நாஸிமின் காதலி முனவரை சிறையில் பார்த்த அந்தத் தருணத்தில் பிராயே ஹனிம் நாஸிமின் வாழ்விலிருந்து விடை பெறுகிறார்.
என்னை அவர்கள் உயிரோடேயே புதைத்து விட்டனர்.
சிந்திப்பதென்பதே குற்றம் என்றும் தேசத் துரோகமென்றும் கருதாத இடம் ஏதாவது இருக்கிறதா?
நான் இறப்பதற்குள் இந்த நரகக் குழியிலிருந்து வெளியேற முடியுமா?
அச்சத்துக்கு பலியாகாதிருக்க ஒரே வழி கனவு காண்பதுதான். கனவு காணும் வரை நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்.
இதெல்லாம் நாஸிம் ஹிக்மத்தின் முக்கியமான சிறை வசனங்களில் சில.
படத்தின் மற்றொரு உணர்வுபூர்வமான இடம், ஓரான் கமால் சிறையிலிருந்து விடுதலையாகும் நாள். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு நாஸிமிடம் விடைபெற வருகிறார் கமால். அவரால் நாஸிமை விட்டுவிட்டு சிறையிலிருந்து போக முடியவில்லை. நான் சிறைக்கு வரும் போது என் குழந்தைக்கு ஒரு வயது. இப்போது ஐந்து வயது. இருந்தாலும் உங்களைப் பிரிந்து விடுதலையாகிச் செல்வதை வெறுக்கிறேன். உங்களுக்குக் கிடைக்காத சுதந்திரம் எனக்கும் தேவையில்லை என்று தோன்றுகிறது.
சென்று வா ஓரான், உன்னிடமிருந்து நான் மிகச் சிறந்த நாவல்களை எதிர்பார்க்கிறேன். அதுதான் நீ எனக்குச் செய்யும் நன்றியறிதலாக இருக்கும். மறந்து விடாதே.
மறக்க மாட்டேன் நாஸிம் பாய். அதோடு செல் நம்பர் 72-இன் கதையையும் எழுதுவேன்.
நாஸிம் ஹிக்மத் பற்றிய இந்த சினிமாவிலிருந்து சற்றே விலகி முகம் தெரியாத உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். சிறைச்சாலைகளிலேயே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த ஒரு மகா கவிஞனின் சிறை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நாம் இங்கே மறு உருவாக்கம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உங்களால் உணர முடிகிறதா? ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டம் அது. அதைப் புரிந்து கொள்ள Mavi Gözlü Dev (Blue Eyed Giant) என்ற
இந்தத் திரைப்படத்தைக் காண்பதும் நாஸிம் ஹிக்மத்தின் கவிதைகளை வாசிப்பதும்தான் ஒரே வழி.
துருக்கிக்கு நான் சுற்றுலா செல்லவில்லை. லத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம், இசை, பண்பாடு ஆகியவை பற்றி 40 ஆண்டுக் காலமாக ஆய்வு செய்து கொண்டிருந்தும் திடுதிப்பென்று துருக்கி நோக்கி நான் சென்றதன் ஒரே காரணம் ஓரான் பாமுக்கின் எழுத்துதான். ஓரான் பாமுக் மற்ற எழுத்தாளர்களைப் போல் ஏதோ சில சுவாரசியமான கதைகளை எழுதிச் செல்லவில்லை. தன் தேசத்தின் துயரத்தை (ஹூசுன்) எழுதினார். அவருடைய உலகப் புகழ் பெற்ற ’என் பெயர் சிவப்பு’ என்ற நாவலின் நாயகன் யார் தெரியுமா? நாம் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோமே, அந்த நாஸிம் ஹிக்மத் தான்.
இப்போது திரும்பவும் திரைப்படத்துக்குச் செல்வோம். சிறையில் நாஸிமின் ஓவிய மாணவர்களில் ஒருவன் பாலபான். அவனுடைய தந்தை கொல்லப்பட்ட செய்தி பாலபானுக்குக் கிடைக்கிறது. பாலபான் நொறுங்கிப் போகிறான். நாஸிமிடம் கூடப் பேச மறுத்து ஓடுகிறான். அப்போது அவனைத் தொடர்ந்து செல்லும் நாஸிம், நீ அந்தக் கொலைகாரர்களைத் தண்டிப்பதன் மூலம் உன் தந்தையைத் திரும்பக் கொண்டு வந்து விட முடியாது. பழி வாங்குவதன் மூலம் உன் வாழ்க்கைதான் அழிந்து போகும். அதற்குப் பதிலாக நீ உன் தந்தைக்கு மரணமற்றதொரு பெருவாழ்வைக் கொடு என்கிறார். பாலபான் திகைக்கிறான். அவர் சொல்வதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
உன் தந்தையை ஒரு ஓவியமாகத் தீட்டு.
