புலன் மயக்கம் - 40

புலன் மயக்கம் - 40

வயது வந்தவர்களுக்கு மட்டும்

தாவணிக் கனவுகள் படத்தில் ஒரு ரொமான்ஸ் காட்சி வரும். தங்கைகள் சகிதம் படத்திற்கு சென்றிருக்கும் கே.பாக்கியராஜ் உடனே பையிலிருந்த சில்லறை காசுகளை எடுத்துக் கீழே போட்டுவிட்டு தன் தங்கைகளை எடுக்கச் செய்வார். அதற்குள் காட்சி நகர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கும். எண்பதுகளில் டிவி இல்லை. சினிமாக்கள் இரண்டு ரகம். ஒன்று கதை மைய சினிமாக்கள். இரண்டு சதை மைய சினிமாக்கள். ஏ படங்கள் என்ற பேரில் அழைக்கப்பட்ட ஊருக்கு ஒதுக்குப்புற தியேட்டர்களில் மொத்தமே இரண்டு மூணு தினங்கள் அதிகபட்சம் ஏழெட்டுக் காட்சிகள் மட்டுமே ஓடும். அதில் கதை என்றொரு வஸ்து வரும் பாருங்கள். நிச்சயம் பாலியல் ரீதியிலான உபதேசம் ஒன்றைக் கலந்து ஒரு டச்சோடு முடித்திருப்பார்கள். இப்படியான படங்களுக்கென்று அதிகம் வெளியில் அறியப்படாத வரலாறொன்று இருந்தது.எது எப்படியானாலும் மனிதர்களால் மனிதர்களுக்காக என்பதில் மாற்றுக் கருத்தில்லை.அவர்கள் ரசிக்கிறார்கள்.நாங்கள் எடுக்கிறோம் என்றொரு இருள் குரல் வந்தது.அவர்கள் திரையிடுகிறார்கள்.நாங்கள் ரசிக்கிறோம் என்றொரு குரல் பெயரற்ற கூட்டமாகத் தியேட்டர்களில் பெருகிற்று.இவற்றுக்கு அப்பால் மஞ்சள் சஞ்சிகைகளும் நீலப் படங்களும் அங்கிங்கெனாதபடி எங்கும் எப்போதும் தேவையாய்ப் பெருகியபடியே தொடர்ந்தன.அவற்றுக்கான மனிதர்கள் தனித்தவர்கள்.காமம் இந்தியாவில் ஒரு தீய பழக்கமாகவே கருதப்பட்டு போதிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டு அடக்கப்பட்டு பெருவெடிப்புக்கு உள்ளானபடியே தொடர்ந்தது.

இன்று உலகம் ஒரே நிலம்.கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் என்ன வித்யாசம் என அடிக்கடிக் கேள்விகள் கேட்கப் பட்டன.நான் கவர்ச்சியாக நடிப்பேன் ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்று பேட்டிகள் அவ்வப்போது வெளிவந்தன.சினிமாப் பத்திரிக்கைகள் மாத்திரமல்லாது வணிக ரீதியிலான பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்கள் எப்போதும் புகைப்படங்களால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.தன் உடலையும் அருகாமை உடல்களையும் அறிந்து கொள்வதற்குச் சரிவர வாய்ப்பின்றியே படர்க்கைச் சித்திரங்களை நாளும் தேடி ஓடினான் எண்பதுகளின் ஏன் சென்ற நூற்றாண்டின் இறுதி வரைக்குமான யுவன்.மெல்ல சித்திரம் மாறிற்று எனலாம்.நடிகைகள் தங்களது கனவுகளின் போஷகிகளாகவே கருதிக் கொண்டிருந்த ரசிகன் சினிமாவின் டெக்னிகல் விசயங்களில் அதிகம் நுட்பங்களை அறிந்து கொள்கிறவனாக மாறத் தொடங்கியது தொண்ணூறுகளின் மத்திமத்தில் இருந்து தான்.

