இடைசெவல்
23.10.53
அன்பார்ந்த தம்பிமார்களே,
உங்கள் கடிதத்தைப் படித்துமுடித்த உடன் குற்றாலத்துக்கு ஒரே பாச்சலாய் பறந்து வரவேண்டுமென்று தோணுகிறது. விழா ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களைப் பார்க்கமுடியாது போல் இருக்கிறதே. நான் படுத்த படுக்கையில் இருக்கிறேன். 31ம் தேதிக்குள் கொஞ்சம் குணமாகிவிடாதா? வந்தால் இரண்டு நாளாது இருக்க வேண்டாமா? எனக்குக் கூட்டத்தைக் கண்டாலே நடுக்கம் வரும்! அந்த ‘நெறிபொறி’ யில் உங்களோடு நான் எங்கே ‘ஜிஞ்சாமிர்தமாய்’ இருக்கப்போகிறேன்?
உங்கள் தாத்தாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். என் பார்வைக்கு நன்றாகத்தான் இருக்கிறது. இரண்டு நாளைக்குள் உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என நம்புகிறேன். நகல் எடுத்து அனுப்ப இப்போது இருக்கும் உடல் நிலையில் முடியாது. அசலையே அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து கூட்டத்தில் தவறவிடாமல், படித்து முடித்து தவறாமல் வைத்திருங்கள்.
முக்கியமாக தாத்தாவின் அபிப்ராயம் அதைப்பற்றி தேவை. நான் எழுதும் முதல் கட்டுரை என்பதை மனதில் கொண்டு படிக்க வேண்டும்.
கட்டுரை, வெறும் வியாசமாக இல்லாமல் ஜீவனுள்ள பல அம்சங்களுள்ள ஒரு புது முறையில் எழுத முயன்றிருக்கிறேன். இது எனக்கு வெற்றி தந்தால் தாத்தாவைப்பற்றி ஒரு புஸ்தகம் எழுத முடியலாம். அவரைப்பற்றி ஏற்கனே ஒரு புத்தகம் (பா.தெண்டமான்) வெளிவந்திருக்கிறது. அதை நான் படித்ததில்லை. கிடைத்தால் தேவலை.