அவர் முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லையே நாஸிம் பாய்.
கண்ணாடியைப் பார். தெரியும்.
இதற்கிடையில் நாஸிமுக்குப் பெரிதும் உதவிக் கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் அவர் நாஸிமுக்கு உதவுகிறார் என்ற காரணத்தினாலேயே அங்கிருந்து மாற்றப்படுகிறார். அடுத்து வரும் அதிகாரி நாஸிமை ஒரு கிரிமினலைப் போல் நடத்த ஆரம்பிக்கிறார். முனவர் நாஸிம் மீது கொண்ட காதலால் தன் கணவனை விவாகரத்து செய்து விடுகிறார்.
நான் வாழ்க்கையில் எந்தத் தவறுமே செய்ததில்லை; ஆனால் என் மனைவி பிராயேவுக்கு துரோகம் செய்து விட்டேன் என்று தனக்குள் சொல்லிச் சொல்லி வருந்துகிறார். விவாகரத்துக்காக பிராயே நாஸிமைச் சந்திக்க சிறைக்கு வரும்போது விவாக ரத்து செய்ய வேண்டாம் என்று சொல்லி, தான் அவளைக் காதலிப்பதாகச் சொல்கிறார் நாஸிம். அப்போது பிராயே, நாடக மேடையில் ஒரு நடிகன் செய்வதையெல்லாம் செய்யாதீர்கள் என்கிறார்.
படத்தின் இறுதிக் காட்சி. ரமலான் மாதத்தில் கூட நான் பட்டினி கிடந்ததில்லை; இப்போது கிடக்கப் போகிறேன் என்று சொல்லி விட்டுத் தன் பட்டினிப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார் நாஸிம். தொடர்ந்த பட்டினியால் உடல்நிலை மோசமடைகிறது. நாஸிமின் தாயார் சிறையில் அவரைச் சந்தித்து ஃப்ரான்ஸில் உள்ள அத்தனை புத்திஜீவிகளும் எழுத்தாளர்களும் அவருக்காக துருக்கி அரசை நிர்ப்பந்திப்பதாகக் கூறுகிறார். (பிக்காஸோ கூட அந்தக் குழுவில் இருக்கிறார் மகனே!)
இறுதியில் நாஸிமின் கவிதையோடு படம் முடிகிறது. பனிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார் நாஸிம். 1950 ஜூலை 15-ஆம் தேதி நாஸிம் விடுதலை செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி அவர் மாஸ்கோ சென்றார். 25 ஜூலை 1951 அன்று துருக்கி மந்திரி சபை கூடி அவருடைய துருக்கிக் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. 1963 ஜூன் 3-ஆம் தேதி மாஸ்கோவில் இறந்தார் நாஸிம்.
கமால் அதாதுர்க்கைப் போல் ஒரு தேசத் தந்தையாகப் போற்றிக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ஒரு மகா கவிஞனை துருக்கி அவன் வாழ்நாள் பூராவும் சிறையில் அடைத்து மாஸ்கோவுக்கு விரட்டியது. மாஸ்கோவில் அவர் வாழ்ந்த 12 ஆண்டுகள் பற்றி எனக்கு எந்தக் குறிப்புகளும் கிடைக்கவில்லை. நாஸிமின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் போது வரலாற்றின் மிகப் பெரிய நகைமுரணைப் பற்றியும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நாஸிமின் கம்யூனிஸக் கொள்கைகளுக்காக துருக்கியில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சோவியத் யூனியனில் மத நம்பிக்கை கொண்டிருந்த பலரும் கம்யூனிஸ்டுகளால் கொல்லப்பட்டார்கள். பலர் என்றால் எவ்வளவு தெரியுமா? சுமார் 2 கோடி பேர். பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். அஸர்பெய்ஜான் போன்ற பகுதிகளில் முஸ்லீம்கள். அந்த மக்கள் அரசை எதிர்க்கக் கூட இல்லை. அவர்களின் மத நம்பிக்கைகளுக்காக மட்டுமே கொல்லப்பட்டார்கள். தேவாலயங்களும் மசூதிகளும் சூறையாடப்பட்டு வணிக வளாகங்களாக மாறின. இதையெல்லாம் நாஸிம் எப்படி எதிர்கொண்டார் என அறிந்து கொள்ள விரும்புகிறேன். மற்றபடி அவரது ரஷ்ய வாழ்க்கை பற்றி அதிகம் தெரியவில்லை. Vera Tulyakov என்ற ரஷ்யப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார் என்ற விபரத்தை மட்டுமே அறிந்து கொள்ள முடிந்தது.
