இஸ்தாம்பூலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது யரிம்புர்காஸ் (Yarimburgaz) குகை. (இஸ்தாம்பூல் செல்பவர்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய இடம் இது). இதன் சிறப்பு என்னவென்றால், மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் குடியேறிய குகை இது. காரணம், இந்த குகை Küçükçekmece என்ற ஏரியின் கரையில் இருக்கிறது.
கால எந்திரத்தில் இந்த மூன்று லட்சம் ஆண்டுகளையும் கடந்து வந்தால் கி.மு. 660-இல் கிரேக்கர்கள் அந்த குகை இருந்த இடத்தில் பைஸாண்டியம் என்ற நகரை நிறுவியதைக் காணலாம். அதுதான் பின்னர் கான்ஸ்டாண்டிநோப்பிள் என்றும் பிறகு இஸ்தாம்பூல் என்றும் மாறியது. ஆக, துருக்கியின் முதல் அரசாங்கமே கிரேக்கர்களால் நிறுவப்பட்டதுதான். இந்த கிரேக்க அரசியல் மற்றும் கலாச்சார ஆதிக்கத்தின் காரணமாக துருக்கிப் பயணம் என்பதே கிரேக்கர்களின் வரலாற்றிற்குள்ளும் பயணிப்பதாகத்தான் இருக்கிறது. உள்ளே நுழைந்ததுமே அந்த தீபகற்பத்தைச் சுற்றிலும் மதில் சுவர்களை அமைத்தார்கள் கிரேக்கர்கள். மூன்று பக்கமும் கடல், ஒரு பக்கத்தில் நிலத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் தங்கக் கொம்பு என்ற பாதுகாப்பான பகுதி, செழிப்பான விவசாய நிலம், ஏராளமான மீன் என்று வளமான பகுதியாக இருந்ததால் பைஸாண்டியம் நகரம் மிக விரைவில் வளர்ச்சி அடைந்தது. இந்த வளமை காரணமாகவே அந்நியர்களின் படையெடுப்புகளும் அதிகம் நடந்தன. நகரம் நிர்மூலமாவதும் நகரவாசிகள் கொள்ளையடிக்கப்படுவதும் பைஸாண்டியம் மக்களின் வாழ்வில் ஒரு பகுதியாக மாறின. கி.பி. 73-ஆம் ஆண்டு பைஸாண்டியம் ரோமப் பேரரசோடு இணைக்கப்பட்டது. கி.பி. 193-இல் பைஸாண்டியம் பார்த்தியர்களோடு கை கோர்க்க முனைந்த போது ரோமப் பேரரசன் Septimus Severus பைஸாண்டியத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றி நகரத்தை அழித்தான். அவன் படை வீரர்கள் நகரைக் கொள்ளையடித்தனர். பிறகு அதே அரசன் பைஸாண்டியத்தை மீண்டும் நிர்மாணித்தான். இப்படித் தொடர்ந்து பைஸாண்டியம் அந்நியப் படையெடுப்புக்கு ஆளாகிக் கொண்டே இருந்தது.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் ரோமாபுரிப் பேரரசு மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து கிழக்கே டைக்ரிஸ் வரை பரவியிருந்ததால் முதலாம் கான்ஸ்டாண்டின் (324-337) ரோமுக்கு அடுத்தபடியாக பைஸாண்டியம் நகரை இரண்டாவது தலைநகராக அறிவித்து அதற்குத் தன்னுடைய பெயரையே (கான்ஸ்டாண்டின்) சூட்டினான். (நம்முடைய அரசியல்வாதிகளுக்கு 16 நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னோடிகள் இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.) நகரத்தில் 1550 அடி நீளமும் 375 அடி அகலமும் கொண்ட ஹிப்போட்ரோம் என்ற விளையாட்டு அரங்கையும் நிர்மாணித்தான். இப்போது சுல்தானாமெட் (சுல்தான் அஹ்மத் சதுக்கம்) என்று அழைக்கப்படும் அந்த இடத்தில்தான் நீல மசூதி இருக்கிறது. (ஞாபகம் இருக்கிறதா, நான் துருக்கிக்குச் சென்ற காரணமே இந்த நீல மசூதியைப் பார்க்க வேண்டும் என்றுதான். இங்கே அமர்ந்து பாங்கு சொல்வதைக் கேட்பது ஓர் அற்புதமான அனுபவம்.)
