கடையநல்லூர் நண்பர் ரியாஸ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ஜனவரி 12-ஆம் தேதி அன்று நீலமசூதிக்கு வெளியே நடந்த ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதல்தான் அந்தச் செய்தி. சம்பவத்தில் பதினோரு பேர் உடனடியாக மரணமடைந்தனர். கீழ்வரும் புகைப்படங்களோடு நான் நீலமசூதியில் எடுத்திருந்த புகைப்படங்களையும் சேர்த்துக் காணவும். ரியாஸ் அனுப்பாதிருந்தால் மறுநாள் தினசரியில் ஏதோ ஒரு மூலையில் வந்திருந்த அந்தச் செய்தியை எல்லோரையும் போலவே நானும் கடந்து போயிருப்பேன். இன்றைய வாழ்க்கையில் ஏதோ ஒரு தேசத்தில் ஏதோ ஒரு ஊரில் குண்டு வெடித்துப் பதினோரு பேர் மரணமடைவது ஒரு விஷயமா என்ன? அமெரிக்காவில் நடந்திருந்தாலாவது எல்லோரையும் போல் கவலைப்படலாம். துருக்கியில் நடப்பதெல்லாம் ஒரு செய்தியா? ஆனால் இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலின் நோக்கம் பத்துப் பனிரண்டு பேரைக் கொல்வது அல்ல. துருக்கியின் பொருளாதாரத்தையே நிர்மூலமாக்குவதுதான் அவர்களின் முதல் நோக்கம். ’துருக்கிக்குச் செல்லாதீர்கள்; அங்கே எந்தக் கணமும் குண்டு வெடிக்கும்’ என்ற செய்தியை உலகத்தினருக்குத் தெரிவிக்கவே ஐ.எஸ். அமைப்பு இதைச் செய்திருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் பத்து பேர் ஜெர்மன் தேசத்தவர்.
சென்றஆண்டுமட்டும்இஸ்தாம்பூலுக்குவந்தவெளிநாட்டுப்பயணிகளின்எண்ணிக்கைஒருகோடியேஇருபதுலட்சம். இவர்களில்ஜெர்மானியர்களேஅதிகம். 2014-ஆம்ஆண்டுதுருக்கிக்குவந்தவெளிநாட்டுப்பயணிகளின்எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சம். இதில் ஜெர்மானியர்கள் மட்டும் 51 லட்சம்.
குர்து இனத்தைச் சேர்ந்த இப்ரஹீம் தத்லிஸஸ் துருக்கி அரசு ஆதரவாளராக இருப்பதால் அவருக்கு ஐ.எஸ். அமைப்பினால் நேர்ந்த மரணத் தாக்குதல்களைப் பற்றி சென்ற வாரம் படித்தோம். அதே போன்ற நிலைக்கு ஆளாகியிருக்கும் இன்னொரு பாடகர் இருபத்தேழு வயதான ஹெல்லி லவ். ஈரானைச் சேர்ந்த குர்து இனப் பாடகி. ஹெலன் அப்துல்லா என்ற பெயரை ஹெல்லி லவ் என்று மாற்றிக் கொண்டார். வளைகுடாப் போரின் போது ஈரானை விட்டுக் கிளம்பிய அவரது பெற்றோர் அகதிகளாக துருக்கியில் அலைந்து பின்னர் ஃபின்லாந்தில் குடியேறினர். ஹெல்லி லவ் படித்ததும் இசை கற்றுக் கொண்டதும் அங்கேதான். உயிரைப் பற்றித் துளியும் கவலைப்படாத ஹெல்லி லவ் மிகத் துணிச்சலாக பல போர்க்களங்களுக்குச் சென்று அங்கே தனது பாடல்களின் மூலம் குர்து இன விடுதலைக்கான உத்வேகத்தை அளித்திருக்கிறார். குர்திஸ்தான் தேசம் அமைவதற்காக ஆயுதம் ஏந்தாத களப் போராளி என அவரைச் சொல்லலாம். (புகைப்படம்)
இப்ரஹீமை விட இவர் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாகி இருப்பதற்குக் காரணம், இப்ரஹீமைப் போல் இவர் ’கலை கலைக்காகவே’ என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் ஐ.எஸ். அமைப்புக்கு வெளிப்படையாக சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். ”என்னை நீங்கள் கொன்றாலும் பரவாயில்லை; நான் பாடுவேன். ஏனென்றால் என் பாடலே என் ஆயுதம்” என்கிறார் ஹெல்லி லவ். ஹெல்லி லவ்வின் நேர்காணல்களைக் காணும் போது இவ்வளவு துணிச்சலாகவும் ஒரு பெண் – அதுவும் இவ்வளவு சிறிய வயதில் – அதிலும் மிகக் கவர்ச்சியாக புகைப்படங்களில் தோன்றும் ஒரு பாடகி – இருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. இவரது Risk It All, Revolution என்ற இரண்டு பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்.
