பிரியங்களுடன் கி.ரா – 32

பிரியங்களுடன் கி.ரா – 32

04.07.81

இடைசெவல்

பிரியமுள்ள ரகுவுக்கு ஆசிர்வாதம். தேங்காய்கள் கிடைத்தன. பார்சலுக்கான ரசீதையும் உன் கடித்ததையும் பார்த்தும் மனம் நெகிழ்ந்து போனேன். இப்படியெல்லாம் அன்பைப் தெரிவிக்க எங்கு கற்றீர்கள் நீங்கள்.

ல.சண்முகசுந்தரம் கல்யாணத்துக்கு சொல்லுவதற்கு அவரும் நானும் அழைப்புப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு டி.கே.சி. வீட்டுக்குப்போனோம், இலஞ்சிகுமார கோவிலிருந்து குற்றாலத்துக்கு டி.கே.சி.யிடம் ல.ச. அழைப்புப் பத்திரிகையைக் கொடுத்தார். பேசி முடித்து விடைபெறும் போது தாத்தா சங்கரனைக்குரல் கொடுத்து அழைத்தார்.

ஒரு பெரிய்ய தாம்பாளத்தில் பழங்கள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூமாலை புது வேஷ்டி, துண்டு இப்படியான மங்கலப்பொருள்கள் நிறைந்து வந்தது. டி.கே.சி, சண்முகசுந்தரத்தை அருகில் அழைத்து மாலை அணிவித்தார், அப்படியே  தாம்பாளத்தை சங்கரனிடமிருந்து வாங்கி சண்முகசுந்தரம் கையில்க் கொடுத்தார்.

சண்முகசுந்தரத்துக்கு ஒன்றும் ஓடவில்லை! அப்படியே மெய்மறந்து அந்த அதிபிரியத்தையும் வாத்ஸல்யத்தையும் தாங்கமுடியாமல் திணறினார். பேசமுடியவில்லை. என்ன செய்கிறதென்று தெரியவில்லை. (இதைப்பற்றி சண்முகசுந்தரம் ஸாரிடம் கேள் ரசமாகச் சொல்லுவார்).

நாங்கள் கரிசல்காட்டுக்காரர்கள் பிரியத்தையும் அன்பையும் எப்படிக் காட்டுகிறது என்று தெரியாதவர்கள் சிலர் பிரியத்தைக் காட்ட கிள்ளுவார்கள், சிலரோ கடிக்கவே செய்வார்கள்! இன்னும் சில பேர் இருக்கிறார்கள் அவர்கள் வை வார்கள்!! நாங்கள் படித்த பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுத்ததெல்லாம் இப்படித்தான்.

மத்தளம் பாறையிலிருந்து உன் அதையும் மாமாவும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். “பொதிகைத்திருவடி”யின் சார்பாக முருகன் வரபோவதாக. இங்கே லஷ்மி நரசிம்மனிடம் நீ கடிதம் எழுதியிருப்பதைச் சொன்னேன். அவனை வரச்சொல்லி எழுதுங்கள்” என்று என்னைக் கேட்டுக்கொண்டான். இதோ எழுதிவிட்டேன்.

அப்பா மெட்ராஸ்லிருந்து வந்துவிட்டார்களா?

நான் முந்தயக் கடித்தத்தில் எழுதியிருந்தபடியே இது சிறிய கல்யாணம் தான்; நீங்கள் – யனைகள் ! – வருவதனால் இது பெரிய்ய கல்யாணமாக ஆகிறது.

இடைசெவல் வருகிறதென்னமோ லேசுதான். புறப்படுகிறது தான் கஷ்டம். கார்க்காரன் தயவு அப்படி. அப்படி இருந்தும் இடைசெவலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிற மனசுகளைப்பற்றி என்ன சொல்ல!.

ஒண்ணு தென்காசியை எடுத்துக்கொண்டு வந்து இடைசெவல் பக்கத்தில் வைத்துவிடவேண்டும் அல்லது இடைசெவலை எடுத்துக்கொண்டு வந்து தென்காசி பக்கத்தில் அனுமந்தபுரம் தெருவுக்கு அடுத்த தெருவில் வைத்துவிடவேண்டும். இதில் எதைச் செய்யலாம் என்று நீதான் சொல்ல வேண்டும்.

கலாப்பிரியாவுக்கும், ல.ச.வுக்கும் சேர்த்து அனுப்பிய கல்யாணக்காயிதம் உரியவர்களிடம் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். மற்றவை நேரில்...

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com