நிலவு தேயாத தேசம் -17

நிலவு தேயாத தேசம் -17
Published on

”உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அரபி இலக்கியத்தைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, எப்படி?” என்று கேட்டார் எமிரா.  இதே கேள்வியை பல நண்பர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறார்கள்.  எமிராவிடம் ஏதோ சொல்லி சமாளித்தேன்.  ஆனால் அப்படி ஒருவர் தெரிந்து வைத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  பல ஆண்டுகளாக நான் Banipal என்ற பத்திரிகையின் வாசகனாக இருந்து வருகிறேன். சமகால அரபி இலக்கியத்துக்காகவே லண்டனிலிருந்து நடத்தப்படும் ஆங்கிலப் பத்திரிகை.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிராத அரபி இலக்கியப் படைப்புகளிலிருந்து கூட சில பகுதிகளை மொழிபெயர்த்து வெளியிடுவது பானிபாலின் வழக்கம்.  அதேபோல் இன்னொரு பத்திரிகை அல் ஜஸீரா.  இது அமெரிக்காவிலிருந்து வெளிவருவது.  இது ஒரு அரபி இலக்கிய, அரசியல் விமர்சனப் பத்திரிகை.  இது தவிர 12 ஆண்டுகளுக்கு முன்பு டெக்கான் கிரானிகிள் தினசரியில் Modern Arabic Fiction என்ற புத்தகத்துக்கான மதிப்புரை வந்திருந்தது.  அந்தப் புத்தகத்தை அமெரிக்காவில் வசிக்கும் திரு என்ற நண்பர் வாங்கிக் கொடுத்தார்.  சமகால அரபி இலக்கியம் பற்றிய ஒரு பொக்கிஷம் அது.  பெரிய தலையணை சைஸ் புத்தகம்.   

அந்தத் தொகுப்பு நூலில் சிரிய எழுத்தாளர் காதா ஸம்மானின் ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவலிலிருந்து சில பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.  அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சில பகுதிகள் ’ஊரின் மிக அழகான பெண்’ என்ற என்னுடைய உலகச் சிறுகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.  இப்போது என் ஆச்சரியம் என்னவென்றால், ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவலிலிருந்து மாடர்ன் அராபிக் ஃபிக்‌ஷனில் வெளிவராத பகுதிகளிலிருந்தும் சில கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  ஆனால் ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவல் பிரதி என்னிடம் இல்லை.  பிறகு எதிலிருந்து இந்தப் பகுதிகள் கிடைத்தன என்று புரியவில்லை.

***

ஐரோப்பியக் கலை இலக்கியத்தின் மையம் பாரிஸ் என்பதைப் போல லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை அரபி கலை இலக்கியத்தின் மையம் என்று கூறலாம்.  மேலும், அந்த நகரம் 1975 முதல் 1990 வரை 15 ஆண்டுகள் உள்நாட்டுப் போரைச் சந்தித்திருக்கிறது.  யோசித்துப் பாருங்கள், தொடர்ந்தாற்போல் மூன்று நாள் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலே நம் வாழ்க்கை நரகமாகி விடுகிறது.  ஆனால் பெய்ரூட் மக்கள் 15 ஆண்டுகள் அத்தகைய சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள். 

பெய்ரூட்டில் கிறித்தவர்கள் வசிக்கும் கிழக்குப் பகுதியும் இஸ்லாமியர் வசிக்கும் மேற்குப் பகுதியும் சந்திக்கும் இடம்தான் அந்நகரின் மையம்.  போருக்குப் பின்னர் அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் குண்டுகளுக்கு இரையாயின.  மக்கள் யாருமே நகரின் மற்ற பகுதிக்குச் செல்ல முடியவில்லை.  பெய்ரூட்டின் தெருக்களில், வீடுகளில், மருத்துவமனைகளில், மசூதிகளில், தேவாலயங்களில், வணிக வளாகங்களில், திரையரங்குகளில், மார்க்கெட்டுகளில், நீச்சல் குளங்களில், பல்கலைக்கழக வளாகங்களில், கடற்கரையில் என்று எங்கு பார்த்தாலும் கார் வெடிகுண்டுகள் வெடித்தன.  கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளைப் போல் பெய்ரூட் நகரவாசிகள் 15 ஆண்டுகள் வாழ்ந்தனர். 

