நிலவு தேயாத தேசம் – 23

நிலவு தேயாத தேசம் – 23
Published on

Pamukkale தடாகம் ஒன்றில்…

வளைகுடா நாடுகளில் வசிக்கும் என் நண்பர்களிடம் நீங்கள் வசிக்கும் நாட்டை சுற்றிப் பார்த்தீர்களா என்று கேட்கும் போது எல்லோரும் ஒரே பதிலைத் தருவதையே பார்த்திருக்கிறேன்.  இங்கே பாலைவனத்தில் பார்க்க என்ன இருக்கிறது? 

நண்பர்களின் இந்தக் கேள்வியைப் பற்றி இஸ்தாம்பூலில் அபிநயாவை மீண்டும் எதேச்சையாகப் பார்த்த போது யோசிக்க நேர்ந்தது.  ஒரே நிறுவனம், ஒரே இடத்துக்குப் பயணம் என்பதால் முதலில் சந்தித்த பயணிகளையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஊர்களில் சந்தித்துக் கொண்டிருந்தோம்.  என் பயணக் குழுவைச் சேர்ந்தவர்கள் வேறு திசையில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு கடைசியாக இஸ்தாம்பூல் வந்து சேர்ந்திருந்தார்கள்.  எனக்கும் அபிநயாவுக்கும் மீண்டும் மூன்று தினங்கள் இஸ்தாம்பூலில் தங்கக் கிடைத்தன.  இந்தியாவுக்கும் ஒரே விமானத்தில் கிளம்புகிறோம் என்பதால் மீண்டும் மஸ்கட் (ஓமன் தலைநகர்) விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் தங்க வேண்டியிருந்தது பற்றி யோசித்தோம்.  பேசாமல் ஓமனுக்கு வீஸா எடுத்துக் கொண்டு நாலைந்து நாள் ஓமனைச் சுற்றி விட்டு ஊர் திரும்பலாமா என்று கேட்டேன். 

மஸ்கட்டில் அபிநயாவின் உறவினர்கள் வேறு இருப்பதாகச் சொன்னார்.  அப்போது நான், ”நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் ஒன்று சொல்லலாமா?” என்றேன். 

”சொல்லுங்கள்.” 

“பிராமணர்களுக்கு உலகம் பூராவும் உறவினர்கள் இருக்கிறார்கள்.”

“உண்மைதான்.  நியூ ஜெர்ஸியிலேயே நூறு பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  இன்னும் நீங்கள் என்னென்ன ஊர் சொல்கிறீர்களோ அங்கெல்லாம் ஒரு உறவு இருக்கிறது.  எங்கள் குடும்பமே உலகத்தை ஒரு க்ளோபல் வில்லேஜாக மாற்றி விட்டது என்று என் அப்பா அடிக்கடி சொல்வார்.  ஆஃப்ரிக்காவின் Djibouti-யில் கூட என் கஸின் ஒருத்தன் இருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…”

”ஆஹா…  என்ன ஒரு குடும்பம்.  ஆனால் என் உறவினர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் செங்கல்பட்டைக் கூடத் தாண்டியிருக்க மாட்டார்கள். என் கஸின் ஒருத்தன் திஹார் ஜெயிலில் இருக்கிறான்.” 

யோசித்துப் பார்த்த பிறகு ஓமன் பயணம் கைவிடப் பட்டது.   விடுப்பு கிடையாது; அதனால்  திரும்பியாக வேண்டும் என்றார் அபிநயா.  ஆனால் மஸ்கட் விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் இருக்க வேண்டுமே, விமான நிலையத்துக்கு வர முடியுமா என்று என் கஸினைக் கேட்கிறேன் என்று சொல்லி விட்டு தொலைபேசியில் பேசினார்.  பேச்சின் இடையே “என் நண்பர் ஓமனைச் சுற்றிப் பார்க்கப் பிரியப்படுகிறார்” என்று நான் சொன்னதையும் சொன்னார்.  அதைக் கேட்டு அந்த கஸின் மிரண்டு விட்டதாக அபிநயா பிறகு சொன்னார்.  அவர் அங்கே ஏழெட்டு வருடமாக இருக்கிறார்.  பணம் எக்கச்சக்கமாகக் கிடைக்கிறது.  ஆனால் சுற்றிப் பார்க்கத்தான் ஒன்றுமே இல்லை. அந்தப் பாலைவனத்தில் பார்க்க என்ன இருக்கிறது என்று பலமுறை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார். 

