புலன் மயக்கம் - 99

புலன் மயக்கம் - 99

ரகசியத்தின் தொடர்கதை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என்கிற  டிஷ்யூம் படத்தின் பாடலைப் பற்றி ஏற்கனவே பேசியாயிற்று.            இதைப் படைத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி.வைரமுத்து ஜெயராவ் விஜய் ஆண்டனி என இவர்களுக்குப் பதிலாய் யார் பங்கேற்று இப்படி ஒன்று நிகழ்ந்திருந்தாலும் மனசு சொக்கித் தான் போயிருக்கும்.எப்போதாவது பூக்கும் அரியமலர் இந்தப் பாடல்.விஜய் ஆண்டனி எனத் தனியாக கவனிக்க வைத்த பாடல்கள் முன்னரே நிகழ்ந்தபடி இருந்தாலும் இந்தப் பாட்டுத் தான் அல்டிமேட் ஆக அவரை உள்வாங்க உதவியது.ஒரு பாடல் எப்படியெல்லாம் படுத்த வேண்டும் என்று முந்தைய காலத்தின் பாடல்களிடத்தில் ட்யூஷன் கற்றுக் கொண்டு வந்தாற் போலவே அந்தப் பாட்டு அதன் இசைக்கோர்வை நகர்ந்த திசைகள் திரும்பிய முகடுகள் அப்போது வீசிய அந்நேரத்தின் காற்று என எல்லாமுமே பொட்டலம் கட்டி நிகழ்ந்தாற் போல் இதற்குச் சமமோ கூடுதலோ சொல்வதற்கு மனம் கசக்கும் அளவுக்கு அந்தப் பாட்டு மீது அப்படி ஒரு பித்து.இன்னமும் நினைக்கத் தொடங்கிய மாத்திரத்தில் மது அருந்திய குறளி மனதுக்குள் கெக்கலித்தாற் போல் வெதுவெதுப்பானதொரு ஹிட் பாடல் அது.சொன்னதைத் திரும்பத் திரும்பப் புகழ்ந்து கொண்டிருப்பதை முடித்துக் கொண்டு அடுத்த பாராவுக்குள் புகலாம் வாருங்கள்.

விஜய் ஆண்டனி பிரதாப சரித்திரத்தை நல்கிய மாயூரம் வேதநாயகத்தின் பெயரூன்றிப் பிறந்த பெயரர் என்பதை அறிந்த போது சந்ததித் தோட்டத்தில் விளைந்து வந்த விதைக்குத் தப்பாத நற்கனி என்பதும் புரிந்தது.ஊரே பைத்தியம் பிடித்து நாக்க மூக்கா என்றலைந்த போது கோபம் கலந்த வருத்தம் கலந்த ப்ரியம் ஒன்று முளைத்தது.யாராவது எப்படா விடுவீங்க இந்தப் பாட்டை என்று சமகாலாக்களைக் கெஞ்சிப் பிடுங்கிக் கொள்ள மாட்டார்களா என்று ஏக்கம் வந்ததும் உண்மை தான்.ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி தன் இசையால் பின்னணி கோர்வைகளால் பாடத் தேர்வெடுத்த குரல்களால் தான் பாடிய பாடல்களின் தொனியால் மற்றபடி நடிக்கவே தெரியாத அமைதிப்பூங்காவான தன் முகத்தால் எனப் பலவற்றாலும் என்னைக் கவர்ந்ததென்னவோ நிஜம்.

