பிரியங்களுடன் கி.ரா – 30

பிரியங்களுடன் கி.ரா – 30

12.1.55

இடைசெவல்

இன்றைக்கு புதன்கிழமை இல்லையா. இப்பொழுது தான் தலைமுழுகினேன். தலை முழுக்கில் ஒரு சொகம் இருக்கத்தான் இருக்கிறது. தலையே முழுகுகிறது இல்லை என்ற ஆட்களை நான் முதல்முதல் வைத்துப்பார்த்தது வெள்ளைகால் என்ற ஊரில்தான்.

இதைக்கேட்டதும் எனக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. ‘இப்படியும் ஆடகள் உண்டா’ என்று அவர்களை கவனித்துப்பார்த்தேன். நன்றாகத்தான் கொழுகொழு என்றிருந்தார்கள்.

அப்புறம் நான் தலைமுழுகாத ஆடகளைப் பார்த்தது மலையாளத்தில் வைத்து. அந்தப் புண்ணியவான்கள் அதைவிட நன்றாக இருந்தார்கள்!

என்ன செய்ய. தலையே முழுகாமல் கொஞ்சநாள் இருந்து பார்த்தேன். சூடு பிடித்ததுதான் மிச்சம். சரி என்று அந்தக் கொள்கைக்கு ஒரு தலை முழுக்குப் போட்டேன். இப்பொழுது சூடு நம்மைக் கண்டு கொஞ்சம் தள்ளி நிற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்;

இதை எதற்காச் சொல்ல வந்தேன் என்றால் தலை முழுக்கிலுள்ள சொகத்தை வேண்டாமென்று விட்டு விட்டும் ஆட்கள் நன்றாகவும் இருந்து தொலைக்கிறார்களே என்பதற்காகத்தான்.

இந்தக்கடிதம் எழுத ஆரம்பிக்கும் போது ஒரு சாம்ராணி பத்தி(ஊதுபத்தி) பொருத்தி வைத்தேன், அது எறிந்து முடிவதற்குள் ஒரு கடிதம் எழுதி முடித்து விட வேண்டுமென்று. நடக்கிற காரியமா? கடிதம் எழுதுவது நின்றது. அதைக் கவனித்துக் கொண்டிருப்பதிலேயே நேரம் செலவழித்து போய்விட்டது.

சாம்ராணி பத்தியைக் கையில் எடுத்ததுமே (அதன் வாசனையால்) நமக்கு பக்திமயமான ஒரு பரவசநிலை உண்டாய்விடுகிறது. தன்னையே தகித்து புஸ்மம் பண்ணிக்கொண்டு மற்றவருக்கு வாசனையைக் கொடுக்கும் அற்புதப்பொருள் இந்த உலகத்தில் வேறு ஏதாவது உண்டா? இந்த ஊதுபத்திகளின் தியாகத்தைப் பார்த்தீர்களா?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com