புலன் மயக்கம் 6

அவன் பெயர் மனோகர்.


அவனுக்கென்று தனித்த ஒரு வரலாறு இருந்ததாய் ஞாபகமில்லை.பலரது சரித்திரங்களின் உபநடிகன் அவன். அவனை எப்போது முதன்முதலில் சந்தித்தேன் என்பது கூட இன்னமும் பிசிறாத முழு ஞாபகமாய் வந்து விடுகிறது.


புதூரில் இருந்து சொந்த வீடு கட்டிக் குறிஞ்சி நகருக்குப் பெயர்ந்த போது எனக்குப் பதின்மூன்று.அக்கா ப்ளஸ் ஒன் சேர்ந்திருந்தாள்.நான் எட்டாவது வகுப்பு. எந்த வகுப்புமே எட்டாதவனுக்கு எட்டாம் வகுப்பும் எட்டாமலே போனது வியப்பில்லை. எங்கள் வீடு சார்லஸ் கான்வெண்ட் மெயின் ரோடு டச்சில் சந்துச்சாலையில் முதல் வீடு. எதிர்ப்புற வீடு எங்களுக்கு முதுகுகாட்டியபடி இருக்கவே ஒன்சைட் தெருவாகத் துவங்கவேண்டியது.எனக்கடுத்த வீடு சித்தப்பாவுடையது.அதற்கடுத்து அந்தச் சாலை லேசாய் வளையும். காரணம் அங்கே ஒரு பழைய ஓட்டுவீடும் அதன் முகப்பில் ஒரு கிணறும் இருந்தது. அனேகமாக எனக்குக் காணவாய்த்த கடைசிக் கிணறு அதுவாகவே இருக்கக் கூடும்.

அந்த வீட்டை ஒருவர் ஒத்திக்கு வாங்கி முன்புறம் தோட்டம் கயிற்றுக் கட்டில் கொஞ்சம் ஜிம் உபகரணங்கள் என்றெல்லாம் கலந்து கட்டியாக ஆடவர்தேசமாக்கி இருந்தார். அவர் பெயர் என்னவென நினைவில்லை.மன்னா என்று கூப்பிடுவார்கள்.அரசே எனும் பொருளில் அல்ல.
 

அவருக்கு உதவியாளனாக வந்தபோது தான் மனோகரை முதன்முறை சந்தித்தேன். சலிக்காத உழைப்பாளி. திரு நகர் மெயினுக்கு ஒருபக்கம் ஒரு கிலோமீட்டர் சென்றால் ஐந்தாவது ஸ்டாப். வேறு வழியில் சீதாலட்சுமி மில்லின் பின்புறம் சென்றால் ஒன்றரை கிமீ வரும். டீ வாங்கவேண்டுமென்றாலும் இந்த இரண்டு ஸ்தலங்களில் ஒன்றைச் சார்ந்தாக வேண்டும். சலிக்காமல் ஒரு நாளைக்குப் பத்து முறையாவது சைக்கிளில் சென்று வருவான் மனோகர். எப்போதும் சிரித்த முகத்தோடே இருபபன்.கருத்த தேகம் குட்டையான தோற்றம்.உறுதியான உடல்வாகு என்று புராண கதாபாத்திரன் போலத் தெரிவான். நாங்கள் எதாவது கடை கண்ணிக்குச் செல்லப் பணித்தாலும் சென்று வருவான்.
                       

மன்னாவின் ஜிம் ரொம்ப நாளைக்கு இயங்க வில்லை.ஆனாலும் அப்போது கிடைத்த பரிச்சயம் மனோகரை எங்கேயாவது பார்த்துக் கொண்டே இருப்போம். நானும் என் தம்பி (சிற்றப்பா மகன்)பாலாஜியும் எப்போதும் சேர்ந்திருப்பதில்லை. அவன் கொஞ்சம் பழனி முருக வகையறா.தனக்கென்று பெரிய தனிக் கூட்டத்தை எப்போதும் கொண்டிருப்பான். நானோ தனித்தலையும் சோம்பல் பறவை அல்லவா.. பொருந்தாது.
             

