பத்மாஸனி- சுதந்தரப் போரில் சிறைசென்ற முதல் தமிழ்ப்பெண்!

மதுரைக்காரய்ங்க 37

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி.

 மதுரை பத்மாஸனி. கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுதந்திர வேள்வியில் ஈடுபட்ட கணவரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றபோது அவருக்கு வீரத்திலமிட்டு "போய் வாருங்கள்" என அனுப்பியவர். அத்துடன் அவர் விட்டுச் சென்ற சுதந்திரப் போராட்டப்பணியை முன்னெடுத்து அவரை விட வீரியமாக, துடிப்போடு செய்தவர். தமிழகமெங்கும் ஊர் ஊராகச் சென்று கதர்விற்று மக்களைத் திரட்டி மறியல் செய்ததோடு செல்லும் இடங்களிலெல்லாம் அனல் கக்கும் விடுதலைப் பேச்சுக்களை நிகழ்த்தியவர் அவர். பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறை சென்ற முதல் தமிழ்பெண் இவர் தான் என்ற வரலாறும் உண்டு.

தினமணியில் என்னுடன் செய்தியாளராகப் பணியாற்றியவர் திரு. ஜீவா பிரபாகரன் அவர்கள். எனக்கு முன்பாகவே அவர் தினமணியில் பணியாற்றி வந்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட பெண் போராளிகள் குறித்து ஒருநாள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பத்மாஸனி அம்மையார் பற்றிச் சில தகவல்களை ஜீவா பிரபாகரன் சொன்னார்.  நாங்கள் இந்த விஷயங்களை பேசிக்கொண்டது சுதந்திர பொன்விழா ஆண்டு என ஞாபகம். பின்னர் நான் தினமணியிலிருந்து விலகி வேறு இதழுக்குச் சென்றுவிட்டேன். என்றாலும் எங்கள் நட்பு நீடித்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜீவா பிரபாகரன் இறந்துவிட்டார். என்னில் இளையவர் அவர். அந்திமழை இணையதளத்துக்கு பத்மாஸனி பற்றி எழுத முடிவு செய்தபோது அவரது நினைவு தான் எனக்கு வந்தது. பத்மாஸனி அம்மையார் குறித்து தகவல்கள் சேகரித்தேன். இப்போது கட்டுரையாக..

திருவில்லிப்புத்தூர் சுந்தரராஜ ஐயங்கார், கோதையம்மாள் ஆகியோரின் மகளாக 1897-ல் மகளாகப் பிறந்தவர் பத்மாஸனி அம்மையார். பிறந்தது திருவில்லிப்புத்தூர் என்றாலும் அவரது வாழ்க்கை முழுவதும் மதுரையைத் தான் களமாகக் கொண்டிருந்தது. இங்குள்ள முனிசிபல் பெண்கள் பள்ளியில் ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்தார். 1908-ம் ஆண்டு தனது உறவினரான பந்தல்குடி ஸ்ரீநிவாச வரதனை மணந்தார். அப்போது அவர் மானாமதுரையில் தமிழாசிரியராக இருந்தார். 1914-ம் ஆண்டில் அவர்களது மணவாழ்க்கை துவங்கியது.

சர்த்தார் பட்டேல், தாகூர் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலர் தங்கள் பட்டங்களைத் துறந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கினர். இதைக் கண்ட ஸ்ரீநிவாசவரதனும் தனது ஆசிரியர் பணியைத் துறந்து மதுரை போராட்டக் களத்தில் இறங்கினார். அத்தோடு தேசபக்தன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகவும் செயல்பட்டார்.

1917ஆம் வருஷம், இவர் அன்னிபெசண்ட் நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தில் பங்கு கொண்டார். சுதந்திரப் போராட்டம் தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி நாட்டுக்காகத் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். இவரை எல்லோரும் 'நிஷ்காம்யகர்மன்' என்றும் 'கர்மயோகி' என்றும் அழைக்கலாயினர்.