ஹெல்லி லவ்வின் கவர்ச்சிகரமான தோற்றம், வயது, பாடல்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது ஆரம்பத்தில் இவர் ஏதோ பரபரப்புக்காகவும் விளம்பரத்துக்காகவும் செய்கிறார் என்று நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே இவர் போர்க்களங்களில் உயிரைத் துச்சமாக எண்ணிச் செயல்படுகிறார். அதை விட முக்கியமாக ஐ.எஸ். அமைப்புக்கு மிக மூர்க்கமான அளவில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். எந்த நேரத்திலும் இவர் கொல்லப்படலாம் என்று நெஞ்சம் பதைபதைக்கிறது.
https://www.youtube.com/watch?v=R21rehkNhtc
https://www.youtube.com/watch?v=1euSi4L53zY
மேலே உள்ள நேர்காணல்களைப் பாருங்கள். இவரது நேர்காணல்களையும் பாடல்களையும் யூட்யூபில் 40 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் தினந்தோறும் கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
சென்ற வாரம் கொபானி என்ற ஊரைப் பற்றிக் குறிப்பிட்டேன். அந்த ஊரே ஐ.எஸ். தாக்குதலில் நாசமாகிக் கிடக்கிறது. சிரியாவின் எல்லையில் இருக்கும் ஊர். அங்கே வாழ முடியாமல் மக்கள் துருக்கிக்குத் தப்பி வருகிறார்கள். ஒரே ஒரு கம்பி வேலியைத் தாண்டி விட்டால் துருக்கியின் Suruc என்ற ஊருக்கு வந்து விடலாம். துருக்கியின் தென்கிழக்கு மாநிலமான உர்ஃபாவில் உள்ள ஊர் சுருச். புகைப்படத்தில் கொபானியில் குர்து இன மக்கள் கம்பி வேலியைத் தாண்ட முடியாமல் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள்.
சிரியாவில் அன்றாடம் கொல்லப்படும் குர்து இன மக்கள்.
சென்ற வாரத்தில் (ஜனவரி 18) கூட சிரியாவில் ஐ.எஸ். அமைப்பு முன்னூறு பொதுமக்களைக் கொன்றிருக்கிறது. குண்டு போட்டு அல்ல. ஒவ்வொருவரும் தலை வேறு முண்டம் வேறாக அறுக்கப்பட்டனர். சிரியா என்ற தேசமே இன்று அழிந்து கொண்டிருக்கிறது. ஹிட்லர் யூதர்களை அழித்தது போல் குர்து இனம் இன்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. குர்துகளுக்கு சிரியாவின் ஐ.எஸ்.ஸும் எதிரி; துருக்கி அரசும் எதிரி; துருக்கியர்களும் எதிரி.
***
இஸ்தாம்பூலிலிருந்து தெற்கே நேர் கீழாக வந்தால் இஸ்மீர் என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து 100 கி.மீ. பயணம் செய்தால் வரும் ஒரு சொர்க்க பூமி குஷாதாஸி. அங்கே எங்கள் குழுவுக்கு வழிகாட்டியாக வந்த இளைஞனின் பெயர் அப்துல் மாலிக். அவன் கொபானியிலிருந்து தப்பி வந்து தனக்குத் ’தெரிந்தவர்கள்’ மூலம் பயணிகளுக்கான வழிகாட்டித் தேர்வை எழுதி குஷாதாஸி வந்திருக்கிறான். அவன் சிரியா பற்றியும் தென்கிழக்குத் துருக்கி பற்றியும் ஏராளமான கதைகளைச் சொன்னான்.