நான் அப்போது டேவிட் சொன்னதை அபிநயாவிடம் சொன்னேன். ரோமானியப் பேரரசின் இரண்டாவது தலைநகராக இருந்த இடம், க்ளியோபாட்ரா தங்கிய இடம், அப்படிப்பட்ட எஃபசூஸை வெறும் கற்குவியல் என்றாரே அந்த அமெரிக்கக் கிழவர்!  என்னுடைய இன்னொரு நண்பர் இஸ்தாம்பூலை ’வெறும் பழைய காலக் கட்டிடங்களைத் தவிர இந்த ஊரில் வேறு ஒன்றுமேயில்லை’ என்று சொல்லவில்லையா? 

ஒரு இடத்துக்கும் உங்களுக்கும் உள்ள உறவு என்பது என்ன?  இந்தக் கட்டுரையை இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் போது சி.சு. செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம் என்ற 2000 பக்க நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையை விவரிக்கிறது.  நூற்றுக் கணக்கான இடங்கள் வருகின்றன.  அதெல்லாம் இப்போது எப்படி இருக்கின்றன என்று பார்க்க வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது.  உதாரணமாக, செல்லப்பாவுக்கு அப்போது (1928) வயது 16.  இண்டர் படிப்பின் இரண்டாம் ஆண்டு.  இப்போதைய பனிரண்டாம் வகுப்பு.  மதுரை மேலகோபுரத் தெருவை நோக்கி வடக்குப் பார்த்து இருக்கும் மதுரை லாட்ஜில்தான் அவர் தங்கிப் படித்திருக்கிறார்.  அவர் விவரிக்கும் இடத்தில் இப்போது அந்த லாட்ஜ் இருக்கிறதா, இல்லையென்றால் அது இப்போது என்னவாக ஆகியிருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது எனக்கு. 

இப்படியாகத்தான் இடத்துக்கும் நமக்குமான உறவு உண்டாகிறது.  சே குவேரா பற்றி இப்போது எல்லோருக்கும் தெரியும்.  ஃபாஷன் உலகில் அவர் முகம் ஒரு அலங்கார மோஸ்தர்.  ஆனால் உலகின் இடதுசாரிப் புரட்சிகர இயக்கங்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு சே குவேராவின் பெயர் புரட்சியின் குறியீடு.  சே பொலிவியாவில் தனது தோழர்களுடன் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததையும் பின்னர் அவர் அங்கே பிடிபட்டு சி.ஐ.ஏ.வினால் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம்.  சே தனது தோழர்களுடன் பொலிவியாவில் சென்ற பாதை இப்போது ’சே குவேரா பாதை’ என அழைக்கப்பட்டு உலகெங்கிலும் இருந்து சே’யின் ஆர்வலர்கள் இப்போது அந்தப் பாதையில் பயணிக்கிறார்கள். 

இன்று சாதாரண நோட்டுப் புத்தகத்தைப் போல் கிடைக்கும் சே குவேராவின் ’பொலிவிய நாட்குறிப்புகள்’ பற்றி 1970களின் இறுதியில் இடதுசாரிகளைத் தவிர அநேகமாக வேறு யாருக்கும் தெரியாது.  அப்போது அது எங்கேயும் கிடைப்பதாகவும் தெரியவில்லை.  உலகில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு சே குவேராவின் நூல்கள் பாடத் திட்டமாக இருந்ததால் தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக நூலகத்தில் அது கிடைத்தது.  அங்கே பணி புரிந்த என் நண்பர் ஒருவர் மூலம் பொலிவிய நாட்குறிப்புகள் கிடைத்தது. 

சே பயணித்த பாதையில் ஒரு பயணம்:

சே பற்றித் தெரியாத ஒருவருக்கு Cochabamba, La Higuera போன்ற ஊர்களெல்லாம் வெறும் பெயர்கள்.  ஆனால் சே’வைத் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் புனித ஸ்தலங்கள்.  6500 அடி உயரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமமான லா இகுவேராவில்தான் சே அமெரிக்க சிஐஏ ஆட்களின் உதவியுடன் பொலிவிய ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். 

இதைப் போலவேதான் அரபி மொழி பேசப்படும் நாடுகளும், இஸ்லாமியர் வாழும் நாடுகளும் என்னை ஈர்த்தபடி இருக்கின்றன.  தொடர்ந்து பல ஆண்டுகளாக அரபி இலக்கியத்தை வாசித்து வருவதால் ஒவ்வொரு அரபு தேசமும் எனக்குரிய கதைகளைத் தன்னில் கொண்டிருக்கின்றன.  ஆனால் இலக்கியமோ அரசியலோ சமூக வரலாறோ தெரியாத, பணம் ஈட்டுவதை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு நடமாடும் மனிதர்களுக்கு எல்லா ஊர்களுமே வெறும் இடங்கள்தான்.  அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?  வெறும் பாலைவனம். 

