நிலவு தேயாத தேசம் – 16

நிலவு தேயாத தேசம் – 16
Published on

குஷாதாஸியில் தங்கியிருந்த இரண்டு தினங்களும் எமிராவும் நானும் பேசிக் கொண்டதையெல்லாம் எழுதினால் அது லெபனான் பற்றிய தனிப் புத்தகமாகத்தான் வரும்.  அதனால் அந்த உரையாடல்களிலிருந்து சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.  அதற்கு முன்னால் ஒரு விஷயம்.  நம்முடைய எல்லா செயல்பாடுகளிலும் ஒரு அரசியல் தேர்வு இருக்கும்.  அரசியல் என்றால் தேர்தல் அரசியல் அல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.  ’எனக்கு அரசியல் வேண்டாம்; நான் நடுநிலையானவன்’ என்று சொன்னால் அதுவுமே ஒரு அரசியல் நிலைப்பாடுதான். 

இலக்கியம், சினிமா, குடும்பம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை.  சமகால இலக்கியத்தில் ஆரம்ப காலத்தில் ரஷ்ய இலக்கியமும் அதன் பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியமும் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.  இரண்டாவதில் நானும் தீவிரமாகப் பங்காற்றியிருக்கிறேன்.  அதன் பிறகு என் ஈடுபாடு அரபி இலக்கியத்தின் பக்கம் திரும்பி விட்டது.  இதுதான் என்னுடைய அரசியல்.  இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்ததால் எனக்கு அது இயல்பாகவும் ஆனது.  அந்த அரசியல் என்னை வேறோர் முக்கியமான இடத்துக்கு இட்டுச் சென்றது.  பன்மைத்துவத்தைத் தனது சிறப்பாகக் கொண்ட இந்தியக் கலாச்சாரத்தை இந்துத்துவம் என்ற கருத்தாக்கம் எப்படி ஒற்றைப் பரிமாணமாகக் குறுக்குகிறதோ அதேபோல் மேற்கத்திய ஊடகங்களும் இஸ்லாமை ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்கிறது.  இதை ஒரு மாபெரும் வரலாற்று மோசடி என்றே சொல்லலாம்.  ஒரு பங்களாதேஷி முஸ்லீமும் துனீஷிய முஸ்லீமும் ஒன்று அல்ல.  அவர்களின் கலாச்சாரம் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு வேறுவேறானது.

2007-க்கு முன்னால் இரானில் தெருக்களிலேயே பெண்கள் புகை பிடிப்பதைக் காண முடிந்தது.  2007-இல் யாரும் பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று சட்டம் போட்டார்கள்.  இந்தியா போலவே இரானிலும் மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை என்றாலும் பெண்கள் இப்போது சாலைகளில் புகை பிடிப்பதில்லை.  ஆனாலும் பூங்காக்களிலும் தனிப்பட்ட பார்ட்டிகளிலும் புகை பிடிப்பதைக் காணலாம்.  இதே இரானில்தான் திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவு கொள்ளும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையும் அமுலில் இருக்கிறது.  எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் நான் அங்கே உள்ள சினிமா அரங்கத்துக்குச் சென்று விடுவேன்.  சினிமா அரங்கம், பள்ளிக்கூடம், மருத்துவமனை, மார்க்கெட், கீழ்த்தட்டு மக்களுக்கான மதுபான விடுதிகள் போன்ற இடங்கள்தான் ஒரு தேசத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு உகந்த இடங்கள்.

