நிலவு தேயாத தேசம் - 7

நிலவு தேயாத தேசம் - 7
Published on

துருக்கியின் பள்ளிப் படிப்பு ஆறு வயதில் துவங்குகிறது.  பதினான்கு வயது வரை எட்டு ஆண்டுகள் ஆரம்பப் பள்ளி.  பிறகு இரண்டு இரண்டு ஆண்டுகளாக பள்ளிப் படிப்பு முடிகிறது.  8+2+2.  ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த முறை 4+4+4 என்று மாற்றப்பட்டு இருக்கிறது.  பனிரண்டாம் வகுப்பு வரை எந்தக் கட்டணமும் இல்லை.  அரசுப் பள்ளிகள்.  கட்டணம் கட்டிப் படிக்கும் தனியார் பள்ளிகள் இந்தியாவைப் போல் தெருவுக்கு நான்கு இல்லை.  ஒரு ஊருக்கே ஒன்றிரண்டுதான் உள்ளன.  அந்தத் தனியார் பள்ளிகளில் ஐரோப்பிய மொழிகள் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன.  அரசுப் பள்ளிகளின் ஆங்கிலம் மிகவும் மோசம்.  அதிலும் டாக்ஸி ஓட்ட வருபவர்கள் அதிக பட்சம் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார்கள். 

துருக்கி முழுவதும் பயணிகளுக்கான வழிகாட்டிகள் மிக நன்றாக ஆங்கிலம் பேசுவதன் காரணம், அவர்கள் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்; கூடவே டூரிஸ்ட் கைடுக்கான படிப்பையும் முடித்திருக்கிறார்கள்.   பிலால் வேறொரு சுவாரசியமான விஷயமும் சொன்னார்.   

உலகத்தில் உள்ள தேர்வுகளிலேயே ஆகக் கடினமானது லண்டனின் டாக்ஸி டிரைவர் தேர்வுதான்.   லண்டனின் 25000 தெருக்களையும் மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.  வெறுமனே நெட்டுருப் போட்டிருந்தால் போதாது.  நேரடியாகக் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று காண்பிக்க வேண்டும்.  அதாவது, டாக்ஸியில் ஏறி இன்ன இடத்தில் இன்ன தெரு என்று சொல்லி விட்டால் போதும்.  ஒரு கேள்வி கேட்காமல் அந்த இடத்தில் கொண்டு போய் விட்டு விடுவார் டிரைவர்.  நம் ஊரைப் போல் எங்கே இருக்கிறது, எப்படிப் போக வேண்டும் என்று கேட்டு நொக்கியெடுக்க மாட்டார்.  சென்னை ஆட்டோ டிரைவர்களிடம் நான் இந்த விஷயத்தில் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஏதோ கண் தெரியாதவர்களுக்கு வழி சொல்வது போல் சொல்லிக் கொண்டு போக வேண்டும்.  அப்படியும் தவறான பாதையில் போய் வதை பண்ணி விடுவார்கள். 

சரி, லண்டனில்தான் எல்லா இடத்துக்கும் மெட்ரோ ரயிலும் பஸ்ஸும் வசதியாக இருக்கிறதே? டாக்ஸி எதற்கு? என்று கேட்டேன்.  அதற்கு பிலால் சொன்னார்.  லண்டனில் நீங்கள் ஸௌத் ஆலிலிருந்து ரிச்மாண்டுக்கு ரயிலிலோ பஸ்ஸிலோ போய் விடலாம்.  ஆனால்  ரிச்மாண்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட தெருவுக்குப் போக வேண்டும்; லண்டனுக்கு நீங்கள் புதியவர் என்றால் டாக்ஸியில் தானே போக வேண்டும்?  

