”நீங்கள் எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் அங்கே உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களைப் பற்றி எழுதுவதை விட அங்கே உள்ள மனிதர்களைப் பற்றியே அதிகம் எழுதுகிறீர்கள். இதை ஒன்றும் குறையாகச் சொல்லவில்லை. குறிப்பாகக் கவனித்தேன்” என்று ஒருமுறை என்னிடம் சொன்னார் மனுஷ்யபுத்திரன். உதாரணமாக, பாரிஸ் நகரில் உள்ள லூவ்ர் மியூஸியத்தைப் பார்க்கப் போனால் அதன் வாசலில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பல்கேரிய அகதியைப் பற்றித் தெரிந்து கொள்ளவே நான் அதிக ஆர்வம் கொள்ளுவேன். இப்படி நான் Ephesus என்ற வரலாற்றுப் புகழ் மிக்க ஒரு இடத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது வழிகாட்டியான அப்துல் மாலிக் தன்னுடைய குர்து நண்பனை அறிமுகப்படுத்தி வைத்தான். பெயர் ஹைதர். நான் ஒரு எழுத்தாளன் என்று சொன்னதும் தெரியும் என்றான். மாலிக் ஏற்கனவே சொல்லியிருக்கிறான். இந்த ஹைதர் மூலம்தான் குர்து இனப் போராட்டம் பற்றி விரிவாக அறிந்து கொண்டேன். அவன் அறிமுகப்படுத்திய பெயர்களில் முக்கியமானது தியார்பக்கிர் (Diyarbakir) என்ற ஊரில் உள்ள ராணுவ சிறைச்சாலை.
சந்தேகப்படும் குர்தியர்களைப் பிடித்து சிறையில் போட்டு அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துப் போகாமலேயே விசாரணை என்ற பெயரில் மாதக் கணக்கில் சித்ரவதை செய்கிறது துருக்கி போலீஸும், ராணுவமும். தியார்பக்கிர் சிறையில்தான் இது அதிகம் நடக்கிறது. 15 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தியார்பக்கிர் துருக்கியில் எங்கே இருக்கிறது என்று பின்வரும் வரைபடத்தில் காணலாம். துருக்கியின் தென்கிழக்கில்தான் அதிகம் குர்துக்கள் வாழ்கிறார்கள் என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். தியார்பக்கிர் உலகின் மிக இருண்ட சிறைகளில் ஒன்று. அங்கே நடக்கும் சித்ரவதைகள் கற்பனையும் செய்து பார்க்க முடியாதவையாக இருக்கின்றன.
ஹைதர் எனக்கு தாக்கர் என்பவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையைக் காண்பித்தான். தாக்கர் 1980-ஆம் ஆண்டு அவருடைய 18-ஆவது வயதில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்படாமலேயே 20 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சக கைதிகளுக்கும் அவருக்கும் எக்கச்சக்கமான முறைகள் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டது. வேறு சில கொடூரமான தண்டனை முறைகளும் உண்டு. அதில் ஒன்று, Strappado என்றும் Palestinian hanging என்றும் அழைக்கப்படும் தண்டனை முறை. கைகளைப் பின்னால் கட்டித் தொங்க விடுதல். அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகளில் தேசத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இப்போதும் இந்த முறையில் தண்டிக்கப்படுகிறார்கள்.
இது போன்ற உடல் வதைகளை விட உளவியல் சித்ரவதைதான் பயங்கரமானது என்கிறார் தாக்கர். உதாரணமாக, குர்து மொழி பேசக் கூடாது என்பது ஒரு சிறை விதி. மீறினால் கடுமையான தண்டனை. இந்த விதியின் காரணமாக, தாக்கரின் தாயார் மகனைப் பார்க்க சிறைக்கு வரும் போது இருவரும் பேசிக் கொள்ள முடியாது. தாக்கரின் அம்மாவுக்கு துருக்கி மொழி தெரியாது. சிறைக்கு வருவதற்கு சற்று முன்புதான் அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. ஆனால் அவரால் தன் மனைவிக்குக் கடிதம் எழுத முடியாது. ”அவர்கள் எல்லாவற்றையும் துப்பாக்கியாக மாற்றி விடுகிறார்கள். குடும்பம் கூட அவர்களுக்குத் துப்பாக்கி தான்” என்கிறார் தாக்கர். 18 வயதில் சிறைக்குச் சென்ற தாக்கர் 38 வயதில் சிறையிலிருந்து விடுதலை அடைந்தவுடன் செய்த முதல் காரியம், தான் 18 வயதில் செய்து கொண்டிருந்ததைத் தொடர்ந்ததுதான். குர்திய விடுதலைக்கான போராட்டச் செயல்பாடுகளில் உடனடியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் தாக்கர்.