இரான் பற்றிய இரண்டு ஆவணப் படங்களை எனக்கு சிபாரிசு செய்தார் எமிரா.  முதலாவது படத்தில் ஒரு ஆச்சரியமான விஷயம் மாட்டியது.  இரானில் சினிமா தியேட்டர்களில் படம் ஓடும் போதே எல்லா விளக்குகளும் எரிகின்றன!  காரணம்?  இருட்டாக இருந்தால் ஆண்களும் பெண்களும் ’தப்புக்’ காரியத்தில் ஈடுபட்டு விடுகிறார்களாம்!  அடுத்த படம், இரானில் விபச்சாரம்.  விபச்சாரத்துக்கு அங்கே கடுமையான சட்டங்கள் இருந்தாலும் சட்டத்தை மீறி விபச்சாரம் வெகுவாகப் பரவியிருக்கிறது.  14, 15 வயது சிறுமிகளெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.  காரணம்: வறுமை, கல்வியறிவு இன்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வேலை கிடைத்தாலும் மிகக் குறைவான சம்பளம்.  இதையெல்லாம் விட முக்கியமான காரணம், விவாகரத்து.  விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை தேசத்துக்குத் தேவையில்லாதவர்களைப் போலவே நடத்துகிறது இரானிய சமூகம்.  அவர்கள் வெறும் நடமாடும் பிணங்கள்.  அவர்கள்தான் அதிகமாக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.  மாட்டினால் சிறை என்று தெரியும்.  தெரிந்தாலும் வேறு என்ன செய்வது?  அவர்களுக்கு எல்லா வழிகளும் மூடப்பட்டிருக்கின்றன. 

அந்த ஆவணப் படத்தில் வரும் பெண்களின் பேச்சுக்கள் இவை:

பெண் 1: ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் நான் ஆசிரியர் பணிக்குச் சென்றால் அந்த வேலையோடு சேர்த்து நான் அவரது வைப்பாட்டியாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.  மாதச் சம்பளம்: 50 டாலர்.  அதே சமயம் ஒரு கம்பெனியில் செக்ரடரியாகச் சேர்ந்தால் அந்த வேலைக்கான எல்லா தகுதிகளும் எனக்கு இருந்தாலும் அந்த செக்ரடரி வேலையோடு கூட என் அதிகாரிக்குக் காதலியாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.  மாதச் சம்பளம்: 35 டாலர். ஆக, செக்ஸ் ஒர்க்கருக்கும் இந்த வேலைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?  இந்த நாகரீக வேலைகளில் முன்பின் தெரியாத ஒருத்தரோடு படுக்க வேண்டும்; செக்ஸ் தொழிலில் முன்பின் தெரியாத பல பேர்.  பதினைந்துக்குப் பதினைந்து உள்ள சிறிய அறையில் வாழ்வதற்கே சட்டத்துக்குப் புறம்பான பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.  ஆனால் நான் ஏன் இவ்வளவு சிறிய அறையில் வாழ வேண்டும்?  ஏன் ஒரு அபார்ட்மெண்ட்டில் வாழக் கூடாது? என்ன கேட்டீர்கள், வாடகைக்குத்தான்.  சொந்த வீடெல்லாம் கற்பனைக்கும் எட்டாத விஷயம்.  நான் தனியாக இருக்கும் போது கவிதை எழுதுகிறேன்.  வாழ்க்கை ஜாலியாக இருக்கிறது.  என் மனதுக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கிறதோ அதைச் செய்கிறேன்.  ஆனால் உங்களிடம் நான் மிக நிச்சயமாகச் சொல்லுவேன், நான் சந்தோஷமாக இல்லை.  என்னுடைய உடலை ஒரு அந்நிய மனிதனுக்கு விற்று பணத்தைப் பெறுவதா சந்தோஷம்?  இந்தத் தொழில் என் மனதை ரணமாக்குகிறது.  இருந்தாலும், வாழ்வின் எதார்த்தங்களை நான் எதிர்கொண்டாக வேண்டும்; வாழ்ந்தாக வேண்டும்.  கிராமங்களில் வசிக்கும் பல பெண்கள் ஏதேதோ காரணங்களால் சிறைக்குச் செல்கிறார்கள்.  சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு திரும்பவும் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது.  அவர்களின் ஒரே இலக்கு டெஹ்ரான் தான்.  டெஹ்ரானுக்கு எப்படி வருவது?  லாரி டிரைவர்களோடு படுத்தால்தான் டெஹ்ரானுக்கு வர முடியும்.  இப்படித்தான் டெஹ்ரான் வரும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் துவங்குகிறது.

