பிரியங்களுடன் கி.ரா – 33

பிரியங்களுடன் கி.ரா – 33

புதுவை – 08

11.11.2009

பிரியமுள்ள தீட்சிதர்வாள்,

இப்படி விசாரித்து ஒரு கடிதம் வரும் என்று யார் தான் நினைத்திருப்பார்கள். நம் கையில் இல்லை எதுவும் என்று அறிந்தவர் சொன்ன வாக்கு.

பிள்ளைகள் தெருவில் நேரம் போவதே தெரியாமல் விளையாட்டு ஆடிக்கொண்டே இருப்பார்கள். பிள்ளைகளுக்குத்தான் நேரம் தெரியாது; அவர்களின் “தகப்பனார்” க்குத் தெரியும்.

ஒரு பிள்ளையின் தகப்பனார் வந்து அந்தப் பிள்ளையின் பக்கத்தில் ஒரு உள்ப்புன்னகையோடு நிற்பார். வா என்று கூடச் சொல்லவில்லை. தகப்பனார் நடக்கிறார்; பிள்ளை அவருக்கு பின்னாலேயே நடந்து போகிறது! அவருடைய காரியமே இப்படித்தான்.

முகூர்த்தம் ஒன்றைத்தான் நிச்சயிப்பான் இவன்;

அமூகர்த்தத்தை நிச்சயிப்பவன் அவன்.

தனிமை தனிமை என்று அலட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள் அறிந்தவர்கள். நாம் எப்போதும் தனிமை இல்லை. “அவனை” நம்புவர்களுக்கு ஏது தனிமை.

காது இருக்கும்வரை இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். விதவிதமான வாத்திய சங்கீதங்கள் உண்டு. ஆயிரத்தி எட்டு ராகங்கள் இருக்கின்றன.

குற்றாலத்தில் இருந்தபோது நமக்கெல்லாம் அரவணைப்பாக இருந்தவர்கள் ரசிமணியின் குடும்பத்தார்தான்.

அதே குடும்பத்தார் இப்போதும் இருக்கிறார்கள், அதே அனுமந்தபுரம் வீதியில் பக்கத்து வீட்டுக்காரர்களாக.

லக்ஷ்மி என்கிற பெண் இடையில் வந்தது; இடையில் சென்றுவிட்டது. அப்படித்தான் யேற்றுக்கொள்ள வேணும்.

உமக்குத் தெரியாத ஒன்றா.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com