பிரியங்களுடன் கி.ரா – 19

பிரியங்களுடன் கி.ரா – 19
Published on

இடைசெவல்

 15.07.53

பிரியமுள்ள தம்பி நடராஜனுக்கு,

தென்காசி ‘பஸ் ஸ்டாண்ட்’டில் தங்களிடம் பிரியா விடைபெற்று பிரிந்து வந்தேன். என் ஊர் வந்து சேரும் வரை உங்கள் நினைவுதான். திருநெல்வேலியில், உங்களை என்னுடன் கூட்டிக்கொண்டு வராததற்கு என்னுடன் ரகுநாதன் மிகவும் கோபித்துக்கொண்டார். அவர் உங்களை சந்தித்துப்பேச ஆவலாக இருக்கிறார். அவர் உங்களுக்கு இரண்டு புஸ்தகங்கள் அனுப்புவார். நீங்களும், ராஜாவும் படித்து தாத்தாவுக்கும் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். ( ரொம்பவும் முக்கியமான புஸ்தகங்கள். நீங்கள் ஒருவரும் படிக்கமுடியவில்லையாயினும் பந்தோபஸ்தாகவாவது வைத்திருங்கள்).

நான் நான்கு வருஷங்களுக்கு முன் உங்களைப் பார்த்ததற்கும் இத்தடவை பார்த்ததற்கும் மிகவும் வித்தியாசம் கண்டேன். அந்த ‘உம்மணாமூஞ்சி’ நடராஜனுக்கும், இப்போது என் அருமை நடராஜனுக்கும் எவ்வளவு வித்தியாசம்!

நண்பர் ராஜாவும் மாறியிருக்கிறார்; குற்றாலமே மாறி இருக்கிறது! எல்லோருக்கும் குற்றாலம் என்றால் அருவிகள், குளிப்புகள், சாரல்கள், மழைகள் எல்லாம்; எனக்குக் குற்றாலம் நீங்கள், டி.கே.சி, ராஜா, ல.ச., தம்பி துரைபாண்டியன் இவர்கள்தான்!

நான் அங்கு கழித்த நாட்களை இங்கிருந்தபடியே நினைத்துப்பார்க்கிறேன். சிரிப்பு வருகிறது; ரஸமான அனுபவம்!

‘நீங்களெல்லோரும் அந்த சாரவாடையிலும் குளித்துவிட்டு வந்து ‘ஜில்’லென்று இருந்து கொண்டு அட்டகாஸம் செய்ததும்; நான் சிறகு ஒடிந்த பறவையைப்போல் மூலையில் உட்கார்ந்து கொண்டு இருந்ததையும் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்? உங்களையெல்லாம் மீண்டும் என்று சந்திக்கப்போகிறேனோ? 

logo
Andhimazhai
www.andhimazhai.com