோமீட்டரில் உள்ளது.  உர்ஃபா இப்ரஹீம் பிறந்த ஊர்.   

சுருச்படுகொலைநடந்தஇரண்டுதினங்களில்மற்றொருமுக்கியமானசம்பவம்உர்ஃபாமாநிலத்தில்உள்ளசெலான்பினார்என்றஊரில்நடந்தது.  குர்திஷ்தொழிலாளர்கட்சிஇரண்டுபோலீஸ்காரர்களைக்கொன்றது.  இதன்விளைவாகதுருக்கிமுழுவதும்வன்முறைபரவியது.  
செலான்பினாரில்தான்சிரியாவிலிருந்துவரும்அகதிகளுக்கானமுகாம் உள்ளது.  

சிரியாவிலிருந்து செலான்பினாருக்குத் தப்பி வரும் அகதிகள்:


 இந்த இரண்டு சம்பவங்களும் நான் துருக்கி சென்று வந்த பிறகு நடந்தவை.  அந்தச் சம்பவங்களின் விளைவாக துருக்கி முழுவதும் ஏற்பட்ட வன்முறையில் குர்து இனத்தினரின் வியாபார ஸ்தலங்கள், வீடுகள் எல்லாம் தாக்கப்பட்டன.  நூற்றுக் கணக்கான குர்து இனத்தினர் பொதுமக்களால் கொல்லப்பட்டனர்.  போலீஸ் அந்தப் படுகொலைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.  சில இடங்களில் போலீஸாரும் பொதுமக்களோடு சேர்ந்து குர்து இனத்தினரைத் தாக்கினார்கள்.  


இதையெல்லாம் இங்கே நினைவு கூர்வதற்குக் காரணம், சில தினங்களுக்கு முன் – சரியாகச் சொன்னால் ஜனவரி 12 அன்று நீலமசூதியில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம்…

(சாருநிவேதிதாஎழுதும்இந்ததொடர்வெள்ளிக்கிழமைதோறும்வெளியாகும். உங்கள்கருத்துகளை editorial@andhimazhai.com க்குஅனுப்புங்கள்)

ஜனவரி   18 , 2016  

logo
Andhimazhai
www.andhimazhai.com