பத்மாஸனிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்தது. அன்றைய தினம் மனதில் வேதனைகளை சுமந்து கொண்டு திருச்சியில் ராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க சேதுபதியின் தலைமையில் நடந்த தமிழ் மாநில மாநாட்டுக்கு அழைப்பாளராகச் சென்றார் ஸ்ரீநிவாசவரதன். அந்த மாநாடு  அவருக்கு பலவழிகளில் பயனுள்ளதாக அமைந்தது. அந்த மாநாட்டின் மூலம் மதுரை போராட்டதளபதிகளில் ஸ்ரீநிவாச வரதன் ஒருவர் என அடையாளப்படுத்தப்பட்டார். அத்தோடு அந்த காலத்தில் பாரதி பாடல்கள் அதிக அளவு அச்சில் வரவில்லை. அதனால், இந்த மாநாட்டில் பாரதி பாடல் எழுதி வைத்து படிக்கப்பட்டது. அதனை ஸ்ரீநிவாச வரதன் பிரதியெடுத்து வந்து செல்லும் இடங்களிலெல்லாம் சத்தமாக பாடத் துவங்கினார். பாரதி பாடல் அவருக்கு கூடுதல் உத்வேகத்தைத் தந்தது. அவருடன் பத்மாஸனியும் பாரதிப் பாடல்களைப் பாடி தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மதுரை வீதிகளில் 1919-ம் ஆண்டு ஓர் புதுமை அரங்கேறி தொடர்ந்து நடந்து வரலாயிற்று.  அதாவது விடிந்தும் விடியாத அந்த அதிகாலை நேரத்தில் மதுரை வீதிகளில் " பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,  புன்மை யிருட்கணம் போயின யாவும்" எனும் பாரதியின் பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிப் பாடலை பூபாள ராகத்தில் இனிமையாகப் பாடப்பெறும் ஒலி கேட்கும். இந்தப் பாடல் ஒலி கேட்ட மாத்திரத்தில் ஆங்காங்கே பல வீடுகளிலிருந்து சிறுவர்கள் எழுந்து  அவசர அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறி அந்தப் பாடலைப் பாடிக்கொண்டு, கையில் ஒரு மூவண்ணக் கொடியை ஏந்திக்கொண்டு, வெள்ளை ஜிப்பாவும் காவி தலைப்பாகையுமாக முன்னே நடந்து சென்று கொண்டிருக்கும் அந்த மனிதரோடு சேர்ந்து கொள்வார்கள். முதலில் இருவரும் மட்டுமே சென்ற பஜனை நாளடைவில் பெரிதாக ஆகிவிட்டது. இந்த பஜனை பல தெருக்களைச் சுற்றிவிட்டு இறுதியில் அந்த மனிதரின் வீட்டுக்குப் போய்ச்சேரும். அங்கு அந்த சிறுவர்களை உட்கார வைத்து நாட்டு நடப்பையும், ஆங்கிலேயர்களை நம் நாட்டை விட்டுத் துரத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் அவர் உணர்ச்சிகரமாகப் பேசுவார். அந்த பேச்சு அந்த இளம் சிறார்களின் அடிமனதில் போய் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த பெரியவர்கள் சிலர், "இவர் ஒரு 'சுயராஜ்யப் பைத்தியம். இப்படி கூட்டம் போட்டு ரோட்டோடு திரிந்து சுயராஜ்யம் வாங்கப் போகிறாராம். அதற்கு இந்த குழந்தைகளின் பட்டாளத்தைத் தயார் செய்கிறாராம்" என்று கேலி பேசுவார்கள். இந்தக் கேலிக்கு உள்ளானவர்கள் ஸ்ரீநிவாசவரதனும் பத்மாஸனியும்.

 .