அதையேதான் கேட்டார் அபிநயாவின் உறவுக்கார பெண்ணும்.  ஓமனில் என்ன இருக்கிறது பார்க்க?

Jokha Al-Harthi என்று ஒரு ஓமன் தேசத்து எழுத்தாளர் இருக்கிறார்.  அவரது Women of the Moon என்ற நாவலின் ஒருசில பகுதிகளை Banipal பத்திரிகையில் படித்திருக்கிறேன். 

ஜோக்கா அல்-ஹார்த்தி
ஜோக்கா அல்-ஹார்த்தி

மூன்று தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்லும் நாவல் அது.  ஓமனில் ஒரு கிராமம்.  கம்பளி நூற்பதுதான் அங்கே உள்ள பெண்களின் பிரதான தொழில்.  அங்கே மய்யா என்ற இளம் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறாள் அவள் அம்மா.  ஆனால் மய்யாவோ வேறு ஒருவனைக் காதலிக்கிறாள். அலி பின் கலாஃப் என்ற பெயருள்ள அவன் நீண்ட காலம் லண்டனில் படித்தவன்.  ஆனால் மய்யாவின் காதல் கை கூடவில்லை. அவளுடைய தங்கைகள் இருவரும் மணமாக இருக்கும் தங்கள் தமக்கையைக் கிண்டல் செய்கிறார்கள். அப்போது மய்யா சொல்கிறாள்:  ”இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது? அவன் சிரிக்கும் போது சிரித்து, அழும்போது அழுது, அவன் கொஞ்சும் போது கொஞ்சிக் கொண்டிருப்பது ஒரு வாழ்க்கையா?”

“நீ சொல்வது புதிதாக இருக்கிறதே?  பெதோயின் (Bedouin) பெண்கள் அப்படிச் சொல்ல மாட்டார்களே?  அவன் சந்தோஷம்தான் நம்முடைய சந்தோஷம்.  அவன் துக்கம்தான் நம்முடைய துக்கம்” என்கிறார்கள் இரண்டு சகோதரிகளும்.

“அப்படியானால் என் துக்கத்தைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?” என்று ஆவேசமாகக் கேட்கிறாள் மய்யா. 

மய்யாவுக்குத் திருமணம் நடந்து கர்ப்பமாகிறாள்.  அப்போது அவள் ஒரு முடிவு செய்கிறாள்.  தன் தாயைப் போல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது. மஸ்கத்திலுள்ள மருத்துவமனையில்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். 

அவள் பேசும் போது குறுக்கிடுகிறான் கணவன்.  “உனக்கு ஆயிரம் முறை சொல்லி விட்டேன்.  அது மஸ்கத் அல்ல; மஸ்கட் என்று…”

அவள் அவன் சொன்னதைக் கண்டு கொள்ளவே இல்லை.  அவனிடம் தீர்மானமாகச் சொல்லி விடுகிறாள்.  ”மருத்துவமனையில்தான் பெற்றுக் கொள்வேன்.”

”கடவுளே, என் குழந்தை முதல் முதலில் கிறித்தவர்களின் கைகளிலா தவழ வேண்டும்?” என்று கேட்கிறான் கணவன் அப்துல்லா. 

கடைசியில் குழந்தை மய்யா நினைத்தபடி மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில்தான் பிறக்கிறது.  ஏன் மய்யா இப்படி ஒரு முடிவு எடுத்தாள்?  அப்போதெல்லாம் வீட்டில் பிரசவம் பார்த்துக் கொள்வதுதான் வழக்கமாக இருந்தது.  மய்யா அதற்கு மாறாக முடிவெடுத்ததற்குக் காரணம், அவள் அம்மா தன் பிள்ளைப் பேறுகளைப் பற்றி அவ்வப்போது பெருமையாக சொல்லிக் கொண்டதுதான்.

