நிலவு தேயாத தேசம் – 27

நிலவு தேயாத தேசம் – 27
Picasa
Published on

சென்ற கட்டுரையில் நஸீம் ஹிக்மத் என்று இருப்பதை நாஸிம் ஹிக்மத் என்று மாற்றி வாசித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஆரம்பத்தில் நெடில் வருவதே ஐரோப்பியர்களின் பாணியாக உள்ளது.  துருக்கியிலும் அவ்விதமாகவே பயன்படுத்துகின்றனர்.  

***

தன்னுடைய கருத்துக்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனையின் பதினோராவது ஆண்டில் – 1937-ஆம் ஆண்டு – சிறையிலேயே இறந்து போன அந்த்தோனியோ க்ராம்ஸிக்கும் நாஸிம் ஹிக்மத்துக்கும் அதிக ஒற்றுமை இருக்கிறது.  நாஸிமும் தன்னுடைய கம்யூனிஸக் கருத்துக்களுக்காகவே சிறையில் அடைக்கப்பட்டார்.  அந்தச் சிறைவாசமே அவருடைய உடல்நிலை கெட்டதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது.  

Mavi Gözlü Dev என்பது படத்தின் பெயர்.  ஆங்கிலத்தில் The Blue Eyed Giant.  திரும்பத் திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும் அந்தப் படம் வெறும் சினிமா அல்ல; நாஸிம் ஹிக்மத் என்ற மகா கவிஞனின் வாழ்க்கை.  என்னுடைய சினிமா அனுபவத்தில் இப்படி ஒரு அற்புதமான படைப்பைப் பார்த்ததில்லை என்றே சொல்லலாம்.  துருக்கி பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய ஒரு படம் இது.  மட்டுமல்லாமல் எழுத்து என்பது எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதையும் சமூகத்தில் எழுத்தாளனின் இடம் என்ன என்பதையும் இப்படத்திலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.    

ஜனவரி 1941-இல் புர்ஸா சிறையிலிருந்து படம் துவங்குகிறது.  நாஸிம் ஹிக்மத் என்ற மகா கவிஞனை அந்தச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அப்போது அவர் வயது 39.  ”என் இதயத்தின் தீச்சுடர் உனது கைகளுக்குக் குளிரூட்டட்டும்” என்ற நாஸிமின் கவிதை வரிகள் திரையில் ஓடுகின்றன. 

நாஸிமைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தன்னை அவர் ஓவியம் வரைய வேண்டும் என்று சிறை அதிகாரியிடம் சொல்லி விசேஷ அனுமதி பெற்றுக் கொண்டு நாஸிமின் அறைக்கு வருகிறான் ஒரு இளம் எழுத்தாளன்.  என் அறை ஓவியச் சந்தையாகவே ஆகி விடும் போலிருக்கிறதே என்று இளைஞனை அழைத்து வரும் சக கைதியான யூசுஃபிடம் சொல்லிச் சிரிக்கிறார் நாஸிம்.  என்ன செய்வது நாஸிம் பாய், ஆர்டர்கள் குவிகின்றன என்று சிரிக்கிறார் யூசுஃப்.  அப்போது நாஸிமுக்கு ஒரு கடிதம் வருகிறது.  நாஸிம் தன் மனைவி பிராயேவிடமிருந்து கடிதம் வருமா என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.  ஆனால் கடிதம் கமால் தாஹிர் எழுதியதாக இருக்கிறது.  (துருக்கியின் முக்கியமான படைப்பாளியான தாஹிரும் அவருடைய கம்யூனிஸக் கருத்துக்களுக்காகவே நாஸிமைப் போல் ராணுவத்தால் சிறைப்பட்டிருக்கிறார்.)  வழக்கமாக பிராயேவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பும் இல்லை;  நேரில் வர வேண்டிய நாளும் வந்து போய் விட்டது என்பதால் கவலையுடன் இருக்கிறார் நாஸிம்.   

யூசுஃப்: நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள் நாஸிம் பாய், ஓய்வெடுங்கள்.

