டியர் சாரு,
உங்கள் துருக்கி பயணக் கட்டுரை நன்றாகவே ஆரம்பித்துள்ளது. கோர்ஸிகா பற்றிய உங்கள் குறிப்பைப் பார்த்ததும் இதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. கோர்ஸிகா பற்றி நீங்கள் எழுதியிருப்பது உண்மை. ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம்தான். இன்னொரு பக்கம், மிகக் கொடூரமானது. பாரிஸில் பிறந்து வளர்ந்த நான் இதுவரை நான்கு முறை கோர்ஸிகா சென்று வந்திருக்கிறேன். கோர்ஸிகா எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சொல்கிறது ஃப்ரான்ஸ். 1768-இலிருந்து அது ஃப்ரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்தாலும் கோர்ஸிகர்களுக்கும் எங்களுக்கும் எந்தக் கலாச்சார ரீதியான ஒற்றுமையும் கிடையாது. மொழி வேறு, நிறம் வேறு, உணவு வேறு. கலாச்சாரமே வேறு. மதம் மட்டுமே ஒன்று. வேறொரு தேசத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் எல்லா நாடுகளிலும் என்ன நடக்குமோ அதுவே கோர்ஸிகாவிலும் நடந்தது. ஆயுதம் தாங்கிய விடுதலைப் போர்.
அதை நடத்திக் கொண்டிருப்பது FLNC. Corsican National Liberation Front. கோர்ஸிகர்கள் படிப்பறிவற்ற முரடர்கள் என்பதுதான் அநேகமான ஃப்ரெஞ்சுக்காரர்களின் மனோபாவம். காரணம், கோர்ஸிகா இத்தாலிக்கு அருகில் இருப்பதால் அங்கே இத்தாலியக் கலாச்சாரத்தின் செல்வாக்கு அதிகம். இத்தாலிய மாஃபியா பற்றி உலகத்துக்கே தெரியும். காட்ஃபாதர் படம் பார்க்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?
கோர்ஸிகாவின் கலாச்சாரத்திலேயே வன்முறை ஊறிக் கிடக்கிறது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார் எங்கள் உள்துறை அமைச்சர். அதே ஆண்டில் ஃப்ரான்ஸ்வா மாஸினி என்பவர் கொல்லப்பட்டார். கோர்ஸிகாவில் நடக்கும் கொலைகள் அந்தக் கொலைகளோடு முடிந்து விடும். கொலையாளிகள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதே இல்லை. யாருக்கும் எதுவும் தெரியாது. பார்த்தாலும் சொல்ல மாட்டார்கள். வாயே திறக்க மாட்டார்கள். தெரியாது, தெரியாது, தெரியாது. இந்த ஒரே பதில்தான். மாஸினி ஒரு மாஃபியா தலைவர். இன்னொரு மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டார். பிறகு மாஸினியின் கும்பல் எதிர் கோஷ்டி ஆட்களைக் கொல்லும். இப்படி முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும். உலகம் பூராவும் மாஃபியா தலைவர்களின் கதை அதுதானே? தில்லியை உங்கள் நாட்டின் Rape capital என்று சொல்வதைப் போல கோர்ஸிகாவை ஐரோப்பாவின் கொலை நகரம் (Murder capital) என்கிறார்கள். ஆனால் ஃப்ரெஞ்சுக்காரர்கள் யாரையும் அவர்கள் கொல்வதில்லை. அவர்களுக்குள்ளேயே தான் கொலை செய்து கொள்கிறார்கள். மாஃபியா கும்பலோடு இப்போது விடுதலைப் போராட்டக் குழுக்களும் இந்தக் கொலைத் தொழிலில் சேர்ந்து கொண்டு விட்டன. கோர்ஸிகா பார் அசோசியேஷனைச் சேர்ந்த 63 வயதான அந்த்வான் சொலாகாரோ கொல்லப்பட்டதற்கும் காரணம், விடுதலைப் போராளிகளுக்குள் நடக்கும் சண்டைதான். இவர் கொல்லப்படுவதற்கு ஒருமணி நேரம் முன்புதான் ஒரு விடுதலைப் போராட்டக் குழுவின் முன்னாள் தலைவரின் சடலம் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படி, கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 150 கொலைகள் நடந்துள்ளன. சராசரியாக, ஆண்டுக்கு 20. இத்தனை கொலைகளிலும் இதுவரை எந்தக் கொலையாளியும் சிக்கவில்லை. சர்வசாதாரணமாக பட்டப்பகலில் ஒரு சதுக்கத்தில், ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில், ஒரு உணவு விடுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படுவார். சுட்டவன் எந்தப் பதற்றமும் இல்லாமல் பக்கத்தில் நிறுத்தியிருக்கும் தன் மோட்டார்சைக்கிளில் ஏறிச் செல்வான்.
