பாவண்ணன்

கவிதைத்திருவிழா

அழகுச் சித்திரம்

அகன்ற மரத்தையும்
ஆடும் அதன் கிளைகளையும்
தற்செயலாக வந்தமர்ந்த மைனாவையும்
பின்னணியில் சுடரும் சூரியனையும்
ஒரே கணத்தில் இஇணைத்து
அழகுச் சித்திரமென காட்டி நிற்கிறது
சமிக்ஞைக்கு நின்ற
வாகனத்தின் கதவுக்கண்ணாடி

மரத்தின் விரிவையும்
கிளைகளின் நடனத்தையும்
மைனாவின் பார்வையையும்
சூரியனையும் சுமந்துகொண்டு
சமிக்ஞை கிட்டிய மறுகணமே
துள்ளித் தாவி பறக்கிறது
அந்த வாகனம்

****** ***** *****

பூமி

நள்ளிரவில் நடுவழியில்
பயணச் சீட்டுக்குப் பணமில்லாத
பைத்தியக்காரனை
இறக்கிவிட்டுப் பறக்கிறது பேருந்து

இருளைப் பூசிக்கொண்ட திசைகளில்
இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கும்
அந்த மூலையிலிருந்து இஇந்த மூலைக்கும்
மாறிமாறிப் பார்க்கிறான் அவன்
நடமாட்டமே இஇல்லாத தனித்த சாலையில்
பிறகு நடக்கத் தொடங்குகிறான்

கைவிரித்து நிற்கும் மரங்கள்
புதர்கள் மண்டிய மேடு
தவளைகள் இஇரைச்சலிடும் அல்லிக்குளம்
பார்த்தினியம் மணக்கும் வெட்டவெளி
இஇவை பிரதிபலிக்கும் நிலவின் ஒளியை
அவன் கண்கள் நிரப்பிக்கொள்கின்றன

ஓய்வுக்காக
ஒரு மரத்துக்குக் கீழே அமர்கிறான் அவன்

காற்று ஊட்டிய வேகத்தில்
குதிரைகளென திமிறுகின்றன கிளைகள்
சத்தமே இஇல்லாமல்
நாலைந்து இஇலைகள் உதிர்ந்து
புரண்டுபுரண்டு உருள்கின்றன

இடியோசை கேட்டதுபோல
வெடிச்சிதறல்கள் வீசப்பட்டதுபோல
அந்த இஇலைகளை
அச்சமுடன் பார்க்கிறான் பைத்தியக்காரன்

அவன் உடல் நடுங்குகிறது
ஏதோ ஓசை அவன் காதை அடைக்கிறது
எழுந்து வேகவேகமாக ஓடுகிறான்
இன்னொரு மரத்தடியை நோக்கி

பெருமூச்சில் விம்முகிறது அவன் இஇதயம்
கண்ணீரால் நிறைகின்றன அவன் கண்கள்
சில கணங்களில்
புயலிலும் மழையிலும்
நனையத் தொடங்குகிறது பூமி

****** ***** *****

முணுமுணுத்தல்

வேசத்துடன் தாவும்
குதிரையின் வேகத்துடன்
தரையில் இஇறங்கும் இஇந்த மழை
ஒரே நொடியில்
பூமியின் இஇதயத்துடிப்பை மாற்றிவிடுகிறது

மரங்களையெல்லாம் நனைத்து
நாடி நரம்புகளில் உயிரை நிரப்புகிறது
சக்தியேற்று நிமிர்ந்த கிளைகள்
கரகாட்டக்காரர்களாக சுழல்கின்றன
உற்சாகம் எக்காளம் உல்லாசம்
மற்றும் உத்வேகத் துடிப்பு
அவற்றின் ஆனந்தத்துக்கு அளவே இஇல்லை

அவசரமாக ஓடுபவர்கள் பின்னால்
ஒரு சிறுமியைப்போல
ஓடித் தொடர்கிறது மழை
வாகனங்கள் நிழற்குடைகள் நடைமேடை
கோயில் வாசல் காலணிகள்
எல்லாவற்றையும்
தொட்டுத்தொட்டு விளையாடுகிறது

அழுக்குக் கம்பளியால் உடல்போர்த்தி
சுவரோரம் ஒதுங்கியவனின்
பாதங்களை நனைத்து நகரும்
இந்த மழைத்தண்ணீர்
அவசரமாக மூடப்படும்
அவன் காதோரமாக நகர்ந்து
தன் சாரல் குரலில்
மீண்டும்மீண்டும் எதையோ முணுமுணுக்கிறது

