இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதி பற்றி எழுதியிருந்தேன். அங்கே கேட்கும் ’பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) அற்புதமாக இருக்கும் என்று அறிந்து அதைக் கேட்பதற்காகவே சென்னையிலிருந்து இஸ்தாம்பூல் சென்றேன் என்று சொல்லலாம்.
உலகின் மிக அற்புதமான ’பாங்கு’களில் ஒன்று இது. இஸ்லாத்தில் தொழுகைக்கான அழைப்பை ’அதான்’ என்கிறார்கள். எங்கள் ஊர்ப் பக்கத்தில் ‘பாங்கு’ என்பார்கள்.
என்னுடைய 25 வயது வரை இதே போன்ற ‘பாங்கு’களால் சூழப்பட்டே வளர்ந்தேன். என்னுடைய இசை ரசனைக்கு இதுவே ஆதாரம். இன்னொரு அற்புத ’பாங்கு’ :
இன்னொரு அதியற்புதமான ‘அதான்’-ஐ அமெரிக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தில் வாசிக்கிறார் ஒரு இஸ்லாமியர். ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த ‘அதான்’-ஐக் கேட்டால் நீங்கள் மனச் சோர்வு, அச்சம், பீதி, தனிமையுணர்வு, பலகீனம், கவலை, துக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும்.
ஓமனில் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் Wadi Bani Kharous. ’வாதி’ என்றால் சமவெளி என்று பொருள். வாதி பானி கரூஸ் பற்றிய ஒரு காணொளி இது:
முட்செடிகளும், மரங்களே இல்லாத சாம்பல் நிற மலைகளும் எனக்கு ஷிம்லாவிலிருந்து லே வரை சென்ற இமயமலைப் பாதையை நினைவூட்டுகிறது. அந்த வழியிலுள்ள மலைப்பகுதிகள் இப்படித்தான் சாம்பல் நிறமாக இருக்கும். பச்சை நிறத்தையே பார்க்க முடியாது.
ஓமனிலிருந்து சென்னை திரும்பும் போது விமானத்தில் பல ஓமன் நாட்டு நோயாளிகளையும் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் உறவினர்களையும் பார்க்க முடிந்தது. நோயாளிகள் என்றால் நடமாடக் கூடியவர்கள் அல்ல; படுக்கையிலேயே மலஜலம் கழிக்க வேண்டிய அளவுக்கு மோசமான, ஆக்ஸிஜனும் சலைன் நீரும் குழாய் வழியே உடலுக்குள் செலுத்தப்படும் நிலையில் இருக்கும், சுய பிரக்ஞையே அற்று விட்ட நோயாளிகள். சென்னை அளவுக்கு ஓமனில் மருத்துவ வசதிகள் இல்லாமல் இருக்கலாம்; அல்லது, இங்கே மருத்துவ செலவு மிகவும் குறைவாக இருக்கலாம். மேலும், தமிழ்நாட்டைப் போலவே ஓமனிலும் பொதுஜனம் யாரும் இலக்கியம் படிப்பதில்லை. துருக்கியிலும் அப்படியே. நான் சந்தித்த அனைவருக்கும் ஓரான் பாமுக்கை நன்றாகத் தெரிந்திருந்ததே தவிர யாருமே அவரைப் படித்ததில்லை. இஸ்தாம்பூலில் உள்ளூர் செய்தித்தாள்களே கிடைக்கவில்லை என்று எழுதியிருந்தேன். இருந்தாலும் பாமுக்கின் நூல்கள் எப்படி லட்சக் கணக்கில் அவரது சொந்த நாட்டிலேயே விற்கின்றன? பாமுக் எப்படி ஒரு ’பாப்’ பாடகர் அளவுக்குப் பிரபலமாக இருக்கிறார்? ஓமனைச் சேர்ந்த ஜோக்கா அல்-ஹார்த்தி என்ற இளம் பெண் எழுத்தாளர் எப்படி ஒரே நாவலில் உலகப் புகழ் அடைகிறார்?
ஒரே காரணம்தான்.
