'பாடிகாட்' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 9

'பாடிகாட்' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 9

இந்திய கவிதைகளுக்கான இணையத்தளம்

இந்தியக் கவிதைகளுக்கென தனி வளையாய் புதிய இணையத்தளமொன்றின் அறிமுகம்: www.p4poetry.com

எவரும் நுழையலாம் : யாரும் எழுதலாம் ; கவிதைக்கனிகளை பறிக்கலாம் ; சுவைக்கலாம்.

தற்போது ஆங்கிலம் , இந்தி மொழிகளோடு பிராந்திய மொழிகளில் தெலுங்கு , கன்னடம் , வங்கம் மற்றும் உருந்து மொழிகளில் கவிதை அரங்கேற்றம் . காணுங்கள் ; கவிதை ருசியுங்கள்.

வண்ணங்கள் வேண்டாம் !

மிகப்பிரபலமான , Classical - கறுப்பு , வெள்ளை - திரைப்படங்களை வண்ணம் தீட்டி புதுசாய் வெளியிடும் முயற்சியில் முதலாவதாக
Mughal - e - azam - இந்திப்படம் வெளியிடப்பட்டு .ஊடகங்களில் பிரமாதமாய் விளம்பரப்படுத்தியும் பெரும் கவனிப்பை பெறவில்லை. எனினும் தற்போது இந்தியத் திரைப்படக்கலையின் பிதாமகன் சத்யஜித்ரே - வின் " பதேர் பாஞ்சாலி " மற்றும் " சாருலதா " - வை வண்ணத்தில் கொண்டு வர திட்டமிருக்கிறதாம்.

திரைக்கலை விற்பன்னர்கள் பலரும் இதை எதிர்க்கவும் . கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள்.

***** ***** *****

வாசித்ததில் நேசித்தது

உன் பசிக்கான உணவாய்
குழைந்திருக்கிறேன் பலமுறை

உன் செங்நேர்த்திக்கெல்லாம்
இருந்திருக்கிறேன் செயலூக்கியாய்

உன்னைப் புகழ்ந்து பேசும்
அடுத்தவர் வார்த்தைகளை
அடிக்கோடிட்டு மனனம் செய்து மகிழ்ந்திருக்கிறேன்

உனக்கான , பாராட்டு மழையில்
உள்ளம் குளிர்ந்து சிலிர்த்திருக்கிறேன்

உனக்கான வாழ்த்து மடல்களை
இதயச் சுவருக்குள்
ஆணியடித்து மாட்டியிருக்கிறேன்

நீ விருதைச் சுமந்து வீட்டுக்கு வருகையில்
விழி விளக்கேற்றி ஆரத்தி எடுத்திருக்கிறேன்

உன் சுக துக்கங்களில்
சங்கமித்திருக்கிறேன் சரிபாதியாய்...

நான் இடறி விழும் போதெல்லாம்
எள்ளி நகைக்கும் நீ
எளிந்திருக்கையில்
ஒரே ஒருமுறை கடைக்கண்களாலேனும்
கௌரவித்திருக்கிறாயா என்னை...!

(இரா. தமிழரசி / ஒளிச்சிறை )

***** ***** *****

உள்ளேன் அய்யா

ஞாநி , தமிழ்ப்படைப்புலகத்தில் அபூர்வமான மனிதர் . திரைப்பட வரலாற்றில் புதியதொரு அத்தியாத்தை தொடங்கியுள்ளார்.

திரைப்படங்களுக்கு ( Feature films) முன் திரையரங்குகளில் காட்சிப்படுத்துகிற வகையில் 'ஒரு ரீல்' படங்களை இயக்கி புதிய பாதையை பயணத்துக்கு தயார்செய்துள்ள ஞாநி , இதுகாறும் இரண்டு ' ஒரு ரீல்' படங்களை தந்துள்ளார்.

' திருமதி ஜேம்ஸ் என்ன செய்யவேண்டும் ' என்கிற ' ஒரு ரீல் ' படத்துக்குப்பிறகு அன்பாதவனின் சிறுகதையான ___________________
'உள்ளேன் அய்யா' என்ற பெயரில் 10 நிமிடக்குறும்படமாக உருமாறியிருக்கிறது.

நாமும் பாராட்டுவோம் .

புதிய முயற்சிகளை !