அந்தத் தேர்வுக்கு Knowledge என்று பெயர்.  லண்டனில் உள்ள தெருக்கள் அத்தனையும் அத்துப்படியாகி இருக்க வேண்டும்.  வெறுமனே தெருப் பெயர்களை நெட்டுருப் போட்டு விட்டு பாஸ் பண்ணி விட முடியாது.  நேரடியாக டாக்ஸியில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போய் காண்பிக்க வேண்டும்.  இதற்காக Knowledge School என்ற பெயரில் பயிற்சிப் பள்ளிகள் பல இருக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் 7000 பேர் தேர்வு எழுதி 700 பேர் தேறுகிறார்கள்.  பிலால் மேலும் ஒரு உதாரணம் சொன்னார்.  லண்டனின் மையப் பகுதியில் உள்ள Charing Cross ஆறு மைல் சுற்றளவு உள்ளது.  இதில் 25000 சாலைகளும், தெருக்களும், சந்துகளும் வந்தடைகின்றன.  இத்தனை தெருக்களும் ஒரு லண்டன் டாக்ஸி டிரைவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  ”இந்த விபரமெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றேன்.  அவர் தம்பி லண்டனில் ’நாலட்ஜ்’ தேர்வில் தேர்ச்சி பெற்று டிரைவராக இருக்கிறாராம்.  என்னை விட பத்து மடங்கு அதிகம் சம்பாதிக்கிறான் என்று முடித்தார்.  என்னுடைய லண்டன் நண்பர்களிடம் விசாரித்த போது அங்கே சாதாரணமாக ஓட்டுநர் உரிமம் பெறுவது கூட மிகவும் கடினம் என்றார்கள்.  முதலில் எழுத்துத் தேர்வு, பிறகு நேரடித் தேர்வு என்று இருக்கின்றன.  பல முறை எழுதித் தோற்று பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் உரிமம் பெற முடிகிறது என்றார்கள்.  நம் நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்தேன்.  நேரடியாகப் போகாமலே டிரைவிங் பள்ளிகளில் பணம் கட்டிக் கூட ஓட்டுநர் உரிமம் பெற்று விடலாம்.  சட்டப்படி அல்ல; காசு கொடுத்தால் சட்டம் இங்கே தகரம் மாதிரி வளையும்.  இங்கே பல வாகன ஓட்டிகளுக்கு எழுதப் படிக்கவே தெரியாது.  இந்தக் காரணங்களால்தான் இந்தியாவில் பெருமளவுக்கு விபத்துகள் நடக்கின்றன. 

Lady Mary Wortley Montagu என்பது அவர் பெயர்.  இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மிக நெருக்கமாக இருந்த பிரபு ஒர்ட்லி மாண்டேகுவின் மனைவி.   அதீதமான அழகு, விசாலமான படிப்பு ஆகிய காரணங்களால் அரச குடும்பத்தினரிடையே பிரபலமான சீமாட்டியாக விளங்கினார் மேரி.  அவரது நட்புக்காகப் பெரும்  கனவான்களெல்லாம் காத்துக் கிடந்தார்கள். Rape of the Lock என்ற புகழ் பெற்ற குறுங்காவியத்தை இயற்றியவரும், ஹோமரின் காவியங்களான இலியத் மற்றும் ஒடிசியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருமான அலெக்ஸாண்டர் போப்பும் இவரது நண்பராக இருந்தார்.  ஆனால் போப் இவரிடம் தன் காதலைத் தெரிவித்ததும் அந்த நட்பு முடிவுக்கு வந்தது.  அதன் பிறகு  மேரியைக் கடுமையாகத் திட்டி போப் பல கவிதைகள் எழுதினார். 

1716-ஆம் ஆண்டு மாண்டேகு இஸ்தாம்பூலின் இங்கிலாந்து தூதராக அனுப்பப்பட்டார்.  அப்போது மேரி எழுதியிருந்த ஒரு கதாபாத்திரம் இங்கிலாந்து இளவரசியைக் கேலி செய்வது போல் இருந்ததாக அரச வட்டாரங்களில் வதந்தி பரவியிருந்ததால்  மேரியும் லண்டனில் இருக்க முடியாமல் கணவருடன் இஸ்தாம்பூல் சென்றார்.  1718 வரை மூன்று ஆண்டுகள் அவர்கள் துருக்கியில் இருந்தார்கள்.  அந்தக் காலக்கட்டத்தில் மேரி தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எழுதிய நீண்ட கடிதங்கள் இப்போதும் துருக்கி பற்றிய மிக முக்கியமான வரலாற்று ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.  அந்தக் கடிதங்களே இஸ்லாமிய சமுதாயம் பற்றி மேற்கத்தியர் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளில் முதலாவதாகவும் விளங்குகின்றன. 

