பிரியங்களுடன் கி.ரா – 3

பிரியங்களுடன் கி.ரா – 3
Published on

அன்பார்ந்த சாந்தி தம்பதியனருக்கு நலம்.

28.06.03ல் எழுதிய சாந்தியின் நீண்ட கடிதம் வந்தது. ஆயாள்(ஆயாளுக்கு ஆண்பால் ஆயன்) கணவதி பற்றி புத்தகமே எழுதலாம்; நல்ல யோசனைதான். புத்தகம் எழுதும் அளவுக்கு கணவதி தகுதி உடையவளே. அதை சாந்தி எழுதுவது இன்னும் சிறப்பு.

வாழும் காலத்திலேயே ஒருவரைப்பற்றி புத்தகம் எழுதக் கொடுத்து வைத்திருக்கணும். பிடிவாதமாக எழுதி முடித்தால்தான் இதெல்லாம் சரிப்பட்டு வரும் சொல்லிவிட்டால் செய்தே தீருவாள் சாந்தி; மறு பேச்சுக்கு இடமிராது. ஞாயிறு தோறும் இங்கிருந்து கணவதியை நெய்வேலிக்கு அனுப்பிவைக்க நான் தயார். கூடவே நானும் வந்தால், பொழுது பேச்சிலேயே கழிந்துவிடும். ராத்திரிச் சாப்பாட்டுக்கு கணவதி இங்கே வந்தால் போதும்.

ஒரு நல்ல சிறந்த ஒலிப்பதிவுக் கருவியை தயார் செய்து கொள்ளுங்கள் அதற்கு முன் எதை எதைப்பற்றி பேசவைக்க என்று ஒரு அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள். திட்டமிடல் முக்கியம்.

கணவதியை பற்றி சாந்தி எழுதிய புத்தகம் என்பதே முக்கியம். முக்கியமான நேர்காணலை புத்தகத்தின் கடேசியில் பின் சேர்க்கையாக சேர்த்துக்கொள்ளலாம். கணவதியை அழைத்துக்கொண்டுபோக, இங்கே கொண்டுவந்துவிட, ஒரு துணையை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

புத்தகத்தை வெளியிடும் பொறுப்பு தங்கர்பச்சானின் “செம்புலம்” மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் அல்லது இருக்கவே இருக்கு நம்ம  “அகரம்”.

பேனா தந்த வேளை! திருப்தியாக எழுதுவதாகவே தெரிகிறது. இந்த ஜெல் பேனாகள் வந்தபிறகு பால்பாய்ண்ட் உட்கார்ந்துவிட்டது. இதை நான் நகல் எடுக்கவே பயன்படுத்த ஆரம்பித்தேன். இப்போ கடிதம் எழுதவும் தொடங்கிவிட்டேன். விலை அதிகம் தான். விலை உயர்ந்த எழுத்து என்றால் சும்மாவா!

ஒரு வீடு என்றால் குழந்தைகளோடு பாட்டியும் தாத்தாவும் சேர்ந்துதான். முதலப் பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியிலிருந்துதான் தொடங்குகிறது. பிரிகேஜி,எல்கேஜி பள்ளிக்கூடங்களுக்கு மெய்யான வாத்தியார்கள் தேடவே வேண்டாம், முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள் அவர்கள். இது அவர்களுக்கும் ஒரு சந்தோசம் குழந்தைகளுக்கும் ஒரு குஷி. குறைந்த பட்சம் முதியோர் இல்லங்களிலிருந்து அவர்களை “விசிட்டிங் புரபஸராக”வாவது வரவழைக்கலாம் எல்.கே.ஜி, யுகேஜி பள்ளிகளுக்கு.

வயித்து வலியை கணேசன் கவனிக்க வேண்டும் சீக்கிறமே. என்ன செய்யம் இதெல்லாம் என்று நம்பி விட்டுவிடக்கூடாது. “வயித்து வலியையும் வடக்கத்தி யானையையும் லேசாக நினைக்கிறப்படாது” என்று ஒரு நாட்டார் சொலவடை இருக்கு.

வயித்து வலி ஆசாமிகள் முதலில் செய்ய வேண்டியது உணவு மாற்றம். முதலில் ஒரு வேளை உணவை தேங்காய், பழம் என்று மாற்றனும். சுலபமாகக் கிடைக்கும் பழம் நமக்கு வாழைப்பழந்தான். தேங்காயை பொடியதாக சுண்டைக்காய் அளவுக்கு நறுக்கிகொள்ள வேணும். தேங்காய் பசி தாங்கும். வாழைப்பழம் கார்போ ஹைட்ரேட். தேங்காய் புரோட்டின். இவை போக இந்த இரண்டும் பல சத்துக்கள் அடங்கியன. இது வயித்துக்கு ஒத்துக்கொண்டால் பிறகு இரண்டு வேலையாக்கிக்கொள்ளலாம். மீதி ஒரு வேளையை சாதம்,பால் அல்லது தயிர் அல்லது மோர் இவைகளோடு அவியல்; காய்கறிகள் கொண்டது.

ஆரம்பத்தில் சன்யாசியாகப் போய்விடலாம் போலத்தோன்றும். பழகினால்த்தான் இந்த உணவு முறையின் அருமை தெரியவரும். எனக்குத் தெரிய சிலர் மூனு வேலையும் தேங்காய் பழம், மோர் சாப்பிட்டுக் கொண்டு வீட்டில் அடுப்பே எரியாமல்,புகை படியாமல் வாழ்ந்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள். வீட்டுப் பெண்கள் ஒத்துழைப்பு இல்லாதவர்களால் இதை அனுசரிக்க முடியாது. எனது ஆலோசனை கொஞ்ச நாளைக்கு மட்டுமாவது இந்த உணவு முறையை பாவித்துப் பார்க்கலாம் என்பதே. இதிலும் வயித்துவலி கட்டுப்படலை என்றால் இருக்கவே இருக்கு மருத்துவம்.

சம்பா அரிசி அவல், தேன், பொட்டுக்கடலை, பேரிச்சம்பழம், உலர்ந்த திராட்சை இவைகளை எல்லாம் நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது, முடிந்தமட்டும்.

அன்புடன்

கி.ரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com