நிலவு தேயாத தேசம் – 19

நிலவு தேயாத தேசம் – 19
Published on

"1915-இல் துருக்கியில் பத்து லட்சம் ஆர்மீனியர்களும் 30000 குர்துகளும் கொல்லப்பட்டார்கள்.  துருக்கியில் இது ஒரு பேசக் கூடாத விஷயமாக இருந்து வருகிறது” என்று 2005-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் தெரிவித்தார் ஓரான் பாமுக்.  இதற்காக அவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டது.  ஆனால் அதற்காக பாமுக் அச்சமடையவில்லை.  திரும்பவும் அதே கருத்தையே வலியுறுத்திப் பேசினார்.  கருத்துச் சுதந்திரத்துக்கு துருக்கியில் கொடுக்கப்படும் ’மதிப்பை’யும் துருக்கியின் கடந்த கால வரலாற்றையும் அறிந்த பலரும் பாமுக் கைது செய்யப்படுவார் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை.  உலகம் முழுவதும் உள்ள புத்திஜீவிகளிடமிருந்து துருக்கி அரசுக்கு எதிர்ப்பு எழுந்தது.  உலகின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எட்டு பேர் துருக்கி அரசைக் கண்டித்து கூட்டறிக்கை விட்டார்கள்.  அவர்கள்: நோபல் பரிசு பெற்ற ஹோஸே சரமாகோ (போர்த்துகல்), காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ் (கொலம்பியா - நோபல்), மரியோ பர்கஸ் யோசா (பெரூ - நோபல்), குந்த்தர் க்ராஸ் (ஜெர்மன் – நோபல்), உம்பர்த்தோ எக்கோ (இத்தாலி), நோபல் பரிசுக்குப் பலமுறை பரிந்துரை செய்யப்பட்ட, மெக்ஸிகோவைச் சேர்ந்த கார்லோஸ் ஃபுவெந்தெஸ், ஜான் அப்டைக் (யு.எஸ்.), ஹுவான் கைத்திஸோலோ (Juan Goytisolo - ஸ்பெய்ன்).  

இது தவிர ஐரோப்பிய யூனியனும் துருக்கி அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.  பாமுக்கைக் கைது செய்தால் ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று அஞ்சிய துருக்கி அரசு பாமுக் மீது தொடுத்த வழக்கை மேற்கொண்டு தொடராமல் அப்படியே கைவிட்டது. மேற்படி விவகாரம் நடந்தது 2005-இல்.  அதற்கு அடுத்த ஆண்டுதான் பாமுக்குக்கு நோபல் விருது வழங்கப்பட்டது. 

பாராளுமன்றத்தில் குர்து மொழியில் ஒரே ஒரு வாக்கியத்தைப் பேசியதற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே 15 ஆண்டுகள் சிறையில் தள்ளிய துருக்கி அரசு ஏன் ஓரான் பாமுக்கை சிறையில் அடைக்க அஞ்சியது?  இங்கேதான், ஒரு சமூகத்தில் எழுத்தாளனுக்கு இருக்கும் இடம் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.  பாமுக்கை சிறையில் தள்ளினால் உலகம் முழுவதிலிருந்தும் அரசுக்கு நெருக்கடி வருகிறது.  இப்படிப்பட்ட நிலை ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு – ஏன், ஒரு இந்திய எழுத்தாளனுக்கே கூட – இருக்கிறதா என்று துருக்கியில் இருந்த போது எனக்குள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். 

தன் தேசத்துக்கு விரோதமாகப் பேசியதால் பாமுக்கை துருக்கியர்கள் யாரும் விரும்புவதில்லை.  எந்தத் துருக்கியரோடு நான் பேச நேர்ந்தாலும் என் முதல் கேள்வி  ஓரான் பாமுக்கைப் படித்திருக்கிறீர்களா என்பதும், இரண்டாவது கேள்வி, ஓரான் பாமுக் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதுமாகத்தான் இருந்தது.  நான் சந்தித்த அத்தனை பேரும் சராசரி மனிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  கம்பளம் நெய்யும் தொழிலாளிகள், டீக்கடை வைத்திருப்பவர்கள், கல்லூரியில் படித்த கைடுகள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், உணவக ஊழியர்கள், வரவேற்பாளர்கள், அரசு ஊழியர்கள், டாக்ஸி டிரைவர்கள் போன்றவர்களே அவர்கள்.  பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் யாரையும் நான் சந்திக்க முடியவில்லை.  ஓரிரு குர்து இனப் போராளிகள் தவிர நான் சந்தித்த அத்தனை சராசரி மனிதர்களும் தாங்கள் ஓரான் பாமுக்கைப் படித்ததில்லை என்றே சொன்னார்கள்.  அதேபோல் எல்லோரும் ஒருசேர பாமுக்கைத் தங்களுக்குப் பிடிக்காது என்றும் சொல்லத் தவறவில்லை.  காரணம், ஊடகங்களில் வரும் அவரைப் பற்றிய சர்ச்சைக்குரிய செய்திகள்.  பாமுக்கின் முகநூல் பக்கத்தைப் பார்த்தாலும் படு ஆபாசமான பின்னூட்டங்கள் நூற்றுக் கணக்கில் எழுதப்படுகின்றன.  அதையெல்லாம் பார்த்த பிறகுதான் எனக்குக் கொஞ்சம் தெம்பும் தைரியமும் வந்தன என்று சொல்லலாம். 

