4-7-81
இடைசெவல்
நண்பர் நடராஜன் அவர்களுக்கு
அனேக நமஸ்காரங்கள். நீங்கள் அனுப்பிய நாற்காலியிலிருந்து கொண்டுதான் இக்கடிதம் எழுதுகிறேன். உங்கள் நாற்கலியோடு இதை மாற்றிக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்ததாக எழுதி இருக்கிறீர்கள். இப்பொழுது அப்படிச்செய்தால் சுவாரஸ்யம் இருக்காது. நானும் இந்த நாற்காலியோடு கொஞ்சநாள் பழகிய பின்தான் அப்படிச்செய்ய வேண்டும். அதற்குள் இந்த நாள் காலிபாலும் மூட்டை பூச்சி பிடித்துவிடும். பின்பு இரண்டின் நிறையிலும், தரத்திலும் வித்யாசம் இருக்காது!
ஜடவஸ்துக்களைத்தான் இப்பொழுது நாம் ஒருவருக்கொருவர் அன்பளிப்பாகக் கொடுத்துக்கொள்கிறோம். மேலே கண்டபடி செய்தால் உயிருள்ள ஜீவ வஸ்துக்களை பரிமாறிக் கொண்டவர்கள் ஆவோம். அந்தக் காலத்தில் ராஜாக்கள் யானைகள் குதிரைகளை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்வார்களாம் அதனால் என்ன பிரயாஜனம்?
உங்கள் நாற்காலி வந்து சேருவதற்கும் குற்றாலத்திலிருந்து கொண்டுவந்த வாத்து கீழே விழுந்து உடைவதற்கும் சரியாக இருந்தது. பிரியமாக பேனிவந்த பொருள் ஒன்று உடைந்து போய்விட்டது. நாம் எல்லாம் ஒரு நாளைக்கு இப்படித்தான் சொல்லாமல்க் கொள்ளாமல் உடைந்து போகப்போகிறோம்.
உங்கள் எல்லோருக்கும் நான் எழுதி அனுப்பிய பொன் மொழிகளை கொஞ்சம் தயவுசெய்து திரட்டி எழுதி எனக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும் அவைகளுக்கெல்லாம் நான் நகல் வைத்துக்கொள்ளவில்லை.
பின்னால் ஒரு சமயம் உதவக்கூடும். இப்பொழுதும் நிறைய மொழிகள் எழுதி வைத்திருக்கிறேன். அதோடு அதையும் சேர்த்து எழுதிக் கொள்ளவேனும்.
செளக்கியமாக இருக்கிறீர்களா அல்லவா?