2011-இல் தியார்பக்கிரில் குர்துகள் நடத்திய ஒரு போராட்டம்.
குர்து மொழி பேசினால் தண்டனை என்று துருக்கி நிர்வாகம் சொன்னது அல்லவா? அதற்கு எதிராக ஒருவர் ”நான் இனிமேல் டர்க்கிஷ் மொழியே பேச மாட்டேன், என் தாய்மொழியான குர்து மொழியே பேசுவேன்” என்று அறிவித்தார். அவர் பெயர் மெஹ்தி ஸானா (Mehdi Zana).
“நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக நான் 18 மாதங்கள் சிறையிலேயே இருந்தேன். நீதிமன்றத்தில் நீதிபதி என்னை அழைப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது காவலாளிகளிடம் ’நான் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும்’ என்று சொன்னேன். ஏனென்றால் அப்போது கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க விரும்பினேன். கண்ணாடியில் தெரிந்த முகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுவா நான்? நான் இப்படியா இருந்தேன்? முகத்தில் வெறும் எலும்புதான் தெரிந்தது. முன் பற்கள் நான்கை காவலாளிகள் உடைத்து விட்டார்கள். என்னைப் பார்க்க எனக்கே பயங்கரமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் விட மோசம் என்னவென்றால், ஞாபக சக்தியை இழந்திருந்தேன்.”
1967-இல் ஒரு ஆண்டு தியார்பக்கிரில் உள்ள ராணுவ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் மெஹ்தி ஸானா. 1971-1974 இல் மூன்று ஆண்டுகள், பிறகு 1980-இலிருந்து 1991 வரை பதினோடு ஆண்டுகள், 1994-இல் ஒன்றரை ஆண்டுகள் என்று மொத்தம் 15 ஆண்டுகளை தியார்பக்கிர் ராணுவச் சிறையில் கழித்திருந்தார். ஆனால் 1977-ஆம் ஆண்டு தியார்பக்கிர் நகர மக்கள் பெரும் ஆதரவுடன் அவரை மேயராகத் தேர்ந்தெடுத்தனர். பள்ளிக்குச் சென்றிராத ஸானா சிறையிலேயே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு தன் சிறை அனுபவங்களை ஐந்து புத்தகங்களாக எழுதினார். அவை:
Wait for me, Diyarbekir
The Day of Barbary
My Heart’s Beloved
To Dear Leyla
Clarity.
ஸானா சொல்கிறார்: “என்னைப் போல் ஆயிரக் கணக்கான குர்துகள் அந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். கைகளைப் பின்னால் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டு என் பிறப்புறுப்பிலும் குதத்திலும் மின்சார ஒயர்களை வைப்பதற்கு முன்பு காவலாளி சொல்லுவான், ’ஏய் வேசி மகனே, கடவுளே நினைத்தாலும் உன்னை இப்போது காப்பாற்ற முடியாது.’ அவர்கள் எங்களைக் கொல்ல விரும்பவில்லை. உச்சக்கட்ட சித்ரவதைகளைச் செய்து எங்கள் மனதைக் கொல்ல விரும்பினார்கள். எங்கள் சிந்தனையைக் கொல்ல விரும்பினார்கள். எங்கள் உடல்களை அல்ல; எங்கள் ஆத்மாவைக் கொல்ல விரும்பினார்கள். அப்படிச் செய்வதன் மூலம் ‘இனிமேல் குர்து மொழியே பேச மாட்டோம்; குர்திஸ்தானுக்காக எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபட மாட்டோம்’ என்று கையெழுத்துப் போட்டு விடுவோம் என்று நினைத்தார்கள். சித்ரவதை செய்யும் போது எங்கள் அலறல் சத்தத்திலிருந்து தப்புவதற்காக பாடல்களைப் போடுவார்கள். ஆனால் சில சமயங்களில் எங்களை அச்சுறுத்துவதற்காக பாடலை நிறுத்தி விட்டு சித்ரவதை செய்யப்படுபவரின் அலறலை எங்களைக் கேட்கச் செய்வதும் உண்டு.
