'பாடிகாட் ' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 8

'பாடிகாட் ' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 8

தமிழ் வளர்க்கும் 'சிங்'கம்

மும்பை இசைக் கச்சேரியொன்றில் TM சவுந்திரராஜன் நகலாக பிரமிக்க வைத்த குரலால் அரங்கத்தை கொள்ளைக் கொண்டதொரு சிங்கம்! சிங்கமென்றால் நிஜமாகவே 'சிங்'கம் தான் ! தீதார் சிங் என்ற 77 வயது பஞ்சாபி வாலிபரின் மழலைத் தமிழ் கேட்டவர் செவிகளில் மட்டுமல்ல ... மனசிலும் 'பச்சக்' என்று ஒட்டிக்கொண்டது. தமி'லே வராத டேமில் தலைவர்களும் 'பட்டிமன்ற புலிகளும் நிறைந்த தமிலகத்தில் தீதார்சிங் -கின் 'டி'கர உச்சரிப்பு புல்லரிக்க வைத்தது.

வால்க தமில்!

***** ***** *****

ஹைகூ அட்டகாசம்

"தென்றலின் சுவடுகள் "
பெண்கள் ஹைக்கூ.


புதிய திசைகளில் தம் தடங்களைப்படைக்கும் பெண் படைப்பாளிகளின் ஹைக்கூத் தொகுப்பாக " தென்றலின் சுவடுகள் "

இந்நூலைத் தொகுத்தளிப்பருப்பவர்கள் கன்னிக்கோயில் ராஜா , நிலாப் பிரியன் , தமிழ் மகாலி என்ற இளைஞர்கள் பட்டாளம் கன்னிக்கோயில் ராஜாவின் . தினசரி குறுஞ்செய்தி ஹைக்கூக்கள் ( SMS HAICOO) தமிழ்நாட்டின் பல படைப்பாளிகளுக்கு பரிச்சயமானது.

நடுநிலைப்பள்ளி மாணவி தொடங்கி , ஆசிரியர் , விரிவுரையாளர், பேராசிரியர்கள் , மருத்துவர் , மற்றும் குடும்பத்தலைவிகளை. 58 பேரின் ஹைகூ அட்டகாசம் தான் இத்தொகுப்பு.

பெண்களுக்கு சமூகம் காட்டும் 'இரண்டாம் குடிமகன்' நிலை. வரதட்சணை , உறவுச் சிக்கல் , இயற்கை , நேசம் , மனமுறிவு , காதல் , காமம் என கவிதையின் மூலைமுடுக்கெல்லாம் ஹைகூ சஞ்சாரம் செய்திருக்கும் இத்தொகுப்பை வழக்கமான விமர்சனக் கோலால் அளக்கையலாது ; அளத்தலும் ஆகாது. காரணம் , தொகுப்பில் பலரும் முதன்முதலாக ஹைகூ எழுதிப்பழகுபவர்கள்.. ! எனவே இந்த கன்னி முயற்சியைப் பாராட்டுவது தான் முறை !

விரிவான செற்வான சொற்களால் தம் ஆய்வுரைகளை வழங்கியிருக்கும் கவிஞர் மித்ரா. மற்றும் கவிஞர் லதாராமகிருஷ்ணன் ஆகியோரின் விமர்சனத் தராசும் கூட படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

"இத்தொகுப்பில் இடம் பெற்ற கவிஞர்களிடம் நுட்பமான அவதானிப்பும் .நுண்ணுணர்வுகளும் , சமூக பிரக்ஞையும் , சமூகத்தில் பெண்ணின் இடம் குறித்த அக்கறையும் , விமர்சனமும் இருப்பதை அவர்களின் கவிதைகளில் இருந்து உணரமுடிகிறது. முயன்றால் அயர்வைத்தரும் குக்குறுங்கவிதைகளை விட அதிர்வை உண்டாக்கும் குக்குறுங்கவிதைகளை படைக்க அவர்களால் கண்டிப்பாக முடியும் " என்ற லதா ராமகிருஷ்ணனின் ஆற்றுப்படுத்தும் வரிகள் எழுதியவர்களுக்கு மட்டுமல்ல இனி எழுதவருபவர்களுக்கும் வழிகாட்டுவது.

வாசிப்போம் ; வாழ்த்துவோம் !

சில முத்துக்கள் :

எங்கிருந்தால் என்ன
உன்னோடு பேசாமல்
கவிதை

(இரா.தமிழரசி)



பயணத்தின் தூரம்
தெரியவில்லை
எதிர் இருக்கையில் குழந்தை

(பாரதி கிருஷ்ணன்)



அம்மனம்
அழகுதான்
இலையுதிர்காலம்
(ஜெயஸ்ரீ பாரதி)


வயலிலே மந்தையின் அழகு
குழந்தையோடு ; மகிழ்வு
இனி சைவ உணவு
(விக்னா பாக்யநாதன்)


நாணம் கொண்டு
நெளியும் சுடர்
காற்றின் ஸ்பரிசம்
(தேவிப்பிரியா)


மேடைமுழுவதும் ஆண்கள்
பார்வையாளர்கள் பெண்கள்
மகளிர் விழா
(த.இராசேசுவரி)