மேரியின் துருக்கி கடிதங்களை இஸ்லாமிய சமுதாயம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் அச்சமுதாயம் பற்றிய பலவிதமான கற்பனைகளைக் கொண்டிருப்பவர்களும் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்.  இஸ்லாம், பெண்கள் மீது கடும் அடக்குமுறை செலுத்துகிறது என்பது இன்றைய மேற்கத்திய ஊடகங்களின் செய்தி.  தாலிபான் போன்ற ஒரு சிறிய பிரிவினரின் அடக்குமுறையை வைத்து உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய்களை அவிழ்த்து விடுகிறது மேற்கத்திய ஊடகம்.  மேரி, ”துருக்கிப் பெண்களைப் போல் சுதந்திரமான பெண்களை உலகத்திலேயே எங்கும் பார்க்க முடியாது” என்று தன் கடிதங்களில் எழுதுகிறார்.  17-ஆம் நூற்றாண்டில்தான் அப்படி இருந்தது என்றும் சொல்ல முடியாது.  நான் பார்த்த இன்றைய துருக்கியிலும் பெண்கள் தான் ஆண்களை விட சுதந்திரமாகவும் அதிகாரம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.  மேலும் ஒரு விஷயம்.  மேரி இஸ்தாம்பூல் வருவதற்கு முன்பாக அவருக்கு ஒருமுறை பெரியம்மை போட்டது.  அப்போதெல்லாம் அம்மை வந்தால் மரணம்தான்.  ஆனால் மேரி பிழைத்துக் கொண்டார்.  (ஆனாலும் முதிய வயதில் பழைய அம்மைத் தழும்புகளால் தோல் வியாதி வந்து மிகுந்த சிரமப்பட்டே இறந்தார்.)  பிறகு அவர் இஸ்தாம்பூலில் இருக்கும் போது அங்கே வழக்கத்தில் இருந்த அம்மைத் தடுப்பு முறை ஒன்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.  உடம்பில் உள்ள ரத்தக் குழாயில் ஊசி மூலம் துளை செய்து அந்தத் துளையில் அம்மைக் கிருமியின் ஒரு பகுதியை ரத்தத்துக்குள் செலுத்திவிட்டு தோலில் ஏற்பட்டுள்ள காயத்தை மூடி விடுவதே அந்த முறை. Shell-இன் ஒரு பகுதியால் மூடுவார்கள் என்று எழுதுகிறார் மேரி.  என்ன ‘ஷெல்’ என்று தெரியவில்லை.  இதையெல்லாம் ஐரோப்பியர்கள் மூட நம்பிக்கை என்று பரிகாசம் செய்தார்கள் என்கிறார் மேரி.  இங்கிலாந்து திரும்பிய பிறகு இந்தத் தடுப்பூசி முறையை அவர் அங்கே அறிமுகப்படுத்தினார்.  அதன்பிறகுதான், அவர் சொன்னதை வைத்தே அம்மைத் தடுப்பூசி எட்வர்ட் ஜென்னரால் கண்டு பிடிக்கப்பட்டது.  எனவே, எட்வர்ட் ஜென்னெர் தான் அம்மைத் தடுப்பூசியைக் கண்டு பிடித்தார் என்பது தவறு.  அவர் அதைக் கண்டு பிடிப்பதற்கே காரணமாக இருந்தது, மேரி துருக்கியில் இருந்த அம்மைத் தடுப்பு முறையைப் பற்றி இங்கிலாந்தில் அறிமுகம் செய்ததுதான்.  ஆக, நவீன விஞ்ஞானம் பெரியம்மைத் தடுப்பூசியைக் கண்டு பிடிப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே துருக்கியின் பாரம்பரிய மருத்துவமாக பெரியம்மைத் தடுப்பூசி முறை வழக்கத்தில் இருந்திருக்கிறது.  அது மட்டுமல்ல; இந்த வழக்கம் சூடான் போன்ற ஆஃப்ரிக்க நாடுகளிலும், சீனாவிலும் பழக்கத்தில் இருந்தது.  இந்த மருத்துவத்தைச் செய்தவர்கள், பெண்கள்.  ஆதாரம், லேடி மேரியின் கடிதங்கள்.   (கடிதத் தேதி 1.4.1717)