இங்கேதான் அதிகாரம் பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்ஸன் 1945-ஆம் ஆண்டு தன் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஸ்டாலினைப் பற்றி விமர்சன ரீதியாக எழுதியதற்காக - எல்லா கடிதங்களும் போலீஸால் படிக்கப்பட்ட பிறகே விலாசதாரருக்குக் கொடுக்கப்பட்டன; ஆனால் அப்படி போலீசால் படிக்கப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது - எட்டு ஆண்டுகள் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார் ஸோல்ஷெனிட்ஸன். வதை முகாமில் கைதிகள் ஒரு நாளில் பத்து மணி நேரம் கடும் உழைப்பில் (ஆஸ்கார் வைல்ட் அப்படிப்பட்ட கடும் உழைப்பினால்தான் இறந்தார்) ஈடுபடுத்தப்படுவார்கள். அந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஸோல்ஷெனிட்ஸன் விடுதலை செய்யப்படவில்லை. அவரது வாழ்நாள் முழுமைக்குமாக கஸாக்ஸ்தானின் தென்பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கேதான் தஸ்தயேவ்ஸ்கி, லியோன் ட்ராட்ஸ்கி போன்றவர்களும் நாடு கடத்தப்பட்டிருந்தார்கள். துருக்கியில் நாஸிம் என்றால் ரஷ்யாவில் ஸோல்ஷெனிட்ஸன். ஸோல்ஷெனிட்ஸனின் Gulag Archipelago மனித மனதில் படிந்துள்ள அதிகார வெறி குறித்த மகத்தான நாவல்.
அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்ஸன்
நாம் இப்போது திரும்பவும் ஹூசுன் என்ற துயரத்தின் கதைக்குத் திரும்புவோம். நாஸிம் ஹிக்மத் என்ற கவியின் வாழ்வு முழுதும் ஹூசுன் தான். சிந்திப்பவர்களின் சிறகை வெட்டி விட்டு ஒட்டு மொத்த சமுதாயமே ஹூசுனில் மூழ்கிய கதைதான் துருக்கியின் கதை.
Ataol Behramo (பிறப்பு 1942) என்பது அவர் பெயர். நாஸிம் ஹிக்மத்தின் வாரிசாகக் கருதப்படுபவர். மாஸ்கோவில் பயின்றவர். 1982-இல் அவர் துருக்கி ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். எட்டு மாத காலம் ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்ரவதைகளை அனுபவித்தார். முடிவில் எட்டு ஆண்டு கடும் வதைத் தண்டனை (hard labour) அளிக்கப்பட்டது. தண்டனை அதோடு முடியவில்லை. எட்டு ஆண்டு முடிவில் 32 மாதங்கள் வீட்டுச் சிறையில் இருக்க வேண்டும் என்பது தண்டனையின் இரண்டாவது ஷரத்து. இவரது கவிதைகளும் ஹூசுனின் வெளிப்பாடுகளாகத்தான் இருக்கின்றன. 'துருக்கி, எனது துயரகரமான, அழகிய தேசம்' என்ற அவரது கவிதை ஒரு உதாரணம்.
