பருவமழையைத் துரத்துதல்

பருவமழையைத் துரத்துதல்

போகமார்க்கம் - 4

கேரளத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலத்துக்கான  அறிகுறிகள் தென்படத்  துவங்கிவிட்டன. முதல் மழைத் துளி விழுந்து விட்டது. கேரளத்தில் மழைக் காலம் துவங்கும்போது பயணம் செய்வது ஒரு அழகான அனுபவமாகும். ஆனால் 2018 வெள்ளம் ஏற்படுத்திய அழிவு கேரள மக்களிடையே மழை குறித்து மிகப்பெரிய அச்சத்தையும் ஏற்படுத்தி  இருக்கிறது.

 பருவ மழையைக் குறிக்கப் பயன்படுத்தும் Monsoon என்ற சொல்லை பிரிட்டிஷ்காரர்களோ இந்தியாவுக்கு வந்த டச்சுக் கடலோடிகளோ முதல் முறையாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சொல்கிறார்கள். அதன் மூலம்  அரபியாக இருக்கலாம். இந்தியாவின் கோடைக்காலம்  அதன் உள்பகுதிகளில் உள்ள வானிலையை வறுத்தெடுத்து  அதன் ஈரப் பதத்தை எல்லாம் உறிஞ்சி ஒரு சுட்ட அப்பளத்தைப் போல் மாற்றிவிடுகிறது. குறிப்பாக வட  இந்தியாவில் காற்றை நகத்தால்  உரசினால் தீப்பிடித்துவிடுமோ என்பது போல் வானிலை அவ்வளவு உலர்வாக இருக்கும். இதைச் சமன் செய்ய தெற்கே அரபி மற்றும் வங்கக் கடல்களிலிருந்தும் வடக்கே ஹிமாலயத்திலிருந்தும் ஈரம் மேகமாய் திரண்டு உள்ளே வந்து மழையைப் பொழிவதே பருவ மழை எனப்படுகிறது. இந்தியாவின் பருவ மழைக் காலங்கள் இரண்டு. ஜூனில் தொடங்கும்  தென்மேற்குப் பருவமழையிலேதான்  இந்தியா தனது 80 சத  மழையைப் பெறுகிறது. இதன் முதல் துளி பெரும்பாலும் கேரளாவில் விழுகிறது. பிறகு வடக்கு நோக்கிச் செல்கிறது. இம்முறை அரபிக் கடலை இமயம் முந்திக் கொண்டது போல் தோன்றுகிறது. டெல்லியில் ஒருவாரமாய் மழை பெய்து கொண்டிருக்கிறது.

டெல்லியின் கோடைக் காலம் மிகக் கொடுமையானது. இது பற்றி வெள்ளைக்காரர்கள் நிறைய  எழுதி இருக்கிறார்கள். அந்த  சமயங்களில் அவர்கள் டெல்லியைக் காலி செய்துவிட்டு சிம்லா போன்ற மலைவாழ்  தலங்களுக்கு  ஜாகையை மாற்றிக்கொண்டு பருவழையோடுதான்  திரும்ப வருவார்கள். புகழ்பெற்ற  எழுத்தாளர் William Darlymple டெல்லி குறித்து எழுதிய  The City of Djins (பூதங்களின் நகரம் )நூலில் கொடுங்கோடை முடிந்து முறிந்து மழையாக உடையும் போது டெல்லி வாசிகள் அதை ஆரவாரத்தோடு வரவேற்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறார்.சிலர் பைத்தியம் பிடித்துவிட்டதைப் போல் தெருவில் இறங்கி ஆடுவார்கள்.ஆண் பெண் எல்லோரையும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பார்கள்.வியாபாரிகள் இலவசமாக இனிப்புகள் வினியோகிப்பார்கள்.சிலர் அமைதியாக மொட்டை மாடிகளில் கூப்பிய கைகளும் மூடிய கண்களுமாய் நின்றுகொண்டு மழையில் நனைவார்கள்,ஒரு பிரார்த்தனை போல.கண்ணன் பிறந்த போது ஆயர்பாடியில் ஆயர்கள் நடந்துகொண்டதாகப் பாகவதத்திலும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்  என்று  பெரியாழ்வாரும் சொல்லும் விவரணைகளை இது ஒத்திருப்பதைக் காணலாம். கண்ணனும் கார்முகில் வடிவம்தானே.

பழந்தமிழகத்தில் பருவ  மழையை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப் பட்டதுதான் இந்திரவிழா.அதன் வர்ணனைகளும் இதே தொனியில் தான் இருப்பதை சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் காணலாம். உலகம் முழுக்க பருவமழைகள் இருக்கின்றன. ஆனால் இந்தியப் பருவமழையைக் குறித்து இலக்கியத்தில் ஆவணப் படுத்தப் பட்டது போல் வேறு எங்கும் செய்யப்படவில்லை.இந்தியா பிரதானமாக ஒரு விவசாய நாடாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.இங்கு மழை என்பது நம்பிக்கை. மறுபிறப்பு.

இந்தியப் பருவமழையைப் பற்றி  சமீப காலத்தில் எழுதப்பட்ட நல்லதொரு புத்தகம்  ஆங்கிலேய எழுத்தாளர் Alexander Frater எழுதிய Chasing the monsoon (பருவ மழையைத் துரத்திக் கொண்டு).கேரளத்தில் பருவ மழைக்காகக் காத்திருந்து அதன் முதல் பாதம் மண் தொட்டதும் அதன் பின்னாலேயே சென்று அந்த அனுபவத்தை ஒரு பிரயாண நூலாக எழுதியிருக்கிறார். அவர் அந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் துணைத் தலைப்பு ‘ஒரு நவீன புனிதப் பிரயாணம்'

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com