நம்முடைய முகலாய சுல்தான்கள் பற்றி எவ்வளவோ படித்திருக்கிறோம்.  ஆனால் ஆட்டமன் சுல்தான்கள் பற்றி மேரி கொடுக்கும் சித்திரம் வித்தியாசமாக இருக்கிறது.  தப்பு செய்யும் மந்திரிகளைப் பிடித்து தலை வேறு முண்டம் வேறாக வெட்டிப் போட்டு விடுவார்களாம் சுல்தானின் மெய்க்காவலர்கள் (Janissaries).  சுல்தான் அதைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பார் என்று எழுதுகிறார்.  அந்த சுல்தானின் பெயர் மூன்றாம் அஹ்மத்.  ஆட்சியில் இருந்த ஆண்டுகள்: 1703 இலிருந்து 1730.  அதே தேதியிட்ட கடிதத்தில் உள்ள இன்னொரு விஷயம்: ஒருநாள் மேரி தன் பரிவாரங்களோடு கிராமங்களுக்குச் செல்கிறார்.  பரிவாரம் என்றால் மெய்க்காப்பாளர்கள்.  (தன்னைப் பார்ப்பதற்கு வரும் ஃப்ரெஞ்ச் தூதரின் மனைவி எப்போது வந்தாலும் 24 பாதுகாவலர்களுடன்தான் வருகிறாள் என்று கிண்டலாக எழுதுகிறார் மேரி.)  சுற்றுப் பயணத்தின் போது அவருக்கு இரவு உணவாக புறாக் கறி சாப்பிடலாம் என்ற ஆசை ஏற்படுகிறது.  தலைமைக் காவலனிடம் சொல்ல அதை அவன் அந்த கிராமத்து ‘காதி’யிடம் (ஊர்த் தலைவர்) சொல்கிறான்.  அவர் தலையைச் சொறிந்து கொண்டே காவலனிடம், காலையிலேயே மெய்க்காவலர்களுக்காகப் பல நூறு புறாக்களைக் கொடுத்து விட்டதால் ஊரில் ஒரு புறா கூட இல்லை என்று சொல்கிறார்.  உடனே காவலன் லேடி மேரியைத் தனியே சந்தித்து, காதியின் தலையைக் கொய்து விடவா என்று கேட்கிறான்.  ”பொதுவாக மெய்க்காவலர்கள் இது போன்ற விஷயங்களில் யாருடைய அனுமதியும் இல்லாமல் தலையை வெட்டி விடுவார்கள்.  நான் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் என்பதால் என் அனுமதி கேட்டார்கள்” என்று எழுதுகிறார் மேரி. 

மேலும் அவரது குறிப்புகள்: துருக்கிப் பெண்களைப் போன்ற அழகிகளை உலகிலேயே காண்பதரிது.  நம்முடைய இங்கிலாந்து அரண்மனைப் பெண்களெல்லாம் இந்தத் துருக்கி அழகிகளின் அருகே கூட வர முடியாது.

