பிரியங்களுடன் கி.ரா – 11

Published on

30.11.2009

பிரியமுள்ள S.P.சாந்திக்கு நலம்.

போட்டோப் படங்கள் கைக்கு வந்து அநேக நாட்கள் ஆகிவிட்டன. இந்த ஆண்டு எடுத்த படங்களில் இது ரொம்ப அருமையாக அமைந்துவிட்டது. குடும்ப ஆல்பத்தில் போட்டு வைத்துக்கொண்டால் நினைக்கும் போதெல்லாம் எடுத்துப் பார்த்து மகிழலாம்; பார்க்கும் போதெல்லாம் சந்தோசம் வரும். இதைப் பெருசாக்கி, கண்ணாடிச் சட்டம் போட்டும் வீட்டில் மாட்டி வைத்துக்கொள்ளலாம். மற்றப் படங்களை ஆல்பத்தில் போட்டுவைக்கலாம்; அவைகள் முந்தைய ஆண்டில் எடுத்தவை.

T.V தொடர்கதை போல மழை பெய்து கொண்டே இருக்கிறது. “வந்தாலும் வசவு; வராவிட்டாலும் வசவு” என்று பிள்ளைகள் அழிப்பாங்கவி (வெடி) போடுவார்கள் மழையைப் பற்றி.

“நண்பர்களோடு நான்” என்ற ‘அகரம்’ வெளியிட்ட புத்தகத்தை நேற்று எடுத்துப்பார்த்தபோது உன்னுடைய தாடி சித்தப்பா பற்றி வந்த கட்டுரையைப் படித்தேன். கட்டுரை சொகமாக அமைந்திருக்கிறது. எத்தனை தடவையும் படிக்கலாம்.

பிள்ளைகளை வெளியில் விட ஒழுங்காக பள்ளிக்கு முடிக்கி படிக்க வைக்கிறார்கள். இந்த வயதில் நாங்கள் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து காற்றில் உலர்ந்து, அலைந்து திரிந்து இயற்கையிடம் பள்ளி பாடம் கற்றோம். எங்க சின்னம்மா சொல்லுவாள் தினமும் என்னைப்பார்த்து சாப்பிடும் வேளையில் “நீ என்னத்தெ உருப்படப் போறெ” என்று!

இங்கே அனைவரும் சுகம்.

குழந்தைகளுக்கு எங்கள் பிரியங்கள்.

என்றும் அன்புடன்,

கி.ரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com