ஆசியாவும் ஐரோப்பாவும் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் தாங்கள் மேட்டிமை தாங்கிய ஒரு ஐரோப்பிய நாடு என்றே துருக்கி அரசு சொல்ல விரும்பினாலும், ஐரோப்பிய யூனியனில் சேர்வதற்குப் பெரு விருப்பம் கொண்டிருந்தாலும் தேசியவாதம் (Nationalism) என்ற கருத்தைப் பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் போன்ற பிற்போக்கான ஆசிய நாடுகளையே ஒத்திருக்கிறது துருக்கி.  இன்று ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதத்தை தேச நலனுக்கு எதிரானதாகக் கருதுகிறார்கள்.   சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வது எப்படி இங்கே பிற்போக்குத்தனமாகக் கருதப்படுகிறதோ அவ்வாறே ஐரோப்பாவில் தேசியவாதமும், இனவாதமும் பிற்போக்கான கருத்துக்களாகக் கருதப்படுகின்றன.  தேசியவாதத்தினால்தான் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு ஐரோப்பாவே ரத்தக் களரி ஆயிற்று என்பதை ஒரு ஐரோப்பியன் கூட மறக்கவில்லை.  இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ஒவ்வொரு ஐரோப்பியனின் குருதியிலும் அந்த ஞாபகம் படிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  அந்தக் காரணத்தினால்தான் இன்று 28 நாடுகள் ஒன்றிணைந்து ஐரோப்பிய யூனியன் என்ற பொது அமைப்பை உருவாக்க முடிந்திருக்கிறது.  இந்த 28 நாடுகளில் 19 நாடுகள் யூரோ என்ற ஒரே கரன்ஸியைப் பயன்படுத்துகின்றன.  26 ஐரோப்பிய நாடுகளில் பயணம் செல்வதற்கு வீசா அனுமதி பொதுவாக்கப்பட்டிருக்கிறது.  ஷெங்கன் வீசா என்று பெயர்.  உதாரணமாக, ஃப்ரான்ஸ் செல்வதற்கு நாம் ஷெங்கன் வீசா வாங்கிக் கொண்டோம் என்றால் பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, ஃபின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கெரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவானியா, லக்ஸம்பெர்க், மால்ட்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்த்துகல், ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன், ஸ்வீடன், ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு தனித்தனியே வீசா வாங்க வேண்டிய அவசியமில்லை.  ஒரே வீசாவில் இத்தனை நாடுகளுக்கும் செல்லலாம்.  அப்படியானால் இந்த நாடுகளில் வசிக்கும் மக்களின் வசதியைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.  நாம் இப்போது ஆந்திராவுக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் சென்று வருவது போல் அவர்கள் இத்தனை நாடுகளுக்கும் வீசா இல்லாமல் போய் வர முடிகிறது. 

கீழே காணும் வரைபடத்தில் ஜெர்மனி, பெல்ஜியம், ஃப்ரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளையும் தொட்டுக் கொண்டு இருக்கும் ஒரு சிறிய புள்ளிதான் லக்ஸம்பர்க்.  லீஷ்டன்ஸ்டைன் என்பது ஜெர்மனியின் தென் திசையில் ஜெர்மனி, ஸ்விட்ஸர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளையும் தொட்டுக் கொண்டு இருக்கும் ஒரு சிறிய ஊர்.  அதுதான் லீஷ்டன்ஸ்டைன் தேசமும் கூட. லீஷ் தேசத்தின் பரப்பளவு வெறும் 60 சதுர மைல்தான்.  லக்ஸம்பர்கின் பரப்பளவு 1000 சதுர மைல்.  சென்னையின் பரப்பளவு 460 சதுர மைல் என்பதை இந்த ‘நாடுகளோடு’ பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.  ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால், ஐரோப்பா என்றதும் பொதுவாக நம் சிந்தனையில் படிவது ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற பிரபலமான நாடுகள்தான்.  அதற்குப் பதிலாக லக்ஸம்பர்க், லீஷ்டன்ஸ்டைன் போன்ற குட்டி தேசங்களுக்குச் செல்லும் போது நமக்கு வேறுபல வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும்.   