லேடி மேரியின் இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.  வெனிஸுவலா, கொலம்பியா, அர்ஜெண்டினா, மெக்ஸிகோ, ப்ரஸீல், ஸ்காண்டிநேவிய நாட்டுப் பெண்கள்தான் பேரழகிகள்.  பொதுவாக ட்ராவல் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் நன்கு விபரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.  நான் இஸ்தாம்பூலிலிருந்து இஸ்மீர் என்ற ஊருக்குக் கிளம்பிய போது என்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்ற முஸ்தஃபா இஸ்மீரில் இரண்டு விஷயங்கள் முக்கியம் என்றார்.  ஒன்று, இஸ்மீர் வைன்.  இரண்டு, பெண்கள்.  இஸ்மீர் பெண்களைப் போன்ற அழகிகளை உலகிலேயே காண முடியாது என்றார் முஸ்தஃபா.  அது பற்றி நாம் இஸ்மீர் பற்றிய அத்தியாயத்தில் காண்போம்.  இப்போது துருக்கி சமூகத்தில் பெண்கள்.  லேடி மேரி எழுதுகிறார்:  ”துருக்கிப் பெண்கள் பற்றி நம்மவர்கள் எழுதியதெல்லாம் முட்டாள்தனமான கற்பனைகள்.  இவர்கள் நம்மைப் போன்ற ஐரோப்பியப் பெண்களை விட சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள்.  ஆடை விஷயத்தில் மட்டுமே வித்தியாசம்.  உடம்பு பூராவும் மூடியிருப்பதால் யார் எஜமானி, யார் அடிமை என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  ஆண்கள் எந்தப் பெண்ணையும் ஏறிட்டுக் கூட பார்ப்பதில்லை.  அதனால் தெருக்களில் பெண்களை ஆண்கள் தொடர்ந்து செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.  அப்புறம், முஸ்லீம் ஆண்கள் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வது பற்றி நாம் ஏராளமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நடைமுறையில் நான் பார்ப்பதெல்லாம் வேறு மாதிரி இருக்கிறது.” 

இதே விஷயத்தைத்தான் நாம் முன்பு பார்த்த ஜெரார் தெ நெர்வாலும் தன் புத்தகத்தில் கூறுகிறார்.  ”ஒரு முஸ்லீம் ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வது பற்றியும் பெண்களின் ஹேரம் பற்றியும் நாம் கேள்விப்பட்ட விஷயம் எல்லாமே வெறும் கட்டுக் கதைகள்.  ஹேரம் உள்ளே பெண் வேடம் இட்டு நுழையும் ஆண்கள் ஹேரத்திற்குள் செய்யும் லீலைகள் பற்றி எவ்வளவு கதைகளைக் கேட்டிருக்கிறேன்!  எல்லாமே பாரிஸின் மதுபான விடுதிகளில் குடிகாரப்பயல்கள் பேசும் கற்பனைக் கதைகள்.  மற்றபடி ஒரு ஆண் கூட ஹேரத்தின் உள்ளே நுழைந்து விட முடியாது.”

தோல்காப்பி அரண்மனையில் உள்ள ஹேரம்.

ஹேரம் என்ற துருக்கிய வார்த்தையின் பொருள், தடுக்கப்பட்டது.  அதாவது, ஹேரம் என்பது பெண்களுக்கான இடம்; அங்கே ஆண்கள் அண்டக் கூடாது.  அதே சமயம், ஹராம் என்ற அரபி வார்த்தைக்கும் தடுக்கப்பட்டது என்றுதான் பொருள் என்பதால் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை நண்பர்கள் எனக்குச் சொல்ல வேண்டும்.  இனி நெர்வாலின் நூலுக்குள் செல்வோம்:

”நான் இங்கே ஒரு பெண்ணை வைத்துக் கொண்டே திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.  இவ்வளவுக்கும் அவள் ஒரு அடிமை.  சமைக்கச் சொன்னால் கவர்னருக்கு எழுதி விடுவேன் என்று மிரட்டுகிறாள்.  இந்த நிலையில் எவன் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வான்?  பெரும் கோடீஸ்வரர்களால் மட்டுமே அது சாத்தியம்.  ஆனாலும் இங்கே உள்ள பெண்களுக்கு வசதியான சட்டதிட்டங்களைப் பார்க்கும் போது அந்தக் கோடீஸ்வரனால் கூட நிம்மதியாக வாழ முடியாது என்றே தோன்றுகிறது.    