பரணிக்கு விஜய் ஆண்டனி என்றாலே பிடிக்காது.,யாரோ அவனை நீ விஜய் ஆண்டனி மாதிரி இருக்கே என்று சொன்னதாக இன்னொரு நண்பன் சொன்னான்.அதனால் என்ன எனக் கேட்டபோது அதே பெண் வேறு காரணத்துக்காக பரணிக்கு காதல்-நோ சொன்னதாகவும் தெரிவித்தான்.அதனால் என்ன எனக் கேட்காமல் ஒரு நிமிடம் மௌனித்தேன்.அந்த பரணி சான்ஸ் கிட்டும் போதெல்லாம் விஜய் ஆண்டனி மீது எரிந்து விழுவதாக எண்ணிக் கொண்டு என்னிடம் கொட்டுவான்.அவனது மகா சந்தோஷம் இது: 

எக்ஸ்பிரஷன் அப்டின்ற வார்த்தையைக் கூட எக்ஸ்பிரஷனோட சொல்லத் தெரியதுடா இவருக்கு என்பான்.ரொம்ப ஓட்டாதடா..எங்காளு ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் கலக்கத் தான் போறாப்டி என்பேன் விடாமல் கலக்கட்டும் கலக்கட்டும் என்று ப்ர்ர்ர் என சிரிப்பான்.

ஆமால்ல..நான் இவரை ரசிக்கிறேன்ல என்று எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது.தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்ய விஜய் ஆண்டனி அதன் பிற்பாடும் தொடர்ந்து நடித்து ஒரு பிச்சைக்காரன் என்ற அற்புதத்தை நல்கினார்.நடிகராகவும் இசை அமைப்பாளராகவும் பாடகராகவும் அந்தப் படத்தில் வருகிற நூறு சாமிகள் இருந்தாலும் பாட்டை ஏந்தியதை வைத்துக் கொள்ளவும் முடியாமல்   கீழிறக்கவும் இயலாமல் கனத்த குழந்தையைச் சுமந்து தோள் மரத்த தந்தையைப் போலச் சுமக்கலானேன்.தமிழ் சினிமாவின் முன் காலத்தில் செல்வாக்காக இருந்து முற்றிலுமாக இரண்டாயிரமாம் ஆண்டுக்கு அப்பால் கிட்டத் தட்ட கைவிடப் பட்ட அன்னை பாசம் என்ற கதைக்கருவை எடுத்துக் கொண்டு படமாக்குவதன் அபார இடர் ஏற்பை எல்லாம் தாண்டி பிச்சைக்காரன் என்னளவில் நவீனமயமாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட மறுசீரமைக்கப் பட்ட காவியம்.பரணி அடுத்த முறை ஊருக்கு வந்த போது வர்றியா படத்துக்கு போலாம் என்றதும் அவனே மனம் திருந்திய குமாரூ ஆகி வாடா பிச்சைக்காரன் போலாம் என்றான்.ம்ப்ச் வேணாம்டா நான் ரெண்டு தடவை பார்த்துட்டேன் என்றேன்.அவன் விடாமல் வாப்பா...ஊரே நல்லாருக்குன்னு சொல்லுது..நாஞ்சொல்ல வேணாமா...பார்த்துர்றேன் ஒரு வாட்டி என்றான்.நைட் ஷோ சென்றோம் குரு தியேட்டரில் இண்டர்வல்லில் கூட எனக்கு ஒப்பலைப்பா என்று தான் மூணு பாலில் நூறு ரன் எடுக்க வேண்டிய பேட்ஸ் பரிதாப மேன் போல சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

படம் முடிந்து திரும்புகையில் கேட்டேன்.என்னப்பா சொல்றே..என்றதும் குரலே மாறித் தழுதழுப்பாய் சொன்னான்..டே ரவீ...இதென்னடா அரக்கனா இருக்கான் பிச்சிட்டாண்டா...இதை நல்லால்லைன்னு சொன்னா நான் மனுஷனே இல்லடா என்றான்.அதன் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பைப் பற்றி இன்றுவரைக்கும் நொள்ளை சொல்லா நல்வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் என்பது குறிப்பிடத் தக்க குணாம்சம்.  எத்தனையோ அம்மா பாடல்கள் வந்திருக்கின்றன என்பதே சவால் தான்.அதிலும் இந்தப் பாடல் இன்றைய புதுமையும் ஆதிப் பழமையும் ஒருங்கே கலந்து பிசைந்தெடுத்த காலத்தை வசம் செய்த நவசிற்பவசியம்.நிஜமாகவே ஒவ்வொரு முறையும் அன்னை மடி நோக்கிய கண்ணீர்த் துளிகளை நேர்த்துவதென்பது கலை  எனும் தெய்வத்தின் பெருங்கருணை விளைவிக்கிற மனவிவசாயம்.

