நிலவு தேயாத தேசம் – 26

நிலவு தேயாத தேசம் – 26
Published on

சிறைவாசத்தின் போது நஸீம் ஹிக்மத் எழுதிய சில கவிதைகளைப் பார்ப்போம். 

ஆஞ்ஜைனா பெக்டோரிஸ்

பத்தாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு

பரிதாபத்துக்குரிய என் நாட்டு மக்களுக்குக் கொடுக்க

என்னிடம் ஒரு ஆப்பிள் மட்டுமே இருக்கிறது, டாக்டர்,

ஒரு சிவப்பு நிற ஆப்பிள்:

அது என் இதயம்தான். 

அதேதான் இந்த ஆஞ்ஜைனா பெக்டோரிஸுக்கும் காரணம் டாக்டர்

நிகோடினோ சிறைச்சாலையோ தமனிப் பிரச்சினையோ அல்ல.

சிறைக் கம்பிகளுக்கு வெளியே இரவைப் பார்க்கிறேன்.

தாளமுடியாத வலியையும் மீறி

தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களைப் போலவே

என் இதயமும்

துடித்துக் கொண்டிருக்கிறது.

(ஆஞ்ஜைனா பெக்டோரிஸ்: இதயத்துக்கு ரத்த ஓட்டம் கம்மியாவதால் ஏற்படும் இதய வலி.)

***

சுயசரிதை

நான் 1902-இல் பிறந்தேன்

அதற்குப் பிறகு பிறந்த ஊருக்குப் போனதேயில்லை

எதையும் திரும்பிப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை

மூன்று வயதில் பாஷாவின் பேரனாக இருந்தேன்

பத்தொன்பதாம் வயதில் மாஸ்கோவின் கம்யூனிஸப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தேன்

நாற்பத்தொன்பதாம் வயதில் திரும்பவும் மாஸ்கோவில் இருந்தேன் விருந்தாளியாக

பதினான்கு வயதிலிருந்து கவிஞனாக இருக்கிறேன்

சிலருக்குத் தாவரங்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது

சிலருக்கு மீன்கள் பற்றித் தெரிந்திருக்கிறது

சிலர் நட்சத்திரங்களின் பெயர்களை மனப்பாடமாகச் சொல்கிறார்கள்

எனக்கு பிரிவு பற்றித் தெரியும்

இழப்புகளைப் பற்றி கவிதையே எழுதுவேன்

சிறைச்சாலைகளிலும் பிரம்மாண்டமான ஓட்டல்களிலும்

உறங்கியிருக்கிறேன்

பட்டினி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும்

ஏன், பட்டினிப் போராட்டமே நடத்தியிருக்கிறேன்

ஆனாலும் நான் ருசி பார்க்காத உணவுப் பண்டமே இல்லை

என் முப்பதாவது வயதில் அவர்கள் என்னைத் தூக்கிலிட விரும்பினார்கள்

நாற்பத்தெட்டாவது வயதில் சர்வதேச சமாதானப் பரிசைக் கொடுக்க விரும்பினார்கள்; கொடுக்கவும் செய்தார்கள்.

நாற்பத்தொன்பதாவது வயதில் ஒரு நண்பரோடு மரணத்தின் விளிம்பைத் தொட்டேன்.

ஐம்பதில் இதயம் பழுதடைந்த நிலையில் நான்கு மாதங்கள் புரளக் கூட முடியாமல் மல்லாந்த நிலையிலேயே படுத்திருந்தேன், மரணத்தை எதிர்பார்த்தபடி.

நான் காதலித்த பெண்கள் மீது பொறாமை கொண்டிருக்கிறேன்.

என் காதலிகளை ஏமாற்றியிருக்கிறேன்.

ஆனால் நண்பர்களுக்குத் துரோகம் செய்ததில்லை.

குடிப்பேன், ஆனால் தினமும் அல்ல.

பொய் சொல்லியிருக்கிறேன், மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக.

பொய் சொல்லியிருக்கிறேன், எந்தக் காரணமும் இல்லாமலேயே.

