பி ஜி எஸ் மணியன் எழுதும் தொடர்- திரை இசைத்திலகம்- கே.வி.மகாதேவன் -2

Published on

"நான் அனைவருக்கும் சொந்தமானவன்.  எனது இசையும் அனைவருக்கும் சொந்தமானதுதான். ஏனென்றால் திரைப்படங்களும் திரை இசையும் அனைவரையும் மகிழ்விக்கின்றன."- ஏ.ஆர். ரஹ்மான். 

நாகர்கோவிலின் வடசேரி சந்திப்பிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் வடசேரியை தாண்டியதும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வலது பக்கம் பிரியும் சாலையில் உள்ளது தான் கிருஷ்ணன்கோவில் கிராமம்.

 ஊருக்கு பொதுவாக இருந்த பகவான் கிருஷ்ணனின்  கோவிலே ஊருக்கும் பெயராக அமைந்த கிராமம்.  கிழக்கு பார்த்த கோவிலின் பின்புறம் மாடத் தெருவும் அதற்கு பின்னால் மேலத்தெருவும் அமைந்து இருந்தன.

மேலத்தெருவில் தான் வெங்கடாசலம் அய்யர் தனது மனைவி  லக்ஷ்மி அம்மாளுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இவர்களுக்கு மூத்த மகனாக மார்ச் மாதம் 20ஆம் தேதி 1918இல் பிறந்தவர் தான் கிருஷ்ணன் கோவில் வெங்கடாசலம் மகாதேவன் என்ற கே. வி. மகாதேவன்.  

மகாதேவனைத் தவிர அவருக்கு இன்னும் இரண்டு மகன்களும், மூன்று மகள்களும்உண்டு.

இசைப் பாராம்பரியம் மிக்க குடும்பம் அது.  வெங்கடாசல பாகவதரின் தந்தை அதாவது கே. வி. மகாதேவனின் தாத்தா திருவிதாங்கூர் அரண்மனையில் சங்கீத வித்வானாக இருந்தவர்.

வெங்கடாசல அய்யர் தந்தையின் வழியில் கிருஷ்ணன் கோவிலில் பணிபுரிந்து வந்தார்.  மாத சம்பளம் மூன்று ரூபாய்.  தவிர மாதத்துக்கு இருபது பக்கா (அதாவது படி) அரிசியும் கொடுக்கப்பட்டது.

மூன்று ரூபாய் மாதச் சம்பளத்தில் என்னதான் அரிசி விலையில்லாமல் கிடைத்தாலும் ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் வீட்டுவாடகையும் கொடுத்துக்கொண்டு தாரளமாக வாழ்வதற்கு சிரமம்தான் பட்டது.  இந்தச் சிரமமான காலகட்டத்தில் அவருக்கு பேருதவியாக இருந்து வந்தவர் அவரது மூத்த மகள் சீதாலக்ஷ்மியின் கணவர்தான்.  மாப்பிள்ளையாக இல்லாமல் ஒரு மூத்த மகனாக அந்தக் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை புரிந்து வந்தார் அவர்.

வடசேரியில் இருந்த எஸ்.எம். ஆர்.வி. உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் சிறுவன் மகாதேவன் படித்து வந்தான்.  

இசைமீது மகனுக்கு இருந்த ஆர்வம் காரணமாக தந்தையே முதல் குருவாக இருந்து ஆரம்ப பாடத்தை கற்றுக்கொடுத்தார். இருந்தாலும் ஒரு குருவின் மூலமாக மகனுக்குச் சங்கீதம் கற்றுக்கொடுத்து அவனது திறமையை நன்றாக வளர்த்து விடவேண்டும் என்று கருதிய வெங்கடாசல பாகவதர் வடசேரியில் இருந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த அருணாச்சலக் கவிராயர் என்பவரிடம் மகனுக்கு முறையாக சங்கீதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார் வெங்கடாசல பாகவதர்.

கே.வி. மகாதேவன் அவர்களின் குருவான பூதப்பாண்டி அருணாச்சலக் கவிராயர்  அருணாச்சல அண்ணாவி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.

சங்கீதத்தில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர்.  குருவருளும், திருவருளும் ஒருசேரப் பெற்றதனால் இயல்பாகவே இசைஞானம் நிரம்பப் பெற்றவர்.  வாய்ப்பாட்டைத் தவிர நாதஸ்வரம், தவில், பம்பை, முரசு, புல்லாங்குழல், ஹார்மோனியம், மோர்சிங், ஜலதரங்கம், வீணை, வயலின், கொன்னக்கோல், கோட்டுவாத்தியம் ஆகியவற்றையும் கற்றுக்கொடுக்கும் வல்லமையும், நிபுணத்துவமும் பெற்றவர். 