சித்ரவதைகளில் இன்னொரு ஏற்பாடு என்னவென்றால், ஏழு அடி நீளம் ஏழு அடி அகலம் உள்ள கூண்டு போன்ற பொந்து அறைகளில் 40 கைதிகளைப் போட்டு அடைப்பார்கள். மீன் கூடைகளில் உயிருள்ள மீன்கள் துடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா, அது போல் அந்த அறையில் இரவு முழுவதும் ஒருவர் மீது ஒருவராக விழுந்து கிடப்போம். நள்ளிரவு இரண்டு மணிக்கு இரும்புக் கதவைத் திறக்கும் காவலாளி எங்களில் ஒருவரை வெளியே இழுத்து, ’நீ துருக்கியனா, குர்தா?’ என்று கேட்பான். குர்து என்று சொல்பவர்களை மயக்கமடித்து விழும் வரை அடிப்பார்கள்; மாதக் கணக்கில் வெளிச்சமே இல்லாத இருட்டுக் கிடங்கில் தனிமைச் சிறையில் அடைப்பார்கள்; பயிற்சி அளிக்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை ஏவி விட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட கைதியின் பிறப்புறுப்பைக் கடிக்கச் செய்வார்கள்; நாங்களெல்லாம் கேப்டனின் நாயைப் பார்த்தால் கூட அதற்கு சல்யூட் அடிக்க வேண்டும்; தவறினால் கழுத்து வரை மலம் நிரப்பப்பட்ட பீப்பாய்களில் போடுவார்கள். ஃபலாக்கா அடி என்ற ஒன்று இருக்கிறது. கால் பாதங்களில் பிரம்பினால் அடிப்பது…”
(இந்தப் புகைப்படம் செர்பியாவில் எடுக்கப்பட்டது. பள்ளிகளில் கூட ஃபலாக்கா பிரம்படி வழக்கத்தில் இருந்துள்ளது. இந்தியாவில் இன்னமும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ‘உண்மை’யை வரவழைக்க இந்தத் தண்டனை முறை பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. லாடம் கட்டுவது என்று சொல்கிறார்கள். ஆனால் ’விசாரணை’ என்ற தமிழ்ப் படத்தில் காண்பிக்கப்படுவது போல் திருட்டுக் குற்றங்களுக்கு லாடம் கட்ட மாட்டார்கள். அது சும்மா சினிமா.)
(இந்தப் படம் செர்பியாவில் உள்ள Leskovac என்ற ஊரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்டது. அடிப்பவர் தலைமை ஆசிரியர். குறும்பு செய்யும் மாணவர்கள் இப்படித்தான் ஃபலாக்கா அடி வாங்கினார்கள். தலைப்பில் எழுதப்பட்டுள்ள வார்த்தை ’faloge.’)
”தியார்பெக்கிரின் ராணுவ சிறைச்சாலையில் கொடுக்கப்பட்ட பல்வேறு சித்ரவதைகளால் பல கைதிகளுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. பல கைதிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற தருணங்களில் மரணம் ஒரு விடுதலையாகவே இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.”
(ஒரு இடைச்செருகல். ’விசாரணை’ படத்தை ஏன் போலி என்று சொல்கிறேன் என மேற்கண்ட விவரணைகளிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மானுட வாழ்வில் நிகழும் ஒரு வரலாற்று அவலம் தமிழ் சினிமாவில் வெறும் கேலிச் சித்திரமாக மாறி விட்டது.)
பிப்ரவரி 29 , 2016