***** ***** *****

தனிமைப் பறவை / கவிதைகள் / கள்ளழகர்

பாரதி இளவேனில்


" நவீனக் கவிதை நிகழ்வாழ்வை , சமகால நெருக்கடிகளை , நம்மைச் சுற்றியுள்ள உலகின் போக்கை எடுத்துப் பேச வேண்டும் " என்பார் கவிஞர் விக்ரமாதித்யன் . புறப்பாடல்களுக்கு மட்டுமல்ல அக உணர்வுகளுக்கும் இது பொருந்தமன்றோ !

கள்ளழகரின் மனம் தனிமையும் , சோகமும் , வாழ்வின் வலிகளாலும் நிரம்பி வழிந்து கவிதைகளாய்ப் பொங்கி இருப்பதை ' தனிமைப் பறவை ' கவிதைத் தொகுதி உறுதி செய்கிறது.

'தனிமைப்பறவை ' - என்கிற இந்தக் கனமானக் கவிதைத் தொகுப்பில் கவிஞரின் முந்தையக் கவிதை நூல்களான ' மனசோட நிறம் ' , மற்றும் ' நதிநீர்த் தேக்கத்தின் முகங்கள் ' ஆகியவற்றில் பலவீனமானவை என்று உணரப்பட்டவற்றை நீக்கிவிட்டு மீந்தவையும் , புதிதாய் எழுதப்பட்டக் கவிதைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

குடும்ப உறவுகள் , வார்த்தை வன்முறை குறித்தும் பல கவிதைகள் பதிவு செய்து வார்த்தை , வன்முறை போன்ற இதுவரை கவிதைகளில் அதிகம் பேசப்படாத விஷயங்களை திரியத்தோடு கையாண்டு முன் ஏறு பூட்டியுள்ளார்.


அலுவலக அதிகாரங்கள் , சூழல்கள் குறித்த நிறுவனம் சார்ந்த கவிதைகள் (corporate poems) தமிழில் அதிகமாக எழுதப்படாதச் சூழலில் , கள்ளழகரின் கவிதைகளில் வெளிப்படும் அதிகாரத்தின் கட்டளைக்குரல் வாசகனுக்கு புதிய உலகைக் காட்டுவது.

வாசகனையும் உடனழைத்துக்கொண்டு.

இருப்பினும் , சிரமங்கள் பல மேற்கொண்டு செதுக்கப்பட்டு தொகுத்திருக்கும் .................. பல கவிதை வரிகளைக் கரிசனமின்றி வெட்டி , செறிவாக்கியிருப்பின் தொகுப்பின் பலம் இன்னமும் கூடியிருக்கும்.

பதச்சோறு

மூளையைக்கழற்றிவை

தலைவாரும் போது
நினைவுக்கு வருகிறது
நேற்றைய என் வாதம்
அதிகாரியின் கோபம்
மயிருக்கடியில் துடிப்புடன் இருக்கும்
மூளையால் வந்த விளைவு
மூளையைக் கழற்றி
பாதுகாப்பாய் வைத்து விட்டு
அலுவலகம் சென்றேன்

ஏன் எதற்கு வாதம் இல்லை
சிந்தனை இல்லை
சொன்ன வேலையைக் கம்யூட்டர் போல
சொன்னபடி செய்தேன்
உபத்திரவம் இல்லை
நீரோடை போலத் தெளிவாய் மனசு.
வேலை முடிந்து கிளம்புகையில்
அதிகாரி சொன்னார்:
வெரிகுட்

விலை : ரூ 70

வெளியீடு : தாமரைச் செல்வி பதிப்பகம்
சென்னை - 78

***** ***** *****

திரையரங்குகள் நிராகரிக்கும் மராத்தி சினிமா

மராட்டிய மாநில தலைநகரான மும்பையில். ஆறு பெருந்திரையரங்குகளின் (Multiplex) உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன!

காரணம் , அவை , மராத்தி திரைப்படங்களைத் திரையிடவில்லை.

இத்தனைக்கும் , இந்திய திரைப்படங்களின் முன்னோடியாக தாதா சாகேப் பால்கே - என்ற மராத்தி கலைஞன் பிறந்த மாநிலம்.

மிகத்தரமான SWAAS போன்ற படங்களைத் தந்த மராத்தி திரை உலகம் மும்பையின் மசாலா படங்களின் குத்தாட்டத்தில் , ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

மராத்தி அல்லாத அந்நிய மொழிக்காரர்களுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டும் மராத்திய அரசியல்வாதிகளுக்கு இவை தெரியாதா ....?

இந்திப்பட நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து ரொம்பவும் அக்கறை கொள்ளும் மும்பையின் மீடியாக்களும் இது குறித்து கருத்து சொல்வதில்லை.

மும்பாதேவி கடைக்கண் வைப்பாளா...?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com