பைஸாண்டியம் என்று அழைக்கப்பட்ட நகர்ப்பகுதி இப்போது பழைய இஸ்தாம்பூல் என்றும் Walled City என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வடக்கே இருப்பது தங்கக் கொம்பு, கிழக்கே பாஸ்ஃபரஸ், தெற்கே மர்மரா கடல். நீல மசூதியிலிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் முதலாம் கான்ஸ்டாண்டின் கட்டிய மில்லியன் என்ற ஒரு கல் இருக்கிறது. எல்லா சாலைகளும் ரோமை நோக்கிச் செல்கின்றன என்பதைப் போல் உலகத்தின் மையப் புள்ளி என்று இதை அழைத்தான் கான்ஸ்டாண்டின் பேரரசன். ரஷ்யா, பெர்ஷியா, எகிப்து, மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் பாதைகள் அனைத்தும் இந்தப் புள்ளியில்தான் வந்து முடிகின்றன.
ஒரு இடத்துக்குச் சென்றால் அந்த இடத்தில் நான் நின்று கொண்டிருக்கும் காலத்திலிருந்து அந்த இடம் உருவான காலத்துக்குச் சென்று விடுவது என் வழக்கம். நீல மசூதியின் வெளியே ஹிப்போட்ரோம் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்தூபியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த போது முதலாம் கான்ஸ்டாண்டின் பேரரசனின் காலத்தில் அந்த அரங்கத்தில் நடந்த வீர விளையாட்டுச் சண்டைகளும், குதிரைப் பந்தயங்களும், கொண்டாட்டங்களும், கோலாகலங்களும், விளையாட்டுப் போட்டிகளும் என் கண்களின் முன்னே விரிந்தன.
நீல மசூதி இப்போது மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக விளங்கினாலும், உள்ளே நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் சுற்றிக் கொண்டிருந்தாலும் அங்கே மிக ஆச்சரியமான அமைதி நிலவுகிறது. யாருமே பேசுவதில்லை. ஏனென்றால், அங்கே ஒரு இடத்தில் தொழுகையும் நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் காட்சி:
நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், கடவுள் நம்பிக்கையே இல்லாதவராக இருந்தாலும் கீழ் வரும் தொழுகை அழைப்பை (பாங்கு) ஒருசில நிமிடங்கள் கேட்டுப் பாருங்கள். உங்களால் மறக்கவே முடியாத அனுபவமாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=wv9jGeJIK_M
***
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான பயண நூல்கள் கிப்ளிங் எழுதிய The Jungle Book (1894), ஹென்றி ஹக்கார்ட் எழுதிய King Solomon’s Mines (1885) மற்றும் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய Around the World in Eighty Days (1873). அந்த நூற்றாண்டின் மறக்கவே முடியாத பயண எழுத்தாளர் சர் ரிச்சர்ட் பர்ட்டன் (1821-1890). பர்ட்டன் அளவுக்கு உலகம் சுற்றிய, பயணங்களை எழுதிய ஒரு பயணி இருக்க முடியுமா என்பது ஆச்சரியம்தான். அதே சமயம் பெண்களும் கூட 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் பயணம் செய்து தங்கள் அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். ஏற்கனவே நாம் லேடி மேரி மாண்டேகு (1689–1762) பற்றிப் பார்த்தோம். அதேபோல் மற்றொரு பயண எழுத்தாளர் Zeynab Hanoum.
பியர் லோத்தி (Pierre Loti) (1850- 1923) என்பவர் ஒரு பிரபலமான ஃப்ரெஞ்சுக் கடல்படை அதிகாரி. அவருடைய பிராபல்யத்துக்குக் காரணம், அவர் தனது கடற்பயணங்களின் அடிப்படையில் சுவாரசியமான, சாகசத் தன்மை வாய்ந்த நாவல்களை எழுதினார். அதற்காகவே பியர் லோத்தி என்ற புனைப்பெயரையும் வைத்துக் கொண்டார். புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களெல்லாம் கற்பனையானவை; ஒன்று கூட உண்மையில்லை; தயவுசெய்து யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் என்று முதல் பக்கத்திலேயே கதறிக் கதறி அறிவிப்பு தருவது அவர் பழக்கம். 1904-ஆம் ஆண்டில் அவருடைய கப்பல் கான்ஸ்டாண்டிநோப்பிளுக்கு வந்தது. பியர் லோத்தி தான் கப்பலின் கேப்டன். அப்போது அவருக்கு அந்நகரின் அரண்மனையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து வந்து கொடுத்தான் ஒரு சேவகன். லோத்தியின் எழுத்தால் கவரப்பட்ட ஒரு ரசிகையிடமிருந்து வந்த கடிதம் அது. ரசிகையின் பெயர் ஸேனாப் ஹனூம். ஆட்டமன் சுல்தானின் பாஷாவின் மகள். கடிதம் ஃப்ரெஞ்சிலேயே இருந்தது. காரணம், முற்போக்கு சிந்தனை கொண்ட ஸேனாபின் தந்தை தன்னுடைய இரண்டு புதல்விகளுக்கும் மேற்கத்திய கல்வியைக் கற்பித்திருந்தார்.