”திடீரென்று ஒருநாள் யாரும் எதிர்பாராத விதமாக என் மாமா வந்து விட்டார்.  அவருக்கு நல்லபடியாக சமைத்துப் போட வேண்டுமென்று கோழியைத் துரத்திக் கொண்டிருந்தேன்.  அப்போது சட்டென்று என் வயிறு வெடித்து விடும் போல் ஒரு உணர்வு.  வலியில் துடித்தபடி தரையில் விழுந்து புரண்டேன்.  உன் தந்தை மரியாவை அழைத்து வந்தார்.  பார்த்ததுமே அவள் சொல்லி விட்டாள், சமயம் வந்து விட்டது என்று.  உடனே என்னை அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடி விட்டாள்.  பிறகு என்ன செய்தாள் தெரியுமா?  சுவர் அருகே நிற்கச் சொல்லி என் கைகளை எடுத்து சுவரிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கட்டைகளைப் பிடித்துக் கொள்ளச் செய்தாள்.  அந்தக் கட்டைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கால்களை அகற்றினேன்.

ஆனால் நிற்க முடியவில்லை. வலியில் கால்கள் தளர்ந்தன. உடனே மரியா கத்தினாள்.  ”அவமானம், அவமானம், ஷேக் மஸூதின் மகளா நிற்க முடியாமல் தரையில் படுத்துக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்வது?” உடனே மூச்சைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றேன்.  கட்டைகளை என் பலம் கொண்ட மட்டும் இறுகப் பிடித்துக் கொண்டேன்.   மரியா மட்டும் என் கைகளைக் கொஞ்சம் தளர்த்தி உன்னை வெளியே எடுத்திருக்காவிட்டால் நீ செத்துத்தான் பிறந்திருப்பாய்.  கடவுள் புண்ணியத்தில் யாருக்கும் அது தெரியாது.  அவள் உன்னை எடுத்துக் கொண்டிருக்கும் போது என்னிடம் சொன்னாள்.  ’ஒரு சத்தம் வரக் கூடாது.  உலகம் பூராவும் பெண்கள்தான் பிள்ளை பெறுகிறார்கள்.  ஒரு சத்தம் வந்தது, உன் மானமே போயிற்று.  ஷேக்கின் மகள் நீ…’

என் வாயிலிருந்து வந்த ஒரே வார்த்தை “யா அல்லாஹ்…”  ஆனால் இப்போதெல்லாம் மய்யா, பெண்கள் மருத்துவமனையில் ’படுத்துக் கொண்டு’ பிள்ளை பெறுகிறார்கள்.  என்ன கேவலம் இது…அவர்கள் கத்துகிற கத்தல் மருத்துவமனையின் வெளியே நிற்கிற ஆண்களுக்குக் கேட்கிறது.  வெட்கம் மானம் என்று எதுவுமே இல்லாமல் போய் விட்டது இந்தக் காலத்தில்…” 

மய்யாவுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது.  அதற்கு அவள் லண்டன் என்று பெயர் வைக்கிறாள்.  இஸ்லாமிய சமூகங்களில் பெண்ணடிமைத்தனம் என்று சொல்கிறார்கள் அல்லவா?  மய்யாவின் முடிவை அவள் கணவனாலும் மாற்ற முடியவில்லை.  அந்த ஊர் வழக்கப்படி பிள்ளை பெற்ற பெண் தன் தாய் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு கோழி என்று நாற்பது நாட்கள் விசேஷ விருந்து சாப்பிட வேண்டும்.  அதற்காக அவளை அப்துல்லாவின் வீட்டிலிருந்து தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள் அவள் தாய். அவள் வீடு இருப்பது அல் அவாபி என்ற ஊரில்.  அது ஓமனில் உள்ள ஒரு மாவட்டத் தலைநகர். 

ஆக, ஓமனில் உள்ள அல் அவாபி என்பது என்னோடு உறவு கொண்டுள்ள ஊர்.  அல் அவாபி பற்றி ஒரு அமெரிக்க நாடோடிப் பயணி இப்படிக் குறிப்பிடுகிறார்:

ஓமனின் வடகிழக்கில் உள்ள ஒரு ஊர் இப்ரா. அதன் அருகே உள்ள கிராமம் அல் முனிசிஃபே. 

க்ளேர் ராபின்ஸனின் இணையதளம்:

ரண்வீர் சிங்கும், ப்ரியங்கா சோப்ராவும் நடனமாடும் ஜியா என்ற பாடல் காட்சியைப் பாருங்கள்.  படம்: Gunday.  இந்தப் பாடல் முழுவதும் நாம் மேலே கண்ட அல் முனிசிஃபே அழிவுச் சின்னங்களில் எடுக்கப்பட்டது. 

(சாருநிவேதிதாவின் இத்தொடர் வெள்ளிதோறும் வெளிவரும்)

ஏப்ரல்   02 , 2016  

logo
Andhimazhai
www.andhimazhai.com