பா.சத்தியமோகன்

கவிதைத்திருவிழா

நம்புதல் நம்பாதலில் இருக்கிறது
வாழ்க்கை நம்புதலால் ஆனது
பணம் இரண்டாம் பட்சம்

வெளியில் நடமாடிப் பார்த்தால் புரியும்.

பகல் பனிரெண்டு மணி அரசுப் பேருந்தில்
எட்டு ஊசி இரண்டு ரூபாய் என்று கத்துகிற சிறுவன்
எவ்வளவு சம்பாதித்து விடுவான் ?

சாக்கில் விரிக்கப்பட்ட
ஆறுகட்டு கீரை விற்பனை
நடுத்தர வயசுக்காரிக்கு எவ்வளவு காசு தந்துவிடும் ?

கொடுக்காப்புளி , கல்கோனா , வெள்ளரிக்கீற்று
விற்பாள் கிழவி பள்ளிப் பிள்ளைகளுக்காக.

பார்த்திருக்கலாம்
தெருத் தெருவாய்
வர்ணச் சிவப்பு கருப்பில்
அரைஞாண்கயிறு விற்றே வாழ்வோரையும்.

வாழ்க்கை என்ன சொல்கிறது ?
அதீத பணக்காரர்களின்
ரகசிய தற்கொலை என்னதான் சொல்கிறது!

*** *** ***

சோதாவிலங்கு

பல நாட்களாக நான் - கேட்கக் கேட்க
முகம் திருப்பிக்கொண்டு
காதில் விழாதது போல இருந்தது சோதா விலங்கு
குறிக்கோலில்லாமல் நிகழ்காலச் சுமைகளுக்கே
கைகால்களை அசைக்குது சோதாவிலங்கு
இது ஒரு பிழைப்பா எனக்கேட்டு -
குத்தலாக ஒரு கடிதம் எழுதினேன்
சற்று நேரத்தில் பேசச் சொல்லிக் கேட்டது நாராசமாக : -
"சோதாவிலங்கென்றா என்னைச் சொன்னாய்
மனதில் வாழும் புறாக்களைக் கொன்றபின்
ஏது உனக்கொரு உயிர்ப்பொழுது ?
உன் சிங்கங்கள் மெலிந்து கூழாகி
வழிந்து வளைந்து
படிக்கட்டில் நீராகி ஓடுதெனில்
உனக்காக நான் அதனை
"முன்னாள் சிங்கம்" எனக் கொண்டாடுவேனா ?
ஒன்றுமட்டும் வாழ்த்துகிறேன் -
திமிறிக் கொண்டிருக்கிறாய்
அதற்கே என் வாழ்த்து ! "

*** *** ***

டப்பிங்

ஒரு கிருமியைவிட மோசமாக பரவும் பொய்க்கு
எடையில்லை உரு இல்லை நியாயமில்லை
வருத்தம்தான் -
ஆயினும் அதனையே நம்புகின்றனர் பலர்;
விதவிதமாக நீட்டி நீட்டி -
மேலும் மேலும் பொய்யைக் கூற முடியும்
பொய்யைக் கேட்பவரும் பூமியில் அநேகம் உள்ளனர்.
கூட்டம் கூட்டமாக உள்ளனர்.
ஆவலாக உள்ளனர்
கூர் தீட்டிய கத்திபோலாக்கிய செவிகளுடன் உள்ளனர்
மொழியின் சத்தையெல்லாம் -
சப்தமற்ற அரூபக் குழாய் வழியே ரகசியமாக
உறிஞ்சுகிறது பொய் ;
உண்மையை அறிந்து உலகம் பார்ப்பதற்கும் -
அவகாசம் தருவதேயில்லை பொய்களின் கும்மி ;
உண்மையைச் - சுமக்க முடியாமல் தள்ளாடுகின்றது மொழி
நீண்ட காலப் போரட்டத்திற்குப்பின் -
பிரயாசைப்பட்டு
வாயைத் திறந்தது உண்மை
சட்டென -
அதன் தொண்டையில் அமர்ந்து டப்பிங் பேசுகிறது பொய் !

*** *** ***

அறிதல் - மாறுதல்

சிலர் சொல்வதுண்டு பலர் சொல்வதில்லை
ஆனாலும் இது ஓர் புடம் போட்ட உண்மை
யாருக்கும் இந்த வாழ்க்கை -
நூறு சதவீதம் அப்படியே இருப்பது பிடித்தமில்லை -
வர்ணம் பூசிய ஐஸ் குச்சியோடு ஒட்டிட ஆசை !
வானவில்லுக்கு -
ஓரிரு நாட்கள் நிறமிழந்து வாழும் எளிமை மீது பேராசை !
மலை முகட்டில் ஏறி
ஆகாயம் தொடும் உயரமிகு மரங்களுக்கு
தரை தழுவும் சில்லோடைப் புல்லின் நுனி புணர ஆசை !
குளம் வற்றினாலும் -
காயாதிருக்க வேணுமென நீர்ப்பூக்களுக்கு ஆசை !
எதனையும் துறக்க உறுதி செய்யும் துறவிக்கும்
இன்னும் இன்னும் துறந்திட ஓர் துளி பாக்கி உள்ளது !
நிலைவிட்டு நிலை உயர -
நிலை விட்டு நிலை மாற -
ஆசை மீது ஆடை கட்டி -
ஆணென்றும் பெண் என்றும் உலவுகின்றோம் உயிர்க்காற்றாய் !
மண்ணுக்குள் தன் தலை புதைத்து -
தன்னையே தான் தேடும் நெருப்புக்கோழி மனசை
தாண்டிச் செல்லும் இரகசியம் பயின்றால் -
அப்படியே ஒட்டிக்கொள்வோம் வாழ்வின் மீது
நூறு சதவீதம் அன்பு ஊற்றாய் !

- பா.சத்தியமோகன்

1993 ல் "கணையாழி " இதழில் வெளியான " நானும் நானும் " என்ற முதல் கவிதைப் பிரசுரத்தின் மூலமாக அறியப்படுபவர் பா.சத்தியமோகன்.

இது வரை , ஏழு கவிதைத் தொகுப்புகள் - ஒரு சிறுகதைத் தொகுப்பு - ஆங்கிலப் பொன்மொழிகள் மொழிபெயர்ப்பு நூல் - மற்றும் ஒரு கட்டுரைத்தொகுப்பு வெளியாகியுள்ளன.

ஜனவரி   05 , 2008

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com