எனது எழுத்துக்கள் முப்பது நாற்பது மொழிகளில் வெளியாகியிருக்கின்றன.

ஆனால் என் துருக்கியில் என் துருக்கி மொழியில் அவை தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இதுவரை புற்றுநோய் வரவில்லை;

வராது என்பதற்கான நிச்சயமும் இல்லை.

என்றைக்குமே நான் ஒரு பிரதம மந்திரியாக மாட்டேன்;

அப்படிப்பட்ட வாழ்க்கையும் எனக்கு வேண்டாம்.

போருக்குச் சென்றதில்லை.

இரவின் தனிமையில் பதுங்கு குழியிலும் பதுங்கியதில்லை.

கிட்டத்தட்ட அறுபது வயதில் காதலில் விழுந்தேன்.

இன்று இந்த பெர்லின் நகரில் துயரத்தின் கரகரப்புடன் சொல்கிறேன் -  

நான் ஒரு மனிதனைப் போல் வாழ்ந்திருக்கிறேன்.

யாருக்குத் தெரியும், இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறேனென்று… இன்னும் எனக்கு என்னவாகப் போகிறதென்று…

11 செப்டம்பர் 1961 அன்று கிழக்கு பெர்லினில் எழுதப்பட்ட கவிதை. 

என் மனைவிக்கு எழுதிய கடிதம்

11.11.1933

Bursa சிறைச்சாலையிலிருந்து

ஆருயிரே,

சென்ற கடிதத்தில் எழுதியிருந்தாய்,

”அவர்கள் உங்களைக் கொன்று விட்டால்,

உங்களை நான் இழந்து விட்டால்

நான் இறந்து விடுவேன்!” என்று.

நீ வாழ்வாய் என் அன்பே…

என் நினைவு காற்றில் கரும்புகை மறைவது போல் மறைந்து விடும்.

நிச்சயம் நீ வாழ்வாய், என் அன்பே!

இந்த இருபதாம் நூற்றாண்டில் துயரத்தின் காலம்

ஒரு ஆண்டுதான்.

கயிற்றில் ஒரு உடல் தொங்குகிறது -

அதுவே மரணம்.

அப்படி ஒரு மரணத்தை என் இதயம் ஏற்றுக் கொள்ளாது.

ஆனால் பந்தயமே கட்டுவேன் -

பாவப்பட்ட ஒரு ஜிப்ஸியின்

மெலிந்த கருநிறக் கை

என் கழுத்தைச் சுற்றி கயிறை மாட்டும் போது

நஸீமின் நீலநிறக் கண்களில் பயத்தைப் பார்க்க நினைக்கும்

அவர்கள் ஏமாந்து போவார்கள்.

எனது கடைசி காலை நேரத்தின் மங்கலில்

நான்

எனது நண்பர்களையும் உன்னையும் காண்பேன்

பிறகு

என் மயானக் குழியை நோக்கிச் செல்வேன்

எவ்வித வருத்தமுமில்லாமல்

ஆனால் 

ஒரு முடிக்கப்படாத கவிதையோடு…

அன்பே!

தேனினுமினிய கண்களைக் கொண்டவளே!

அவர்கள் என்னைத் தூக்கிலிடப் போகிறார்கள் என்று

உனக்கு நான் ஏன் எழுதினேன்?

இன்னும் வழக்கு விசாரணையே துவங்கவில்லை.

டர்னிப் மலரைப் பறிப்பது போலெல்லாம்

அவர்களால்

ஒரு மனிதனின் தலையைக் கொய்து விட முடியாது.

இதோ பார் கண்ணே,

இது எல்லாவற்றையும் மறந்து விடு.

உன்னிடம் கொஞ்சம் பணம் இருந்தால்

எனக்கு ஒன்றிரண்டு மெல்லிய அண்டர்வேர் வாங்கி வா.

Sciatic வலி மீண்டும் ஆரம்பித்து விட்டது.