திருநகர் பார்க்குக்குப் பக்கத்தில் மாயா ம்யூசிகல்ஸ் என்றொரு கடை இருந்தது. அதன் உரிமையாளர் எப்போதாவது அந்தக் கடையைத் திறந்து தன் உரிமையை நிலைநாட்டுவதோடு சரி. சகல நேரங்களிலும் நாங்கள் பெருங்கூட்டமாய்க் கூட ஆரம்பித்த போது நான் கல்லூரியை அடைந்திருந்தேன். திருநகருக்கு என்ன ஒரு பெருமை என்றால் ஜாதி மதம் இனம் மொழி என்று மாத்திரமில்லை கல்லூரி பள்ளி என்று எந்தப் பேதமும் இல்லாமல் எல்லோரும் ஒன்றாகவே இருப்போம். இப்படிப் பல குழுக்கள் இருந்தோம். அதில் முதன்மையான ஒரு குழு அஷோக் என்பவனது தலைமையில் இருந்தது. அவனுடைய அப்பா அப்போது இன்ஸ்பெக்டராக இருந்தார். குழுமுவதை டாப் அடிப்பது என்று அழைப்பது யுவபாஷை.
     

யார் டாப் என்றால் அஷோக் டாப் கணேஷ் டாப் குணா டாப் என்றெல்லாம் ஒவ்வொருவர் பேர் சொல்லி முன்னிலைப் படுத்துவது வழக்கம். அப்போது கணேஷ் டாப் என்பது 3ஆவது ஸ்டாப்பின் விலக்கத்தில் ஒரு கிரவுண்ட் இருந்தது அங்கே கூடுகிறவர்கள். கல்லூரியில் நானும் அஷோக்கும் ஒரே வருடம் படித்தவர்கள். கணேஷ் எங்களுக்கு சீனியர். ஆனாலும் ஏரியாவுக்குள் அஷோக் டாப்பும் கணேஷ் டாப்பும் ஒரு கட்டத்தில் ஒன்றானது. திரு நகர் அதற்கு முன் பார்த்திராத அளவுக்கு அங்கத்தினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
                        

அப்போது கணேஷூக்கு வலக்கரமாக மனோகர் வந்துபோய்க் கொண்டிருந்தான். வேலையற்ற எங்களுக்கும் எங்களுக்குத் தேவையானதை வாங்கித் தருவதற்கு ஒருவன் தேவையாயிருந்தான்.மனோகர் எல்லோருக்கும் இனியன் அல்லன். கணேஷ் அல்லது அஷோக் இருவருக்கு மாத்திரமே கட்டுப்படுவான். எங்கள் டாப்பில் இருந்த சீனி மனோகருக்குப் பேய்க்குழந்தை என்று பெயர் வைத்தான்.அதென்னவோ தெரியாது.பேய்க்குழந்தை என்னும் பெயருக்கு ஏற்றாற் போல் மனோவும் நிறையப் பேய்க்கதைகள் சொல்வான்.பேயைப் பார்த்ததாகச் சொல்வான். பேயோடு பேசியதாக அவன் விவரிக்கும் கதைகள் எந்த வித நிறுத்தங்களும் இல்லாமல் தொடர்ந்தோடும் நதியைப் போல முதுகுத் தண்டுகளை ஜிலீரென்றாக்கும்.
                     

தன் வாழ்க்கையைப் புன்னகையோடு எப்போதும் அணுகத் தெரிந்த மனோகர் பள்ளியில் மூன்றாம் வகுப்பைத் தாண்டியதில்லை. இது ஒரு விஷயம்.என்றாலும் கூட கணேஷின் கலெக்சனில் உலக இசைக் கேசட்டுகள் உடனுக்குடன் இடம்பெறும். அந்த அளவுக்கு மைகேல் ஜாக்ஸனில் தொடங்கி வெங்காபாய்ஸ் பாப்மார்லி என்ரிகோ இக்ளேஷியஸ் மடோனா பழைய போனிஎம் எனப் பற்பல கேஸட்டுக்களை அவற்றின் விலை குறித்த எந்தக் கவலையுமின்றி வாங்கிக் குவித்திருந்தான் கணேஷ். அவனுடைய ஆங்கில ஞானமும் இசை ஆர்வமும் அத்தனை ஆங்கிலப் பாடல்களையும் ஸ்ருதி பேதமின்றி சொற்பிழையுமின்றி அட்சரசுத்தமாய்ப் பாடவல்லவனாக்கி இருந்தன.
    