அதற்கென்று தயாரிக்கப் பட்ட படங்கள் ஒருபுறம் என்றால் எழுபதுகளின் துவக்கம் தொட்டு நூற்றாண்டின் இறுதி வரைக்குமே கவர்ச்சிப் பாடல் என்ற ஒன்று இருந்தபடியே இந்திய சினிமாக்கள் தயாரிக்கப் பட்டன.கதா நாயகியின்  உடை மற்றும் குழுப்பெண்டிரின் உடைகள் கவர்ச்சிக்காகத் திருத்தி அமைக்கப் பட்டன.கதையின் நாயகி ஒருவர் இருப்பதைப் போலவே இப்படியான பாடல்களுக்கென்று ஆடல் தாரகைகள் தனியே வரவழைக்கப்பட்டார்கள்.அப்படியானவர்களுக்குப் பெரும்பாலும் சின்னச்சின்ன வசனங்களுடன் கூடிய பாத்திரங்களில் இருந்து இரண்டாவது கதாநாயகி வரை ஏன் வில்லி மற்றும் நேரடிக் கதாநாயகி வரைக்குமான பாத்திரங்கள் வழங்கப்பட்டன.      

        
 மெயின் ஸ்ட்ரீம் சினிமாவின் இயக்குனர்கள் இந்தக் காதல் காமம் சார்ந்த காட்சிகளைப் பெரும்பாலும் ரசிப்பவர்களுக்காக என்றே பழி சுமத்தித் தங்கள் மீது நன்னீர் தெளித்துக் கொண்டார்கள்.க்ளப் டான்ஸ் ஹிப்பி டான்ஸ் வனாந்திர டான்ஸ் போதையில் ஆடிப் பாடி மகிழும் டான்ஸ்.குளியல் பொழுது டான்ஸ் மழைப்பாடல் எனக் கதையை மெல்லத் திரித்து ஒரு பாடலை மேலதிகமாகச் சில காட்சிகளை கவர்ச்சிக் காட்சிகள் என்ற துறையின் கீழ் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
  எந்த இடத்தில் படத்தின் கதை லேசாய்த் தொய்கிறதோ அந்த இடத்தில் இப்படியான ஆடிப்பாடி மகிழும் பாடல் ஒன்றைச் சேர்பித்து படத்தின் ஓட்டவேகத்தை சீராய்ப் பராமரிப்பதை ஒரு சம்பிரதாயமாகவே இப்படியான பாடல்களின் வரத்து இருந்தது.

கேட்டதால் கொடுத்தார்களா கொடுத்ததால் ரசித்தார்களா என்பது புதிர்.கவர்ச்சி நடனத்துக்கான நடிகைகள் தனியாக உருவெடுத்த காலத்தில் ஜோதிலக்ஷ்மி ஜெயமாலினி அனுராதா தீபா சில்க்ஸ்மிதா குயிலி டிஸ்கோ சாந்தி அபிலாஷா விசித்ரா மும்தாஜ் எனப் பலரும் வந்து-ஆடி-சென்றனர்.இந்தப் பாடல்கள் தனிக் கவனத்தோடு உருவாக்கப்பட்டன.


 எலந்தைப் பழம் எலந்தைப் பழம் எனும் பாடலின் வெற்றி மறக்க முடியாதது.எல்லாச் சொற்களின் பின்னேயும் மௌனங்களின் ஆழத்திலும் இன்னொரு அர்த்தத்தைத் தேடி ரகசியமான இன்புறுதலை உறுதிசெய்தபடியே இப்படியான பாடல்கள் உருவாக்கப்பட்டன.இவற்றை முழுவதுமாக நிராகரிக்கும் காலம் இன்று வரை வந்து விட வில்லை.இருந்த போதும் இவற்றின் மீதான பிடிமானத்தைத் தமிழ் சினிமா ஒருபக்கம் குறைத்துக் கொள்வதையும் கவனிக்க முடிகிறது.


இவை எல்லாம் இருக்கட்டும். இந்த அத்தியாயம் இவற்றுக்கானதல்ல.

  ஆயிரக்கணக்கான பாடல்கள் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கிளர்ச்சியை ஊட்டுவதற்கான முன் தீர்மானத்தோடு உருவாக்கப் பட்ட பாடல்கள் வந்து சென்றிருக்கிற போதும் அவற்றின் வரிசையில் வெகு சில பாடல்கள் மாத்திரம் காலத்தால் அழியாத வேறோர் இடத்தில் தங்களை வைத்துக் கொள்ள முடிகிறதே..இது எப்படி சாத்தியமாகிறது?இதென்ன விந்தை.வெளியாகிற காலத்தில் மிக அதிக முறைகள் விரும்பப் பட்டுக் கேட்கப் பட்டு பிறகு முழுவதுமாக நிராகரிக்கப் பட்டுவிடுகிற இந்த வகைமைப் பாடல்களில் குறிப்பிட்ட சில பாடல்கள் தனிக்கின்றன எனில் அவற்றை அப்படித் தனிக்கச் செய்கிற அபூர்வம் எது..?