The Prophet என்ற ஃப்ரெஞ்ச் படம் பார்த்திருக்கிறீர்களா? மிக மூர்க்கமான கோர்ஸிகன் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களைப் பற்றிய ஃப்ரெஞ்ச் படம். கோர்ஸிகாவில் நடக்கும் கொலைகளைப் பற்றிச் சித்தரிக்கும் ஒரு ஆவணப்படம் இது.
ஆனால் கோர்ஸிகாவில் இத்தனை கொலைகள் நடந்தாலும் இதுவரை ஒரு பயணி கூட கொல்லப்பட்டதில்லை. சண்டையெல்லாம் அவர்களுக்குள்ளே தான். அதனால்தான் என்னால் அங்கே நான்கு முறை செல்ல முடிந்தது. நீங்கள் ஃப்ரான்ஸ் வரும் போது சொல்லுங்கள்; உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்.
கடைசியாக ஒரு விஷயம். வரலாற்றில் மிகப் பெரும் போர்வீரர்களில் ஒருவனாக விளங்கிய நெப்போலியன் போனபார்த் கோர்ஸிகாவில் பிறந்தவன் தான்.
வெரோனிகா,
பாரிஸ்.
***
வெரோனிகா குறிப்பிடும் The Prophet படத்தைப் பார்த்திருக்கிறேன். பொதுவாகவே சினிமா, புத்தகம், மற்றவர்களின் பயண அனுபவங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு தேசத்தைப் பற்றி நாம் கொள்ளும் அனுமானங்கள் யாவும் நாமே அந்த நாட்டுக்குப் போகும் போது தவறாகப் போய் விடுவதை நான் அனுபவித்திருக்கிறேன். உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு அருகில் உள்ள தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஃப்ரெஞ்சுக்காரரை நாலைந்து ரௌடிகள் தாக்கி அவரிடமிருந்த ஃபோனையும் பணத்தையும் பிடுங்கிக் கொண்டனர். அந்த ஃப்ரெஞ்சுக்காரர் தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்று தமிழ்நாட்டைப் பற்றி என்ன சொல்வார்? சம்பவம் நடந்தது இரவு 11.30. அந்த நேரத்தில் பாரிஸில் கூட சில இடங்களில் அப்படிப்பட்ட சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருநாள் பாரிஸில் உள்ள Marcadet - Poissonniers என்ற மெத்ரோ நிலையத்திலிருந்து வெளியே வந்து ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தேன். பொதுவாக பாரிஸில் நள்ளிரவில் கூட பெண்கள் தனியாகப் போய் வந்து கொண்டிருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் பாரிஸின் வடக்குப் பகுதி, அதாவது தமிழர்கள் அதிகம் வசிக்கும் லா சப்பல், ’மெக்ரிப்’ மக்கள் வசிக்கும் மார்க்கதெ ப்வஸினியே, பார்ப் ரோஷ்ச்வார் (Barbès-Rochechouart) போன்ற பகுதிகள் கொஞ்சம் ஆபத்தானவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (’மெக்ரிப்’ என்பது துனிஷீயா, மொராக்கோ, அல்ஜீரியா போன்ற ஆஃப்ரிக்காவின் வட கிழக்கு நாடுகளைக் குறிக்கும்.) காரணம், இன்னொரு நாட்டுக்கு அகதியாகச் செல்பவர்கள் சமூகத்தின் கீழ்த்தட்டில் வசிப்பவர்களாகத்தானே இருப்பார்கள்? அவர்களிடம் மேல்தட்டு மனிதர்களின் நாகரீகத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? பிரதான சாலையில் நடந்து கொண்டிருந்த நான் சீக்கிரம் போகலாம் என்று ஒரு குறுக்குச் சந்தில் புகுந்தேன். பார்த்தால் முப்பதுக்கும் குறையாத ’மெக்ரிப்’ இளைஞர்கள். ஒவ்வொருவரும் ஏழடி உயரம். தெருவில் நின்று கராபுரா என்ற கூச்சலுடன் கத்திக் கொண்டிருந்தார்கள். அந்தக் குறுகிய சந்தில் அவர்களைத் தவிர வேறு மனிதர்களே இல்லை. அந்தச் சந்தைக் கடக்கும் வரை எனக்குள் உருவாகியிருந்த பயத்தை இப்போதும் மறக்க முடியவில்லை. அவர்கள் ஒன்றும் சண்டை போட்டுக் கொள்ளவில்லை. பேச்சே அப்படித்தான் இருந்தது. என் பயத்துக்குக் காரணம், அந்தப் பகுதிகளில் நடந்த திருட்டு, வழிப்பறி பற்றி நான் கேள்விப்பட்டிருந்த கதைகள்தான்.
***
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் என் பிறந்த நாளுக்கு ஏதேனும் ஒரு பரிசு கொடுக்க விரும்பினார் நண்பர் ராமசுப்ரமணியன். லேப்டாப் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே, வாங்கித் தருகிறேன் என்றார். ”அதை விட முக்கியம் நான் துருக்கி செல்ல வேண்டியது. அங்கே சென்று வர ஒரு டிக்கட் எடுத்துக் கொடுங்கள்” என்றேன். ”சில மாதங்கள் பொறுங்கள்; நாம் இருவருமே செல்வோம்” என்றார்.
”எல்லா நாடுகளையும் விட்டு விட்டு துருக்கியில் என்ன விசேஷம்? அடிக்கடி ப்ரஸீல், சிலே என்றல்லவா சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?”
ப்ரஸீல், சிலே, அர்ஜெண்டினா, பெரூ, பொலிவியா, பராகுவாய், உருகுவாய், வெனிஸுவலா போன்ற தென்னமெரிக்க நாடுகளுக்குப் போக ஆசைதான். ஆனால் போக முடியாததற்கு ஒரே காரணம், விமானச் செலவு. டிக்கட்டுக்கே இரண்டு மூன்று லட்சம் ஆகும். இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணம் செல்ல முடியாததற்கு முக்கியத் தடையாக இருப்பது, நம்முடைய ரூபாய்க்கு வெளிநாட்டில் மதிப்பு இல்லாததுதான். இந்திய ரூபாயை வைத்துக் கொண்டு பர்மா, பங்களா தேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்குத்தான் சிரமம் இல்லாமல் போய் வர முடியும்.
