பெற்றோர்களை சிறையில் தள்ளுங்கள்!: படித்ததும் கிழித்ததும் பாகம் - 2

பெற்றோர்களை சிறையில் தள்ளுங்கள்!: படித்ததும் கிழித்ததும் பாகம் - 2

தொடர்-6

”எங்களது குழந்தைகளின் உடனடியான தேவைகளில் ஒன்றாகக் கல்வி அமைகின்றது. அக்குழந்தைகளுக்கு அரசு வழங்குகிற வசதிகள் என்பவைகூட கல்வியில் நாட்டம் செலுத்த அவர்களைத் தூண்டப் போதுமானவையாய் இல்லை என்கிற அளவுக்கு எங்களது வறுமை கொடுமையானதாக உள்ளது. அரசின் செலவில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு நேர உணவையாவது அவர்கள் பெறக்கூடிய அளவிற்கு, அவர்களது கல்விக்காகக் கூடுதல் தொகை செலவு செய்யப்பட வேண்டும்.”   

 -ராவ் சாகிப் எல்.சி.குருசாமி 1923 மார்ச் 2 ஆம் தேதி நீதிக்கட்சி ஆட்சியில் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை.

ம்…

96 ஆண்டுகள் முன்னர் ஒலித்த இந்தக் குரல்தான் சத்துணவுத் திட்டத்திற்கே அடித்தளமிட்டது.

அன்று நம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல நினைத்தாலும் வீட்டில் தாண்டவமாடிய வறுமை அவர்களை வேலைக்கு அனுப்பியது. ஓரளவிற்கு வாய்ப்பு இருந்தவர்களுக்குக்கூட சாதியின் பெயரால் கல்விக்கூடங்களின் கதவுகள் திறக்க மறுத்தன. யார் தயவிலாவது உள்ளே நுழைந்தவர்களுக்கோ சோத்துக்கு வழியில்லை. அப்போதுதான் ஒரு நேர உணவுக்காவது உத்திரவாதம் கொடுக்கச் சொல்லி குரல்கள் ஒலித்தன. அதில் மிக முக்கியமானது எல்.சி.குருசாமி அவர்களுடையதுதான்.

பகலில் வேலைக்குச் சென்றவர்கள் இரவுப் பள்ளிகளில் சேர்ந்து கல்வியைக் கற்றனர். பள்ளிகளில்  உயர்கல்வி முடித்தவர்கள் கல்லூரிகளில் கால் வைக்க இயலாது தவித்தார்கள். அவ்வேளையில்தான் 1927 இல் நீதிக்கட்சி அமைச்சர் முத்தையாவால் கல்வி, வேலை வாய்ப்புகளில் கொண்டுவரப்பட்ட சகல சாதியினருக்குமான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதன் விளைவு…? அதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் சிறுபான்மையோருக்கும் திறவாமல் இறுக மூடப்பட்டிருந்த    கல்விக்கூடங்களின் கதவுகள் வேறு வழியே இன்றி திறக்கப்பட்டன.

அதன் விளைவால் கல்வி கற்று…. வேலை பெற்று… வெளியில் வந்த அந்த மூதாதையரின் வாரிசுகள்தான் நாம்.

ஊர்விட்டு ஊர் வந்து உயர்கல்வி கற்கும் மாணவர்கள் எங்கு தங்குவார்கள்? யார் வீட்டின் கதவுகள் அடைக்கலம் தரும் அவர்களுக்கு? அதன் விளைவாய்த் தோன்றியவைதான் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்குமான மாணவர் விடுதிகள்.

”அப்பன் தொழிலைத்தான் மகன் செய்யதாக வேண்டும்” என்கிற குரூர எண்ணத்தில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறை  தந்தை பெரியாரால் துரத்தி அடிக்கப்பட்டது.

ராஜாஜி மூடுவிழா நடத்திய எண்ணற்ற பள்ளிகள் மீண்டும் காமராஜரால் திறக்கப்பட்டு… முன்னர் சென்னையில் சில பள்ளிகளில் மட்டும் அளிக்கப்பட்ட ஒருவேளை உணவு தமிழகத்தின் பல கிராமங்களுக்கும் மதிய உணவுத் திட்டமாக விரிவு பெற்றது.

பின்னர் 1982 இல் எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழகத்தின் கிராமங்கள் மட்டுமின்றி அனைத்து நகரங்களுக்குமான சத்துணவுத் திட்டமாக அது பரவலாக்கப்பட்டு… முட்டையோடு இணைந்த ஊட்டச்சத்தாக இன்று  உலா வருகின்றது.