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆலயப்பிரவேசத்துக்குத் தலைமை தாங்கிச் சென்ற வைத்தியநாதய்யர் இதுகுறித்து "நான் அதிகாலையில் ஜன்னல் அருகில் உட்கார்ந்து கேஸ்கட்டுகளைக் கவனித்துக் கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் வரதய்யங்காரும் பத்மாஸனியும் பாடிக்கொண்டே செல்வது கேட்கும். பாரதியின் வீராவேச பாடல்களை தினமும் கேட்டு கேட்டு எனக்கு தேசிய உணர்ச்சி பொங்கியது. அதனால் முழு வேகத்துடன் அரசியலில் குதித்தேன்" என்கிறார்.

ஸ்ரீநிவாச வரதனும் பத்மாஸனியும் பஞ்சு வெட்டவும், நூல் நூற்கவும் கற்று தேர்ந்தனர். அதன் பிறகு தான் மதுரை காங்கிரஸார் கைராட்டினம் தயாரிக்கத் துவங்கினர். சுப்பிரமணியசிவா நடத்திவந்த ஸ்ரீபாரதாஸ்ரமத்தில் ஸ்ரீநிவாசவரதனும் பத்மாஸனியும் சேர்ந்து பணியாற்றினர். சிவா சிறை செல்லவே இருவரும் ஆசிரமத்தை தடையின்றி நடத்தினர்.

1922-ம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட ஸ்ரீநிவாசவரதன் கைதானார். அவருக்கு பதினெட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட இருந்த கணவரை மதுரை தெப்பக்குளம் அருகே இருந்த காவல்நிலையம் சென்று சந்தித்தார் பத்மாஸனி. அவருக்கு மாலையணிவித்து "நீங்கள் விட்டுச் செல்லும் பணியை நான் தொடர்ந்து செய்வேன்" என மகிழ்ச்சியோடு சொல்லித் திரும்பினார். அதுபோலவே மதுரை வைத்தியநாதய்யரை சந்தித்து முழுநேர போராட்டவாதியானார். திருப்பூரில் நடந்த தமிழ் மாகாண மாநாட்டுக்கு மதுரை பிரதிநிதியாக அனுப்பிவைக்கப்பட்ட அவர்,          சிறையில் கணவரை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து செய்யவேண்டிய தேசிய பணிகள் குறித்து ஸ்ரீநிவாச வரதன் பத்மாஸனிக்கு ஆலோசனை வழங்கினார். தமிழக சுதந்திர போராட்டக்களத்தில் இந்த நடவடிக்கை வித்தியாசமாக அப்போது பார்க்கப்பட்டது.

கணவர் சிறையில் இருந்த ஒன்றரை ஆண்டுகளும் பாரத ஆசரமத்தை நடத்தியும் மாதர்களைக் காங்கிரசில் சேர்த்தும் தெருத்தெருவாய் கதராடைகள் விற்றும் பொதுக்கூட்டங்களில் பேசியும் வந்தார் பத்மாஸனி. அதுமட்டுமில்லாமல் கணவர் சிறையில் இருந்தபோது ஒரு தவமான வாழ்க்கையை வாழ்ந்தார் அவர். நகைகள் அணியமாட்டார். ஒருவேளை உணவு தான் உட்கொள்வார். அதுவும் தானே நூற்று அதை விற்று வரும் பணத்தின் மூலமாகவே அவரது உணவு செலவை அமைத்துக் கொண்டார். இதை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால் அப்போது சிறைக்குச் சென்ற தியாகிகளின் குடும்பத்துக்கு ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளையானது மாதம் முப்பது ரூபாய் கொடுத்துவந்தது. அதைக் கூட பத்மாஸனி வேண்டாம் என நிராகரித்துவிட்டார். "தேச சேவைக்கு விலையா?" என்பது அவரது கேள்வி. இந்த நேரத்தில் பிறந்த அவரது இரண்டாவது குழந்தையும் இறந்தது.