பூதப்பாண்டியில் இருந்த சிவகாமி அம்மை உடனுறை ஸ்ரீ பூதலிங்க சுவாமி ஆலயத்து உற்சவங்களில் கச்சேரி செய்யவரும் அந்நாளைய பிரபல வித்வான்கள் கிளாரினெட் சக்ரவர்த்தி ஏ.கே.சி. நடராஜன், நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலம், இசை மணி சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு ஆகியவர்கள் கண்டிப்பாக அருணாச்சல கவிராயரின் இல்லத்து வந்து அவரை வணங்கி அவரது ஆசிகளை தவறாமல் பெற்றுச் செல்வார்கள்.

எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பார் அவர்.  இசை ஆர்வம் கொண்டு தன்னிடம் கற்றுக்கொள்ள வரும் மாணவர்கள் வசதி குறைந்தவர்கள் என்றால் அவர்களுக்கு இருக்க இடமும், உணவும் கொடுத்து இலவசமாகவே குருகுலவாச முறையில் அவர்களுக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்து வந்தவர் அவர்.

அவரிடம் இசை நுணுக்கங்களை கற்றுத் தேறினான் சிறுவன் மகாதேவன். மேடையேறிக் கச்சேரி செய்யும் அளவுக்கு அவனது இசை ஞானம் வளர்ந்துவிட்டது.

பாட்டு மகாதேவனை ஈர்த்த அளவுக்கு படிப்பு அவனை ஈர்க்கவில்லை.  என்றாலும் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் படிப்பை விடாமல் தொடர்ந்தே வந்தான் அவன்.

இந்த நிலையில் ஒருநாள் சென்னையில் இருந்து வந்த பால கந்தர்வ கானசபா என்ற நாடகக் குழுவினர் பூதப்பாண்டி அருணாச்சலக் கவிராயரை தொடர்பு கொண்டு நன்றாகப் பாடத்தெரிந்த யாராவது இருந்தால் நாடகக் கம்பெனியில் சேர்த்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

அவருக்கு மகாதேவனின் நினைவு வந்தது.  அவனது விலாசத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார் அவர்.

"நாடகக் கம்பெனியில் சேர்ந்து சென்னைக்கு சென்றால் நன்றாக முன்னுக்கு வரலாம்.  ஒரு தியாகராஜ பாகவதர் மாதிரி.. நாமும் நன்னா பெரிய லெவல்லே வரலாம்." - பதினான்கு வயசு மகாதேவனின் மனசுக்குள் கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.

அதே சமயம் வீட்டிலோ மூத்த மகனை அப்படி அனுப்ப மனமில்லை.  

ஆனால் மகாதேவன் மனதிலோ நாடகக் கம்பெனியில் சேரவேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்திருந்தது.

"நேக்கோ படித்தம் வரலே.  இங்கேயே இருந்துண்டு என்னத்தை சாதிக்கப் போறோம்?  எப்படியும் எனக்கு படிச்சு முடிச்சப்பறம் வேற ஏதாவது ஊருலே ஜோலி கிடைச்சா அப்போ அனுப்பத்தானே செய்வேள்?  அதை இப்பவே பண்ணிடலாமே.  கண்டிப்பா டிராமா கம்பெனியிலே சேர்ந்தா நான் நல்லபடியா முன்னுக்கு வந்துடுவேன்." - பெற்றோருக்கு சமாதானம் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டான் அவன்.

ஒரு வழியாக அவர்கள் சம்மதம் கிடைத்துவிட்டது. 

ஆனால்..  சென்னைக்குச் செல்வதென்றால் சும்மாவா?

கையில் பணமில்லாமல் எப்படி அவ்வளவு தூரம் அனுப்புவது?

அடுத்த பிரச்சினை தலை தூக்கியது.

என்ன செய்வதென்று தயங்கிய வேளையில் அந்தச் சமயத்தில் உதவிக்கரம் கொடுக்க வந்தார் மகாதேவனின் அக்காள் கணவர்.   இருபத்தைந்து ரூபாய் பணத்தைக் கொடுத்து மகாதேவன் சென்னை செல்வதற்கு உதவி செய்தார் அவர்.

"நான் மாடத் தெருவுக்குப் போய் நாராயணி அக்காவை பாத்து நமஸ்காரம் பண்ணிட்டு வந்திடறேன்" -  மகாதேவனின் கால்கள் மாடத்தெருவை நோக்கி நகர ஆரம்பித்தன.