 இசையா..?பாடல் வரிகளா.?பாடிய குரல்களா..?நிச்சயமாக அவற்றில் நடித்த நடிகைகள் மீதான ஆர்வமோ காட்சியின்பம் இன்னபிறவோ நெடுங்காலத்துக்கு நீடித்திருப்பதற்கான காரணியாக விளங்க முடியாது.அப்படி இருக்கையில் எது அந்த நிசக் காரணம்..?

இளையராஜாவின் இந்தப் பாடலை கவனிக்கலாம்.


   நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே அதை வக்கிறப்போ சொக்கணும் தன்னாலே...
    இதன் ஆரம்ப இசையிலேயே அரிசிச்சோற்றில் அபின் கலந்தாற் போல் இந்த உதாரணம் சரியில்லையே..அரிசிச்சோற்றில் ஐஸ்க்ரீம் கலந்தாற்போல் மெஸ்மரிசத் தொடக்கத்தைத் தந்திருப்பார்.ஆப்பிள் பலூனைத் தன் சின்னஞ்சிறிய விரல்நகங்களால் பிறண்டும் குழந்தை எதிர்பாராக் கணமொன்றில் அந்த பலூன் வெடித்ததும் ஏனென்றே தெரியாமல் அழத் தொடங்கும்.பலூன் வெடித்ததற்காகத் தான் அழுகிறோம் என்பதை இன்னொரு பலூன் தரப்படும் வரை நீட்டித்துக் கொள்ளும்.அந்த வினோதமான பிறாண்டலின் போது எழக் கூடிய ஒலியை ஒத்தது இந்தப் பாடலின் ஆரம்ப இசை.

   மிக மெல்லிய அதே நேரத்தில் விட்டு விட்டு ஒலிக்கக் கூடிய மைய இசை காதலின் கண்மூடிய கணமொன்றை இசைப்பதாகவே விரியும்.தூரத்தே எங்கோ எரிகின்ற தணலினின்றும் மெல்ல எழுந்து நாசியைத் துளைக்கும் நெருப்பின் மணம் மட்டும் இசைப்படுத்தப் பட்டாற் போல ஒரு இடையிசை சரணத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.அதைவிட மென்மையாகக் கையாளவே முடியாதென்னும் தோரணையிலான வயலின் இழைத்தல்களுடன் மறுபடி ஆதாரத் தாள இசைக்குள் சென்றமையும் தென்பழனி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சா என்னென்னவோ எண்ணம் தான் என்னைக் கண்டு உண்டாச்சா என்றபோது கேட்பவர் மனங்கள் கரைந்துபோகும்.இந்தப் பாடலை உற்று நோக்கினால் பாலசுப்ரமணியம் கொஞ்சம் தன் குரலை வழமையின் பாதையிலிருந்து மிக லேசாக விலக்கிக் கொண்டு பாடியிருப்பதையும் எஸ்.ஜானகி தன் வழமையான குரலிலேயே பாடி இருப்பதையும் உணரமுடியும்.மிக மெல்லிய சுற்றுச்சாலையில் ஏறியபடி ஒரு உயரத்திலிருந்து பக்கவாட்டுச் சன்னலில் வந்து உதிக்கிற வானத்தின் தலைகீழ்ச் சித்திரம் போன்ற கிறக்கத்தை இப்பாடலெங்கும் படர்த்தி இருப்பார் இளையராஜா
 

  இது என் பட்டியல்.இதிலிருந்து நீங்கள் விலக முடியும். இதனை ஒத்துக்கொள்பவர்களுக்கு என் மனஸ்தானில் ஏழெட்டு செண்டு இடம் தருவேன்.முரண்படுபவர்களுக்கு வெறும் சாக்லேட்டு மட்டும் தான்.நிலா காயுது நேரம் நல்ல நேரம் பாடலுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வரவேற்பை என்னென்பது..?மிமிக்ரி செய்பவர்கள் தொடங்கி சொற்பொழிவாளர்கள் வரைக்கும் சகலரும் இந்தப் பாடலோடு ஆளுக்கொரு செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள் எனலாம்.அந்த அளவுக்குப் புகழவும் இகழவும் தேடவும் சாடவும் என அன்பின் வெறுப்பின் சகல திசைகளிலும் இந்தப் பாடல் ஒலித்தது.
               மலேசியாவுடன் ஜானகி பாடிய இந்தப் பாடல் சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்றது.  நிலா காயுது நேரம் நல்ல நேரம்.