****** ***** *****

நாடகம்

யாத்திரை ஊர்வலம்போல
பலநூறு பேர்கள் சூழ
புன்னகை படர்ந்த உதடுகளோடு
கைகுவித்து வணங்கியபடி
தெருவுக்குள் நுழைந்தார் வேட்பாளர்
அவர் முகம் ஒப்பனையில் சுடர்விட்டது
அவர் உடைகள் வெள்ளைவெளேரென்றிருந்தன
ரோஜாவா மல்லிகையா என
பிரித்தறிய இஇயலாத சுகந்தமொன்று
அவரைச் சுற்றி மணம்வீசியது
நொடிக்கொரு முறை உணர்ச்சிவசப்படும்
தொண்டர்களின் முழக்கங்கள்
வீட்டுச் சுவர்களில் மோதிச் சிதறின
தெருப்பக்கமாக ஓடிவந்த மக்கள்
கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்த்தார்கள்
மாடியிலிருந்தும் ஜன்னலோரமாவும் நின்று
மறைந்துமறைந்து பார்த்தார்கள் சிலர்
பொதுப்பார்வையால்
அனைவரையும் வணங்கியபடி நடந்தார் வேட்பாளர்
அவர் சின்னத்தை
அறிவித்தபடி தொடர்ந்தது தொண்டர் படை
எதிர்பாராத் தருணத்தில்
ஆரத்தித் தட்டோடு வெளிப்பட்ட பெண்களுக்கு
நூறு ரூபாய் நோட்டொன்றை
அன்பளிப்பாக வழங்கினார் வேட்பாளர்
கைகளில் ஏந்திவந்த குழந்தைக்கு
அழகான தமிழ்ப்பெயர் சூட்டி வாழ்த்தினார்
அனைவரின் முகங்களும்
கண்ணாடிபோல பளபளத்தன
ஒருவரிடமிருந்து இஇன்னொருவருக்கு
உற்சாகம் தொற்றிப் படர்ந்தது
தண்ணீர் விளக்கு அரிசி என
ஏதோ குறைசொல்லத் தொடங்கிய பெண்களிடம்
விசேஷமாக நின்று வாக்குறுதி அளித்தார்
தெருக்கொடி வரைக்கும் சென்று
திரும்பி நடந்தார் புடைசூழ
பயிற்சி பெற்ற நாடகக்காரர்களைப்போல
எல்லாருமே கச்சிதமாக நடந்துகொண்டார்கள்
அடுத்த காட்சிக்கு தயாரித்துக்கொள்ள
திரும்பிப் புரண்டது தெரு

****** ***** *****

ஓவியம்

அதிகாலை நடையில்
தினமும் நான் காணும்
இலைநுனியில் நிற்கும் பனித்துளி
முன்பொரு நாளில்
விடைபெறும் கணத்தில்
உன் கண்விளிம்பில் உறைந்த அழுகையை
இன்னொருமுறை தீட்டிக் காட்டுகிறது

****** ***** *****

அணில்

எப்போதும் தென்பட்டபடி இருக்கின்றன
மரணக் காட்சிகள்

மரணத்தின் முகத்தில் உறைந்திருக்கிறது
வாழ்க்கை கைவிட்ட அதிர்ச்சி
வாழ்க்கையின் முகத்தில் துளிர்த்திருக்கிறது
மரணம் தூவிய விதை

மருத்துவமனை மரணங்களைவிட
நடுத்தெரு விபத்து மரணங்கள்
ஒரு நொடியேனும் நடுங்கவைக்கின்றன

மரணம் தழுவிய முகம்
ஒருகணம் உதிர்ந்த பூப்போல தெரிகிறது
இஇன்னொரு கணம்
உலர்ந்த சருகெனத் தோன்றுகிறது.

தற்கொலை மரணங்களும்
கொலையுண்ட மரணங்களும்
ஆழ்ந்த வடுக்களாக பதிந்துவிடுகின்றன
பிறகு இந்த உருவங்கள்
கனவுவெளியில் நின்று
நாளெல்லாம் கைதட்டி அழைக்கின்றன

உறக்கத்தின்
ஏதாவது ஒரு வாசல்வழியே நுழைந்து
ஏதாவது ஒரு வாசல்வழியே வெளியேறுகிறது
மரணம்

நடந்துசெல்லும் மானுடக் கூடத்தின்
பாதங்களுக்குக் கீழே
நிழல்போல ஒட்டிக் கிடக்கிறது மரணம்

மரணம் விளையாடிக்கொண்டே இருக்கிறது
பழங்கள் தொங்கும்
கிளைக்குக் கிளைநகரும் அணில்போல