பூலோக சொர்க்கம் என்று சொல்லத்தக்க லக்ஸம்பர்க் நகரம் பற்றிய இரண்டு காணொளிகள்:

https://www.youtube.com/watch?v=8Iv4hje2rKo

https://www.youtube.com/watch?v=3hcxOKIhQRc

இப்போது நாம் திரும்பவும் தேசியவாதத்துக்குத் திரும்புவோம்.  தேசியவாதம் என்ற கருத்தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் இன்று தேசிய நலனுக்கு எதிரானதாகக் கருதப்படுவதற்குக் காரணம், இரண்டாம் உலகப் போர்.  ஐரோப்பாவையே அழித்த அந்தப் போர் ஹிட்லர் போன்றவர்களின் தேசியவாதக் கொள்கையினால்தான் ஏற்பட்டது என்பதை ஐரோப்பியர் உணர்ந்து விட்டனர்.  அதனால்தான் ஒரே நாணயம், ஒரே வீசா என்ற ’ஒருங்கிணைந்த ஐரோப்பா’ என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடிந்தது.  யோசித்துப் பார்ப்போம்.  இலங்கை, இந்தியா, பர்மா, பங்களா தேஷ், பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், திபெத் ஆகிய ஏழு நாடுகளுக்கும் ஒரே நாணயம், ஒரே வீசா என்பது சாத்தியமா?

ஐரோப்பியரிடையே சாத்தியமான தேசியவாதத்துக்கு எதிரான ’ஒருங்கிணைந்த ஐரோப்பிய’ சிந்தனை துருக்கியில் வளராத வரை துருக்கி ஐரோப்பாவோடு இணையவே முடியாது என்பதுதான் இந்தத் துருக்கிப் பயணத்தில் நான் அறிந்து கொண்ட முக்கியமான பாடம். துருக்கியின் பிற்போக்குத்தன்மைக்குக் காரணம், படிப்பறிவு இன்மை, வறுமை.  (இங்கே வறுமை என்பதை இந்திய வறுமையோடு ஒப்பிடவே கூடாது.  துருக்கி போன்ற ஆசிய/ஐரோப்பிய நாடுகளின் வறுமையை நாம் நேரில் காணும் போதுதான் புரிந்து கொள்ள முடியும்.  உத்தரப் பிரதேசத்திலும், பிஹாரிலும் மற்றும் பல வட இந்திய மாநிலங்களிலும் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களிலும் காணப்படும் விளிம்புநிலை மக்களை துருக்கியில் காண முடியவில்லை.  இஸ்தாம்பூலின் சேரிகள் என்ற இந்தக் காணொளியைப் பாருங்கள்:

https://www.youtube.com/watch?v=mUv5QLMH_Ks

ஓரான் பாமுக்கின் ‘A Strangeness in My Mind’ என்ற நாவலில் துருக்கியின் ஏழ்மை பற்றி மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.  அது பற்றிப் பிறகு பார்ப்போம். 

மேற்கு ஐரோப்பிய நாடுகள் புலம் பெயர்ந்து வருபவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்கள் கௌரவமாக வாழ்வதற்குரிய வசதிகளைச் செய்து தருகின்றன என்பதை நாம் அறிவோம்.  பாரிஸ் நகரின் சில பகுதிகள் முழுமையாக ஈழத் தமிழர்களாலும் சில பகுதிகள் மெக்ரிப் நாடுகள் என்று சொல்லப்படும் மொராக்கோ, அல்ஜீரிய தேசத்தவர்களாலும் நிரம்பியிருக்கின்றன.  அப்படிப் புலம்பெயர்பவர்களில் துருக்கியர்களும் அடக்கம் என்பதை முந்தைய அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறேன்.  இப்படிப் புலம் பெயர்ந்து ஐரோப்பா செல்பவர்கள் அங்கே எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு துருக்கியரும் குர்துகளும் அடிக்கடி போடும் தெருச் சண்டைகளே உதாரணம்.  