நான் கப்படோச்சியாவில் பஸ் மூலமாகப் பயணம் செய்த போது பல கிராமங்களுக்குச் செல்ல நேர்ந்தது. சில கிராமங்களில் ஸ்ட்ராபரி பயிரிட்டிருந்தார்கள். இதுவரை நான் சாப்பிட்ட ஸ்ட்ராபரியெல்லாம் ஸ்ட்ராபரியே இல்லை என்று சொல்லத்தக்க விதத்தில் இருந்தன அங்கே விளைந்த ஸ்ட்ராபரி. அவ்வளவு சுவை. பை நிறைய ஸ்ட்ராபரியை வாங்கி வைத்துக் கொண்டு காலை மற்றும் மதிய உணவாகவே உட்கொண்டேன். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அங்கே நான் கண்டது கம்பளி நெசவு. எங்கு பார்த்தாலும் கம்பளி நெய்யும் தறிகளைத்தான் காண முடிந்தது. தறி போடுவதெல்லாம் முழுக்க முழுக்க பெண்கள். ஒரு ஆணைக் கூட காண முடியவில்லை. ஒரு கோடி ரூபாய்க்குக் கூட கம்பளங்கள் விற்கின்றன. கம்பளத்துக்கும் வைனுக்கும் ஒரு ஒற்றுமையைக் கண்டேன். நெய்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றனவோ அவ்வளவுக்கு விலை கூடுதல். வருடம் ஆக ஆக விலை அதிகமாகும். இன்னொரு விஷயம், இஸ்தாம்பூலில் 10000 டாலருக்கு விற்கும் கம்பளம் கப்படோச்சியாவில் 3000 டாலருக்குக் கிடைக்கிறது.
இதற்கும் ஹூசுனுக்கும் என்ன சம்பந்தம்? துருக்கி மட்டும் அல்ல; துருக்கியில் உள்ள அனடோலியா, கப்படோச்சியா பகுதிகள் மட்டும் அல்ல; ஐரோப்பாவில் நான் சென்ற நாடுகளில் உள்ள கிராம மக்கள் அத்தனை பேர் முகங்களிலும் என்னால் துயரத்தை மட்டுமே காண முடிகிறது. போதுமான அளவுக்கு ஐரோப்பிய சினிமா பார்த்திருக்கிறேன். நான் கவனம் கொள்ளும் துறையே ஐரோப்பிய சினிமா தான். அவற்றில் நாம் காணும் கிராம மக்களெல்லாம் தங்கள் முகங்களில் இன்னதென்று விவரிக்க முடியாத துயரத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. யோசித்துப் பாருங்கள்; ஒரு கண்டம் முழுவதும் உள்ள ஆண் பெண் இருபாலரும் துயரத்தின் நிழல் படிந்த முகங்களைக் கொண்டவர்களாகவே இருப்பதென்பது எவ்வளவு விசித்திரமானது! அந்த முகங்களைக் கொண்டு அவர் எந்த தேசத்தவர் என்று கண்டு பிடிக்க முடியாது. எந்த மதம் என்றும் தெரியாது. எக்கச்சக்கமான சுருக்கங்களைக் கொண்ட ஒரே மாதிரியான முகங்கள். பெண்ணாக இருந்தால் தலையில் ஒரு துணியால் கட்டிக் கொண்டிருப்பார்கள். யூதர், கிறித்தவர், முஸ்லீம் அனைவருமே. எல்லோருடைய முகங்களும் நூற்றாண்டுகளின் துயர ரேகையைத் தாங்கியிருக்கும்.
அது வறுமை அல்ல; வேறு என்ன என்றுதான் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். துருக்கியைக் காட்டிலும் இந்தியா ஏழை நாடு. ஆனால் இந்தியாவில் அந்த ஹூசுன் இல்லை. இங்கே எல்லாவிதமான பிரச்சினைகளும் இருந்தன, இருக்கின்றன. வறுமையால் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். ஆனால் ஹூசுன் இல்லை. ஏனென்றால், இங்கே இருக்கும் பிரச்சினைகள் தூலமானவை (physical). எத்தனைதான் பிரச்சினை என்றாலும் முனீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்து விட்டு ஒரு ஆட்டத்தைப் போட்டால் மறுநாளின் துயரத்துக்கான வலு கிடைக்கும். ஒன்றுமே முடியாவிட்டால் ஒரு கொலையையாவது செய்து ஒருவன் தன் துயரத்தைக் கடக்கிறான் இங்கே. ஆனால் ஐரோப்பா அப்படி இல்லை. அந்த பூமியின் மீது நூற்றாண்டுகளாய்க் கவிந்து கொண்டிருக்கும் பனியைப் போல் கவிகிறது அவர்களின் துயரம்.
அவர்களின் பனியும் ஒரு ஹூசுன் தான்.
(சாருநிவேதிதா எழுதும் இந்த தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும்)
மே 11 , 2016