18.6.54
இடைசெவல்
என்னுடைய ஜூன் 16ம் தேதிய கவர் கிடைத்திருக்கும். அதற்குள் ஒரு முக்கியமான சாமாஜாரம் வந்துவிட்டதால் இந்த கார்டு எழுதுகிறேன்.
மதுரையில் வக்கீலாய் இருந்த நம்ம ராஜாராம் இப்பொழுது தென்காசியில் இருப்பதாகக் கேள்விபட்டேன் (ல.ச. சொன்னார்) அவருடைய விலாசம் எனக்குத் தெரியாது.
அவரிடத்தில் நீங்கள் சென்று நான் கேட்டதாகச் சொல்லி கீழ்க்கண்ட விபரத்தை விசாரித்து எழுதவும்.
காஞ்சிபுரத்தில் அவருக்கு தெரிந்த வக்கில் யாராவது இருக்கிறார்களா? அந்த ஊரில் உள்ள மதராஸ் லைப் ஏஷ்யூரன்ஸ் கம்பனி என்ற இன்ஷ்யூரன்ஸ் கம்பனி மீது ஒரு ஷரட் தாக்கல் செய்ய வேண்டியது இருக்கிறது.
அப்படித் தெரிந்தவர் யாராவது இருக்கிறார் என்றாலோ அல்லது ராஜாராம் மூலமாகவே வேறு ஏற்பாடு செய்யலாம் என்றாலோ, நான் ரிக்கார்டுகள் சகிதம் தென்காசிக்கு வரவேண்டும்.அவசரம்.பதில்.
திருநெல்வேலிக்கு நீங்கள் எப்பொழுது வருகிறீர்கள்? எக்ஸ்பிஷன் எப்போதாம்? டி.கே.எஸ் நாடகம் ஒன்று கூட பார்த்ததில்லை நான்! (நல்ல) நாடகமே ஒன்று கூட நான் பார்த்ததில்லை. இந்த வருஷம் போகலாம் என்று நினைத்திருக்கிறேன்.
எந்த நாடகத்தைப் பார்க்கலாம், அதன் தேதி எப்போது என்று எழுதுங்கள். நீங்களும் பக்கத்தில் இருந்தால் நன்றாய் இருக்கும். எங்கே வரப்போகிறீர்கள்!
மலை ஒரு நாளும் மகமதுவை நோக்கி வராது; மகமது மலையை நோக்கி வந்தால் உண்டு!
உடனே பதில் எழுதுங்கள்..