***
இஸ்தாம்பூலிலிருந்து 500 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இஸ்மீர். ஒரு மணி நேரப் பயணம். மாலை ஏழு மணிக்கு இஸ்மீர் விமானத்தைப் பிடிக்க வேண்டும். எங்கள் குழுவில் இஸ்தாம்பூலிலிருந்து இஸ்மீர் செல்ல இருந்தவர்கள் நான்கு பேர். ஞாபகம் இருக்கிறதா, எண்பத்தைந்து வயதான டேவிட், அவர் மனைவி லிண்டா என்ற அமெரிக்கத் தம்பதி? அவர்கள் எங்களுக்கு முதல் நாளே குஷாதாஸி சென்று விட்டார்கள். என்னோடு வருவது எமிரா என்ற லெபனான் நாட்டுப் பெண். பேராசிரியை. பொருளாதாரம். விமானத்தில் தொலைதூரத்தில் அமர்ந்திருந்தவர் என்னிடம் வந்து ”இஸ்மீர் விமானநிலையத்தில் பார்க்கலாம்; நமக்காக ஒரு கைடு காத்திருப்பார். ஒன்றாகத்தான் குஷாதாஸி போக வேண்டும். ஓட்டலும் ஒன்றுதான்” என்றார். அதோடு முடித்து விட்டாரே என்று இருந்தது எனக்கு.
புத்தகமும் சினிமாவும் உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்து வந்தால் உலகில் எந்த மூலைக்குப் போனாலும் அங்கே உங்களுடன் பேசுவதற்கு ஆட்கள் இருப்பார்கள். இந்த விதி தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது. உதாரணமாக, எனக்கு ஒரு ஃப்ரெஞ்ச் நண்பர் இருந்தார். அதிகம் படிக்கும் பழக்கம் உள்ளவர். கவிஞரும் கூட. உலக நாடுகள் பலவற்றில் பயணம் செய்திருக்கிறார். தமிழில் ஆதவன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களை ஆங்கிலத்தில் படித்திருக்கிறார். ஒரு சமயம் அவர் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்குத் தெரிந்த மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறார். அந்தத் துணைவேந்தர் அவரிடம், ”நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். அப்படியெல்லாம் யாரும் இங்கே எழுத்தாளர்கள் இல்லை” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். என் நண்பருக்குப் பெருத்த ஆச்சரியம். இவர் மறுத்துச் சொல்ல, தமிழ்த் துறைப் பேராசிரியரை அழைக்கிறார் துணைவேந்தர். தமிழ்த் துறைப் பேராசிரியர் சமகால இலக்கியத்தில் ஆதவன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகிய பெயர்களே கிடையாது என்று அடித்துச் சொல்லி விட்டார். பேராசிரியர் சொன்ன சமகால இலக்கியவாதிகள்: ஜெயகாந்தன், இந்திரா சௌந்தரராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், வைரமுத்து. இவர்களுக்குச் சற்று முந்தியவர்கள்: டாக்டர் மு. வரதராசனார், அகிலன், கல்கி. என் ஃப்ரெஞ்ச் நண்பருக்கு விஷயம் புரிந்து விட்டது. என்னிடம் வந்து தலையில் அடித்துக் கொண்டார். உலகில் எந்த இடத்திலும் இப்படி நடக்க வாய்ப்பில்லை. அமெரிக்காவில் ஒரு டாக்ஸி டிரைவரைக் கேட்டாலும் ஹெமிங்வே பெயர் அவனுக்குத் தெரிந்திருக்கும். ஃப்ரான்ஸில் ஒரு துப்புரவுத் தொழிலாளி சார்த்தரையும் ஆல்பெர் கம்யுவையும் படித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் நிச்சயம் பெயர் தெரிந்திருக்கும். பத்திரிகைகளில் அவர்களது ஓரிரு கதைகளைப் படித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தங்கள் தேசத்தின் மொழியை வளப்படுத்திய இலக்கிய ஆசான்களைத் தெரிந்திராத ஒரே தேசம் தமிழ்நாடாகத்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார். எல்லாவற்றையும் விடக் கொடுமை, பிரியும் போது என் நண்பரைப் பார்த்து துணைவேந்தர் சொன்ன அறிவுரை: திருவள்ளுவரைப் படியுங்கள்!
நான் சொன்னேன்: ”பல்கலைக்கழகமே இப்படி என்றால் மற்ற பகுதிகளை எண்ணிப் பாருங்கள். ஒரு குமாஸ்தா, ஒரு ஆட்டோ டிரைவர், ஒரு மருத்துவர், ஒரு எஞ்ஜினியர் - இவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. தமிழில் அவர்களுக்கு ஒரே ஒரு இலக்கியவாதியின் பெயரைக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.”