கடிதத்தின் முக்கியப் பகுதி, உங்களைச் சந்திக்க வேண்டும். பொதுவாகவே பெண்கள் மீது அளப்பரிய காதல் கொண்ட லோத்திக்குக் கேட்கவா வேண்டும்? ஸேனாப், ஸேனாபின் சகோதரி மெலக், அவர்களின் தோழி லைலா மூவரும் கப்பலுக்கு வந்து லோத்தியைச் சந்தித்தார்கள். விளைவு, லோத்திக்கும் அந்த மூன்று பெண்களுக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் லைலாவின் குடும்பம் லைலாவை லோத்தியிடமிருந்து பிரித்து அவரைத் தனியான ஒரு இடத்தில் வைத்தது. லைலா தற்கொலை செய்து கொண்டார். பிறகு 1906-ஆம் ஆண்டு லோத்தி ஃப்ரான்ஸ் திரும்பினார். சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு ஆச்சரியம். ஸேனாபும் மெலக்கும் தங்களின் கான்ஸ்டாண்டிநோப்பிள் ஹேரத்திலிருந்து மாறுவேடத்தில் தப்பி ஃப்ரான்ஸ் வந்து விட்டனர். ஸேனாபின் கடிதங்களிலிருந்து இதையெல்லாம் படிக்கும் போது சாகசக் கதைகளையும் மிஞ்சும் வண்ணம் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் ஸேனாப் ஃப்ரான்ஸ் கிளம்பியதற்குக் காரணம் வெறும் காதல் அல்ல. துருக்கிப் பெண்களின் அடிமைத்தனத்தை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும்; துருக்கிய சமூகத்தில் பெண் விடுதலையை ஏற்படுத்த வேண்டும் என்ற இரண்டு நோக்கங்களே அவருக்குப் பிரதானமாக இருந்தன.
தனது கான்ஸ்டாண்டிநோப்பிள் அனுபவங்களை வைத்து The Disenchanted என்ற நாவலை எழுதினார் லோத்தி. நாவல் ஃப்ரான்ஸில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த நாவலின் நாயகி ஸேனாப் ஹனூம். பின்னர் ஸேனாப் ஹனூமின் ஃப்ரெஞ்ச் அனுபவங்கள் தொகுக்கப்பட்டு A TURKISH WOMAN'S EUROPEAN IMPRESSIONS என்ற தலைப்பில் Grace Ellison என்ற பெண்ணியவாதியால் 1913-இல் பிரசுரிக்கப்பட்டது.
ஸேனாப், க்ரேஸுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே அந்நூல். கீழை தேசக் கலாச்சாரம், இஸ்லாம், இஸ்லாமிய நாடுகளில் பெண்கள், ஹேரம் போன்றவை குறித்த மேற்கத்திய நாடுகளின் கட்டுக்கதைகளைப் பொய்யாக்குபவை ஸேனாபின் கடிதங்கள்.
ஒன்றல்ல, இரண்டல்ல; ஹேரம் பற்றி மேலை நாடுகளில் பல கட்டுக்கதைகள் உலவிக் கொண்டிருந்தன. ஹேரம் என்றாலே ஆபாச வார்த்தை என்ற அளவுக்குப் பரவியிருந்தன அவை. அதற்கெல்லாம் காரணமாக இருந்தது தலைப்பிலேயே கிளுகிளுப்பை வைத்துக் கொண்டிருந்த ஆயிரத்தோரு அராபிய இரவுகள் என்ற கதைகள்தாம். ஷேக்ஸ்பியரை விடவும் நேசிக்கப்பட்ட புத்தகம் அது என்கிறார் ஆர்.எல். ஸ்டீவன்ஸன்.