நாஸிம்: வேலை செய்வதுதான் எனக்கு ஓய்வு யூசுஃப்.  அந்த ஸ்டூலில் உட்கார் இளைஞனே. 

இளைஞன் தான் எழுதிய சில கவிதைகளை எடுத்து வருகிறான்.  நேரம் இருக்கும் போது படித்துப் பார்க்கச் சொல்கிறான். 

அடுத்த காட்சியில் கைதிகள் அனைவரும் மைதானத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் குப்பைக் கூடையிலிருந்து எதையோ எடுத்துத் தின்கிறார்.  அதைப் பார்த்த கைதிகள் ”மார்ஷல் விருந்து சாப்பிடுகிறார்” என்று சொல்லிச் சிரித்து கோரஸாக மார்ஷல் மார்ஷல் மார்ஷல் என்று கத்துகிறார்கள்.  அப்போது நாஸிம் “மண்ணில் எத்தனை எறும்புகள் இருக்கின்றனவோ அத்தனை பேர் இவரைப் போல் இருக்கிறார்கள்;  கடலில் எத்தனை மீன்கள் இருக்கின்றனவோ அத்தனை பேர் இவரைப் போல் இருக்கிறார்கள்; வானில் எத்தனை பறவைகள் பறக்கின்றனவோ அத்தனை பேர் இவரைப் போல் இருக்கிறார்கள்; இவர்களில் கோழைகள் இருக்கிறார்கள்; வீரர்கள் இருக்கிறார்கள்; அறிஞர்கள் இருக்கிறார்கள்; குழந்தைகளும் இருக்கிறார்கள்.  இவர்கள் பூக்களைப் போல் சிரிப்பார்கள்; துக்கம் இல்லாமலே அழுவார்கள்.  இவர்கள்தான் எனது அடுத்த காவியத்தின் நாயகர்கள்; இவர்களின் சாகசங்களைத்தான் அதில் நான் எழுதப் போகிறேன்” என்கிறார்.  எல்லோரும் நாஸிமின் கவித்துவமான பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்து நிற்கிறார்கள். 

ரேடியோவிலிருந்து யுத்தம் பற்றிய செய்தியை எல்லோரும் உன்னிப்பாகக் கேட்கிறார்கள்.  ஹிட்லரின் நாஜிப் படைகள் பற்றிய செய்திகள்.  கடைசியில் ஹிட்லர் அழிந்து போவான் என்றாலும் போர் என்பது துக்கத்தை மட்டும்தானே கொடுக்கும் என்கிறார் நாஸிம். 

இளம் கவிஞனின் கவிதைகளைப் படிக்கிறார் நாஸிம்.  ”இதெல்லாம் அர்த்தமற்ற சொற்கூட்டமாக இருக்கிறதே;  தப்பாக நினைத்துக் கொள்ளாதே.  கலை இலக்கியம் என்று வந்து விட்டால் நான் இரக்கமற்றவனாக மாறி விடுவேன்.  இதெல்லாம் கவிதைகள் அல்ல; தூக்கிப் போட்டு விடு” என்கிறார். அவனும் அதையெல்லாம் நெருப்பில் போட்டு விடுகிறான்.

சிறை அதிகாரி நாஸிம் ஹிக்மத்தின் கவிதைகளின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்.  மேலும், நாஸிம் சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் எதுவும் செய்யவில்லை என்று தீவிரமாக நம்புகிறார். அதனால் நாஸிமுக்கு அந்தச் சிறையில் சில விசேஷ சலுகைகளைக் கொடுத்திருக்கிறார்.  உங்கள் ஸயாட்டிகா வலி எப்படி இருக்கிறது என விசாரிக்கிறார் வார்டன்.  அதிகமாகப் போய் விட்டது.  என்ன செய்வது?  என் வாழ்நாள் முழுவதுமே இந்தச் சிறையில் கழிந்து விடும் போலிருக்கிறதே என்கிறார் நாஸிம். 