உணவு, மின்சாரம், தண்ணீர், குழந்தைகளின் படிப்பு என்று எல்லா தேவைகளையும் பெய்ரூட் நகரவாசிகள் 15 ஆண்டுகளாக எப்படிச் சமாளித்திருக்க முடியும்?  ”மக்கள் அனைவரும் ஒரு பொய்யான எதார்த்தத்தில் வாழ்ந்தனர்” என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்.   கதவை வேகமாகச் சாத்தினால் கூட குண்டு வெடித்து விட்டது போல் நடுங்கிய பெய்ரூட் நகரவாசிகல் தூக்கத்தில் நடப்பவர்களைப் போலவே 15 ஆண்டுகள் வாழ்ந்தனர்.  இரவில் குண்டு வீசப்படும் போது ஏதோ ’லைட் அண்ட் சௌண்ட்’  நிகழ்ச்சியைப் பார்ப்பது போல் இருக்கும் என்று எழுதுகிறார் ஒருவர்.

போர்க்கால பெய்ரூட் பற்றி அரபி மொழியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன.  அவற்றில் உலக அளவில் பிரசித்தி பெற்றவை:

Hanan al-Shaykh   :  Story of Zahra (1986), Beirut Blues (1995)

Hoda Barakat         :  Stone of Laughter (1994)

Emily Nasrallah      :  Fight Against Time (1997)

Mai Ghousoub        :  Leaving Beirut (1998)

இவர்கள் நால்வருமே பெண் எழுத்தாளர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.  இதில் ’ஸஹ்ராவின் கதை’ தவிர மற்ற நான்கு நாவல்களையும் படித்திருக்கிறேன்.  இந்த நால்வரோடு சேர்க்கப்பட வேண்டிய மற்றொரு லெபனிய பெண் எழுத்தாளர் எத்தெல் அத்னான் (Etel Adnan).  90 வயதாகும் இவர் தற்போது ஃப்ரான்ஸில் வசிக்கிறார்.   பெய்ரூட்டின் போர்க்கால அனுபவங்களை இவர் Sitt Marie Rose (1978) என்ற தலைப்பில் ஃப்ரெஞ்சில் எழுதினார்.  பின்னர் அது அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. 

கடந்த பனிரண்டு ஆண்டுகளாக அரபி இலக்கியத்தின் தீவிர வாசகன் என்ற முறையில் என்னால் ஒரு விஷயத்தை அனுமானிக்க முடிகிறது.  இன்று உலக மொழிகளில் எழுதப்படும் இலக்கியப் படைப்புகளில் அரபி மொழியில் எழுதப்படுவதுதான் ஆகச் சிறந்ததாக இருக்கிறது.  இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்; ஆனால் முக்கியமாக அரபி மொழி பேசப்படும் நாடுகளில் போரினால் மனித வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மாபெரும் இழப்புகளும் துயரமும் மிகவும் கலாபூர்வமாக இவர்களின் இலக்கியத்தில் பதிவு செய்யப்படுவதால் அரபி இலக்கியம் மற்ற மொழி இலக்கியத்தை விட உயர்ந்ததாக இருக்கிறது என்று தோன்றுகிறது.  ஆனால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தைப் பேசும் சர்வதேச இலக்கியப் பரப்பில் அரபி இலக்கியம் பேசப்படாமல் இருப்பதற்குக் காரணம், இதை உருவாக்குபவர்கள் இஸ்லாமியர் என்பதனால் இருக்கலாம்.  வேறு எந்தக் காரணத்தையும் என்னால் யூகிக்க முடியவில்லை. 

