பிரியங்களுடன் கி.ரா – 17

Published on

27.09.89

புதுவை - 08

பிரியமுள்ள பேத்தி சாந்திக்கு,

தாத்தாவின் ஆசிகள்.

உன்னுடைய 15-9-89 தேசிய கடிதத்துக்கு இன்னும் நான் பதில் எழுதுவதில்லையே!

மெட்ராஸில் ஒன்றும் பேச முடியவில்லை ; சித்தப்பாவின் புத்தக வெளியீட்டில் கவனமும் அதன் பிறகு “சித்தி” வீட்டில் உண்டியும், அதன்பிறகு யாரோ அம்மையார் - வாசகி - பார்க்கவும் ( பார்க்க வந்த நேரத்தைப்பார்!!) உன்னோடும் திலகத்தோடும் பேச முடியாமலாகிவிட்டது. போகட்டும்.

சித்தப்பா நேத்து எழுதியிருக்கிறார் எனக்கு. சந்தோஷத்தில் கடிதமே சங் சங் கென்று குதிக்கிறது. அப்படியாப்பட்ட ஒரு ஆனந்தம். பரமானந்தம் ராமமூர்த்தி என்று பெயர் வைத்துவிடலாம்! உண்மையில் அவரிடம் இவ்வளவு எழுத்துத் திறன் இருக்கும் என்று நானும் நினைத்திருக்கவில்லை.

இந்த அத்தனை குகை சித்திரங்களையும் பின்னி ஒரு நாவல் மட்டும் அவர் எழுதியிருந்தால் அடுத்த ஞானபீடம் பரிசு அவருக்குத்தான். பரவாயில்லை; புதுச்சித்தியின் மடியிலேயே சொக்கிக்கிடக்காமல் இவ்வளவு எழுத முடிந்தது ஆச்சர்யம்தான்! விழா சிறப்பாக அமைப்பாக நடந்து முடிந்தது பற்றி எனக்குத் திருப்தி.

உங்களுக்கு எப்படிப்பட்டது என்று தெரியவில்லை. தாத்தா என்று குறிப்பிட்டது கோவமா என்று கேட்டாய். ஏன், எதுக்காகக் கோபப்படனும். பெண் ஒரு ஆணை எப்படி அழைத்தாலும் அவனுக்கு சந்தோஷம் தானே!! அதோடு நான் நிஜமாகவே தாத்தா தான் உனக்கு!

நீ அற்புதமாகக் கடிதம் எழுதுகிறாய். நினைத்தபடி உன் பேரை பேசுகிறது எல்லாராலும் இப்படி எழுத முடியாது. ரசிகமணி.டி.கே.சி. சொல்லுவார்; கரும்பும் நாணலும் ஒரே இனம் தான். கரும்பு போன்றவள் பெண், நாணல் போன்றவன் ஆண். நானலை எவ்வளவு பிழிந்தாலும் சொட்டு சாறு வருமா; வந்தாலும் வாயில் வைக்க விளங்குமா என்பார். பெண்களுக்கு உள்ளே அசாத்தியத் திறமைகள் ஒளிந்துகிடக்கின்றன. அதைப் பெண்ணே அறிய மாட்டாள் என்பார்.

உன்னைப்பார்த்தால் தோற்றத்தில் “மீண்காரி” மாதிரி தோன்றினாலும் ( இதை நான் சொல்லவில்லை, சித்தப்பா சொன்னது) உனக்குள்ளே ஒரு அழகு தேவதை குடிக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிகிறேன். ( ரொம்பப் புகழ்கிறேன் என்று மயங்கிவிடாதே) மனசில்பட்டதைச் சொன்னேன்.

திலகாவையும் விசாரித்ததாகச் சொல்லு. ( அவளின் சிரித்த முகம் மனசில் நிற்கிறது) ஜவஹர், மற்றும் அந்த சட்டக்கல்லூரி மாணவன் - பெயர் ஞாபகத்துக்கு வர மாட்டேன் என்கிறதே - அவரையும் விசாரித்ததாகச் சொல்லும். அப்பா, அம்மா, மற்றும் சகோதிரியைம் விசாரிக்கிறேன். சரி, எம்ஃபில் மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், வகுப்புக்குப் போகிறேன்.

அன்புடன்,

கி.ரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com