இந்தச் சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது.  செக்ஸ் என்பது மனிதனின் அற்புதமான ஒரு அடிப்படை உணர்வு.  நீங்கள் காதலிக்கும் நபரோடு அதை மிகவும் இனிமையாக அனுபவிக்க வேண்டும்; பகிர்ந்து கொள்ள வேண்டும்.  ஆனால் எங்கள் தேசத்தில் செக்ஸ் என்பது மிக அருவருப்பான விஷயமாகக் கருதப்படுகிறது.  இங்கே அது வருமானத்துக்குரிய ஒரு தொழிலாக மாறி விட்டது.   ஒரு மனிதனிடம் பணம் வாங்கிக் கொண்டு என் உடம்பை அவன் பயன்படுத்திக் கொள்வதற்காகக் கொடுக்கும் போது அதை எப்படி செக்ஸ் என்று சொல்ல முடியும்?  பசிக்கு உணவைப் போல, சுவாசிக்கக் காற்றைப் போல செக்ஸ் எனக்குத் தேவைப்பட வேண்டும்.  ஆனால் இந்த நாட்டில் செக்ஸ் ஒரு ரகசியம்; பெண்களை விற்கும் சந்தை.

செக்ஸ் மீதான தடைகள்தான் இதற்கெல்லாம் காரணம்.  செக்ஸ் என்பது இங்கே அசிங்கம்.  இந்தப் பார்வைதான் எங்களுடைய அன்பையும் பாசத்தையும் நுண்ணுணர்வுகளையும் தீர்த்துக் கட்டுகிறது;  உடல், ஆன்மா இரண்டையும் அவமானப்படுத்துகிறது.  இப்படிப்பட்ட வாழ்வில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது?  யாருக்குமே இங்கே மனரீதியான திருப்தி ஏற்படுவதில்லை சார்.  யாருக்குமே ஏற்படுவதில்லை.  என்னோடு படுத்து பத்து நிமிடங்களில் அவர்களின் உடம்பை திருப்திப்படுத்திக் கொள்ளலாம்.  ஆனால் என் போன்றவர்களோடு படுத்து மனரீதியான திருப்தியை ஒருவர் அடைய முடியுமா?  எல்லாவற்றுக்கும் காரணம், நீங்கள் இந்த தேசத்தில் சுதந்திரத்தையே அனுபவிப்பதில்லை.  ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது நீங்கள் மனம் விட்டுப் பேச முடியாது.  என் மனதில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும்.  ஆனால் பேச முடியாது.  அந்த விஷயங்களே உங்களுக்கு அச்சத்தைத் தருவதாக இருக்கும்.  அதனால் எல்லாவற்றையும் மனதில் போட்டு சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.  பிறகு மனதுக்குள் தணிக்கை செய்தபடி பேச வேண்டும்.

ஒரு சந்துக்குள் நின்று கொண்டு நீங்கள் எது சாதாரண வீடு, எது ’தொழில்’ நடக்கும் வீடு என்றே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது.  எனக்குத் தெரிந்த ஒரு பெண் மதிய உணவுக்காகத் தன் உடலை விற்கிறாள்.  பசி வந்தால் என்ன செய்ய முடியும்?  பெற்றோர் தங்கள் குழந்தைகளை விற்கிறார்கள்; தங்கள் உடலை விற்கிறார்கள்.  ஏன்?  ஒரு குழந்தையை பிராத்தலுக்கு அனுப்பினால் ஐந்து குழந்தைகளுக்கு உணவு தர முடியும்.  அதுதான் காரணம்.  ஏகப்பட்ட இளம் பெண்கள் இந்தத் ’தொழிலில்’ சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை நீங்கள் குற்றம் சொல்ல முடியாது.  சூழ்நிலை அப்படி.  எல்லா வேலைகளையும் முயன்று பார்த்து விட்டுக் கடைசி கடைசியாகத்தான் அவர்கள் இங்கே வருகிறார்கள்.