இன்னொரு விஷயம் கண்ணே,

ஒரு கைதியின் மனைவி

எப்போதும் நல்ல விஷயங்களையே நினைக்க வேண்டும்.

***

அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நடவடிக்கையின் காரணமாகப் பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் சட்டத்தைத் துருக்கிப் பாராளுமன்றம் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து  நிஸாம் ஹிக்மத் தனது சிறைவாசத்தின் பனிரண்டாவது ஆண்டில் 1950, ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்தார். அதன் காரணமாக புர்ஸா சிறையிலிருந்து இஸ்தாம்பூல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.  ஏப்ரல் 23-ஆம் தேதி அவர் உடல்நிலை மோசமானது.  அதனால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையைக் கூட அரசு நிராகரித்து விட்டது.  அதனால் மே 2-ஆம் தேதி திரும்பவும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் நஸீம்.   

நஸீம் ஹிக்மத்துக்கு எதிரான அரசின் மனிதாபிமானமற்ற போக்குக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.  எல்லா பத்திரிகைகளும் நஸீமின் புகைப்படங்களைத் தாங்கி வெளிவந்தன.  நஸீமின் தாயாரும் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.  அதற்குப் பிறகுதான் நஸீம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.  உடனேயே அவர் துருக்கியிலிருந்து தப்பி ருமானியா சென்று அங்கிருந்து மாஸ்கோ சென்று விட்டார்.

அடுத்த 13 ஆண்டுகள், அதாவது 1963-இல் மாரடைப்பினால் இறக்கும் வரை அவர் மாஸ்கோவில்தான் வாழ்ந்தார்.  அங்கேயேதான் அடக்கம் செய்யப்பட்டார்.  Novodevichy-இல்  உள்ள அவரது கல்லறைக்கு இன்றும் துருக்கியர்கள் வந்து மரியாதை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

ஆனால் அனடோலியாவில் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நஸீம் ஹிக்மத்தின் கடைசி விருப்பம் நிறைவேறாமலேயே போனது. 

’நஸீம் ஹிக்மத்துடன் சிறைச்சாலையில்’ என்ற புத்தகத்தை எழுதிய ஓரான் கமால், நஸீமுடன்.

1940-இல் நஸீம் ஹிக்மத் புர்ஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போது துருக்கியின் மிகப் புகழ்பெற்ற கவியான நஸீம் ஹிக்மத் அவர்தான் என்று அங்குள்ள சிறைவாசிகளுக்கு ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.  தெரிந்த பின்னர் சிறைச்சாலையில் அவரை எல்லோரும் மாஸ்டர் என்றே அழைத்து மிகுந்த மரியாதையுடன் பழகினார்கள்.  நஸீமின் கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்காத பழமைவாதிகள் கூட அவரது கவிதைகளை வெகுவாக ரசித்தார்கள் என்பதாலும், அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர் என்பதாலும் அவர் புகழ் தேசமெங்கும் பரவியிருந்தது.   நஸீம் சிறைப்படுத்தப்பட்ட போது கமால் அதாதுர்க் உயிரோடு இல்லை என்பதையும் இங்கே நாம் நினைவு கூர வேண்டும்.  ஏனென்றால், கமால் ஒரு மிதவாதி. எதிர்க் கருத்து உள்ளவர்களை எதிரிகளாக நினைக்காமல் அவர்களோடு விவாதிக்கக் கூடியவர்.  அதைவிட இன்னொரு முக்கியமான காரணம், அவர் மனைவி லத்தீஃபே ஹனிம்.  அவர் ஃப்ரான்ஸில் உள்ள ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்; மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம் கொண்டவர்.  இன்றைய தினம் துருக்கி மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போல் இல்லாமல் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டைப் போல் இருப்பதற்கு முக்கியமான காரணமாக விளங்கியவர் கமால் அதாதுர்க்கின் குறுகியகால மனைவியான லத்தீஃபே ஹனிம்தான்.  (லத்தீஃபே பற்றி பிறகு விரிவாகப் பார்ப்போம்.) 