1975-இலிருந்து 1990 வரை பெய்ரூட் அனுபவித்ததைத்தான் இன்று சிரியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது.  இதையெல்லாம் குறித்துத்தான் எமிராவும் நானும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்போது அவரிடம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன்.  மஹ்மூத் தௌலத்தாபாதி (Mahmoud Dowlatabadi)  என்ற புகழ் பெற்ற இரானிய எழுத்தாளருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு உண்டு.  2013-ஆம் ஆண்டு என்னுடைய நாவல் ’ஸீரோ டிகிரி’ சுவிட்ஸர்லாந்தின் Jan Michalski சர்வதேசப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போது அந்தப் பட்டியலில் இருந்த மற்றொரு நாவல் தௌலத்தாபாதி எழுதியது.  இந்த இரண்டோடு கூட இன்னும் எட்டு நாவல்களும் போட்டியிட்டன.  இறுதியில் தௌலத்தாபாதியின் ’கர்னல்’ என்ற நாவலே வென்றது. 

’கர்னலை’ நான் இன்னும் படிக்கவில்லை.  ஆனால் மஹ்மூத் தௌலத்தாபாதியின் இலக்கியச் சாதனை என்று அவருடைய கெலிதாரைத்தான் (Kelidar) சொல்கிறார்கள்.  இது குர்து இனத்தைச் சேர்ந்த ஒரு நாடோடிக் குடும்பத்தின் கதையைச் சொல்கிறது.  3000 பக்கங்களில் பத்து புத்தகங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் கிடைப்பது அரிதாக இருக்கிறது.  இதை எழுத 15 ஆண்டுகள் பிடித்ததாகச் சொல்கிறார் தௌலத்தாபாதி.  இதன் ஜெர்மன் மொழிபெயர்ப்பே இணையப் புத்தகச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.  இந்த நாவலைப் படிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  ஆனால் கிடைக்கும் இடம்தான் தெரியவில்லை.

லெபனானின் உள்நாட்டுப் போர் ஏன் நிகழ்ந்தது?  காரணங்கள் என்ன? 

1975-க்கு முந்தைய லெபனானில் அதன் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனங்கள் யாவும் சிறுபான்மையினரான கிறித்தவர்கள் வசம் இருந்தன.  அதிக அளவில் அந்நிய மூலதனமும் முதலீடு செய்யப்பட்டிருந்தது.  இதனால் பெய்ரூட்டிலும் அதன் சுற்றுப்புறப் பிராந்தியங்களிலும் வசித்தவர்கள் மட்டுமே பயனடைந்தனர்.  லெபனானின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லீம்கள் மிகப் பின்தங்கிய நிலையில் இருந்தனர்.  மேலும், 1967 பாலஸ்தீனியப் போரின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் பாலஸ்தீனத்திலிருந்து லெபனானுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.  இத்தகைய சூழலில்தான் கிறித்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.  1982-இல் இஸ்ரேல் லெபனானுக்குள் நுழைந்ததும் போர் சிக்கலானதற்கு மற்றொரு காரணமாக அமைந்தது.  இரான் சில முஸ்லீம் குழுக்களை ஆதரிக்க, இஸ்ரேல் கிறித்தவக் குழுக்களை ஆதரிக்க போர் மேலும் வலுவடைந்தது.

இந்தப் பின்னணியில்தான் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து லெபனிய பெண் எழுத்தாளர்களும் பெய்ரூட்டில் வாழ்ந்த சிரிய எழுத்தாளர் காதா ஸம்மானும் தங்கள் நாவல்களை எழுதினார்கள்.  இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர், இனப்படுகொலை போன்றவற்றை இங்கே நாம் நினைவு கூர வேண்டும்.  ஷோபா சக்தி போன்ற ஓரிருவரைத் தவிர ஈழத்தின் அனுபவங்களை எழுத இங்கே வேறு யாரும் இல்லாமல் போனதற்கான காரணம் பற்றியும் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். 

தௌலத்தாபாதி.

மேலே குறிப்பிட்ட அரபிப் பெண் எழுத்தாளர்களின் நாவல்களில் நாம் காணும் ஒரு பொதுத்தன்மை, பெண் பாத்திரங்களெல்லாம் போர் முடிவுற வேண்டும் என்று நினைக்க, ஆண் பாத்திரங்கள் போர் தொடர வேண்டும் என்று நினைக்கின்றனர்.  காரணம், போர்தான் சமூக வெளியில் ஆண்கள் தங்களின் மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. 