கணேஷ் எப்போதாவது ஜாலி மூடிருந்தால் பாடுவான். அவனது மென் குரலில் ஆங்கிலப் பாடல்களைக் கேட்பது சுகமான அனுபவம்.மனக்குகைச் சித்திரங்களில் தோளுக்குப் பொருந்தாத மாலை என்னும் அத்தியாயம் முழுவதும் கணேஷின் பாதியில் கலைந்த சித்திரத்தனைய வாழ்க்கையை ஏற்கனவே பதிந்திருக்கிறேன்.

இந்த இடத்தில் பன்னெடுங்காலமாக எனக்கு இன்னமும் ஈர்ப்புக் குறையாத சில மேற்கத்திய இசை ஆல்பங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
 

1.It's my life 


It's now or never
I ain't gonna live forever
I just want to live while I'm alive
(It's my life)
My heart is like an open highway
Like Frankie said
I did it my way
I just wanna live while I'm alive
It's my life 
     

இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்காதவர்கள் பாவம் செய்தவர்கள். ஒரு தடவை பார்த்து விடுங்கள். எங்க இருக்க ராசா என்கிறாள் காதலி. அவள் அனேகமாக புத்தாண்டு அல்லது கிறிஸ்த்மஸ் கொண்டாட்டத்தின் நகர்நடுவே அத்தனை பரபரப்பில் இருந்தபடி அழைக்கிறாள். என்ன பண்ணுவியோ தெரியாது ராசா...அஞ்சே நிமிஷத்ல என் முன்னாடி வந்து நிக்கணும் நீ என்று கட்டளை இடுகிறாள். சொல்பவள் பெண்ணல்ல. தேவதை. உடனே பிடுங்கி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்குகிறான் காதலானவன்.பாருங்களேன்.பதைபதைப்பின் உச்சத்துக்கே கொண்டு செலுத்தி நகக்கண்களின் நுனி வரைக்கும் வெறி ஏற்றும் படமாக்கலும் பாடிய பான் ஜோயி யின் பொன் நிகர்க் குரலும்.
 
2.  backstreet boys everybody...


கணேஷ் முதன் முதலில் அறிமுகம் செய்த பாடல்.இதற்கு அவன் கல்லூரியில் நடனமும் ஆடிப் பரிசு வாங்கினான். பேக் ஸ்ட்ரீட் பாய்ஸின் உந்துதலில் இதுவரை உலக மொழிகளில் ஆயிரம் பாடல்களாவது வந்திருக்கும்.மறக்க முடியாத பாடலும் அதை விட அமானுஷ்யத்தை நேர்ப்பிக்கும் வீடியோவுமாக எப்போதும் விரும்பும் பாடல்

3. sunny sunny boney m 


இதைப் பற்றிப் பேச வேறென்ன இருக்கிறது..?நம்ம ராசா அடித்த டார்லிங் டார்லிங் தொடங்கி நாற்பதாண்டுகளாக ஜீவித்து வருகிற அற்புதம்.

4.  man machine


வருங்காலத்தின் இசை என்ற பதாகையோடு நாற்பதாண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட மேன் மெஷின் இசைத்தொகுப்பு இன்றைக்கும் தன்னைப் புதிதாகவே நிரந்தரித்து வருவது மாயமந்திரமல்ல. இதனைக் கேட்பவர்களை அடிமையாக்கும் இசையும் குரலும் ஆன்மாவினுள் ஊசிமருந்தைப் போலத் தன்னைச் செலுத்திக் கொள்ள வல்லது. தி மாடல் என்கிற இந்தப் பாடலின் போலச் செய்த வெர்ஷன் ஷங்கர் கணேஷ் இசையில் பால் நிலவு காய்ந்ததே என்று யாரோ அழைக்கிறார்கள் படத்தில் இடம்பெற்றது.

5.  survivor
 

destiny's child குழுவினரின் அதகளம் இந்தப் பாடல்.இதனைக் கேட்பவர்களின் மனதில் ஒரு மச்சத்தைப் போல் இந்தப் பாடல் படர்ந்துகொள்ளும்.அரிவாள் கொண்டு அரிந்தாலும் அதற்கப்பால் இந்தப் பாடலைப் பெயர்த்தெறிய முடியாது.வேறெங்கேயும் கேட்கவாய்க்காத இசையும் குரலும் வரிகளுமாக இந்தப் பாடல் வருடங்களைக் கடந்தோடும் சங்கீதவெள்ளம்.
                