இந்த நிலையில் கிழக்காசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் போய் வருவதுதான் இப்போதைக்கு சாத்தியம். அதிலும் துருக்கியில் என்ன விசேஷம் என்றால், ஓரான் பாமுக். அவரைச் சந்திப்பதில் அவ்வளவு ஒன்றும் ஆர்வம் இல்லை. ஆனால் அவருடைய இஸ்தாம்பூல், அவருடைய கார்ஸ் போன்ற நகரங்கள் நமக்குள் எழுப்பியிருக்கும் சித்திரங்கள் மகத்தானவை. உலகில் அதிக அளவுக்கு எழுதப்பட்ட ஒரு நகரம் இஸ்தாம்பூல். அதற்கு அடுத்ததாகத்தான் பாரிஸ். சென்ற ஆண்டு நோபல் பரிசு பெற்ற பத்ரிக் மோதியானோ பாரிஸ் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார். ஆனால் மோதியானோவுக்கு உலகப் பிரசித்தி பெற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம் தூண்டுதலாக இருந்தது. அவருடைய பாரிஸ் நாஜி ராணுவத்தினரால் ஆக்ரமிக்கப்பட்ட பாரிஸ். பாமுக்கின் இஸ்தாம்பூலுக்கு அப்படிப்பட்ட பிரசித்தமான வரலாற்றுக் காரணிகள் ஏதுமில்லை. ஆனாலும் தன்னளவிலேயே நூற்றுக் கணக்கான கதைகளைக் கொண்டிருந்தது இஸ்தாம்பூல். உலகில் எந்த நகரத்துக்குமே இல்லாத இரண்டு கலாச்சாரங்கள், இரண்டு கண்டங்கள், இரண்டு மதங்கள் சங்கமிக்கும் பூகோள ஆச்சரியத்தைக் கொண்டதாக இருந்தது இஸ்தாம்பூல்.
இந்த ஆண்டு மே மாதம் ராமசுப்ரமணியனுக்கு துருக்கி செல்ல வாய்ப்பு கிடைத்தது. அலுவலக விஷயமாகச் செல்வதால் அவருக்கு லகுவில் வீசா கிடைத்து விட்டது. அலுவலக வேலை இரண்டு நாட்கள்தான். நாம் ஒரு பத்து நாள் துருக்கி முழுவதும் சுற்றுவோம் என்றார். நான் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன். எப்போது வெளிநாடு சென்றாலும் ட்ராவல் ஏஜெண்டுகளை அணுகாமல் நானாகவே திட்டமிட்டுக் கொள்வது வழக்கம். அதில் இருக்கும் சுதந்திரம் ஏஜெண்டுகள் மூலம் செல்லும் charted பயணத்தில் இல்லை என்பது என் அபிப்பிராயமாக இருந்தது. நாமாகவே திட்டமிட்டால் நாம் நினைத்த நேரத்துக்குக் கிளம்பலாம்; நினைத்த இடத்துக்குப் போகலாம், வரலாம். குழுப் பயணத்தில் இந்த வசதி இல்லை. அவர்கள் சொல்லும் இடங்களுக்கு மட்டுமே போக முடியும். அவர்கள் சொல்லும் நேரத்தோடு அங்கிருந்து கிளம்பி விட வேண்டும். சுதந்திரம் இருக்காது. நான் துருக்கி செல்லும் காரணம், ஓரான் பாமுக்கின் இஸ்தாம்பூல் மட்டுமே அல்ல; இஸ்தாம்பூலில் இருக்கும் நீல மசூதிதான் அந்த நகரை நோக்கி என்னை இழுத்துக் கொண்டே இருந்தது. உலகில் உள்ள அதிஅற்புதமான மசூதிகளில் அதுவும் ஒன்று. அங்கே அமர்ந்து பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) சப்தத்தைக் கேட்க வேண்டும் என்பது எனது தீராத ஆசை.