காதா ஸம்மான் 1942-ஆம் ஆண்டு சிரியாவில் பிறந்தவர்.  டமாஸ்கஸில் ஃப்ரெஞ்ச் பள்ளியில் பயின்று, கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.  1966-ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதற்காக மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார்.  பிறகு சிரியாவிலிருந்து ரகசியமாக வெளியேறி பெய்ரூட் வந்தார்.  அதிலிருந்து இன்று வரை பெய்ரூட்டில் ஒரு அகதியாகவே வாழ்ந்து வரும் ஸம்மான் தன் சொந்த ஊரான டமாஸ்கஸைப் பற்றிய ஏக்கத்துடன் எழுதிய கவிதைகள் Letters to Jasmine என்ற தலைப்பில் தொகுதியாக வெளிவந்துள்ளது. 

காதா ஸம்மான்

இன்றைய செய்தித்தாளில் ’சிரியப் படைகள் மீது துருக்கி தாக்குதல்’ என்று படித்த போது எனக்கு காதா ஸம்மானின் டமாஸ்கஸ் தான் ஞாபகம் வந்தது.  இரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளின் மக்கள் போரையும் வெடிகுண்டுகளையுமே தங்கள் தினசரி வாழ்வின் எதார்த்தமாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மாடர்ன் அராபிக் ஃபிக்‌ஷன் தொகுதியிலிருந்து காதா ஸம்மானின் ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவலின் கொடுங்கனவு 22-ஐ இங்கே மொழிபெயர்த்துத் தருகிறேன். 

“அவர்கள் அந்த இளைஞனை நடைபாதைக்குக் கொண்டு வந்தார்கள்.  அவன் செய்த ஒரே தவறு, வீட்டிற்குள்ளேயே இருக்காமல் காரில் வந்து கொண்டிருந்த ஆயுதம் ஏந்திய கும்பலின் கண்ணில் பட்டதுதான்.  அவர்களில் ஒருவனின் சகோதரன் கொல்லப்பட்டிருந்தான்.  அந்தக் கொலைக்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காகவே அவன் ஆயுதத்தை எடுத்திருக்கிறான்.  யாரைக் கொல்வது என்ற திட்டமெல்லாம் அவனுக்கு இல்லை; எந்த மதம் என்பதுதான் முக்கியம். 

அவர்கள் அவனை நடைபாதைக்கு இழுத்துக் கொண்டு வந்தார்கள்.  ”நான் ஒரு தப்பும் செய்யவில்லையே” என்று அவன் கதறினான்.  கொல்லப்பட்டவனின் சகோதரன் அவனை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினான்.  காரில் இருந்தவர்களுக்குள் அவனை வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.  அவனை அங்கேயே கொல்வதா அல்லது அவனைத் தங்களோடு  அழைத்துக் கொண்டு செல்வதா?  அதுதான் சச்சரவுக்குக் காரணம்.  யார் அவனைக் கொல்வது?  எப்படிக் கொல்வது? “நீ எப்படிச் சாக வேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று ஒருவன் கேட்டான்.  “என்னைக் கொன்று விடாதீர்கள்; நான் சாக விரும்பவில்லை” என்று அழுதான் அவன்.  ”ஆட்கள் வருவதற்குள் தலையில் சுட்டுத் தூக்கிப்  போட்டு விட்டுப் போய் விடுவோம்” என்றான் ஒருவன்.  ”என்னைக் கொன்று விடாதீர்கள்; நான் ஒரு தப்பும் செய்யவில்லை” என்று மீண்டும் சொன்னான் அவன்.   சகோதரனைப் பறி கொடுத்தவன், ”இவனை நான்தான் கொல்லுவேன்” என்று கத்தினான். இளைஞனோ “என்னைக் கொன்று விடாதீர்கள்” என்று கதறினான்.

இவனை இப்போதே கொல்வதா அல்லது தங்களுடன் அழைத்துக் கொண்டு செல்வதா என்று காரில் இருந்தவர்களிடையே வாக்குவாதம் தொடர்ந்தது.   வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் கொலை செய்ய ஆயத்தமாவது போல் ஆயுதங்களை உயர்த்தினார்கள்.  கிடைத்த சந்தர்ப்பத்தில் இளைஞன் அவர்களிடமிருந்து தப்பி ஓடினான். 