அந்தந்த நாட்டின் Intelligentia (படித்த வர்க்கம்) அவர்களது நாட்டின் எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் இனம் கண்டு கொள்கிறது; உலகம் முழுவதற்கும் அவர்களைத் தெரியப்படுத்துகிறது. உதாரணமாக, இங்கிலாந்தில் வாழும் புலம் பெயர்ந்த அரபி மொழி பேசுபவர்கள் Banipal என்ற இலக்கிய சஞ்சிகையை அரபியில் அல்ல, ஆங்கிலத்தில் நடத்தி அரபி மொழியில் வெளியாகும் அனைத்து இலக்கியப் படைப்புகளையும் நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். அமெரிக்காவில் வாழும் அரபி மொழியினர் அல்-ஜதீத் (Al-Jadid) என்ற பத்திரிகையை நடத்தி அரபி மொழி இலக்கியம் மட்டுமல்லாது அரபி மொழி பேசும் நாடுகளின் கலாச்சார செயல்பாடுகள் அனைத்தையும் ஆங்கில மொழிக்கு அறிமுகம் செய்கிறார்கள். (கடந்த பதினைந்து ஆண்டுகளாக இப்பத்திரிகைகளை வாசித்து வருவதால்தான் எனக்கு அரபி மொழி இலக்கியம் பரிச்சயம் ஆயிற்று.)
அது மட்டுமல்லாமல், பரந்து பட்ட அளவில் தங்கள் அரபி மொழி இலக்கியத்தை ’பானிபால்’ குழு ஐரோப்பாவிலும் ’அல்-ஜதீத்’ குழு அமெரிக்கா முழுவதும் பிரபலப்படுத்துகிறார்கள். தங்கள் மொழியின் இலக்கியவாதிகளை ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அழைத்து அங்கே உள்ள இலக்கியவாதிகளுக்கு அறிமுகம் செய்கிறார்கள். மிகப் பரவலாகத் தெரியும் அளவுக்கு பரிசுகள் அளித்து ஊக்குவிக்கிறார்கள். ஊக்குவிப்பது கூட பெரிதல்ல; அந்தப் பரிசுகள் மூலம் பரிசு பெற்ற எழுத்தாளர் ஐரோப்பா முழுவதும் அமெரிக்கா முழுவதும் பிரபலமடைய காரணமாக இருக்கிறார்கள்.
தமிழில் என்ன நடக்கிறது? ஐரோப்பிய நகரங்களில் உள்ள தமிழர்கள் இன்னமும் கம்பனையும் வள்ளுவனையும் தாண்டி வரவில்லை. ஆண்டு தவறாமல் கம்பன் விழா நடத்துகிறார்கள். மற்றபடி தமிழ்த் தொலைக்காட்சி சேனல்களும் தமிழ் சினிமாவும்தான் ஐரோப்பியத் தமிழர்களின் ஒரே கலாச்சாரச் செயல்பாடு. அவர்கள் வாழ்கின்ற நாட்டின் இலக்கியம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அமெரிக்கத் தமிழர்கள் பாவம், தமிழே தெரியாது. பணம் சம்பாதிப்பதைத் தவிர அவர்கள் வேறு எதையும் அறியாதவர்கள்.
நம் தமிழ்நாட்டு நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கே எதுவும் தெரியவில்லை. ஒரு துணைவேந்தர் என்னைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பதாகச் சொன்னார். அவரைப் பொறுத்தவரை என்னுடைய அடையாளம் அவ்வளவுதான். துணைவேந்தராவது பரவாயில்லை; தமிழ்த் துறைப் பேராசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபகரமானது. பாரதிக்கு அடுத்தாற்போல் அவர்களுக்கு யாரையும் தெரியவில்லை. சமகாலத் தமிழ் இல்லகியவாதிகள் என்று கேட்டால் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, டாக்டர் மு.வ., நா. பார்த்தசாரதி, அகிலன், வைரமுத்து என்கிறார்கள். (இப்படிப் பதில் சொல்லும் கோஷ்டியில் வருபவர்தான் நம்முடைய காலஞ்சென்ற அப்துல் கலாமும்.) அதாவது, சமகால இலக்கியத்தை அறிந்தவர்களிடமிருந்து, அறிஞர்களிடமிருந்து இந்தப் பதில். அறியாதவர்களுக்கு பாரதிக்குப் பிறகு யாருமில்லை.