கோயில் காளை படத்தில் இடம்பெற்ற பள்ளிக்கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா சொல்லிச் சொல்லிக் கேட்கலாமா மனசை சுத்தவிட்டுப் பார்க்கலாமா..? ஏதோ ஏதோ சொல்லத் தோணும் என்ற வரியை இன்னொரு முறை நிகழ்த்தவே முடியாது. 

 பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோணுதே என்ற மூன்றாம் பிறை பாடல் எஸ்.ஜானகியின் குரலோடு சாக்கோபார் ஐஸ்க்ரீமைச் சேர்ந்து உருவாக்கப்பட்ட பாடல்.இந்தப் பாடலின் இசைக்கோர்வையை மட்டும் தனியே ஒலிக்க விட்டுப் பார்த்தால் வெகு சீரியஸான இசை என்பது புரியும்.முழுவதுமாகக் குரல் செய்த மாயம் என்பதைக் கேட்பனுபவம் கொண்டு உணர முடியும்.சில்க் ஸ்மிதா மற்றும் கமல்ஹாஸன் ஆகிய இருவரின் கவர்ச்சிகலந்த பாடல் எனக்கு எப்போதும் இஷ்டகானங்களில் ஒன்று என்பேன்.
                    

     ரஹ்மானின் பாடல்களில் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் மனம் சொல்லில் அடங்காத இன்பத்தில் அலைந்து திரியும் கூடாரம் திரும்பும் வழி மறந்த மாட்டைப் போலாகித் திளைக்கும்.இந்தப் பாடலை முதல் தடவை கேட்கும் போதே சொய்ங்கென்றாகி கொஞ்ச நாட்களுக்கு கேட்கிறதா கேட்கவில்லையா என்றே தெரியாத அளவுக்கு என் காதுகளின் உள்ளே நிரந்தர பின்னொலியாகவே இது மாறி போனதெல்லாம் நடந்தது.இந்தப் பாடல் செல்லும் திசைக்கும் நகரும் தன்மைக்கும் மேற்சொன்ன பொன்மேனி உருகுதே பாடலின் செலுத்தல் திசையுடனான ஒற்றுமைகள் வசீகரிக்கின்றன தானே..?

   மன்மதா ஆஹா எனும் பாடல் ஆதித்யன் இசையில் உருவான நாளைய செய்தி படத்தில் இடம்பெற்றது.அதுவரைக்குமான பாடல்பதிவு மற்றும் பாடல் உருவான பிற்பாடு அவற்றின் வழங்கல் ஆகியவற்றில் ஆதித்யனின் பாடல்கள் மிக துல்லியமானதொரு மாற்றத்தை நேர்த்தின எனலாம்.அவரது பாடல்கள் மிகத் தனித்து ஒலிகளைப் பிரித்தவண்ணம் ஒலித்தன.இரைச்சல் மிகுந்த இடங்களிலோ வாகனங்களிலோ கேட்கையில் நமக்கு நிகழாத அற்புத உணர்ச்சி நிரடல்களை எல்லாம் அமைதியான ஒலித்தலின் போது இந்தப் பாடல் உள்ளிட்ட சில ஆதித்யன் பாடல்களில் நன்றாக உணர முடிந்தது தொண்ணூறுகளில் நிகழ்ந்த மாற்றம்.
 