ஆனால் துருக்கியில் பயண முகவரின் துணை இல்லாமல் நாமே சுதந்திரமாகச் சுற்ற முடியுமா என்பது பற்றி எனக்குப் பெரும் சந்தேகம் இருந்தது. நண்பர்கள் வேறு துருக்கி என்றதுமே ”துருக்கியா?” என்று ஏதோ ஆஃப்கானிஸ்தான் போவது போல் பயமும் பீதியுமாகக் கேட்டு கலக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதனால் முதல் முறை ஒரு பயண நிறுவனத்தின் உதவியுடன் குழுவாகச் செல்லலாம் என்று முடிவு செய்தோம். (ஆம், துருக்கிக்குப் பலமுறை செல்வதாக முடிவு செய்திருந்தேன். பாமுக்கின் ’என் பெயர் சிவப்பு’ நாவலின் பிரதான கதாபாத்திரமே கார்ஸ் நகரம்தான். வெறும் 74000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட இந்த ஊர் துருக்கியின் வடகிழக்கில் துருக்கியும் ஆர்மீனியாவும் சந்திக்கும் எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கே நான் குளிர்காலத்தில்தான் போக விரும்பினேன். ஏனென்றால், ’என் பெயர் சிவப்பு’ நாவலில் பாதிப் பகுதி பனி பற்றித்தான் எழுதியிருக்கிறார் பாமுக். பனி பற்றி எப்படி ஒருவர் நூறு இருநூறு பக்கம் எழுத முடியும் என்று உங்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டால் அந்த நாவலைப் படித்துப் பாருங்கள். ஜி. குப்புசாமி அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பு நூலைப் படிப்பது போலவே இல்லை. ஒருவகையில் என் துருக்கி பயணத்துக்குக் காரணமே ஜி. குப்புசாமிதான் என்று சொல்வேன். எனவே இந்த முறை துருக்கிப் பயணத்தில் இஸ்தாம்பூலும் வேறு சில ஊர்களும் என்று முடிவு செய்து கொண்டேன். அடுத்த முறை, அங்காராவும் கார்ஸும்.)
துருக்கியில் உள்ள ஒரு பயண நிறுவனத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்திய நிறுவனங்கள் மூலம் செல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. பல பயணிகள் ட்ரிப் அட்வைஸரில் எழுதியிருக்கும் விஷயங்கள் கதிகலங்க அடிக்கின்றன. எல்லா ஏற்பாடுகளையும் முடித்து வீஸா, டிக்கட் எல்லாம் கொடுத்து விடுவார்கள். ஆனால் நாம் செல்ல வேண்டிய நாட்டில் போய் இறங்கினால் நம்மை அழைத்துச் செல்ல அங்கே ஒருவரும் வர மாட்டார்கள். நாமே டாக்ஸி பிடித்து, தேடி அலைந்து நமக்காக பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஓட்டலுக்குச் சென்றால் அங்கே நம்முடைய இந்திய நிறுவனத்திலிருந்து எந்தத் தகவலும் போயிருக்காது. சுற்றுலாப் பயணியாக மனைவியோடும் குழந்தைகளோடும் செல்பவர்கள் ரத்தக் கண்ணீர் விட்டு ட்ரிப் அட்வைஸரில் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவுக்குள்ளேயே கூட பல இந்தியப் பயண நிறுவனங்கள் அப்படிச் செய்வதாக ட்ரிப் அட்வைஸரில் செய்திகள் உண்டு. அதனால் இந்திய நிறுவனங்களைத் தவிர்த்து விட்டு துருக்கி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டேன். அந்த ஊர்க்காரர்களைப் பிடித்தால் துருக்கிக்குள் செய்யும் பயணம் லகுவாக இருக்கும் என்பது என் யோசனை.