துருக்கியில் யாரோடு பேச சந்தர்ப்பம் கிடைத்தாலும் என் முதல் கேள்வி: ஓரான் பாமுக்கைத் தெரியுமா?
தெரியும். எழுத்தாளர்தானே?
ஆமாம். அவரைப் படித்திருக்கிறீர்களா?
கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை.
எப்படிக் கேள்விப்பட்டீர்கள்?
அவர் குர்துகளை ஆதரித்துப் பேசுபவர். துருக்கிக்காரராக இருந்தாலும் தேசபக்தி இல்லாதவர். ஆர்மீனியர்களுக்கும் ஆதரவாகப் பேசியவர். தேசத் துரோகி.
இதெல்லாம் இந்தப் பாமர மக்களுக்குத் தெரிந்தது தொலைக்காட்சி மூலமாக. ஆனாலும் அந்தத் தேசத் துரோகியின் நூல்கள் துருக்கியிலேயே ஒரு லட்சம் பிரதிகள் விற்கின்றன. காரணம், பல்கலைக்கழகங்களும் படித்தவர்களும். ஏற்கனவே எழுதினேன். அங்கே மிக உயர்தரமான, சர்வதேசத் தரத்தில் அமைந்த பள்ளிகளும், பதினோரு வகுப்பு வரை ஆங்கிலம் கற்பித்தும் யெஸ் நோ தவிர வேறு எந்த ஆங்கில வார்த்தையும் தெரியாத மாணவர்களைக் கொண்ட பள்ளிகளும் உள்ளன. பாமுக் படித்த ராபர்ட் ஸ்கூல் பிரிட்டனில் உள்ள உயர்தரமான பள்ளியை ஒத்தது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
இதுதான் ராபர்ட் பள்ளி. இப்படிப்பட்ட பள்ளிகள் நம் நாட்டிலும் உள்ளன. ஆனால் இங்கே படிக்கும் மாணாக்கர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனால் அங்கே துருக்கி மொழி கட்டாயம். அவர்கள் அனைவருக்கும் பாமுக் ஹீரோ.
ஆனால் தமிழ்நாட்டில், படித்தவர்களுக்கு இலக்கியம் தெரியாது. தெரிந்தாலும் வைரமுத்துவோடு சரி. துருக்கியில் வழக்கறிஞர், மருத்துவர், பேராசிரியர் போன்ற படித்த வர்க்கத்தினர் ஓரான் பாமுக்கைப் படித்திருக்கிறார்கள். அதனால்தான் ஒரு லட்சம் பிரதி. இதேதான் ஓமானிய எழுத்தாளர் ஜோக்கா அல்-ஹார்த்தி விஷயத்திலும். பழங்குடி சமூகமான ஓமனில் அல்-ஹார்த்திக்கு எப்படி உலகளாவிய கவனம் கிடைக்கிறது என்றால் மேலே கூறிய இரண்டு காரணங்கள்தான். மொழிபெயர்ப்பும், படித்தவர்களின் கவனிப்பும்.
தில்லியைச் சுற்றி ஏராளமான நுழைவாயில்கள் (Gates) இருக்கின்றன. முதல் வாயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ராஜபுதன மன்னன் முதலாம் அனங்க்பாலால் கட்டப்பட்டது வாயில் என்றால் கோட்டையின் பிரதான வாயில். அந்தக் கோட்டையை 12-ஆம் நூற்றாண்டில் திரும்பக் கட்டினான் பிரித்விராஜ் சௌஹான். அதன் சிதிலங்களை நாம் இன்னமும் சாகேத், மெஹ்ரோலி, வசந்த் குஞ்ஜ் போன்ற தெற்கு தில்லிப் பகுதிகளில் காணலாம். இதேபோல் காஷ்மீரி கேட், அஜ்மீரி கேட், துர்க்மான் கேட், தில்லி கேட், ஷேர் ஷா கேட், லஹோரி கேட், காபூலி கேட், நிகம்போத் கேட், மோரி கேட் என்று தில்லியைச் சுற்றிலும் ஏராளமான வாயில்களை நாம் இன்றும் காணலாம்.
