பிரியங்களுடன் கி.ரா – 31

பிரியங்களுடன் கி.ரா – 31

12.01.55

இடைசெவல்

2-12-54ல் நீங்கள் எழுதிய கடிதத்துக்கு 12-1-55ல் பதில் எழுதுகிறேன்; போன வருஷம் போட்ட லெட்டருக்கு இந்த வருஷம் பதில் எழுதுகிறேன்! காரியங்கள் எவ்வளவு ஜரூராய் நடக்கிறது பாருங்கள்?

      “கத்துகடல் நாகன் காகுந்தன் சத்திரத்தில்

      அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

      உலையி(ல்) இட ஊர் அடங்கும், ஓர் அகப்பை

      இலையில் இட வெள்ளி எழும்!”

என்ற பாட்டு ஞாபகம் வருகிறதா?

“என்னுடைய லட்டர் பேடில் இதுதான் கடைத்தாள்” என்று முடிகிறது உங்கள் கடிதம். இதற்குள் லெட்டர் பேடு அச்சாகி இருக்கும். பாதி காலியாகக் கூட போய் இருக்கும்.

நேற்று தபாலில் ஒரு ‘மான்சூன்’ வந்தது எனக்கு. விலாசம் குத்தாலிங்கம் எழுத்து மாதிரி இருக்கிறது. இன்னும் படிக்கவில்லை. அக்காவின் குழந்தை குணமாகி ஊருக்குப் போய் விட்டான். (என்ன முழிக்கிறீர்கள், உங்கள் கடிதத்துக்கு பதில் எழுதுகிறேன் ஐயா!)

பேனாவைப் பராமரிக்கும் வித்தைச் சொல்லி இருக்கிறீர்கள் கடிதத்தில். அமுத்தி எழுதாமல் லேசாக லாவகமா எழுத வேண்டும் என்கிறீர்கள். அது முடியாத காரியம்.

பெண்களையும், குழந்தைகளையும் புஷ்பங்களைப் போல்த்தான் கையாள வேண்டும். நாமும் முதலில் அவர்களிடம் அப்படித்தான் நெருங்குகிறோம். உணர்ச்சி ஏற ஏற அதன் வசப்பட்டுவிடுகிறோம். வெறியே உண்டாய்விடுகிறது.

இது பேனாவுக்கும் பொருந்தும். நம்முடைய எழுத்துக்குள் முதலில் அச்சு குண்டாக ஆரம்பித்து, கடேசியில் தாறு மாறாக முடிவதின் காரணம் இப்பொழுது விளங்குகிறதா?

முதலில் பேனா கண்ணுக்குத் தெரியும், அப்புறம் பேப்பர் தெரியும், அப்புறம் எழுத்து தெரியும்; அப்புறம் ஒன்றுமே தெரியாது.

சரி. ரொம்ப நேரமாகிவிட்டது. விடை கொடுக்கிறீர்களா?

இக்கடிதத்தையே பொங்கல் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளுங்கள்..

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com