  மால்காடி சுபாவின் வெகு கனமான குரலும் உடனொலியை நேர்த்தியவரின் முரண்பட்ட மென்முறுவல் குரலும் இந்தப் பாடலை மென்மேலும் அழகாக்கின எனலாம். இதன் இடையிசை அபாரமான மேற்கத்திய இசை மற்றும் பாரம்பரிய இந்துஸ்தானி இசைக்கூட்டின் கலவையான இடையிசை அது.இவ்வளவு ஏன் இந்தப் படத்தின் டைடில் ம்யூசிக்கை பெரிய ஸ்பீக்கர் சிஸ்டத்தில் கேட்கவேண்டுமே...இந்தப் படம் வெளியான போது டைடில் ம்யூசிக்கை அனுபவிப்பதற்காகவே நான் பரணி திலகர் என நாலைந்து பேர் மூன்று நான்கு முறைகள் பார்த்த ஞாபகம் நிழலாடுகிறது.மன்மதா பாடல் சிற்றின்பத்தின் கிரீடவைரம்.இந்த ஆண்குரலுக்குச் சொந்தக்காரர் பெயர் கிளமெண்ட் என ஞாபகம்.சரியாகத் தெரிந்தவர்கள் அப்டேட் செய்தால் அவர்களுக்கு என் ஆசீர்வாதம்.

ஆடை பாரம் என்று ஆடும் அல்வாத்துண்டு ஜாடை நீயும் கண்டு கூடு போதை கொண்டு புரிந்ததா ரகசியம் தெரிந்ததா அதிசயம் உனக்கிது அவசியம் எனக்கிது அவசரம் வா வா நீதான்..
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனசுக்குள் வியர்க்க விறுவிறுக்க புரவிகளின் ஓட்டகால முடிவில் பெய்யத் தொடங்கும் கடும் மழை ஒன்றின் வருகை போன்ற ஒப்பிடற்காகாத நடனமாகவே உணர்வுகள் எழுந்தடங்கும்.

சரி அன்பானவர்களே இளையராஜாவின் இசையில் உருவான இரண்டு பாடல்கள்.இவற்றின் இடையே இருக்கக் கூடிய ஒற்றுமை என்ன என்பதை நீங்கள் யோசித்து அறிந்து கொள்ளுங்கள்.மனசுக்குள் புகுந்து எதையாவது இடமாற்றி வைத்து விட்டுத் தன் சுவடே தெரியாமல் வேறெங்கோ சென்று ஒளிந்துகொள்ளக் கூடிய குறும்புக்காரச் சிறுவனைப் போலத் தான் இசைஞானி இந்தப் பாடல்களைக் கையாண்டிருக்கிறார் என்பேன்.
  

புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இங்கு நம் நாட்டினிலே இந்தக் காசியைத் தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே இந்தப் பாடல் வெளியான போது கரைந்து உருகிய பல்லாயிரக் கணக்கானோர்களில் நானும் ஒருவன்.பரணியும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போது சந்தேகத் திலகர் வழக்கம் போல ஆரம்பித்தான்.எடே ரவீ இந்தப் பாட்டு ஏற்கனவே கேட்டாப்ல இல்ல என்றான்.முதலில் எனக்கு புரியவில்லை.பிறகு மீண்டும் மீண்டும் இந்தப் பாடலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்துவிட்டு இரவு வாக்கிங் போன்ற ஒரு சந்திப்பின் போது பரணியிடம் சொன்னேன்.திலகர் சொன்னது கரெக்ட் தாண்டா பரணி..இந்தப் பாட்டு ஏற்கனவே கேட்டாப்டி தான் தோணுது என்றேன்.பரணி உடனே ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம் என ஆரம்பித்தான்.
 

  இந்த இரண்டு பாடல்களும் இணை நதிகள்.ஒன்றின் பிறிதொரு சகாக்கள்.ஒட்டிப் பிறந்த இரட்டை கானங்கள்.இளையராஜா என்னும் மேதமையால் மாத்திரமே இப்படி சித்து வேலைகளைச் செய்து நம்மைக் கிறங்கடித்துப் பைத்தியமாக்க முடியும்.

  பிரம்மா படத்தின் அந்தப் பாடல் இரயிலில் நிகழ்கிற பாடல்.இதனையும் பாலுவும் ஜானகியும் தான் பாடி இருந்தார்கள்.ஆனாலும்  ஏதோ சத்யபால ராஜசுப்ரமணியம் என்ற புதிய காம்பினேஷ பாகவதரைப் போலாகி பாலு சத்யராஜூக்காகவே பாடினாற் போன்ற பாடலை சத்யராஜ் ஏதோ பாலுவாகவே மாறி தன் உயிரைக் கொடுத்து வாயசைத்தாரா நிசமாகவே வாங்கிப் பாடினாரா எனத் தீர்ப்பளிக்க முடியாத கடின வழக்காகவே தோன்றச் செய்திருப்பார்.
                 

