முன்னுரை :
மதிப்பிற்குரிய கி.ரா அய்யா அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் சாந்திக்கு எழுதிய பத்து கடிதங்களின் நகல் இணைத்து உள்ளேன். 1999 கடிதம் முதலாக 2009 வரையிலான கடிதங்கள் எங்கள் வசம் உள்ளன. அவற்றை இணைத்து உள்ளேன். சாந்தியின் அப்பாவின் மறவையொட்டி தாங்கள் எழுதிய கடிதம், எங்கள் அலுவலகத்தின் ஊழியர்கள் படிக்க நேர்ந்தது. சார், மேடமுக்கு, ஏதாவது சொந்த விசயங்களை எழுதி இருப்பார் எனத் தயங்கினார்கள். கி.ரா.வின் எழுத்துகள் அனைத்தும் – சொந்த விசயங்கள் சார்ந்தது அல்ல – அனைத்தும் பொது – கி.ரா ஒரு பொதுச்சொத்து; திறந்த புத்தகம் – தேடி எடுத்து, எவ்வளவு வேண்டுமென்றாலும் உண்டு கொள்ளுங்கள். உங்களால் செரிக்க முடியுமா, சிறந்த சத்தாக சிந்தையில் ஏற்றிக்கொள்ள முடியுமா! மகனே உன் சமத்து.
அம்மாவின் நலனில் அக்கறை கொள்ளும்
அன்பு
கணேசன்
17.06.99
அன்பார்ந்த சாந்தி தம்பதியருக்கு...
அம்மா இழப்பு குறித்து ஒரு நீண்ட கடிதம் எழுத நினைத்தே நாட்கள் ஓடி விட்டது. எனது அம்மாவைப்பற்றி எழுதிய கட்டுரையும் முடிக்கப்படாமல் நீண்ட நாட்களாகக் கிடக்கிறது. உன் கடிதம் கிடைத்த சமயத்தில் உனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச நினைத்து, நீண்ட மன ஓசை தான் உன் வீட்டு பதிலாக இருந்தது.
சில இழப்புகள் மனசின் ஒரு பகுதியை பிய்த்துக்கொண்டு போய்விடும். அதை எதாலும் ஈடுகட்டமுடியாது. தாய் – சேய் பிரிவு ரெண்டும் அப்படித்தான். என் அம்மாவுக்குப் பிள்ளைகள் நிறைய்ய என்றாலும் இறந்துபோன சடகோபன் என்ற என் தம்பியை நினைக்கும் போதெல்லாம் அழுகையை அடக்கமுடியாது அவளால். ஒவ்வொரு பிள்ளையிடமும் ஒரு குண அம்சத்தை கண்டு போற்றுகிறவர்களாய் தாய் இருக்கிறாள்.
வளர்ப்பாளி தனது நாயை ஈட்டியால் ஊடுருவும்படி குத்திவிட்டு சொடக்குப் போட்டுக் கூப்பிட்டாலும் வாலை ஆட்டிக்கொண்டு அவனிடம் வரும்; தாயும் அப்பேர்பட்டவர்களே. பெண் தெய்வங்களுக்கு எத்தனையோ பெயர்களில் கோவில்கள்; அதில் பிழை பொறுத்தாள் அம்மன் கோவிலும் ஒன்று.
பிரியங்களுடன்,
கி.ரா