உடலில் அவ்வளவு பிரச்சினை இருந்தும் மருத்துவமனைக்குப் போகும் சலுகையை அரசு அவருக்கு மறுக்கிறது.  மீண்டும் மீண்டும் அவர் மீதான பொய்க் குற்றச்சாட்டையே சொல்லிக் கொண்டிருக்கிறது அரசு.  ”நாஸிம் ஹிக்மத் ஒரு தேசத் துரோகி.  தனது கவிதைகளின் மூலம் ராணுவத்தை அரசுக்கு எதிராகத் தூண்டி விட்டார்.” இதைத் தவிர அவரைக் குறித்து அரசாங்கம் வேறு எதையுமே சொல்லவோ கேட்கவோ தயாராக இல்லை.

நாஸிம் சிறையில் இருந்த காலகட்டத்தில் துருக்கியின் அதிபராக இருந்தவர் இஸ்மத் இனோனு.  கமால் அதாதுர்க்குக்கு அடுத்தபடியாக பதவிக்கு வந்த இஸ்மத்தின் ஆட்சி துருக்கியின் இருண்ட காலங்களில் ஒன்று.  அரசாங்கத்தினால் துன்புறுத்தப்பட்ட நாஸிம் ஹிக்மத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியிலும்  எதிரிகள் இருந்தனர்.  அவர்கள் அவரை கமாலின் ஆதரவாளர் (கமாலிஸ்ட்) என்று அழைத்தனர். 

படத்தின் இடையிடையே நாஸிம் தன் கடந்த கால வாழ்க்கையை நினைவு கூர்கிறார்.  அவர் எங்கே சென்றாலும் அவர் பின்னே ஒற்றர்கள் தொடர்கிறார்கள்.  வீட்டைச் சுற்றிலும் ஒற்றர்கள் கண்காணிக்கிறார்கள்.  ஒருநாள் அவரை அடித்து அழைத்துக் கொண்டு செல்கிறார்கள் சிப்பாய்கள்.  அதிகாரி, நாஸிமிடம் “உன் கவிதையில் ஒரு இடத்தில் Heraclitus என்று வருகிறதே, அவனும் கம்யூனிஸ்டா?  அவன் முகவரி என்ன?” என்று கேட்கிறான்.  கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவவாதி என்கிறார் நாஸிம். 

கோபம் கொள்ளும் அதிகாரி நாஸிமைப் படுக்கச் செய்து உள்ளங்கால்களில் லத்தியால் அடிக்கிறான்.  நீதிமன்றத்தில் நீதிபதியிடம் நாஸிம் நெஞ்சு நிமிர்த்திக் கூறுகிறார்.  ஆம், நான் ஒரு கவிஞன்.  ஒரு கம்யூனிஸ்ட்.  ராணுவத்தை அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தூண்டுவதாகக் கூறுவது சுத்தப் பொய்.  அரசியல் சட்டப்படி நான் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது குற்றமல்ல.  கம்யூனிஸ்டாக இருப்பது ஒரு மனோபாவம்; அவ்வளவுதான்.  மேலும், என் கவிதைகளில் ஃப்ரெஞ்ச், ஜெர்மன் எதேச்சாதிகாரத்தைத்தான் தாக்கியிருக்கிறேன்.  சொல்லப் போனால் அவர்கள்தான் என் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும்.  (பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்.)

சிறையில் ஒரு கைதி நாஸிமுக்கு ஒரு முயல் குட்டியைப் பரிசாகக் கொடுக்கிறான்.  அந்த முயல் குட்டிக்கும் நாஸிமுக்கும் இடையேயான காட்சிகள் மறக்கவே முடியாதவை.  ஆனால் சில தினங்களிலேயே அவரால் அந்த சிறைச்சாலையில் அதற்கு வேண்டிய உணவைக் கொடுக்க முடியாததால் தன்னைப் பார்க்க வந்த நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். 

நாஸிமுக்கு பிராயே மூலம் சூஸன் என்ற மகளும் மெமத் என்ற மகனும் இருக்கிறார்கள்.  பிராயே அவ்வப்போது சிறைக்கு வந்து நாஸிமை சந்திக்கிறார்.  இருவரும் தனிமையில் பேசுவதற்கு ஏதுவாக சிறை அதிகாரி தன் அறையைக் கொடுத்து விட்டுப் போகிறார்.  அந்த அளவுக்கு அவர் நாஸிம் மீது மதிப்பு வைத்திருக்கிறார்.

