பிரியங்களுடன் கி.ரா – 5

Published on

22.11.2003

பேத்தி சாந்திக்கு நலம்.

 திரும்பவும் மழை தொடங்கி விட்டது. நொச நொச என்று முணு முணுத்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு சவ்கரியம் நிம்மதியாக உட்காந்து எழுதிக்கொண்டோ, படித்துக்கொண்டோ இருக்கலாம்.

முக்கியமாக நீ வாழ்க்கை சரிதைகளை – அது அவர்கள் எழுதியதோ அவர்களைப்பற்றி மற்றவர்கள் எழுதியதோ – தேடி எடுத்துப்படி. அப்படியானால்த்தான் ஒரு வாழ்க்கை சரிதையை எப்படித் தொடங்க, எப்படி எழுதிக்கொண்டு போக என்ற விவரங்கள் பிடிபடும்.

 குடும்பத்தில் இருவரும் வேலை பார்த்துக்கொண்டு குழந்தைகளையும் கவனமாகப் பார்த்துக்கொண்டும் இருப்பது என்பது பதின் கவனகர் வேலையை விட சிரமமானது.

 ஒரு நல்ல வேலையாள் அமைவது என்பது ஒரு நல்ல மனைவி அமைவதை விட சிரமம் அல்லது நல்ல கணவன் அமைவதைவிடச் சிரமம். ஒரு வயோதிகத்தாய் காலையிலிருந்து மாலைவரை காட்டு வேலை செய்துவிட்டு, தீபம் பொருத்தும் வேளையில் தான் திரும்ப முடியும். உதவிக்கு யாருமில்லை.

அப்படி வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஒரு அபூர்வமான பூவைக்கண்டெடுத்தாள், அதைக் கொண்டுவந்து அடுக்குப் பானைக்குள் போட்டுவிட்டு வழக்கம்போல் வேலைகளையெல்லாம் முடித்து குளித்து சாப்பிட்டுவிட்டு தூங்கி, காலையில் எழுந்ததும் வேலைக்கு போய்விட்டாள்.

மறுநாள் சாய்ந்திரம் வந்தபோது வீட்டுக்கு முன் பெருக்கி கோலம் போட்டிருந்தது, வீட்டினுள் தீபம் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது.

 பாத்திரங்கள் துலக்கப்பட்டு சமையல் செய்து முடிக்கப்பட்டு, குளிக்க வென்நீரும் தயாராக இருந்தது! யார் செய்தார் இதை? தினமும் தொடர்ந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை.

 ஒரு நாள் அவள் ஒளிந்திருந்து பார்த்த போது, அவள் கொண்டுவந்து போட்ட பூதான் பெண்ணாக மாறி இதையெல்லாம் செய்துவிட்டு பூ ஆனது. இப்படி ஒரு கதை தொடங்கக் காரணம் ஒரு நல்ல வேலைக்காரிக்கான மன ஏக்கம் தான்!

அன்புடன்,

கி.ரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com