ஆயிரத்தோரு அராபிய இரவுகள் ஆங்கிலத்தில் வருவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஃப்ரெஞ்சில் வெளிவந்து விட்டது. அந்த்வான் காலா(ங்) (Antoine Galland) 1707-இலிருந்து 1714 வரை பனிரண்டு தொகுதிகளாக அதை அரபியிலிருந்து ஃப்ரெஞ்சுக்கு மொழிபெயர்த்தார். உண்மையில் இதற்குப் பிறகுதான் முழுமையாகத் தொகுக்கப்பட்ட அரபி மொழிபெயர்ப்பே வெளிவந்தது. முழுக்கவும் கற்பனையான, எதார்த்தத்தின் நிழல் கூட அண்டாத தொகுதியான அராபிய இரவுகளே இஸ்லாமியப் பெண்களைப் பற்றிய மேலைநாட்டினரின் அபிப்பிராயத்துக்கு அடிப்படையாக இருந்தது என்பது ஒரு வரலாற்று சோகம். உதாரணமாக, ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் வரும் ’போர்ட்டரும் மூன்று பெண்களும்’ என்ற கதையில் ஒரு பெண் கடைத்தெருவுக்குப் போய் பல பொருட்களை வாங்குகிறாள். அதை ஒரு போர்ட்டர் கூடையில் தூக்கி வருகிறான். வீட்டை அடைந்ததும் சாமானை வைத்து விட்டுக் கூலியை வாங்கிக் கொண்டு திரும்புவதில்லை. அங்கேயே நிற்கிறான். உள்ளே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தியின் உடல் அழகை வர்ணிக்கிறான். நாபியில் தேனை விட்டுச் சுவைக்கலாமா என்று யோசிக்கிறான். ரொம்ப காலத்துக்கு முன்னால் படித்தது. தேனா, ஆலிவ் எண்ணெயா என்று ஞாபகம் இல்லை. அவர்கள் அவனை உள்ளே அழைக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து மது அருந்துகிறார்கள். ஆடல் பாடல் கொண்டாட்டம். பெண்களின் குரல் தெரு முழுதும் கேட்கிறது. (ஒரு பெண்ணின் குரல் அவள் வீட்டை விட்டு வெளியே கேட்டால் அந்த வீடு சபிக்கப்பட்டதாகும் என நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார்.) வீட்டுக்குள் என்ன இவ்வளவு சத்தம் என்று கேட்டுக் கொண்டே காலிஃப் வருகிறார். அவரோடு இன்னும் இரண்டு பேர் கூடவே வருகிறார்கள். அதற்குப் பிறகு அந்த ஊரில் இரவு தங்க இடம் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு மூன்று வெளியூர் வணிகர்கள் வருகிறார்கள். அவர்கள் மூன்று பேருக்குமே ஒரு கண் இல்லை. மொத்தம் ஏழு ஆண்கள். மூன்று பெண்கள். எல்லோரும் குடித்துக் கும்மாளம் போடுகிறார்கள். பிறகு ஒவ்வொருவராகத் தங்கள் கதையைச் சொல்கிறார்கள். இப்படிப் போகிறது அந்தக் கதை. இதற்கும் அரபி வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உண்மையில் சிருங்காரத்தைக் கொண்டாடிய நாடு இந்தியாதான். ஆகவே ஆயிரத்தோரு அராபிய இரவுகளின் மூலம் சம்ஸ்கிருதமாகவே இருக்க வேண்டும் என்பது இப்போதைய அறிஞர்களின் முடிவு. ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அரபிப் பெண்களின் ஹேரம் வாழ்க்கை ஆயிரத்தோரு இரவுகளில் சொல்லப்படும் கட்டுக்கதைகளில் வர்ணிக்கப்படுவதைப் போல் இருந்தது என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்கள் ஐரோப்பியர்கள். உண்மையில் ஹேரத்தின் உள்ளே ஒரு பெண்ணின் சகோதரன் கூட சென்று விட முடியாது என்று எழுதுகிறார் க்ரேஸ் எலிசான். மேலும், ”ஐரோப்பாவில் ஒரு அறிஞர்களின் கூட்டத்தில் ’நான் சில காலம் ஹேரத்தில் தங்கியிருக்கிறேன்’ என்று சொன்ன போது அவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் கண் அடித்துச் சிரித்துக் கொண்டனர்” என்கிறார் எலிசான்.
ஆனால் சில தருணங்களில் ஐரோப்பிய சமூகத்தை விட அராபிய சமூகம் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். (துருக்கி, ஈராக், எகிப்து போன்ற நாடுகளே எலிசானின் அராபிய சமூகம்; இன்றைய வளைகுடா நாடுகள் அல்ல.) ஒருநாள் ஸேனபின் இல்லத்துக்கு மாலையில் போகிறார் எலிசான். மதிய உணவுக்கே வந்திருக்கலாமே என்கிறார் ஸேனப்.