பெண் 2: என் குழந்தைக்குப் பால் பவுடர் வாங்குவதற்காகத்தான் இந்தத் தொழிலில் இறங்கினேன்.  ஆரம்பத்தில் ஆஸாதி சதுக்கத்தில் அமர்ந்து பிச்சை எடுத்தேன்.  பிறகு எல்லோரும் சொன்னார்கள், நீ அழகாக இருக்கிறாய், பிச்சை எடுக்கக் கூடாது என்று. (அழுகிறாள்) ஒருத்தர் சொன்னார், என்னோடு படு, பத்து டாலர் தருகிறேன் என்று.  இன்னொருவர் இருபது டாலர் தருவதாகச் சொன்னார்.  அவர்களின் கார்களில் ஏறிக் கொண்டேன்.  என் குழந்தையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.  இப்படிச் செய்வதை நான் விரும்பவே இல்லை.  ஆனால் என் குழந்தைக்குப் பால் பவுடர் வாங்குவதற்காகத்தான் நான் இதில் இறங்கினேன்.  இந்தத் தொழிலை நான் வெறுக்கிறேன்.  வெறுக்கிறேன்.  (கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார்.)

ஒரு குறிப்பு:  இரானில் மூன்றில் ஒரு பங்கு பிச்சைக்காரர்கள் – 37 சதவிகிதம் -  பெண்கள்.  இரானில் வீடு இல்லாதவர்களில் 15 சதவிகிதம் பெண்கள். 

பெண் 3: எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  என் குழந்தைகளின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.     ஒருநாள் இந்த இடத்துக்கு வந்து சேருவேன் என்று நான் நினைத்ததே இல்லை.  மிகச் சிறிய வயதிலேயே எனக்குத் திருமணம் ஆகி விட்டது.  அப்போது என் வயது 14. பிறகு எனக்கு விவாகரத்து ஆனது.  வாழ வேறு வழி தெரியவில்லை.  அதனால்தான் இங்கே வந்து சேர்ந்தேன்.  முதல் தடவை என் வீட்டு வாடகைக்காக இதைச் செய்ய வேண்டியிருந்தது.  வீட்டு சொந்தக்காரர் தினந்தோறும் வந்து கதவைத் தட்டினார்.  என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

பெண் 4: இந்தச் சமூகத்தில் ஒரு பெரிய குடும்பத்தையே பாதுகாக்க வேண்டியிருக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு இதுதான் சிறந்த தொழில்.  பெரிய படிப்பு இல்லாததால் நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகளுக்கும் போக முடியவில்லை.  அப்படியே போனாலும் அங்கேயும் நாங்கள் எங்களைக் கொடுத்தாக வேண்டும்.  இல்லாவிட்டால் மிகக் குறைந்த சம்பளம்தான் கிடைக்கும். 

பெண்  5:  இந்த நாட்டில் கௌரவமாக வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.  வேலைக்குப் போனால் அங்கேயும் நம் உடம்பைத்தான் அளக்கிறார்கள்.  எனக்கு மதமெல்லாம் தேவையில்லை; நான் ஒரு சாதாரணமான பெண்ணின் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ விரும்புகிறேன்.  ஆனால் வேலை எங்கே கிடைக்கிறது?  என்னை யார் காப்பாற்றுவார்?  சமூகமா, சட்டமா, குடும்பமா?  எனக்கு இந்த எதுவுமே இல்லை.  எனவே என் உடலை விற்க முடிவு செய்தேன். 