உன்னைப் பற்றி நினைக்காத ஒரு கணம் கூட இல்லை கண்ணே.

எனக்கும் அப்படித்தான் நாஸிம்.  உங்கள் கவிதைகளும் கடிதங்களும்தான் எனக்கிருக்கும் ஒரே ஆறுதல். 

காதல் இல்லாதவன் எதற்குமே தகுதி இல்லாதவன்.  அப்படித்தான் கமால் தாஹிருக்கு எழுதினேன்.  ஒரு கவிஞன் என்பதை விடவும் காதலன் என்பதுதான் எனக்குப் பெருமைக்குரியதாக இருக்கிறது. 

என் கண்களின் ஒளியே! என் அருமை சுல்தான்!

பிராயே ஹனிம்… ஐ லவ் யூ…

அடுத்த காட்சியில் நாஸிம் பிராயேவுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த ஒரு இரவை நினைவு கூர்கிறார்.  நாஸிம் ஒரு காகிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். 

என்ன படிக்கிறீர்கள்?

உன் கணவனைப் பற்றி ஏதேதோ எழுதியிருக்கிறார்கள்.  இந்தக் கம்யூனிஸ்ட் நாயை அடித்துக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது. 

பிராயேவின் உடல் நடுங்குகிறது.

பயமா உனக்கு?

ஆமாம்.

உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியாது பிராயே.

அப்படிப் புரிந்து கொள்ளாதீர்கள்.  நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.  நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதையிலிருந்து விலகாதீர்கள்.  ஆனால்…

நீ என் அம்மாவிடம் பேசியிருக்கிறாய்.

அந்தக் கலகக்காரனை உன்னால் மட்டும்தான் சமாளிக்க முடியும் என்றார் உங்கள் அம்மா. 

அந்தத் தருணத்தில் ஒரு துப்பாக்கிச் சத்தமும் ஒருவனின் அலறலும் கேட்க கத்திக் கொண்டே தூக்கத்திலிருந்து எழுகிறார் நாஸிம்.  அவரது சிறை நண்பர்கள் அவர் அறையை நோக்கி ஓடுகிறார்கள்.  நாஸிமின் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. 

சிறையில் முதியவர் ஒருவர் நோய்வாய்ப்படுகிறார்.  அவரைப் போய்ப் பார்க்கிறார் நாஸிம்.  அப்போது நாஸிமின் இளம் தோழன் கேட்கிறான்.  அவருடைய கருத்துக்களுக்கும் உங்களுக்கும் ஒத்துப் போகாதே?  நீங்கள் எப்படி அவரைச் சந்திக்கிறீர்கள்?

அவர் ஒரு தேசியவாதி.  மதிப்புக்குரியவர்.  அவர் கருத்தை அவர் நம்புகிறார்.  அதில் நமக்கென்ன பிரச்சினை?  அதனால்தான் அவரைச் சந்தித்தேன்.  இவர்களெல்லாம் நம் மக்கள். 

நீங்கள் சாதாரண மனிதன் அல்ல நாஸிம் பாய்.  சாய்ர் பாபா!

(நாஸிமை பலரும் சாய்ர் பாபா என்றே அழைக்கிறார்கள்.  சாய்ர் என்றால் துருக்கி மொழியில் கவிஞர் என்று பொருள்.  பாபாவுக்கு நம்மூர் அர்த்தம்தான்.) 

நீ ஒரு அருமையான பையன்.  ஆனால் என் சீடனாக இருப்பது ரொம்பவும் கடினமான விஷயம். தெரியுமா உனக்கு?

நீங்கள் மட்டுமே எனக்கு குருவாக இருக்க முடியும்.  நான் நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.  உங்களால் இந்த சிறைச்சாலையே ஒரு பள்ளிக்கூடமாக மாறி விட்டது. 

அடுத்த காட்சியில், நாஸிமின் தாயார் அவரை அமரச் செய்து வரைந்து கொண்டிருக்கிறார். 

