பிச்சினிக்காடு இளங்கோ

கவிதைத்திருவிழா

என் தடத்தில்...

எப்போதும் நான்
உன்பின்னே.
...
இயங்காத வேளையிலும்
எண்ணமெல்லாம்
நீயாக இருக்கிறாய்

உன்னோடு இருப்பதுதான்
வாழ்க்கை
என்று அர்த்தமாகிவிட்டது

ஓர் உயர்ந்ததை
ஓர் உன்னதத்தை அடைய
உன்துணை தேவைதான்

அதற்காக
இன்னொரு வீடாய்
ஒரு கனவுலகம்கூட தேவையே

எல்லாமே நீதான்
என்றிருப்பது
எனக்கு ஏற்புடையதல்ல

எத்தனை காலத்துக்குச்
சராசரியாயிருந்து
வாய்நீர்வடித்து வாழ்வது

ஒரு கணமாவது
உள்ளத்தின் வலிமைக்கு
வாய்ப்புத்தரவில்லையே நான்

காலத்தின் கையில்
தூரிகையைத் தந்தது
தவறு

யாரோ ஒரு
ஒப்பனைக்காரரிடம்
ஒப்படைத்ததும் அப்படியே

காலம்
என்கையில் தூரிகையாய்
இனி

வண்ணம் தீட்டுவேன்
என்னைத் தீட்டுவேன்

என்
இருத்தலின் அடர்த்தியை
எடைபோட
இப்போதிலிருந்து நான்...
:

எதையும் மறைக்காமல்
சிரிக்கிறேன் நான்

காயும் நான்
கனியும் நான்

உங்களைப்போல் நான்
பிணமாவதில்லை
கனியாகிறேன்

நான் மரத்தில்
செடியில் கொடியில்
கனியாகிறேன்

சொல்வதையெல்லாம்
கனியாய்ச்சொன்னால்
கனிவாய்ச்சொன்னால்
நீங்கள்
கனிகளின் மரமாகலாம்

என் மணம்போல்
உங்கள்
மனத்திற்கும்வேண்டும் மணம்

என்னிடம்
மணத்துடன்கூடிய மனமும்
உங்களிடம்
மனத்துடன்கூடிய மணமும்
இருந்தால்
நாம்தாம் மகத்தானவர்கள்.

எல்லாம்
என் விழித்தலில் இருக்கிறது
தேவதையின் தரிசனம்

என் தேடலெல்லாம்
தேவதையின் தரிசனமல்ல
தேவதைதரும் தரிசனம்

அங்கிருந்துதான்
என் திசைகள் தொடர்கின்றன

அந்த விழுதைப்பற்றித்தான்
தொங்கினேன்;ஆடினேன்

அந்தக்கணத்தில்தான்
தேவதையின்
சிறகுகளைப்பொருத்திக்கொள்கிறேன்

இருளில் ஓர் ஒளி
நெளியிது பாம்பாய்

பகலில் ஓர் இருட்டு
தெரிகிறது வெளிச்சமாய்

கனிகள் என் கைகளில்

எல்லாம்
அந்த ....


***** ***** *****

என் வெளி.....


என் வீடு
என் வீட்டறைகள்
எனக்கே உரித்தான
அறைகளெல்லாம்
எனக்கான சுதந்தரத்துடன்
இல்லை.

ஜன்னல்களை
விருப்பம்போல் திறந்துவைக்க முடியவில்லை

காற்று
விழுந்தென்னைப்புணர்வது
தடுக்கப்பட்டுவிட்டது

ஆகாயவைரங்களைக் காணாமல்
கரையும்பொழுதுகளால்
கனக்கிறது மனம்

என் சுதந்தரவெளி
யாருடைய எல்லைக்குள்ளோ
இருப்பது அறிந்து
அமைதியிழக்கிறது அந்தரங்கம்

நான்குபுறமும்
முளைத்துக்கொண்டே உயரும்
கழுகுகள்
என் சூரியனையும்
சந்திரனையும்
பறித்துக்கொண்டன

நான்
என் சுதந்தரம்
எப்படி சுதந்தரமாக?

***** ***** *****

மழைபோல......


உண்மையை எழுதுவது
உண்மையில் சுகமானது என்பது
உண்மையே

அன்று
அந்தப்பொழுதில்
சடங்காக ஓர் அறிமுகம்

சந்தர்ப்பம்
சடங்கை மீறியதை
உணர்ந்தேன்

ஆழமாய் வேர்விடுதலின்
அறிகுறியும் சேர்ந்துகொண்டது

விலங்குகள்
அறுந்து விழுந்ததன் அடையாளங்கள்
தெரிந்தன

இப்படி
எல்லாம் அநிச்சையாய் அமைந்த
அதிசயப்பொழுது அது

எப்படி?
எதனால்? என்பதெல்லாம்
கணக்குகளால்
கணிக்கமுடியாதவை

காலத்தின் கையிலும்
என்முகவரி இருந்ததோ!