************

"க்கா அக்கா." - என்று அழைத்தபடியே உள்ளே நுழைந்த மகாதேவனின் குரலைக் கேட்டு அடுக்களையில் இருந்து வெளியே வந்தார் நாராயணி அம்மாள்.

நாராயணி அம்மாள் மகாதேவனின் ஒன்றுவிட்ட தமக்கை. மகாதேவனின் பெரியப்பா மகள்.

அந்தக் கால வழக்கப்படி சிறு வயதிலேயே திருமணமாகி ஒரு பெண்குழந்தையைப் பெற்ற பிறகு அடுத்து ஒரு மகனைப் பெற்று அந்தக் குழந்தையை பறிகொடுத்த சோகம் ஆறுவதற்கு முன்பாக கணவனையும் இழந்து ஒரே மகளுடன் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டவர்.  

விதி அவரது வாழ்க்கையை அமங்கலப்படுத்தி விட்டிருந்தாலும் பிறர் வாழ்க்கைக்கு மங்கலத்தைத் தரும் ஒரு தேஜஸை நாராயணி அம்மாள் பெற்றிருந்தார்.  அதை எந்த விதியாலும் அவரிடமிருந்து தட்டிப்பறிக்க முடியவில்லை.

அவரது வார்த்தைகளுக்கு குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கட்டுப்படுத்தும் தன்மை இருந்தது.

"வா. மாதேவா.  டிராமா கம்பெனியிலே சேரப் போறாயாமே?  அப்பா சொன்னார்.  

வாஸ்தவம்தானா?"  எடுத்த எடுப்பிலேயே அப்படி அக்கா கேட்டதும் ஒரு கணம் தயங்கி நின்றான் மகாதேவன்.

"ஆமாக்கா.  இங்கே இருந்து என்னத்தை பண்ணறது?  மெட்ராஸ் போனா எனக்கு தெரிஞ்ச சங்கீதத்தை வச்சுண்டு முன்னுக்கு வரலாம்னு தோணறது." - என்றான் அவன்.

"உனக்கு இருக்கற திறமைக்கு நீ நன்னா வருவேடா மாதேவா.  கவலையே படாதே. தைரியமா போயிட்டு வா. கொஞ்சம் இரு. இதோ வந்துடறேன்." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற நாராயணி அம்மாள் திரும்பி வந்து கையை நீட்டி, "இந்தா "மெட்ராசுக்குப் போறே.  புது இடம்.  இந்தா.  இந்தப் பதினாறு ரூபாயை வழிச் செலவுக்கு வச்சுக்கோ."  நன்னா பெரிய ஆளா நீ மின்னுக்கு வரணும்." என்றார்.

அப்படியே சிலிர்த்துப்போனான் மகாதேவன்.

"பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்" என்று அந்த தெய்வமே நாராயணி அக்காவின் உருவில் வந்து ஆசீர்வதிப்பது போலத் தோன்றியது அவனுக்கு.

அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து அக்காவை நமஸ்கரித்து எழுந்து அந்தத் தொகையை இருகைநீட்டிப் பெற்றுக் கொண்டான் அவன்.

"பகவான் இருக்கார்.  உன்னை நல்லா பார்த்துப்பார்." என்று திறந்த மனதோடு தம்பியை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார் நாராயணி அம்மாள்.

தமக்கையின் ஆசீர்வாதமும், பெற்றவர்களின் பிரார்த்தனையும், கூடப் பிறந்தவர்களின் உற்சாகமான அன்பும், துணையாக வர,  குருநாதரின் மனம் நிறைந்த ஆசிகளோடும் எல்லாவற்றுக்கும் மேலாக சாதிக்கவேண்டும் என்ற ஆசையுடனும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் நாகர்கோவிலில் இருந்து பஸ் பிடித்து திருநெல்வேலிக்கு வந்து சென்னைக்கு ரயில் ஏறினான் மகாதேவன்.

கடற்கரை நகரமான சென்னைப்பட்டினம் அவனுக்காக வெற்றி முத்துக்களை மாலையாக கோர்த்து அணிவிக்கக் காத்துக்கொண்டு இருந்ததென்னவோ நிஜம்தான்.  

ஆனால் அந்த முத்துக்களை  அடைவதற்கு முன்னால் எத்தனையோ சோதனைச் சுறாக்களை அவன் எதிர் கொள்ளவேண்டி இருக்கும் என்பது அந்தப் பதினான்கு வயதுச் சிறுவனுக்கு அப்போது தெரிந்திருக்க  நியாயமில்லையே. 

(இசைப் பயணம் தொடரும்..)

logo
Andhimazhai
www.andhimazhai.com