தேச விடுதலைப் பிரசாரத்தில் தொய்வில்லாப் பணியை மேற்கொண்டு சுவாமி சிவம் தலைமையில் நடைபெற்ற காவிரி யாத்திரையில் பங்கேற்றார். ஒகேனக்கல் வரை சென்று அருகிலுள்ள பாப்பாரப்பட்டி கிராமத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையும் இறந்தது. ஏற்கெனவே இரண்டு ஆண் குழந்தைகளை இழந்தவர். இந்தக் குழந்தையின் இறப்பால் துவண்டு போனார். ஆனால் அந்த வேதனையை  மூட்டைகட்டிவைத்து விட்டு உடனடியாக விடுதலை வேள்வியில் இறங்கினார்.

சிறையிலிருந்து கணவர் வெளிவந்ததும் இருவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் சென்று விடுதலை குறித்தான எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். பாரதி பாடல்களைப் பாடினர். பொதுக்கூட்டங்கள் நடத்தி நாட்டின் நிலையை எடுத்துச் சொன்னார்கள். அப்போது கூட்டத்தினர் அளிக்கும் பொருட்களைப் பெற்று கிடைப்பதை உண்டு ஆங்காங்காங்கே இருக்கும் சத்திரம் சாவடிகளில் தங்கினர்.

இப்படியே தேசபக்த சமாஜம் என்ற பெயரில் இருபது தொண்டர்களுடன் அவர் தமிழ்நாட்டைச் சுற்றி வந்தார். ஒருமுறை கரூரில் பயங்கர அடக்குமுறை தலைவிரித்தாடியது. போராட்டக் களத்தில் நின்றவர்கள் சோர்ந்து போயினர். அவர்கள் மத்தியில் "அச்சமில்லை.. அச்சமில்லை.." பாடலை பாடி எழுச்சி ஊட்டினார். இவரது பணியைப் பாராட்டி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஒரு உணர்ச்சிப்பிழம்பான பாடலை எழுதிக்கொடுத்தார். தேசபக்த சமாஜத்துக்கு ஆதரவு அளியுங்கள் என மக்களை ராஜாஜி கேட்டுக்கொண்டார். ஈ.வெ.ராவின் அழைப்பின் பேரில் அவரோடு பத்மாஸனியும் ஸ்ரீநிவாசவரதனும் பதினைந்து நாட்கள் தங்கி தேசவிடுதலை விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். பின்னர் சுப்பிரமணியசிவாவோடு பயணித்து அவர் எழுதிய "சிவாஜி" "திலகர் தரிசனம்" என்ற நாடகங்களை நடத்தினர்.

1924-ம் ஆண்டு கோவில்பட்டியில் டாக்டர் வரதராஜலு நாயுடு தலைமையிலும் குளித்தலையில் திரு.வி.க. தலைமையிலும் ஆய்பாடியில் ராஜாஜி தலைமையிலும் நடந்த மாவட்ட மாநாடுகளில் பத்மாஸனியின் பேச்சு இடம்பெற்றது. பெல்காமில் காந்திஜி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு இருவரும் தேர்வு செய்யப்பட்டு சென்று வந்தனர். மதுரை சகோதரிகள் சங்கம் என்ற அமைப்பைத் துவங்கி பெண்களுக்கு இந்தி கற்றுக் கொடுத்தார். அத்துடன் ராட்டினம் சுற்றுவது, தீண்டாமை ஒழிப்பை முன்னெடுப்பது போன்ற பணிகளிலும் இந்த சங்கத்தை ஈடுபடுத்தினார்.

இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்தவர் ஆங்கிலேயர் நீலன். அவரது சிலை சென்னையில் வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றிட தேசபக்தர் சோமயாஜுலு தலைமையில் இளைஞர்படையினர் 1927-ம் ஆண்டு சென்னை கிளம்பினர். ஆனால் அதற்கு போதிய பணமில்லை. அப்போது தனது நகைகளை விற்று பணம் கொடுத்து இளைஞர்களை அனுப்பிவைத்தார் பத்மாஸனி.