 சிருங்காரம் என்ற உணர்வை இந்தப் பாடலின் மைய இசை மற்றும் பாடல் செல்லும் தொனியின் திசை ஆகிய இரண்டிலும் மாத்திரம் ஒருங்கிணைத்திருப்பார் ராஜா.பாடிய குரல்களில் பெண் குரலான எஸ்.ஜானகி வெட்கத்தை முன் வைத்தபடி முழுவதுமாகப் பாடி இருப்பார்.பாலுவின் குரல் கிளர்தலுக்கு மிக முந்தைய குரலாகத் தொடங்கி இருப்பார்.மெல்ல மெல்ல தைரியம் கொள்ளும் ஆடவ மனதின் சேஷ்டைகளைச் சரணத்தில் கொண்டு வந்திருப்பார்.

தேனாறு இதுவா தெப்பம் விட வரவா இன்பக்குளத்தில் தினம் தினம் நீராடவா...
நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா இந்த மடி தான் இடம் தரும் சீராடவா
முத்தம் படிப்போம் அரங்கேறும் முதல்பாடம் அது
பித்தம் கொடுப்போம் இதழோரம் பறிமாறும் மது
மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கிக் குடிக்க நீ தான் தேன்
(ராத்திரி நேரம்)
மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது
பூபாணம் விடத்தான் புத்துணர்ச்சி வரத்தான் உன்னை அணைக்க உடல் மனம் தெம்பானது
இந்தப்பிறவி எதற்காக உனக்காக இனி
இந்தக் கிளிதான் சுவை பார்க்க படைத்தானே கனி
மாலை சூடி முடித்தேன் மையல் தீரத் துடித்தேன் பாய் தான் போட..
(ராத்திரி நேரம்)

  இந்தப் பாடலை எனக்குப் பிடித்த பாடல் என்று சொன்ன போது இதென்ன பாட்டு என்று முகம் சுளித்தார் காதம்பரி.எம்.ஏ.ம்யூசிக் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தவராய் எனக்கு அறிமுகம் ஆன காதம்பரி பரணியின் உறவினர்..நீங்க அந்தப் பாட்டை கேட்டிருக்கீங்களா..?என்றேன்.இல்லை படம் பார்க்குறப்ப கவனிச்சது தான் என்றார்.இல்லைங்க பாட்டா கேட்டிருக்கீங்களா..?என்றேன்.இல்லை என்றதும் ப்ளீஸ் கேஸட்ல கேளுங்க..ஒரே ஒரு தடவை கேட்டுட்டு பிடிச்சிதா பிடிக்கலையான்னு சொல்லுங்க என்றேன்.இது நடந்தது 1995 நான் பிரம்மா வந்து நாலு வருடங்களுக்கு மேலாகி இருந்தது.கீஷ்டு கானம் கேஸட் கடைக்கு அழைத்துச் சென்று பிரம்மாவும் உடன்பிறப்பும் சேர்ந்த காம்பினேஷன் கேஸட்டை வாங்கச் செய்து அனுப்பி வைத்தேன்.அடுத்த முறை சந்திக்கும் போது இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம் என்று அவரவர் திசை பார்த்தோம்.

 அடுத்த முறை பார்க்கும் போது அந்தக் கேஸட் கேட்டுக் கேட்டு ஸ்பூல் இழுபட்டு விட்டதாகவும் இன்னொரு கேஸட் வாங்க வேண்டுமென்றும் அலுப்பாகச் சொன்னார்.
   "ஏன் என்னாச்சு" என்றேன்.
  நாம் பாட்டுக்குத் தானே இருந்தேன்.மொதல் தடவை கேட்டதுல இருந்து இன்னம் அந்தப் பாட்டுலேருந்து வெளில வரவே முடியலடா என்றாள்.
   நா உங்களை ஒருதடவை தானே கேட்க சொன்னேன் என்றேன்.
  ஒரே ஒரு தடவை கேட்டுட்டு மறக்குற பாட்டாடா தம்பி அது என்று சிரித்தாள்.
   நேயர் விருப்பம் போல் இந்த அத்தியாயத்தில் இடம்பெறும் இந்தப் பாடலை அதே காதம்பரிக்கு டெடிகேட் செய்வதே தகும்.மறக்குற பாட்டா அது..?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com