காலமே என்னை
கடிதமாக்கியதோ!

காலமே வடிவெடுத்து
வந்துசேர்ந்ததோ!

கருணையாய் வந்து
கருணையாய்த் தந்து
காப்பாற்றியதெப்படி?

சாந்தமும்
சமாதானமுமாய் வந்துசேர்ந்ததைக்
கணமும் கண்ணீர்த்துளிகளால்
பதிவுசெய்கிறேன்

மழையின் ஈரம்
இன்னும் இருக்கிறது என்பதை
உணர்ந்து உணர்த்துதலோடு
நகர்கிறது எல்லாம்


***** ***** *****

தெய்வங்கள் நம்மோடு...



தெய்வங்கள் நம்மோடு
வாழ்கின்றன
தரிசனம் செய்வதில்தான்
எல்லாம் இருக்கிறது

உணர்தலினால்தான் அந்த
உண்மையை
ஊதிப்பெருக்கமுடியும்.

ஊதிப்பெருக்குவதிலும்
உணர்ந்து உறைவதிலும்
உறைந்து கிடக்கிறது அந்த
உன்னதம்

தேவையை உணர்ந்து
கரைவதைகாட்டிலும்
தெய்வத்தின் அடையாளம் என்ன?

கரைவதை எல்லாம்
உணரமறந்தால்
தெய்வங்கள் வாழ்ந்தும் என்ன?

தெவங்கள் நம்மோடு
வாழ்கின்றன
தெவங்கள் நம்மோடுதான்
வாழ்கின்றன



***** ***** *****

மலட்டு நதி

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் )

ஓடிக்கலக்கும் நதிகளால்
நலங்கள் இல்லை

ஓடிக்கொண்டிருப்பதால்
வளங்கள் இல்லை

கலந்துவிட்டபின்
காணாமற்பாவதற்கா பயணம்?

எங்கேயாவது நின்று
நிதானித்து
திசைமாற வேண்டாமா?
திசைமாற்ற வேண்டாமா?

பயனற்றும்
அர்த்தமற்றும்
பாய்ந்துகொண்டிருப்பதால்
காலத்தின் கையில்
என்ன இருப்பு?

வானம்
பார்த்துக்கொண்டே இருக்கும்

காற்றும்
வீசிக்கொண்டே இருக்கும்

இரவுப்பகல் டையை
உடுத்தி அவிழ்ப்பதில்
ஒன்றுமில்லையே

கிளைவெடித்துக் கைவிரிப்பதும்
கைகாட்டுவதும் அவசியம்
அப்போதுதான் ஈரமாகி
ஏதேனும் முளைக்கும்

காணாமற்போவதற்கா
இந்தக்கண்விழிப்பு?

தேடாமல் தொலைவதற்கா
இந்தத் தீரும்பயணம்?

நந்தவனங்கள்
மிஞ்சட்டும்

***** ***** *****


முதல் மரியாதை

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் )

என் மரியாதைக்குரியவர்களே
வணக்கம்

எங்கள் விருந்தில்
நீங்களில்லை

எங்கள் வீட்டு
மங்கல விழாக்களிலும்
இல்லை

கோவில் திருவிழாவிலும்
நீங்கள்
ஒரு கோடியில்

எங்கள் துக்கத்திற்காகத்
தூதுபோன உங்கள்
வியர்வையில் விளைந்தவை
எங்கள் வீட்டுக்குள்!

நீங்கள்
எங்கள் வாசற்படியோடு சரி

உங்கள் சுதந்தரம்
உங்கள் கனவு
உங்கள் கற்பனை
உங்கள் வாழ்க்கை
நாங்கள் விரித்த இருட்டுக்குள்

நாங்கள்
தலைவர்கள்
தெய்வங்கள்
என்றைக்கும் உங்களுக்காக இல்லை

நாலாவது இடத்திலிருக்கும்
உங்களை
நடுவில்வைத்துப்பார்க்க
எந்தமதங்கள் அழைத்தாலும்
மசியவில்லை
உங்கள் மனம்

மதம்
மக்களுக்கு ஓபியம் என்று
லெனின் சொன்னது தெரியுமோ!

மதங்களில்
எந்தமதம் நல்லமதம்?கவிஞர்
இளவேனில் எழுதியதும் தெரியுமோ!

உங்களை நோக்கி
மண்டியிடுகிறேன்

மதம் மாறாததற்காக அல்ல
மதம் பிடிக்காததற்காக

மதப்பற்றே இல்லாத
நீங்கள்தான் என்
மரியாதைக்குரியவர்கள்.

- பிச்சினிக்காடு இளங்கோ

சிங்கப்பூர் தமிழர் பேரவையில் பங்காற்றும் பிச்சினிக்காடு இளங்கோ தீவிரமாக இயங்கும் கவிஞர்.

ஜனவரி   12, 2008 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com