மற்ற வேலைகளுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை சார்.  எல்லாம் ஒன்றுதான்.  என் குழந்தையின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்பதில் எனக்கு சில சிக்கல்கள் இருந்தன.  குடும்ப நீதிமன்றத்துக்குப் போனேன்.  நீதிபதியிடம் கெஞ்சினேன்.  என் ஆதரவற்ற நிலையை விளக்கினேன்.  குழந்தையை என்னிடம் கொடுப்பதற்கு உத்தரவிட்டால் அவர் என்ன கேட்டாலும் தருகிறேன் என்றேன்.  அந்த நீதிபதி என்ன கேட்டார் தெரியுமா?  ”நீ எனக்குக் கொடுக்கக் கூடியது ஒன்றே ஒன்றுதான்.  என் வைப்பாட்டியாக இரு.”  நீதிபதி என்றால் இந்த நாட்டில் மதகுரு என்று பொருள்.  மதகுருவை விடப் பெரியவர் இந்த நாட்டில் வேறு எவரும் உண்டா?  அவர்தான் என்னிடம் அப்படிக் கேட்கிறார்.  “உங்களுக்கு மனைவி இல்லையா?” என்று அவரைக் கேட்டேன்.  அதற்கு அவர் ”எத்தனை மனைவிகளைக் காண்பிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” என்றார். 

விவாகரத்து பெறச் சென்ற போது அங்கேயிருந்த நோட்டரி பப்ளிக் (அவரும் ஒரு மதகுருதான்) ”நீ மிகவும் இளமையாக இருக்கிறாய்.  நீ விவாகரத்து பெறத் தேவையில்லை.  திருமணமான ஆண்களுக்குப் பெண்களையும் திருமணமான பெண்களுக்கு ஆண்களையும் நான் திருமணம் செய்து வைக்கிறேன்.  உன் அடையாள அட்டையில் உன் கணவனின் பெயரே இருக்கட்டும்.  அவரிடமிருந்து விவாகரத்து வாங்காமலேயே உன்னை இன்னொரு திருமணமான ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்” என்றார்.  எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.  ”ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர்கள் இருக்க முடியுமா?” என்றேன். அவர் ”முடியும், பணத்தை எடு” என்றார்.  இந்த தேசத்தில் நீங்கள் எந்த மூலைக்குப் போனாலும் அங்கே நாற்றத்தை மட்டுமே பார்க்க முடியும்.  எந்த மூலைக்குப் போனாலும்…  (அழுகிறார்)  நான் ஒரு சிகரெட் குடித்துக் கொள்ளலாமா சார்?  (சிகரெட்டைப் பற்ற வைத்துக் குடித்துக் கொண்டே தொடர்கிறார்…) இந்தத் தொழில் ஒரு பெண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று விடும்.  சீக்கிரமே தோலெல்லாம் சுருங்கி விடும்.  மனதளவில் இது ஏற்படுத்தும் காயங்களைப் பற்றிப் பேச வார்த்தைகள் இல்லை.  கொடுமை.  பெரும் கொடுமை.  அடிக்கடி எனக்கு உளவியல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.  அப்போது கைகள் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன.  இந்த நரகத்திலிருந்து விடுதலை அடைவதற்காக இறைவனை வேண்டினேன்.   

இரானில் நெடுஞ்சாலைகளில் பள்ளிச் சிறுமிகளைப் போல் தோற்றம் தரும் சிறு பெண்கள் உடம்பு பூராவையும், தலைமுடியையும் மறைத்த ஆடையை அணிந்து நின்று கொண்டிருப்பார்கள்.  வேகவேகமாகச் செல்லும் கார்களில் சில அவர்களைக் கண்டதும் நிற்கும்.  அந்தப் பெண்கள் அதில் ஏறிக் கொள்வார்கள்.  கார் தான் அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் இடம். 

இந்த ஆவணப் படம் இரானிய வாழ்க்கையைக் கொச்சைப்படுத்துவதற்காக அமெரிக்கர்களால் தயாரிக்கப்பட்டதல்ல.  இதில் வரும் அத்தனை காட்சிகளையும் வசனங்களையும் உலகப் புகழ்பெற்ற  இரானிய இயக்குனர்களின் சினிமாவில் பார்க்கலாம்.  இந்தப் பிரச்சினைகளையெல்லாம் எதார்த்தமாகப் பேசுவதால்தான் இரானிய சினிமா இன்று உலக அரங்கில் மிகப் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.   