பாப்பாங்குளம் அருகில் கானூர் கல்லூரணி ஆகிய ஊர்களில் சுமார் பதினைந்தாயிரம் தென் மரங்களில் கள் இறக்க முடிவு செய்யப்பட்டது. அதனை குத்தகைக்கு விடாமல் தடுப்பதற்காக அந்தப் பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. தொடர்மழையின் காரணமாக அந்தப் பகுதிகளுக்கு வண்டியில் செல்ல இயலவில்லை. எனவே தண்ணீரின் ஊடே நடந்து சென்று அந்தக் கிராமங்களின் பெரியவர்களை சந்தித்து கள் இறக்க மரங்களைக் குத்தகைக்கு விடமாட்டோம் என உறுதிமொழி வாங்கினார்.

1930-ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்துக்காக இரவும் பகலும் பிரசாரம் செய்தார். மதுரை ஜான்சிராணி பூங்கா முன் நடந்த கூட்டத்தில் பேசும்போது "போலீசார் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறவேண்டும் என்றார். அதற்கு  அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே போராட்டத்தில் ஸ்ரீநிவாசவரதனும் கைது செய்யப்பட்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதே அவர் மீதும் மேலும் மேலும் வழக்குகள் போடப்பட்டன. மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறை வாழ்க்கை வாழ்ந்தார்.

ஸ்ரீனிவாசவரதன் ஆங்காங்கே இவர் பல வாசகசாலைகளையும், சங்கங்களையும் அமைத்தார். இவருக்குத்தான் மகாகவி பாரதி கடையத்தில் இருந்தபோது தன் நூல்களை பிரசுரம் செய்வது பற்றி மிக விரிவாக கடிதம் எழுதினார். தீப்பெட்டிகளைப் போல் தன் நூல்கள் அனைவர் கைகளிலும் அரையணா, காலணா விலைக்குப் போய்ச்சேர வேண்டுமென்று பாரதி விரும்பி எழுதியதும் இவருக்குத்தான்.

அந்நியதுணிகளை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற பத்மாஸனிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. வேலூரிலும் கண்ணனூர் சிறையில் தன் தண்டனை காலத்தை அனுபவித்தார்.

பத்மாஸனி வைதீக குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காந்தி ஹரிசன இயக்கம் துவங்கியதிலிருந்து முழுமூச்சுடன் அதில் ஈடுபட்டு உழைத்தார். காந்தி மதுரைக்கு வந்தபோது வைத்தியநாதய்யர் அவரிடம் "இவர் தேச விடுதலைக்காக போராட்ட களத்தில் அயராது பாடுபடும் பெண்" என பத்மாஸனியை அறிமுகப்படுத்தினார். மேலும் அவரது தியாகத்தையும் அவர் அனுபவித்த சிறைத்தண்டனைகளையும் வைத்தியநாதய்யர் சொல்ல காந்தி நெகிழ்ந்து போய் பத்மாஸனியை கைகூப்பி வணங்கினார். பத்மாஸனியும் சிரம்தாழ்ந்து வணங்கியதுடன் தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி காந்தியிடம் போராட்ட நிதிக்காக அளித்தார்.

தனக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தை பாரதி ஆசிரமத்துக்கு வழங்கினார் பத்மாஸனி.  மதுரை பூந்தோட்டப் பகுதியில் 1921-ம் ஆண்டிலேயே "திலகர் ஆஸ்ரமம்" அமைத்து இரவு பாடசாலை நடத்தினார். அங்கு மக்களை திரட்டி சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு பள்ளி அமைத்து கல்வி அளித்தார் 

1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கமுதியில் நடைபெற்ற காங்கிரசின் பொன்விழாவின் போது வீர உரையாற்றினார். அந்தப் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். அதுவே அவரது வாழ்வின் கடைசி பிரசாரம். தேச பக்தி, அயராத உழைப்பு தேச விடுதலையே மூச்சு, என்பவரின் மூச்சும்  14.1.1936-ல் நின்றது. பத்மாஸனி தேசிய அளவில் நினைக்கப்படவேண்டிய சுதந்திர போராட்ட தியாகி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com