நினைத்தாலே இனிக்கும் என்ற மாவெற்றி படத்தின் பெயரில் மறுபூத்தல் நிகழ்ந்த போது தொடர்ந்து அந்தப் பாடலைப் பித்தாகிப் ற்பல தடவைகள் கேட்டுக்கொண்டே இருந்தேன். மிகச்சிறப்பான ஒரு பாடலின் மலர்தல் ஒச்சமற்றதாக நிகழ்ந்தேறும்.அதாவது எந்த அளவுக்கு அந்தப் பாடல் இருக்கிறதோ அதுவே போதுமான முழுமையாக மனதில் நிரம்பும்.அப்படி நிரம்புகிற பாடல் அனேகமாக அதற்கேற்ப சாதாரணங்களைக் கொண்ட தோரணமாய் மலரக் கூடுமே ஒழிய போதாமையோ இல்லாமையோ கொஞ்சமும் தோன்றாது.அதே பாடலைப் அதிகதிகம் கேட்டுக் கொண்டே இருக்கையில் முன்பறியாத இயல்பான அரிய முகடுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கும்.ரகசியத்தின் தொடர்கதை எல்லா அத்தியாயங்களிலும் புதிர்த்தன்மை குன்றாமல் இருக்குமல்லவா அது போலத் தான் அந்தப் பாடலும் ஆகும்.இதனைப் பாடிய ஜானகி ஜூனியரின் குரலாகட்டும் ஆண்குரல் அளித்த ப்ரசன்னாவாகட்டும் மாபெரும் பொறுப்பை நிறைவேற்றுகிறாற் போல அழகுற நிகழ்த்தி இருப்பர்.  ஒரு உறவு அழைக்குது ஒரு உறவு தவிக்குது என்ற பாடலை நினைவிருக்கும்.அதன் சர்க்கரைக் கரைசலில் முக்கி எடுக்கப் பட்ட வேறொரு பதார்த்தம் தான் இந்த அழகாய்ப் பூக்குதே பாடலின் முன்னெடுப்பு..

வழி தொலைத்த பறவை ஒன்றின் இலக்கற்ற அலைதல் போல இந்தப் பாடலின் முழு நகர்தலும் யூகத்தினுள் அடங்காத பரவசமாகவே பெருகுகிறது.ஆரம்ப ரன்வேயை விட்டு முற்றிலுமாக விலகி விண்ணேகிப் பிற்பாடு தாழப் பறக்காத உச்சவானப் பறவையாகவே தனிக்கிற இதன் தன்மை அழகானது.மிக முக்கியமான கேட்பு அனுபவம் இந்தப் பாடல்.கோர்ப்பிசையில் விஜய் ஆண்டனி சமரசம் செய்து கொள்வதேயில்லை என்பது அவரது பாடல்களின் தனித்துவம்.இசைஞராக அவரது பெரும்பலமும் கூட.சூப்பர் ஹிட் பாட்டுக்கான எல்லா அம்சங்களும் அமைந்த ப்ளாக் பஸ்டர் தான் மகாயெலா மகாயெலா காய பவ்வா...  இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை.தடையெதும் எங்களுக்குத் தெரிவதில்லை எங்களுக்குக் கால்கள் இன்று தரையில் இல்லை இல்லை இல்லை இல்லை என்று ஆரம்பிக்கும் போதே புல்லட்டில் கையை எடுத்துவிட்டு சீறினாற் போல் உள்ளும் புறமுமாய் கலந்து கட்டி அவஸ்தையின்பமாகவே பெருகத் தொடங்குகிறது.இந்தப் பாட்டில் எனக்கு மிகவும் கவர்ந்த அம்சம் இதன் இணைப்பிசை.லேசான எள்ளலை இசைப்படுத்தினாற் போலவே படுத்தி எடுத்திருப்பார் ஆண்டனி.பலமான குரலும் லேசாய் சாய்ந்தொலிக்கும் இசையும் சற்றே சமரசம் செய்து கொள்ளும் உடன்பாடும் குரலும் என ஆண்டனியின் சூத்திரத்தில் இருக்கிறது சூட்சுமம்.எத்தனை முறை கேட்டாலும் புதிய முத்தமாய்த் தன்னை அதிகரித்துக் கொள்கிறது இந்தப் பாடல்.கேட்டுத் தீராத இசைப் பேராழி. 