எனக்கான விமான டிக்கட் எடுத்தாகி விட்டது. துருக்கி பயண நிறுவனத்துக்கு சென்னையில் ஒரு முகவர் இருந்தார். அவரையும் தொடர்பு கொண்டேன். எதற்கும் கவலை வேண்டாம்; எல்லாவற்றையும் சுலபமாக முடித்துக் கொடுக்கிறேன் என்றார். அது மார்ச் முதல் வாரம். ஏப்ரல் 15 தேதி வாக்கில் கிளம்ப வேண்டுமானால் நிறைய நாள் இருந்தது. சாவகாசமாக வீஸாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
வீஸாவுக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டாகும். என்னுடைய வங்கிக் கணக்கில் எப்போதுமே 1000 ரூ. தான் கையிருப்பில் இருக்கும். அதற்கும் குறைந்தால் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி விடுகிறார்கள் வங்கியில். தொழில் எழுத்தாக இருப்பதால் ஆயிரம் ரூபாய் வைத்திருப்பதே அதிக பட்சம். எழுத்தாளன் என்றாலே ஏழை என்றுதான் பொருள். சங்க காலத்திலிருந்தே அப்படித்தான். தனக்கு தானம் தராத மன்னனைக் கன்னாபின்னாவென்று ஏசி விட்டுச் செல்கிறாள் அவ்வை. நேரடியாக அல்ல; முகத்துக்கு நேரே ஏசினால் காராக்கிரகம்தான் என்று அரண்மனையை விட்டு வெளியே வந்து வாயில்காப்போனிடம் ஏசுகிறாள். ஆனால் வீஸா கொடுக்கும் வெளிநாட்டு மண்டுகளுக்கு இந்தக் கதையெல்லாம் புரியாது. இந்த 1000 ரூபாய்ப் பிரச்சினையினாலேயே இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய மூன்று நாட்டுத் தூதரகங்களும் எனக்கு வீஸா மறுத்திருக்கின்றன. அதனால் இந்த முறையும் அப்படி ஆகக் கூடாதென்று ஒரு நண்பரிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி வங்கிக் கணக்கில் சேர்த்திருந்தேன்.
இதற்கிடையில் இஸ்தாம்பூலில் இருக்கும் பயண நிறுவன ஆள் துருக்கிக்குள் நாங்கள் சென்று வருவதற்கான விமான டிக்கட் போடுவதற்காக என்னுடைய வங்கி அட்டையின் (Debit card) பின் நம்பரைக் (CVV) கேட்டார். யாருக்கும் நம்முடைய பின் நம்பரைக் கொடுக்கக் கூடாது என்று வங்கியில் அடிக்கடி நம்மை நினைவூட்டுகிறார்கள். அது ஞாபகம் வந்து சென்னை முகவரைப் பிடித்தேன். அவரோ அதெல்லாம் கொடுக்காதீர்கள் என்று சொல்லி விட்டார். அதன் பிறகு அந்த சென்னை முகவரைப் பிடிக்கவே முடியவில்லை. அலுவலகம் சென்றாலும் அவரைக் காணோம். இப்படியே போனதில் ஏப்ரல் 10 தேதி ஆகி விட்டது. ஏப்ரல் 16-க்கு நான் டிக்கட் எடுத்திருந்தேன். அப்போது என்னைத் தொடர்பு கொண்ட சென்னைப் பயண முகவர் “ஒரு வாரத்தில் வீஸா கிடைக்காது” என்று சொல்லிக் கை விரித்து விட்டார். நான் தான் ஒரு மாதத்துக்கு முன்பே ஆவணங்களையும் பணத்தையும் தயார் செய்திருந்தேனே என்றால் அதற்குப் பதில் இல்லை.
பிறகு தாமஸ் குக் அலுவலகம் போய்க் கேட்டேன். அவர்களும் வீஸா வாங்குவதற்குக் குறைந்தது பத்து தினங்களாவது தேவை என்றார்கள்.
விமான டிக்கட்டை ரத்து செய்ததில் சுளையாக 30000 ரூ. நஷ்டமானது. இது பற்றி ட்ரிப் அட்வைஸரில் விளக்கமாக எழுதினேன். உடனே அதைப் படித்து விட்டு இஸ்தாம்பூலிலிருந்து ஃபோன் செய்து திட்டி மிரட்டினார் இஸ்தாம்பூலில் இருந்த பயண நிறுவன மேலாளர்.