(படம்: இன்றைய புர்ஸா.  கொடியைப் பார்த்து ஏதோ கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி என்று நினைத்து விடாதீர்கள்.  துருக்கியின் தேசியக் கொடியே அது. கீழே உள்ள படம், புர்ஸா 1890-இல்.)
(படம்: இன்றைய புர்ஸா.  கொடியைப் பார்த்து ஏதோ கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி என்று நினைத்து விடாதீர்கள்.  துருக்கியின் தேசியக் கொடியே அது. கீழே உள்ள படம், புர்ஸா 1890-இல்.)

ஓரான் கமால்

புர்ஸா சிறைச்சாலையில் மூன்று ஆண்டுகள் நஸீம் ஹிக்மத்துடன் ஒரே செல்லில் இருந்தார் ஓரான் கமால் என்ற இளைஞர்.  இஸ்தாம்பூல், அங்காரா, இஸ்மீர் மூன்று ஊர்களையும் இணைத்தால் ஒரு முக்கோணம் போல் வரும்.  அதன் மத்தியில் உள்ள ஊர் புர்ஸா.

பின்னாளில் துருக்கியே கொண்டாடிய எதார்த்த பாணி எழுத்தாளரான ஓரான் கமாலுக்கு அப்போது நஸீம் ஹிக்மத் ஒரு கடவுளைப் போல் தோன்றினார்.   1943-இல் சிறையிலிருந்து வெளியே வந்து ’நஸீம் ஹிக்மத்துடன் சிறைச்சாலையில்’ என்ற புத்தகத்தை எழுதினார்.  அதில் ஓரிடத்தில் ”ஒரு எழுத்தாளனாக நஸீம் ஹிக்மத்தின் ஷூக்களுக்குப் பாலிஷ் போடுவதற்குக் கூடத் தகுதியற்றவனாக இருந்தும் அந்த மகத்தான கவிஞர் என்னைத் தன் தோழனாகவே ஏற்றுக் கொண்டிருந்தார்” என்கிறார் ஓரான் கமால்.

Biket Ilhan இயக்கிய The Blue Eyed Giant (2007) என்ற படம் நஸீம் ஹிக்மத் பற்றியது.  (நஸீமின் நீலநிறக் கண்கள் மிகவும் பிரபலமானவை.)

புர்ஸா சிறைச்சாலை.  1941.  சிறைச்சாலைக்கு வரும் புதியவன் ஒருவன் அங்கே இருக்கும் ஒரு கவிஞனைப் பற்றிக் கேள்விப்படுகிறான்.  சிறையில் உள்ள தச்சுப் பட்டறையில் ஒருவன் அந்தப் புதியவனிடம் சொல்கிறான்.  ”அவர் பெயர் நிஸாம் ஹிக்மத்.  அரசியல் கைதி.  அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதனை இதுவரை நான் பார்த்ததில்லை.  எங்களுக்கெல்லாம் பெட்டிஷன் எழுதிக் கொடுக்கிறார்.  பள்ளிக்கூடம் போகாத எங்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தருகிறார்.  கவிதை பாடுகிறார்.  ஓவியமும் வரைகிறார்.” 

அப்போது ஒருவன் பழைய தினசரி ஒன்றை எடுத்து வந்து காட்டுகிறான்.  அதில் நிஸாமின் புகைப்படமும் ”28 ஆண்டுகள் சிறைத் தண்டனை” என்ற தலைப்புச் செய்தியும் காணப்படுகிறது.    

”என்னது, 28 ஆண்டுகளா?” என்று மலைக்கிறான் புதியவன். 

“இது கூடப் பரவாயில்லை.  முன்பு அவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தார்கள்!”

அடுத்த காட்சி:

சிறைச்சாலையின் இரண்டு கட்டிடங்களுக்கு இடையேயுள்ள ஒரு சிறிய இடைவெளி.  அதில் தனியாக நஸீம்.  தூரத்தில் அவருக்குக் காவலாக ஒரு சிப்பாய். 