திருமணம் செய்து கொண்டால் மனைவிக்குத் தனி வீடு கொடுக்க வேண்டும்.  பணிப்பெண்கள் கொடுக்க வேண்டும். அந்தப் பணிப்பெண்களிடம் ஒரு வார்த்தை பேசக் கூடாது.  மாதாமாதம் பணம் கொடுக்க வேண்டும்.  என்ன செலவு செய்தாய் என்று கேட்க உரிமை இல்லை.  மனைவி வெளியே போனால் எங்கே போனாய் என்று கேட்க முடியாது.  இன்னொரு முக்கியமான விஷயம், ஒரே பெண்ணிடமே விழுந்து கிடந்து விட்டு மற்ற பெண்களின் வீட்டுக்குப் போகாமல் இருந்து விட முடியாது.  ஒவ்வொருவர் வீட்டுக்கும் வாரத்தில் ஒருநாள் போயே ஆக வேண்டும்.  இது மட்டுமல்லாமல், பெண் விரும்பினால் தன்னுடைய திருமண உடன்படிக்கையிலேயே தன் கணவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று ஒரு ஷரத்தைச் சேர்க்கலாம்.  அதற்கு அவளுக்கு உரிமை இருக்கிறது. 

கணவன், மனைவி வீட்டுக்குப் போவதே ஒரு பெரிய சடங்கு போல் இருக்கும்.  முன்கூட்டியே மனைவிக்குத் தான் வருவதைத் தெரிவித்து விட வேண்டும்.  அனுமதியும் பெற வேண்டும்.  வீட்டு வாசலில் புதியவர்களின் செருப்பு இருந்தால் திரும்பி விட வேண்டும்.  மனைவியின் உறவினர்கள் வந்திருக்கிறார்கள் என்று பொருள். 

முஸ்லீம்களின் சட்டத்தில் பெண்கள் அடிமைகளைப் போல் நடத்தப்படுவதாக ஐரோப்பாவில் சொல்கிறார்கள்.  அது பொய்.  முஸ்லீம் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு.  அதுவும் கணவனின் தலையீடு இல்லாமலேயே சொத்து வைத்துக் கொள்ள முடியும்.  விருப்பப்பட்டால் பெண்கள் தன் கணவனை விவாகரத்தும் செய்யலாம்.”

இதெல்லாம் ஜெரார் தெ நெர்வால் 1842-ஆம் ஆண்டு எழுதியது.   

தோப்காப்பி அரண்மனையில் உள்ள ஹேரம்: https://www.youtube.com/watch?v=MxduJ2h7fog

ஒரு ஹேரத்துக்கு முதல்முதலாகச் சென்ற அனுபவத்தைத் தன் கடிதத்தில் எழுதுகிறார் மேரி.  ”ஹேரத்தின் வாயிலில் இரண்டு அலிகள் நின்று கொண்டிருந்தார்கள்.  உள்ளே இருந்த ஃபாத்திமாவுக்கு வணக்கம் சொன்னேன்.   பதிலுக்கு ஃபாத்திமா அவர்கள் வழக்கப்படி வலது கையை மார்பகத்தில் வைத்து வணக்கம் சொன்னார்.  அவர்கள் வணக்கம் சொல்லும் முறையே நம் மனதைத் தொடுகிறது.   ஃபாத்திமாவின் அழகுக்கு நிகராக உலகில் எதையுமே சொல்ல முடியாது;  தலைமுடி பாதத்தைத் தொடும் போல் இருக்கிறது; காவியங்களில் கூட இப்படிப்பட்ட அழகை நான் படித்ததில்லை; நம் ஐரோப்பாவின் புகழ்பெற்ற  அழகிகளெல்லாம் ஃபாத்திமாவுக்கு முன்னால் காணாமல் போய் விடுவார்கள்.  ஹேரத்தில் சுமார் இருபது பெண்கள் – சொர்க்கத்திலிருந்து வந்த தேவதைகளைப் போல் இருந்தார்கள் - ஃபாத்திமாவின் உத்தரவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள்.  ஃபாத்திமா தலை அசைத்ததும் பாடலும் ஆடலும் ஆரம்பித்தன…

சாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் வெள்ளிதோறும்  வெளிவரும். தொடர் பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதுங்கள்   

logo
Andhimazhai
www.andhimazhai.com