நடைபாதையில் அவன் ஒரு பைத்தியக்காரனைப் போல் ஓடினான்.  முடிவே இல்லாமல் ஓடிக் கொண்டே இருப்பது போல் தோன்றியது.  ஆனால் அவனைத் துரத்தி வருபவர்களின் காலடி ஓசையும் கேட்டுக் கொண்டே இருந்தது… ஒரே கணம். தடுமாறி விழுந்தான்.  அதோடு ஓடி வரும் காலடி ஓசை நின்றது.  அவனைக் கொல்லப் போகிறேன் என்று கத்தியவனின் முகம் அவன் முகத்தருகே தெரிந்தது… ஆச்சரியப்படும் விதத்தில் அவ்வளவு தெளிவாகத் தெரிந்தது அவன் முகம்… இவனைப் போலவே அவனும் அழுது கொண்டிருந்தான்.  “என் சகோதரன் ஒரு தீயணைப்பு வீரன்.  தீப்பற்றிய ஒரு கட்டிடத்தை அணைக்கச் சென்ற போது அவர்கள் அவனைக் கொன்றார்கள்.  எங்களுக்கு அவன் பிணமாகத்தான் கிடைத்தான்.”  ’தன் துயரத்தை அவன் என்னிடம் இறக்கி வைக்கிறான்’ என்று நினைத்தான் இளைஞன்.  அவன் மனம் இளக ஆரம்பித்தது.  இன்னும் கொஞ்சம் விபரங்களை அவனிடம் அந்த இளைஞன் கேட்க நினைத்த போது திடீரென்று அவன் முகம் ஒரு கொலைகாரனின் முகமாக மாறியது.  “என் சகோதரனுக்காக நீயும் சாக வேண்டும்.  உன் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அவனைக் கொன்றார்கள்.”

இளைஞன் நடைபாதையில் எந்த இடத்தில் விழுந்தானோ அங்கேயேதான் இன்னமும் கிடந்தான்.  பேசிக் கொண்டிருந்தவனின் வலுவான பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டு எழுந்தான் இளைஞன்.  அது ஒரு பளிங்குச் சுவர்.  பக்கத்தில் செயற்கை நீரூற்று.    தண்ணீரின் சுவடே இல்லாமல் வற்றிக் கிடந்தது.  பளிங்குக் கல்லின் மேல் “இறைவனின் திருநாமத்தால் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று.  நன்கொடை: சலீம் அல்-ஃபக்கூரி, 1955” என்று பொறிக்கப்பட்டிருந்தது.  இளைஞனின் கழுத்தில் கையை வைத்து அந்தப் பளிங்குச் சுவரில் மோதினான் அவன். அடுத்த கணமே அவன் கத்தி இளைஞனின் தமனியில் இறங்கியது… இளைஞன் மூச்சு விடத் திணறினான்.  அவ்வளவுதான்.  அவன் கதை முடிந்தது.  இளைஞனின் உடல் கீழே விழுந்த பிறகும் கத்தியால் அவன் கழுத்தை வெட்டிக் கொண்டே இருந்தான் சகோதரனைப் பறி கொடுத்தவன்.  ரத்தம் தடையில்லாமல் பீறிட்டு அடித்துக் கொண்டிருந்தது.  ரத்தம்… ரத்தம்… ரத்தம்… எங்கு பார்த்தாலும் ரத்தம்… செயற்கை நீரூற்றிலிருந்து ரத்தம் பீறிட்டு அடித்து அந்த இடமே ரத்தத்தால் நிரம்பியது.  அறையெங்கும் ரத்தம்.  என் முழங்கால் வரை ரத்தம் ஏறி விட்டது.  இப்போது என் இடுப்பு வரை ஏறி விட்டது ரத்தம்.  மேலும் மேலும் ரத்தம் பெருகி என் மார்பு வரை ஏறி விட்டது.  இப்போது என் கழுத்து வரை.  ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாதபடி ரத்தம் என்னை மூழ்கடிக்கத் தொடங்கியது.   அலறியபடி உறக்கத்திலிருந்து கண் விழித்தேன் நான். 

***         

சாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்

பிப்ரவரி   16 , 2016  

logo
Andhimazhai
www.andhimazhai.com