நான் தில்லியில் இருந்த போது இந்த வாயில்களையெல்லாம் ஏராளமான முறை சுற்றியிருக்கிறேன். ஒரு கேட்டில் ஆரம்பித்து அதே கேட்டுக்கு வர ஒரு நாள் போதாது. இந்த நுழைவாயில்களும் கோட்டைச் சிதிலங்களும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுக்குப் பெயர் ஹூசுன். ஹூசுன் என்றால் துயரம். அல் குரானில் பயன்படுத்தப்படும் வார்த்தை அது.
மேலே உள்ள புகைப்படத்தில் தெரிவது மோரி கேட்.
உலகின் எல்லா நகரங்களும் கொண்டாட்டங்களையே தமது குணாம்சமாகக் கொண்டிருப்பதில்லை. துயரத்தை மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் பல நகரங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவின் அதி துயரமான நகரம் என்று தில்லியைச் சொல்லலாம். அதன் ஒவ்வொரு கல்லும் அந்நகரில் சிந்தப்பட்ட குருதித் துளிகளின் கதைகளைச் சொல்லும். முகமது பின் துக்ளக் போன்ற கொடுங்கோல் மன்னர்களால் ஆளப்பட்ட நகரம் அது. தில்லி அனுபவித்த கொடுமையை உலகில் எந்த ஒரு நகரமும் அனுபவித்திருக்காது. துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து 1300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தௌலத்தாபாதுக்கு (இப்போது அந்த ஊர் மகாராஷ்ட்ராவில் உள்ளது) மாற்றிய போது ஊரில் ஒரு ஈ காக்கை இருக்கக் கூடாது என்று சட்டம் போட்டான். நகர முடியாத கூன் குருடு முதியவர்களை துக்ளக்கின் சிப்பாய்கள் கொன்று உடலைத் தெருவில் வீசினார்கள். சில குருடர்களை வண்டிக் கால்களில் கட்டி இழுத்துக் கொண்டு போனார்கள். தில்லியே ஆள் இல்லாத பிசாசுகளின் நகரமாக இருந்தது. இது நடந்தது 1327-இல். பின்னர் 1335-இல் மீண்டும் தில்லியைத் தலைநகராக்கி மக்களையெல்லாம் திரும்பவும் தௌலத்தாபாதிலிருந்து தில்லிக்கு அழைத்துக் கொண்டு போனான். இந்த இடைப்பட்ட காலமான எட்டு ஆண்டுகளில் தில்லி எப்படி இருந்தது? எட்டு ஆண்டுகள் தன் வாழ்வைப் பிசாசுகளிடம் கொடுத்து விட்டு இருந்த ஒரு நகரம் உலகில் இருக்கிறதா?
இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தமக்கேயுரிய துயரார்ந்த கதைகளைக் கொண்ட பல நகரங்கள் இருக்கின்றன. லிஸ்பன் நகரத்தின் துயர் Saudade. Burgos நகரின் துயர் Tristeza. புவனோஸ் அய்ரஸின் துயரம் mufa. Turin நகரத்தின் துயர் Meztizia. ப்ராக் நகரின் துயர் பேய்களின் துயரத்தை ஒத்தது. அலெக்ஸாண்ட்ரியாவின் துயரத்துக்குப் பெயர் Ennui. இந்த வரிசையில் இஸ்தாம்பூலின் துயரத்துக்குப் பெயர் ஹூசுன் என்கிறார் ஓரான் பாமுக்.
கலாட்டா பாலத்தில் மீன் விற்கிறார்கள். ஐம்பதுகள். புகைப்படங்கள் Hilmi Sahenk.
ஹூசுனுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று, லௌகீக இன்பங்களில் அபரிமிதமாக ஈடுபட்டிருப்பதால் ஏற்படும் ஆன்மீக இழப்பு. இரண்டாவது சற்று தத்துவரீதியானது. அல்லாஹ்வை இன்னும் ஆழ்ந்து அனுபவிக்க முடியவில்லையே, அல்லாஹ்வை இன்னும் நெருங்க முடியவில்லையே என்கின்ற ஆன்மீக வேதனை. இது சூஃபிகளின் பாரம்பரியம். இந்த ஹூசுனின் பொருள், இன்னும் நான் அதிக அளவு ஹூசுனை அனுபவிக்கவில்லையே என்பது. என் துயரத்துக்குக் காரணம், நான் இன்னும் அதிக துயரத்தை அனுபவிக்கவில்லையே. இதே இதழில் சென்ற ஆண்டு வெளிவந்த கேள்வி பதில் பகுதியில் Saint John of the Cross பற்றி எழுதியிருக்கிறேன். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெய்னில் வாழ்ந்த ஞானி. ஞானத்தை போதிக்க அல்ல; ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக இவர் பல்லாயிரம் மைல்களை கால்நடையாகவே நடந்து சென்றிருக்கிறார். எத்தனையோ ஞானிகள் அப்படி வாழ்ந்திருக்கலாம். ஆனால் ஜான் அத்தனை ஆயிரம் மைல்களையும் காலில் செருப்பு அணியாமல் வெறும் காலுடனே நடந்தார். ஏன் என்ற கேள்வியைப் பின் தொடர்ந்தால் நமக்கு ஹூசுன் என்ற வார்த்தைக்குப் பொருள் கிடைக்கும். மைனஸ் 5 டிகிரி அளவுக்குப் போகும் தில்லி குளிரில் சட்டை அணிய மறுத்து வெறும் துண்டைப் போர்த்தியிருந்த மகாத்மாவின் வாழ்வும் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதங்களும் கூட ஹூசுன் என்ற தத்துவத்தில் அடங்கக் கூடியதுதான்.
ஹூசுனின் உக்கிரத்தை நாம் ’திவான்’ கவிதைகளில் காணலாம். பாரசீகப் பாரம்பரியத்தில் ’திவான்’ என்பது அரசவையில் பாடப்படும் ஒரு கவிஞனின் பாடல்களின் தொகுப்பு. உருதுவில் ’கஜல்’ என்று அழைக்கப்படுவதுதான் பாரசீகத்தில் ’திவான்’. ’திவான்’ கவிஞர்களில் முக்கியமானவர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம். Fuzûlî (1483 –1556) Bâkî (1526–1600); Nef‘î (1570 –1635). நேஃபியின் இயற்பெயர் ஓமர். இவரது கவிதைகள் அரசு நடவடிக்கைகளைப் பகடி செய்ததால் ஆட்டமன் சுல்தான்களான முதலாம் அஹ்மத்துக்கும் (ஆட்சிக் காலம்: 1603–1617) அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் உஸ்மானுக்கும் (1618–1622) நெஃபியைப் பிடிக்கவில்லை. ஆனாலும் உஸ்மானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நான்காம் முராதுக்கு (1623-1640) நெஃபியைப் பிடித்தது. ஆனாலும் நெஃபி முராத் சுல்தானின் ஆட்சியைப் பாராட்டி எழுதி அரசனின் நற்பெயரைச் சம்பாதிக்க முயற்சி செய்யவில்லை.
ஒருநாள் தன்னுடைய ’ஸிஹாம்-இ காஜா’ (Arrows of Misfortune) என்ற கவிதைத் தொகுதியை எடுத்துக் கொண்டு சுல்தானைப் பார்க்க தோப்காப்பி அரண்மனைக்குச் சென்றார் நெஃபி. (தோப்காப்பி ஞாபகம் இருக்கிறதா?) அரசனின் கையில் புத்தகத்தைக் கொடுத்த அடுத்த கணம் தோப்காப்பியின் ஒரு கோபுரத்தில் இடி விழுந்தது. அவ்வளவுதான். “ஏய் சைத்தானே! ஓடிப் போ இங்கிருந்து! பாஷா, இவன் தலையைக் கொய்து எறியுங்கள்” என்று ஆவேசமாகக் கட்டளையிட்டான் சுல்தான்.
(சாருநிவேதிதாவின் இத்தொடர் வெள்ளிதோறும் வெளிவரும்)
ஏப்ரல் 08 , 2016