”இன்று ஞாயிற்றுக் கிழமை.  இன்றுதான் முதல் முதலாக வெட்ட வெளியைப் பார்க்கிறேன்” என்கிறார் நஸீம்.

புதிதாக வந்த இளைஞன் ஒரு கைதியிடம் நான் நஸீமைப் பார்க்க வேண்டும் என்கிறான். 

கைதி: அவ்வளவு பெரிய ஆளைப் பார்க்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

நான் பணம் தருகிறேன்.

இளைஞனை நஸீமின் செல்லுக்கு அழைத்துச் செல்கிறான் கைதி. அங்கேயிருக்கும் காவலன் நஸீமைப் பார்க்க அனுமதித்ததற்கு லஞ்சமாக இவன் காதில் செருகியிருக்கும் பாதி குடித்து விட்டு வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் கொள்கிறான். 

நஸீமின் செல்லில் அவர் ஒரு கைதியைப் பார்த்து ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார்.  ஓவியம் தத்ரூபமாக அந்தக் கைதி போலவே இருக்கிறது. என் குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும் அனுப்பி வைப்பேன், மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு ஓவியத்தை எடுத்துக் கொண்டு போகிறார் கைதி.  இளைஞனும் தன்னை அவர் வரைய வேண்டும் என்கிறான். 

நஸீமின் சக கைதி: நஸீம் பாய், வரைந்து வரைந்து நீங்கள் களைப்பாயிருக்கிறீர்கள்; இப்போது ஓய்வெடுங்கள்.

நஸீம்: நான் வேலை செய்யாமல் இருக்கும் போதுதான் களைத்துப் போகிறேன்.

அவருக்கு Sciatica என்ற பிரச்சினை இருக்கிறது. தொடை நரம்பில் வலி ஏற்பட்டு அது இடுப்புக்கும் முதுகுக்கும் பரவும் நோய் அது.  மனைவியிடமிருந்து கடிதம் இல்லை; ஃபோனும் இல்லை.  நேரிலும் வந்து பார்க்கவில்லை என்று யூசுஃபிடம் கவலையுடன் சொல்கிறார் நஸீம். 

பிறகு யூசுஃப் வெளியேறி விட அவர் பைப்பில் புகை பிடித்தபடி மீண்டும் ஓவியம் வரைய ஆரம்பிக்கிறார்.  அந்தச் சிறிய அறையில் ஒரு கட்டிலும் ஓவியம் வரைவதற்கான போர்டும் மட்டுமே காணப்படுகின்றன.  சுவரில் மனைவியின் புகைப்படம்.  

பனி பொழிவதைப் போல் கவிதை கொட்டுகிறது அவர் மனதில். திடீர் திடீரென்று கவிதை வரிகள் உதிக்கின்றன.  பக்கத்தில் இருப்பவர்களிடம் பேனாவை வாங்கிக் கிடைக்கும் காகிதத்தில் குறித்துக் கொள்கிறார்.  அந்தப் பனிரண்டு ஆண்டு சிறை வாழ்க்கையில் அவர் உடல்நலம் வெகுவாகக் குன்றியது.  ஆனால் அந்தக் காலகட்டத்தில் அவர் கவிதைகளை எழுதிக் குவித்தார்.  அவரது மகத்தான காவியமான ‘Human Landscapes of My Country’-ஐ சிறையில்தான் எழுதி முடித்தார்.  தல்ஸ்தோயின் ’போரும் அமைதியும்’ நாவலை துருக்கி மொழியில் மொழிபெயர்த்தார்.  இப்படியாக அந்தப் பனிரண்டு ஆண்டுக் காலமும் எழுதிக் கொண்டே இருந்தார்.  

இரண்டாம் உலகப் போர், ஹிட்லர், நாஜிக் கட்சி எல்லாம் வெறும் செய்திகளாகவே அந்தக் கைதிகளை வந்தடைகின்றன… 

(சாரு நிவேதிதா எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

ஏப்ரல்   23 , 2016

logo
Andhimazhai
www.andhimazhai.com