***** ***** *****

தென்றலின் சுவடுகள் (பெண்கள் ஹைகூ)

தொகுப்பாசிரியர்கள் :

கன்னிக்கோயில் ராஜா, நிலாப் பிரியன் , தமிழ் மகாலி

விலை : ரூ 60/

வெளியீடு : இருவாட்சி
41, கல்யாண சுந்தரம் தெரு
பெரம்பூர் - சென்னை - 600 011
பேசி : 044 - 25582552

***** ***** *****

பட்டி மண்டபமென்னும் வார்த்தை விளையாட்டு

ஒருமுறை மயிலம் தமிழ்க் கல்லூரி பேரசிரியர் முனைவர் . மா.சற்குணம் - அவர்களிடம் 'பட்டிமண்டபம்' குறித்து உரையாடிய போது சிந்திய செய்திகளிவை :

- 5 ம் நூற்றாண்டிலேயே பட்டிமண்டபம் வழக்கத்துக்கு வந்துவிட்டது.

- சமய உண்மைகளை ஆராயும் நோக்கில் பட்டிமண்டப விவாதங்கள் நிகழ்ந்ததாக மணிமேகலை மற்றும் ,மாணிக்க வாசகரின் திருவாசகம் போன்ற இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.

- சமீபத்தின் ., சமூக நோக்கில் பிரச்னைகளை விவாதங்களாக அணுகும் வகையில் சமூக உணர்வோடு தவத்திரு குன்றக்குடி அடிகளார் , அறிவொளி, பேரா.சத்தியசீலன் போன்றவர்களாய் முன்னெடுக்கப்பட்ட பட்டிமண்டபத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா...?

* வசதியான , வாகன ' ஜமா!'

* கைக்கு அடக்கமான பேச்சா(ளி)ளார்கள்

* துணுக்குத் தோரணம்

* அரட்டைக் கச்சேரி

* வார்த்தை கிச்சு கிச்சு

* கர்ணகடூரமானக் குரலில் திரைப்பாடல்

* கிண்டல் கேலி எகத்தாளம் - குறிப்பாக பெண்களை !

மும்பையில் பட்டிமண்டபம் ஒரு நோய் போல வளர்ந்திருக்கிறது. சமீபத்தில் வாஷியின் நடந்த மும்பை சாரல் சிறப்பு மலர் நிகழ்வில் நடந்த ஒரு பட்டிமண்டபத்தில் நடுவர் வாத்தியக் கருவிகள் இசைப்பது போல மிமிக்ரி செய்ய ஆரம்பித்து விட்டார்!
பார்வையாளர்களை உட்கார வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது ! அட தேவுடா !

***** ***** *****

படித்ததில் பிடித்தது

ஊர் சுற்றும் ஆறு
பொ.செந்திலரசு. வடுவேட்டை

அன்றொரு நாள்
நீர் கரைத்த மணல் வீட்டின்
விலாசம் தேடி
பால்ய கதைகள் பயணிக்கும்
காற்றுதிர்ந்த
நீரிலைமேல் பல
வாலிபக் கதைகள் மிதந்துறங்கும்
சிற்றிலை எழுப்பும்
தவளைக் கல்லென
குளித்துலர்த்தியப்
பெண்களின் பருவக் கதைகள்
தத்தித் தத்தி ஆழப்புதையும்
கால்கள்மென்ற
பாலத்தின் கீழ்
பரிசல் பயணக்கதைகள்
சிலவும்
நீர்ப்பாம்பென நெளியும்

கரையோரம்
துவைத்துப் பிழியும்
பெரிசுகளின் தீராக் கதைகள்
கூழாங்கற்களிடை
ஒளிந்தோடும்
நுரைக்கண்கள் நிறைக்க
வசந்தம் முழுமைக்கும்
இப்படி
வற்றாக் கதைகள்
கழித்துப் பிரவகிப்பினும்
இன்னும்
வற்றாக்கதைகள்
சுழித்துப்பிரவகிப்பினும்
இன்னும்
சொல்லாகதையொன்றைத்
தேடி
ஊர்விளிம்பில்
சுற்றித் திரிகிறது
எங்கள் ஊர் ஆறு.

***** ***** *****

சங்கம் வளர்த்து தமிழ்

கடந்த வாரம் விரார் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாண்டு நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. வீரார் - மும்பை மாநகரை ஒட்டி வளரும் புறநகரம். மேற்கு ரயில்வேயில் மும்பை - குஜராத் பாதையில் அமைந்திருக்கும் இப்புறநகரில் சற்றேறக்குறைய 400 தமிழ்க் குடும்பங்கள் உள்ளனவாம் . வெறும் 23 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கிய சங்கத்துக்கு இரண்டமாண்டிலேயே 175 உறுப்பினர்கள் . இலக்கிய உரை , அதிக மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவியருக்கு பரிசு. இன்னிசைக்கச்சேரி என அரங்கம் நிரம்பி வழிந்தது ஆனந்தத்தால்... தமிழால் இணைந்தவர்கள் தலையாய் உயர வாழ்த்துவோம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com