”நான் அழைக்கப்படவில்லையே?”
”அழைக்காமல் வருவதுதானே நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் கௌரவம்? நீங்கள் வருவது எங்களுக்கு எவ்வளவு பெரிய பரிசு தெரியுமா? அதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் என்பது எத்தனை சந்தோஷமான விஷயம்!”
இப்படியும் ஒரு கலாச்சாரமா என வியக்கிறார் எலிசான்.
கீழைத் தேச வாழ்க்கை பற்றி ஸேனபின் கடிதங்கள் அற்புதமாக விளக்குகின்றன. அவற்றில் சில தருணங்கள்:
”எங்கள் நாட்டில் தோழிகளுக்கு இடையேயான அதிக பட்ச நட்பின் வெளிப்பாடு என்பது மௌனமே. மிக நெருங்கிய தோழிகளாக இருந்தால் மணிக்கணக்கில் நாங்கள் பேசிக் கொள்ளாமலேயே இருப்போம்.”
இப்படிச் சொல்லும் ஸேனப் துருக்கியின் ஆட்டமன் சுல்தானாக இருந்த ஹமீத் பற்றி மிகக் கடுமையாகப் பேசுகிறார். ”நாங்கள் பெல்கிரேடில் இருக்கும் போது நள்ளிரவில் எங்களைக் கைது செய்ய ஏற்பாடு செய்தார் சுல்தான் ஹமீத். ஆனால் அது நடக்கவில்லை. பெல்கிரேடையும் துருக்கி என்று நினைத்து விட்டார் போலும்! என் தங்கை 18 வயது நிரம்பாதவள் என்றும் அவளையும் என்னையும் சில ‘கெட்ட’ காரணங்களுக்காக ஒரு முதிய ஐரோப்பிய மாது கடத்திச் சென்றிருக்கிறாள் என்றும் அவர் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரால் பெண்களின் சுதந்திரம் பற்றிப் புரிந்து கொள்ள முடியாது. அவர் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எங்களைப் பற்றி ஐரோப்பியப் பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டி எழுதுகின்றன. அந்தப் பத்திரிகைகளைத் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ரகசியமாக வாங்கிப் படிக்கிறார்கள் கான்ஸ்டாண்டிநோப்பிள் மக்கள். அவர்களைப் பொறுத்த வரை சுல்தானின் அடக்குமுறை ஆட்சியில் இரண்டு பெண்கள் அரண்மனையை விட்டுத் தப்பி ஐரோப்பா செல்வதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.
சுல்தான் எங்களை வெறுக்கக் காரணமாக இருந்த சம்பவம் எங்களைப் பொறுத்தவரை மிகச் சாதாரணமானது. அரண்மனையில் வெட்டியாக உட்கார்ந்து உட்கார்ந்து எங்களுக்கு சலித்து விட்டது. எனவே அரண்மனைக்கு வெளியே போய் ஏழை எளிய மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய நினைத்தோம். சுல்தான் எங்கள் மீது பகைமை பாராட்ட இந்த ஒரு விஷயமே காரணமாகி விட்டது. பகைமை மட்டும் அல்ல; நாங்கள் அரசாங்கத்துக்கே எதிரான ’ஆபத்தான பெண்களாக’ கருதப்பட்டு விட்டோம். எங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க ஏகப்பட்ட உளவாளிகளை அனுப்பி வைத்தார் சுல்தான். அவர்களையெல்லாம் ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பியதை நினைத்தால் இப்போதும் என் தேகம் நடுங்குகிறது…”
இஸ்தாம்பூலில் உள்ள தொல்மாபாஹ்ஷி அரண்மனையின் ஹேரத்தின் உள்ளே நின்று கொண்டிருந்த போது ஸேனாப் ஹனூமையும் அவருடைய கடிதங்களையும்தான் நினைத்துக் கொண்டேன். அரண்மனை என்பது வெறும் சலவைக்கல் தூண்களா? இந்தத் தூண்களையும் பிரம்மாண்டமான விதானங்களையும் பார்ப்பதற்கா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தோம்?
ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக் கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
அந்தத் தூண்களும் விதானங்களும் ஓய்வறைகளும் சொன்ன கதைகளைத்தான் இங்கே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
- சாருநிவேதிதா எழுதும் இத்தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும். தொடர் பற்றிய கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்
டிசம்பர் 11 , 2015