வந்தது வேட்டைக்காரன்.விஜய் ஆண்டனியின் தி பெஸ்ட் ஆல்பம் எவர் எதுவென்றால் என்னளவில் வேட்டைக்காரன் தான்.அந்தப் படத்தின் முழு டிஸ்குமே கண்ணில் ஒற்றிக் கொள்ளுமளவு பெப்பி அண்ட் வெரைட்டி என்றால் நிசம.அதிலும் கரிகாலன் காலைப் போல என்றாரம்பிக்கிற அராஜகத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.மெல்லிய கேள்விபதில் டெக்னிக்கில் ஆரம்பிக்கிற இந்தப் பாடல் ஒவ்வொரு அடியிலும் புதிர்த் தன்மையாய் உருவெடுத்து அதுவே அடியிறுதியில் நீர் நிரம்பிய பலூனாக வெடித்துச் சிதறி அடுத்த அடியின் மீது பூமாரி பொழிவதுமாய் அளவற்ற வண்ணங்களைக் கரைத்துப் பெய்வித்த செயற்கை மழையாய் அட்டகாசம் செய்யும் இந்தப் பாட்டு.சேலையில்லை சேலையில்ல ஜல்லிக் கட்டுக்காளை என்று பெண்குரலாய் முடிகிற முதற் சரணத்திலேயே கேட்பவர்களை ஒருவழி செய்து விட்டு இரண்டாவது சரணத்தில் ஆக்சன் ரீப்ளே செய்தாற் போலத் தான் இன்னுமொரு அற்புதத்தை நிகழ்த்தும்.

கொண்டாட்ட மனநிலை என்பது சினிமாவின் அடிப்படை சிச்சுவேஷன்களில் ஒன்று.நிர்ப்பந்தங்களுக்கான இரையாகவே பாடல்கள் உருவாக்கப்படுவது சினியாகமம்.தவிர்க்க முடியாத ஒன்றைத் தனித்துவமாக மாற்றுவது பெரிய விஷயம்.என்னவோ செய்து கடந்துவிட்டாலே செம்மை சூப்பர் என்று கொண்டாடவேண்டிய அளவுக்கு அத்தனை சிக்கலும் நிர்ப்பந்தமுமானது பாடலுருவாக்கம் எனும் பணி.அதனை சவாலாக எடுத்துக் கொண்டு உச்சத்தை நிரடி வானத்தைக் கீறி வேணமட்டும் மழையைப் பெய்யச் செய்வதென்பது அசாத்தியம்.அப்படி ஒரு பாட்டாகத் தான் கரிகாலன் பாடலின் இசை தொனி நகர்திசை குரல்கள் வரிகள் எல்லாமும் சேர்ந்த அந்தப் பாடல் முழுவதுமே நிகழ்ந்திருக்கும்.இன்னொரு கரிகாலப் பாடல் வரும் வரைக்கும் இதன் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது.

 ழுமையான பரவசத்தை இசைப்பது பெரும்பணி.அதனை அனாயாசமாக செய்துவிடுகிற வல்லமை விஜய் ஆண்டனிக்கு வசப்பட்டிருக்கிறது.பாடகராகவும் நடிகராகவும் அவரது பங்கேற்புகள் கூடுதல் க்ரீடங்கள் தான்.விஜய் ஆண்டனி என்ற இசைக்கலைஞன் அச்சும் அசலுமாய் நமக்கான இசையை நம்மோடு இருந்தபடி நிகழ்த்தித் தருகிற சமகாலத்தின் கலைஞன்.வாழ்க இசை.

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com