ஆனால் துருக்கியில் பெண்களின் நிலை இப்படி இல்லை என்பது மட்டுமல்ல; அங்கே பெண்களுக்கு ஆண்களை விட அதிக முக்கியத்துவம் இருக்கிறது.  இதைத்தான் இஸ்லாமிய நாடுகளின் பன்முகத்தன்மை என்று குறிப்பிட்டேன்.   மேற்கத்திய ஊடகங்களும் மற்றவர்களும் சொல்லும் ஒற்றைப் பரிமாணத்தில் இஸ்லாமிய கலாச்சாரத்தை அடக்க முடியாது.  உதாரணமாக, இஸ்லாமிய நாடான துருக்கியில் விபச்சாரம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழில்.  முதலில் இதை அறிந்த போது என்னால் நம்பவே முடியவில்லை.  அநேகமாக உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.  இஸ்தாம்பூலில் இரண்டு தினங்கள் இரவில் அலைந்த போது தெரிந்து கொண்ட உண்மை அது.  ஆனால் விபச்சாரம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழில் என்றால் அது ஒரு இந்தியனின் மனதில் என்னென்ன யூகங்களையும் கற்பனைகளையும் எழுப்புமோ அது எதுவுமே துருக்கியில் இல்லை.  மிகவும் சிரமப்பட்டுத்தான் செக்ஸ் தொழில் நடக்கும் இடங்களைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது.  மேலும், துருக்கிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கே அங்கே செக்ஸ் தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது தெரியாது என்று நினைக்கிறேன்.  மேலும், துருக்கியில் செக்ஸ் தொழிலில் ஈடுபட்டிருப்போர் யாரும் துருக்கியர் அல்ல!  இந்த விஷயம் பற்றி நாம் பிறகு பார்க்கலாம்.

லெபனான் பற்றி எமிரா சொன்ன விஷயங்களில் என்னை ஆச்சரியப்படுத்திய ஒன்று, லெபனானில் 80 லட்சம் பாட்டில் ஒயின் தயாரிக்கப்படுகிறது என்ற புள்ளி விபரம்.  ஆனால் அது பெரிய விஷயம் இல்லை; துருக்கியில் 800 லட்சம் (எட்டு கோடி) பாட்டில் ஒயின் தயாரிக்கப்படுகிறது.  எது ஆச்சரியம் என்றால், லெபனானின் சாலைகளில் காணப்படும் பிரம்மாண்டமான மது விளம்பரப் பலகைகள் என்று சொல்லி புகைப்படங்களைக் காண்பித்தார் எமிரா.  துருக்கியில் இது போன்ற விளம்பரங்கள் கிடையாது.  மற்றபடி மளிகைக்கடைகளில் கூட மது வகைகள் கிடைக்கின்றன.  உணவகங்களில் மது பானங்கள் தருகிறார்கள்.  ஆனால் நம் நாட்டைப் போல் யாரும் குடித்து விட்டு சாலையோரத்து சாக்கடையில் விழுந்து கிடப்பதைக் காண முடியவில்லை.  மதுபானக் கடைகளும் அதிகமாகத் தென்படவில்லை.  ஐரோப்பிய நாடுகளைப் போலவே லெபனானிலும் துருக்கியிலும் மது ஒரு உணவுப் பொருளாகவே கருதப்படுகிறது.  இரண்டு நாடுகளுக்கும் இதில் உள்ள வித்தியாசம், லெபனானில் உள்ள மது விளம்பரம்.  கீழே உள்ளவை அரபி மொழியில் லெபனான் தொலைக்காட்சிகளில் வரும் பெய்ரூட் பியரின் விளம்பரங்கள்:

https://www.youtube.com/watch?v=hkjL1Kano8M

https://www.youtube.com/watch?v=uQb-27_Febw

பெய்ரூட் நகரத்தைப் பற்றிய இந்த அழகான ஆவணப் படத்தைப் பாருங்கள்.  இதன் அடுத்த பக்கத்தைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

https://www.youtube.com/watch?v=ArZ_7LtwGUY

(சாருநிவேதிதா எழுதும்  இத்தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு அனுப்புங்கள்)

பிப்ரவரி   08 , 2016

logo
Andhimazhai
www.andhimazhai.com