ஆடாதே நாஸிம்.  ஆடாமல் அசையாமல் உட்கார்.  நாளை உன் மாமா அலி பாஷா வருகிறார்.  (ஏற்கனவே நாம் பார்த்திருந்தபடி பாஷா என்பவர் துருக்கி அரசின் உயர் அதிகாரி.)

என் பாஷா மாமாவிடம் சொல்லுங்கள், நான் எந்தத் தேசத் துரோக வேலையையும் செய்து விடவில்லை என்று.  நான் ஒரு சராசரி கிரிமினலைப் போல் வாழ விரும்பவில்லை.  துருக்கி மொழியின் மகத்தான கவிஞன் நான்.  இதற்காக என் வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டிருக்கிறேன்.  மேலும், சட்டத்துக்குப் புறம்பாக நான் ஒரு காரியமும் செய்ததில்லை.  இதை அந்த பாஷா மாமாவிடம் சொல்லுங்கள் அம்மா.

சொல்லியிருக்கிறேன் கண்ணே.  அவருக்கும் அது தெரியும்.

இன்னும் ஒருமுறை சொல்லுங்கள் அம்மா.  நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன்.  இந்த தேசத்துக்காகவே பாடுபடுகிறேன்.  அப்படியிருக்கும் போது என் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்துக் கொண்டிருப்பது என்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்கிறது. 

சிறையில் நாஸிமுக்கு பாலபான் என்று ஒரு இளம் சீடன் இருக்கிறான்.  நாஸிமிடமிருந்து ஓவியம் கற்றுக் கொள்ளும் மாணவன்.  அவனுக்கு சிறையில் நாஸிமின் அறைக்குப் பக்கத்து அறை கிடைக்கிறது. 

கடைசியில் அவர்கள் என்னையும் கம்யூனிஸ்ட் என்று சொல்லி விட்டார்கள்.

அது உனக்குப் பிரச்சினை ஆயிற்றே?

பிரச்சினை இல்லை.  அது எனக்கு நன்மைதான்.  நான் உங்களுடனேயே இருக்க முடியும் இல்லையா?  உங்களை மட்டும் நான் பார்க்காமல் இருந்திருந்தால் ஒரு சராசரி மனிதனாகத்தானே இருந்திருப்பேன்?

துருக்கியில் சில பட்டினிச் சாவுகள் பற்றிய செய்திகள் வானொலி மூலம் வந்து சேர்கிறது.  சிறைச்சாலையிலும் இரண்டு பேர் பட்டினியால் மடிகின்றனர்.  (சிறையில் கைதிகள் தாங்களே உழைத்துப் பொருளீட்டித்தான் சாப்பிட வேண்டும்.  இதனால் பலர் சூதாட்டத்தில் இறங்குகிறார்கள்.)  நாஸிம் தனக்குக் கிடைத்த ஒரு தறியைக் கொண்டு துணி நெய்து சம்பாதிக்கிறார்.  ஓவியத்திலும் கொஞ்சம் காசு கிடைக்கிறது. 

இதற்கிடையில் சிறையில் நாஸிமைப் பார்க்க வரும் ஒரு பெண் நாஸிமின் மீது காதல் கொள்கிறாள்.  அவள் ஏற்கனவே திருமணமானவள்.  தன் கணவனை விவாகரத்து செய்து விட்டு நாஸிமை மணந்து கொள்கிறேன் என்கிறாள்.  நாஸிமும் அவள் மீது காதல் கொள்கிறார்.  இது நாஸிமுடனான மண வாழ்வில் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிராயேவுக்குத் தெரிய வருகிறது.  ஒருநாள் பிராயேவும் குழந்தைகளும் நாஸிமைச் சந்திக்க சிறைக்கும் வரும் அதே நாளில் அந்தப் பெண்ணும் வந்து விடுகிறாள்.

அந்தத் தருணம் நாஸிமின் குடும்ப வாழ்வையே திசை திருப்பி விடுகிறது.

மே   04 , 2016  

logo
Andhimazhai
www.andhimazhai.com