 நிற்க.இந்தக் கட்டுரை பேய்க்குழந்தை அலையஸ் மனோ பற்றியதல்லவா..?
                     

மனோகர் ஆங்கிலத்தில் இங்கிலீஷ் என்ற சொல்லைக் கூட அறியாதவன். பள்ளிக்கு அருகாமையைக் கூடச் சென்று பார்த்திராதவன். எந்த வாத்தியத்தையும் வாசிக்கத் தெரியாது. இருந்தாலும் அவனைப் பற்றி எழுத நேர்ந்ததற்கான காரணம் இல்லாமல் இல்லை.
     

எங்கள் டாப்பில் இரண்டு மூன்று பேர் மாத்திரம் மற்றவர்களுடைய வருகைக்காகக் காத்திருக்க நேர்கையில் காஃபடீரியா கடைக்குள் அமர்ந்திருப்போம். அப்போது பரபரப்பாக வந்து ஒரு சிகரட்டை ஸ்டைலாகப் பிடித்து முடிப்பான் மனோகர்.அவனை ஆக்டிவேட் செய்ய ஒரே ஒரு சொல் போதும்.மைகல் ஜாக்சனோட சமீபத்திய வீடியோ பார்த்தேன் மாப்ளே.என்னா டான்சூ என்று ஆரம்பிப்போம். அவனும் தன்னாலான சொற்களால் ஜாக்சனை ஆராதிப்பான். எங்களுக்கு சமமாக அவனால் பேசமுடிகிற சில விஷயங்களில் ஒன்றாக அவன் ஜாக்ஸனுடைய நடனத்தை இசையை குரலை கருதினான். அந்த அளவுக்கு புரியாத மொழியின் இறைவனாகத் தன் மௌனங்களின் சன்னமான சப்தங்களையே மலர்களாக்கி ஜாக்ஸனைத் தொழுது போற்றத் தலைப்பட்டவன் மனோகர்.
     

இந்தப் பாட்ல இப்பிடி ஆடுவாப்ள...அந்தப் பாட்ல இப்பிடி சுத்தி இப்பிடி நிப்பாப்ள என்றெல்லாம் மனனத்தின் வீடியோவை ஓடவிட்டுத் தான் அதற்கொரு அற்புதமான வர்ணனையும் தந்துபார்ப்பான் மனோகர்.
             

ஆயிற்றா....மனோ...எனக்காக ஒரே ஒரு பாட்டு பாடேன் ப்ளீஸ்...என்று வற்புறுத்தி டீ சிகரட் என்று வாங்கித் தந்து கெஞ்சவேண்டும்.தன்னை கிண்டலடிக்கிற ஒரு சிறு ஜீவராசி கூட அந்த சுற்றுப்புறத்தில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு தான் மொழியற்ற மொழியிலான தன் பாடலைப் பாட ஆரம்பிப்பான் மனோகர்.


அது ஒரு முழுமையான பாடல் என்று நீங்கள் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். உலகின் எந்த மொழியின் எந்த வார்த்தையும் அந்தப் பாடலில் இடம்பெறாது.ஆனாலும் அமைதியான ஒரு துவக்கம் ஒரு இடத்தில் உறையும் பல்லவி பின் இடையிசை அதற்குப் பிற்பாடு இரண்டு சரணங்கள் எல்லாமும் இருக்கும்.


அவனது பாடலின் பெரும்பான்மை வரிகள் ஒரு சில சொல்லற்ற சொற்களையே கொண்டிருக்கும்
  ஸ்டானிஸ் ஸ்டானிஸ்கி...
  ஸ்டானிஸ் ஸ்டானிஸ் ஸ்டானிஸ்கி...
  ஸ்டானோஸ்டான் 
  ஸ்டானோஸ்டான் 
  ஸ்டானஸ்டானிஸ்டானஸ்ஸ்டானுஸ்டானிஸ்கீ.
  ஸ்டானிஸ்கீ ஸ்டானிஸ்கீ ஸ்டானிஸ்டானிஸ்கீ...............
          