இந்தக் குழப்பத்தினால் என் நண்பர் ராம் குறிப்பிட்ட தேதியில் இஸ்தாம்பூல் போய் விட்டார். நானும் அவரும் இஸ்தாம்பூலில் நான்கு நாட்கள் தங்குவதற்காக முன்னேற்பாடாக அறை வாடகைக்குப் பணம் கட்டியிருந்தோம். எந்த நிறுவனத்திலும் நாம் பணம் கட்டிய பிறகு அதைத் திரும்பப் பெற முடியுமா? அதனால் அந்த நான்கு நாட்களும் ராம் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் சும்மாவே இருந்திருக்கிறார். ஃபோன் செய்து, ”வெளியே போய் சுற்ற வேண்டியதுதானே?” என்று கேட்டேன். ”என்ன பார்ப்பது? எங்கே பார்த்தாலும் பழைய கட்டிடம் கட்டிடமாக இருக்கிறது. வேறு என்ன?” என்றார் ராம். ஊர் என்றால் வெறும் கட்டிடம் இல்லை என்று அவரிடம் பத்து நிமிடம் சொற்பொழிவாற்றினேன்.
நிற்க. இஸ்தாம்பூல் பயண நிறுவனம் என்னை ஏமாற்றியது போல் மற்ற ஐரோப்பிய நாடுகளில் நடக்க வாய்ப்பே இல்லை. அதனால்தான் ஐரோப்பியர்கள் ஆரம்பத்திலிருந்தே துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக் கொள்ள மறுத்து வருகிறார்கள்.
ராம் இஸ்தாம்பூலில் இருந்த போது தொழிலாளர் தினம் வந்தது. மே முதல் தேதி. ”நகரம் பூராவும் மயான அமைதி. ஏதோ ஊரடங்கு உத்தரவு போட்டது போல் இருக்கிறது” என்றார் ராம். நகரம் முழுவதும் ஒரு ஈ காக்காய் இல்லை. வெளியே போய் ’கலாட்டா பாலம்’ வரை நடந்து வரலாம் என்று கிளம்பியிருக்கிறார். நடந்து செல்லும் போது ஒரு ஆள் இன்னொரு ஆளைக் கத்தியால் குத்தி விட்டு ஓடியிருக்கிறான்.
இதைக் கேள்விப்பட்ட பிறகு அதே இஸ்தாம்பூல் பயண நிறுவனத்தின் மூலம் போனால் அங்கேயே நமக்கு சமாதி கட்டினாலும் கட்டி விடுவார்கள் என்று பயந்து வேறொரு இந்திய பயண நிறுவனத்தை அணுகினேன். அவர்களுடைய வேலை பிரமாதமாக இருந்தது. பத்தே நாளில் வீஸா கிடைத்தது.
இந்தத் தொடரின் விளம்பரத்தில் காளான் குன்றுகளைப் பார்த்திருப்பீர்கள். அது பற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன். இப்போது சந்திரமுகியில் ரஜினியும் நயனும் பாடும் டூயட்டைப் பாருங்கள். அதன் பின்னணியில் வருவதுதான் காளான் குன்றுகள்.
(வெள்ளிக்கிழமை தோறும் சாரு நிவேதிதா எழுதும் இந்த பயணத் தொடர் வெளியாகும். இது பற்றிய கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதுங்கள்) - See more at: http://andhimazhai.com/news/view/nilavu-1-16-10-2015.html#sthash.kB5T5F4y.dpuf
(வெள்ளிக்கிழமை தோறும் சாரு நிவேதிதா எழுதும் இந்த பயணத் தொடர் வெளியாகும். இது பற்றிய கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதுங்கள்)
(வெள்ளிக்கிழமை தோறும் சாரு நிவேதிதா எழுதும் இந்த பயணத் தொடர் வெளியாகும். இது பற்றிய கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதுங்கள்)
அக்டோபர் 23 , 2015