துருக்கியையும் தாய்லாந்தையும் வேண்டுமானால் தமிழ்நாட்டோடு ஒப்பிடலாமே தவிர உலகில் வேறு எந்த நாடும் இப்படி இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தத் தொடரின் ஆரம்பத்தில் A Prophet என்ற ஃப்ரெஞ்ச் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் வரும் ஒரு கைதி – கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவன் – அவனுடைய அறையில் ஏதோ ஒரு எழுத்தாளனின் அறையைப் போல் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
சரியாக எட்டே கால் மணிக்கு எமிராவும் நானும் இஸ்மீர் வந்து இறங்கினோம். நாங்கள் வந்தது சர்வதேச விமானம் என்பதால் சர்வதேச டெர்மினலில் நின்றோம். எங்கள் பெட்டிகளை எடுத்து வரும் கன்வேயர் பெல்ட் எங்கே இருக்கும் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வெளியே செல்வதற்கான வழியில் பல பயணிகளும் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் எங்கள் பெட்டியை எங்கே தேடுவது? பொதுவாகவே நான் வழி தவறிக் குழம்புவேன். எமிராவோ என்னை விட மோசமாக இருந்தார். அங்கே நாலைந்து மாணவர்கள் எல்லோருக்கும் வழிகாட்டிக் கொண்டிருந்தனர். எங்கிருந்து வருகிறீர்கள் என்றனர். இஸ்தாம்பூல் என்றோம். அவர்களுக்குக் கொஞ்சம் குழப்பம். எங்களைப் பார்த்தால் இஸ்தாம்பூல்வாசிகள் போல் தெரியவில்லையே? எந்த நாட்டிலிருந்து? லெபனான் மற்றும் இந்தியா. நேரே செல்லுங்கள். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நேரே சென்றோம். விமானத்திலேயே பேச எண்ணிய லெபனான் எழுத்தாளர் Ghada Samman பற்றித் தெரியுமா, அவருடைய Beirut Nightmares படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். படித்திருந்தார். பேசிக் கொண்டே நடந்தோம்.
1975 நவம்பரில் லெபனானில் நடந்த போரின் போது சில நாட்கள் வெளியிலேயே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் ஸம்மான். உடன் இருந்தவர்கள் சிறிய தந்தை, அவருடைய மகன், ஒரு வேலைக்காரன். பக்கத்து வீட்டில் குண்டு விழுந்ததும் சிறிய தந்தை அதிர்ச்சியில் இறந்து விடுகிறார். வேலைக்காரன் மீது குண்டு பாய்ந்து அவனும் சாகிறான். அந்த அனுபவங்களைத்தான் காதா பெய்ரூட் நைட்மேர்ஸ் என்ற நாவலில் எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதியை நான் என்னுடைய மொழியில் மொழி பெயர்த்திருக்கிறேன் என்றேன்.
எமிராவின் அழகிய பெரிய கண்கள் ஆச்சரியத்தில் மேலும் அழகைக் கொட்டியது. அப்போது எனக்கு மற்றோர் ஆச்சரியம் ஏற்பட்டது. நாங்கள் வந்து சேர்ந்திருந்த இடத்தில் மனித நடமாட்டமே இல்லை. அதோடு அந்த இடம் எங்களை விமான நிலையத்தின் வெளியே கொண்டு வந்து விட்டிருந்தது! அது மட்டும் அல்லாமல் ஒரு பெரிய சுவர் வேறு எங்கள் முன்னால் நின்று கொண்டிருந்தது. அப்போது எங்களுக்கு இரண்டு வழிகளே இருந்தன. ஒன்று, வந்த வழியே திரும்ப நடப்பது. இரண்டு, U turn எடுத்து வெளியே உள்ள வழியில் நடப்பது. இருவர் கையிலும் அலைபேசி இருந்தும் வெளிநாட்டில் பேசக் கூடிய வசதி இல்லை. இண்டர்நெட் இருந்தால் வாட்ஸ் அப்பில் பேசலாம். எங்களுக்காக எட்டு மணிக்கே கைடு வந்து காத்துக் கொண்டிருப்பார். அப்போது மணி ஒன்பதே கால். ஒரு மணி நேரம் நடந்திருக்கிறோம்.
கேட்பதற்கு ஒரு மனித உருவத்தையும் காணவில்லை. குழப்பத்துடன் விமான நிலையத்தின் வெளிப்பாதையில் நடந்தோம். அந்தப் பாதை எப்போது எங்கே முடியும் என்று தெரியவில்லை. எமிராவும் ஊருக்குப் புதியவர். மீண்டும் காதா ஸம்மானை ஆரம்பித்தேன்.
(சாருநிவேதிதாஎழுதும்இத்தொடர்வெள்ளிக்கிழமைதோறும்வெளியாகும். உங்கள்கருத்துகளை editorial@andhimazhai.com க்குஅனுப்பலாம்)
ஜனவரி 22 , 2016