இதனை வாசிக்க முடியாதவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்.எனக்கு இதொரு ரசித்த பாடலின் பல்லவி.கண்களை மூடிக் கொண்டு கைக்குக் கிட்டுகிற டிஃபன் பாக்ஸைத் தாளக்கருவியாக்கித் தன் ஆன்மாவிலிருந்து இந்தச் சொற்களைப் பெயர்த்துப் பாடுவான் மனோகர்.
              

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நிகராகத் தான் மேற்கண்ட பாடலைக் கொள்ள முடிகிறது. வெறுமனே கேட்பனுபவத்தின் மூலமாகத் தனக்குள் ஒரு கேணியைப் போல் ஊறிக் கிளைத்த காலகால இசையைத் தன்னாலான மொழியில் அகழ்ந்து கொடுக்க முற்பட்ட தேசமற்ற ராஜா போலத் தெரிவான் மனோகர். அது இசையின் சூத்திர சூட்சுமங்களுக்குள் அடங்காமற் போயிருக்கலாம். ஆனாலும் அது இசைதான். இந்தச் சொல்லற்ற சொற்களை வைத்துக் கொண்டு ஒன்று இரண்டல்ல பன்னிரெண்டு பாடல்களைத் தயாரித்திருந்தான் மனோகர் என்பது உபசெய்தி. இன்னுமோர் சொல்லத் தக்க சேதி இதனைக் கிட்டத் தட்ட எட்டாண்டு காலத்துக்கும் மேல் பல்வேறுபட்ட தருணங்களில் அவன் பாடக் கேட்டிருக்கிறேன். ஒரு சொல் கூட மாறாது. முதன் முறை பாடும் போது எதை என்ன அழுத்தத்தில் பாடினானோ அதே பிசகேதுமின்றிப் பாடிக் காட்டுவான்.
             

இந்தக் கட்டுரையே என் குற்ற உணர்வின் ஸ்கேன் அறிக்கை தான் என்பேன். அந்தக் காலங்களில் எங்கள் அனைவருக்குமான ஒரு சின்னக் கேளிக்கையாகவே மனோகரைக் கருதினோம் என்பதும் அவனது அற்புதமான குரல்வளத்துக்கும் ஆன்மாவிலிருந்து அவன் தொடர்ந்து தோற்றுவித்த பாடல்களுக்கும் அருகாமையில் நிஜ இசையைக் கொண்டு வந்து சேர்க்க யாதொரு முயல்வையும் என் உள்பட யாருமே எடுக்கவில்லை என்பதும் கணக்கில் வராத பிழைகளைப் போலத் தோற்றமளித்தாலும் கூட கொஞ்சம் வெளிச்சமும் கொஞ்சம் கரவொலியும் தந்திருந்தோமேயானால் மனோகர் இன்றைக்குப் புகழ்பெற்ற தனித்துவக் குரலாளர்களில் ஒருவராகப் புகழ்பெற்றிருப்பான் என்பது மாசற்ற உண்மை. இவன் ஒருவன். இன்னும் இந்தப் பிரபஞ்ச வெளியெங்கும் ஏந்தவேண்டிய விளக்குகளாக ஆங்காங்கே வீதியளவும் வீட்டளவுமாய்க் குறுகி மெல்ல இருளில் கரையும் திறமைகள் தான் எத்தனை எத்தனை..? மலை மீது ஒளிர்ந்தால் அதன் பெயர் ஜோதி அல்லவா..?
 

சமீப பன்னிரெண்டு வருடங்களாக மனோகரை நான் சந்திக்கவில்லை. சந்தித்தால் இரண்டில் ஒன்று தெரியலாம். இன்னும் ஸ்டானிஸ்டானிஸ்கி என்று தன் சொந்த மொழி மேதமையில் இன்னும் கொஞ்சம் பாடல்களை அதிகரித்துக் கொண்டு தன் சுற்றுப்புறத்தை இசைமயமாக்கிக் கொண்டிருக்கலாம். அல்லது வற்றி வறண்ட பிற்பாடு மூடித் தகர்க்கப் பட்ட கேணிகளில் ஒன்றைப் போல் தன் இசைக்கு வெகுதூரம் கலைந்து கரைந்து மறந்து வேறொருவனாக மாறி இருக்கலாம். ஒருவேளை பாடல்களோடு வாய்த்தானெனில் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.


இனியாவது!
 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com