ஃப்ராங்க்பர்ட் நகரில் துருக்கியரும் குர்துகளும் அடித்துக் கொள்ளும் காட்சி இந்தக் காணொளியில்: 

https://www.youtube.com/watch?v=jlm2YGuKfcg

பின்வரும் காணொளியில் பெர்லின் நகரில் துருக்கியரும் குர்துகளும் மோதும் காட்சி:

https://www.youtube.com/watch?v=7yGvUjiMNjc

1961-ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்குப் பகுதியில் பிறந்த லைலா ஸானா பள்ளிக்கூடம் போகாதவர்.  15 வயதிலேயே மெஹ்தி ஸானாவுடன் திருமணம் ஆயிற்று.  மெஹ்தி சிறை பிடிக்கப்பட்டதும் தன்னைப் போல் கணவனை சிறைக்குக் கொடுத்து விட்ட பெண்களோடு இணைந்தார்.  லைலாவைப் போலவே பல்லாயிரக் கணக்கான பெண்களின் கணவன்மார்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.  அந்தப் பெண்களுக்கெல்லாம் லைலா தலைமைப் பொறுப்பு ஏற்று ராணுவத்துக்கு எதிரான மக்கள் சக்தியைத் திரட்டினார்.  கூடவே கணவன் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது.  1991-இல் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அவரது தியார்பக்கிர் மாவட்டத்தில் அவருக்கு 84 சதவிகித வாக்குகள் விழுந்தன.  துருக்கிப் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குர்து பெண்மணி என்ற அடையாளத்தையும் பெற்றார் லைலா. லைலா குர்துகளுக்காகத் தனி நாடு கேட்கவில்லை.  குர்துகள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு துருக்கியில் தங்கள் தாய்மொழியான குர்து மொழியைப் பேசவும் பயிலவும் அனுமதி தாருங்கள் என்று மட்டுமே கேட்டார்.  துருக்கியரும் குர்துகளும் சமாதானமாக வாழ்வோம் என்று மட்டுமே பொதுக்கூட்டங்களில் பேசினார்.  அதற்காகவே அவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1994-இல் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.  அவர் மீது சாட்டப்பட்ட தேசத் துரோக குற்றங்களில் ஒன்று, அவர் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்திலான பட்டியைத் தலையில் அணிந்திருந்தார் என்பது.  அந்த மூன்று நிறங்களும் குர்து மக்களின் கலாச்சாரத்தைக் குறிக்கும் பாரம்பரிய நிறங்கள்!

1995-இலும் பிறகு 1998-இல் இரண்டாவது முறையாவும் அவரது பெயர் நோபல் சமாதானப் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.  அதே ஆண்டில் அவர் சிறையில் இருந்தபடியே ஒரு குர்திஷ் பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டது.  

விடுதலைக்குப் பிறகு 2009-இல் அவருக்கு மீண்டும் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  காரணம், லண்டன் பல்கலைக்கழகத்தில் குர்துகள் பற்றிப் பேசினார் என்பதுதான். பின்னர் 2010-இல் பயங்கரவாதத்தைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் லைலா.  ஆனால் பிறகு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு 2011 பொதுத் தேர்தலில் மீண்டும் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

1960-இல் மெஹ்தி ஸானா.

மெஹ்தி ஸானா 2002-இல். 

மெஹ்தி ஸானா பற்றி Seeing Life Differently, லைலா ஸானா பற்றி A Cry From Jail என்ற இரண்டு ஆவணப் படங்கள் Kudret Gunes என்ற குர்து இயக்குனரால் எடுக்கப்பட்டுள்ளன.  பின்வருவது குத்ரெத் குனேஸின் புகைப்படம்.

ஹைதரோடு பேசி முடிக்கும் போது மாலை ஆகி விட்டது.  அதற்குள் எஃபெஸூஸ் சென்ற குழுவும் திரும்பி வந்து விட்டது.  நானும் ஹைதரும் அமர்ந்திருந்த மேஜைக்குப் பக்கத்தில் அமெரிக்கத் தம்பதியான டேவிட்டும் லிண்டாவும் அமர்ந்தனர்.  டேவிட்டிடம் ”எஃபெஸூஸ் எப்படி இருந்தது?” என்று ஆர்வத்துடன் கேட்டேன்.  “Just some old rocks” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார் டேவிட்.  3000 ஆண்டுகளுக்கு முன்னே நிர்மாணிக்கப்பட்ட மகத்தான கிரேக்க நாகரீகத்தின் சின்னமான எஃபெஸூஸ் அந்த அமெரிக்கக் கிழவருக்கு வெறும் பாறைகளாகத் தெரிந்ததை எண்ணி அதிர்ச்சி அடைந்தேன்.

மார்ச்   07 , 2016  

logo
Andhimazhai
www.andhimazhai.com