****** ***** *****

பிச்சிப்பூ

புதரோரம் பூத்திருக்கிறது
பிச்சிப்பூ


அருகில்
இரவில் காய்ச்சிய பானைகளில்
தளும்புகிறது சாராயம்
மறைந்து வரும்
வாடிக்கையாளர் எண்ணிக்கை
இஇன்று கூடுதலாக இஇருக்கிறது
போதை கூடிவரும் காலத்தில்
எல்லாரும் பறவைகளாகிறார்கள்
அவர்கள் கண்களில்
ஆனந்தம் சுடர்விடுகிறது

ஆவல் துடிக்கும் விரலொன்று
பறித்துச் செல்லுமென
புதரோரம் பூத்திருக்கிறது
பிச்சிப்பூ

****** ***** *****

தீராத புத்தகம்

எழுத்தையே உச்சரிக்கத் தெரியாதவன்
தன் கனவில்
ஒரு புத்தகத்தைப் படிப்பதாகச் சொல்கிறான்
நினைவிலிருந்து அதன் வரிகளை மீட்டி
உருக்கமான குரலில் கதைசொல்கிறான்

அந்தப் புத்தகத்தின் பெயர்
யாருமே கேட்டிராததாக இஇருக்கிறது
அதன் கதை
யாருக்குமே அறிமுகற்றதாகவும் இஇருக்கிறது
ஆனாலும் அவனைப் பொருட்படுத்துகிறவர்கள்
யாருமற்றதாக இஇருக்கிறது இந்த ஊர்

அவர்களது புறக்கணிப்பைப்பற்றி
அவனுக்குத் துளியும் வருத்தமில்லை
அவர்களுக்குச் சொல்ல நினைத்ததை
குருவிகளிடமும் அணில்களிடமும்
கூச்சமில்லாமல் சொல்லத் தொடங்குகிறான்
சில சமயங்களில்
காகங்களும் நெருங்கிச் செவிமடுக்கின்றன
உற்சாகம் பீறிட
மணிக்கணக்கில் தொடர்கிறது கதையாடல்
ஏற்ற இறக்கங்களோடு ஒலிக்கிறது
அவன் குரல்

தற்செயலாக
தொலைந்துபோன பந்தொன்றை
தேடிவரும் சிறுமி
கதைகேட்டு மகிழ்ச்சியில் துள்ளுகிறாள்
அடுத்தநாள் இன்னும் சில சிறுமிகளோடு
ஓடிவந்து உட்கார்கிறாள்
நாளடைவில்
மாபெரும் குழந்தைக்கூட்டமொன்று பெருகி
ஆர்வத்தோடு நெருங்கிவர
தீராத புத்தகத்தின் கதையை
நாள்தோறும் முன்வைக்கிறது அவன் குரல்

****** ***** *****

வேண்டுதல்

சாக்கடைக்குள் என்றோ
தவறி விழுந்து
இஇறந்துபோன குழந்தையை
காப்பாற்றச் சொல்லி
கதறி யாசிக்கிறாள்
பைத்தியக்காரி

அவசரத்திலும் பதற்றத்திலும்
நடமாடும்
ஆயிரக்கணக்கான
முகங்களை நோக்கி

****** ***** *****

அலைதல்


விடாது பெய்த மழை
ஒரு வாரத்துக்குப் பிறகு ஓய்ந்திருக்கிறது
வெட்டிச் சிதைத்த வாழைத் தோப்பைப்போல
சிதைந்திருக்கிறது நகர்ப்புறச் சேரி

ஒவ்வொரு முறையும் மழையின் வருகை
ஒரு யுத்தத்தைப்போலத் தாக்குகிறது
அதன் தந்திரங்களும் சக்தியும்
நம்பமுடியாதவையாக உள்ளன
கோட்டை மதில்போன்ற சுவர்களெல்லாம்
ஈரத்தாளென இஇற்றுவிழுகின்றன
வேருடன் பிடுங்கி வீசியதைப்போல
குடிசைகள் மிதந்துசெல்கின்றன
எங்கெங்கும்
நுரையுடன் பாய்கிறது புதுவெள்ளம்
ஓர் எதிரியின் படிமமாக
மனித மனத்தில் பதிகிறது மழை

இருப்பிடத்தைப் பறிகொடுத்த துயரில்
சிறிதேனும் தலைசாய்க்கும் எண்ணமுடன்
ஒரு மரத்தடியைத் தேடுகிறேன்
அங்கங்கே குழம்பி நிற்கும் சேறு
அலையவைக்கிறது

-பாவண்ணன்

பிப்ரவரி   01 , 2008

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com