அப்பா அம்மாக்கள் துயிலெழுப்பி குளிப்பாட்டி உணவூட்டி உடைமாற்றி சொந்த வாகனத்தில் பள்ளிக்கு  கொண்டு போய் விடப்படும் மாணவனுக்கும்…

ரோட்டோரக் கடையில் கடனுக்கு டீ குடித்து… ஆறு மணிக்கே ரோல்காலுக்கு ஆஜராகி… குப்பை லாரியில் ஏறிப்போகின்றவர்கள் மகனுக்கும் ஒரே தேர்வு…

இதில் அதிக மார்க் எடுப்பவனே அறிவாளி. அவனே ”தகுதி”, “திறமை” உள்ள மகாமேதை.

ஒரே மாதிரியான வாழ்க்கைச் சூழல் இருந்து…

ஒரே மாதிரியான பள்ளிகள் இருந்து…

ஒரே மாதிரியான  கல்வி முறை இருந்து…

ஒரே மாதிரியான தேர்வும் இருந்தால் சரி.

தகுதியைப் பற்றியும் திறமையைப் பற்றியும் வானம் கிழியும் அளவுக்குப் பேசலாம்.

ஆனால்…

ஒருபக்கம் செல்வமும் சொகுசுமான வாழ்க்கை….

மறுபக்கம் பஞ்சைப் பராரியான வாழ்வு.

ஒருபக்கம் காசை நீட்டினால் குதிரை ஏற்றத்தில் இருந்து கம்ப்யூட்டரின் அப்டேட்டட் வெர்ஷன் வரை ஊட்டிவிடும் பள்ளிகள்….

மறுபக்கம் கழிப்பறைக்குக்கூட வக்கின்றி ஓடுகள் உடைந்த வகுப்பறைக்கு நடுவே மாணவர்களுக்கு போதிக்கும் பள்ளிகள்.

ஒருபுறம்…

சி.பி.எஸ்.சி.(Central Board of Secondary Education - CBSE)…

சி.ஐ.எஸ்.சி.இ.(Council for the Indian School Certificate Examinations - CISCE)…  ஐ.பி.(International Baccalaureate - IB)…

ஐ.ஜி.சி.எஸ்.இ.(International General Certificate of Secondary Education – IGCSE) போன்ற பாடத் திட்டங்களில் படித்தவர்கள்…

மறுபுறமோ மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள்.இதுதான் இந்த நாட்டினுடைய கல்வியின் இன்றைய லட்சணம்.

ஆனால் இந்த எழவெல்லாம் எதுவும் புரியாமல் கிளாஸ் பர்ஸ்ட்… ஸ்கூல் பர்ஸ்ட்… ஸ்டேட் பர்ஸ்ட்… என தங்கள் குழந்தைகளைச் சித்ரவதை செய்யும் மனநோயாளிகளாகிப் போனார்கள் மத்தியதர வர்க்கப் பெற்றோர்கள். இவர்கள் மனநோயாளிகளாகிப் போனது போதாதென்று தங்கள் மழலைகளையும் மனநோயாளிகளாக்குகிறார்கள் இந்த மடையர்கள்.

 விளைவு?

பத்தாவது தோல்வியென்றால் தற்கொலை…

+2 தோல்வியென்றால் தற்கொலை…

என அந்தப் பிஞ்சுகள் சிறுவயதிலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றன. வாழவே தெரியாத இவர்கள்தான் தங்கள் குழந்தைகளை ”வளர்த்து”கிறார்களாம். இவர்களும் பீதியாகி இவர்களது பிள்ளைகளையும் பீதிக்குள்ளாக்கி உலகத்தின் தொடர்புகளே அற்றுப்போன நடைபிணங்கள் ஆக்குகிறார்கள் இந்த மூடர்கள். கேட்டால் ”காம்பிடிஷன்” அந்த அளவுக்காம்…

…..த்தூ.

என்னைக் கேட்டால் எந்த மாணவராவது தேர்வில் தோல்வியென்று தற்கொலை செய்து கொண்டால் அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிய பெற்றோருக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாவது அளித்து ”உள்ளே” தள்ள வேண்டும். உண்மையாக யோசித்தால் அவர்களது சாவுக்கு முழுமுதற் காரணமே இவர்கள்தான். அரசுகள் தங்களது அபத்தமான கல்விக் ”கொள்கை”களால் பலிவாங்கியது போதாதென்று இவர்களும் தங்கள் பிள்ளைகளைக் காவு வாங்குகிறார்கள். பள்ளிப் பருவத்தில் பலியாவதைத் தடுக்க இதற்கென தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி பத்து பெற்றோராவது தண்டிக்கப்பட்டால்தான் எஞ்சியுள்ள இளம்தலைமுறையாவது மிஞ்சும்.

நாளை :

ரசுக்கோ…

ஆசிரியர்களுக்கோ…

பெற்றோர்களுக்கோ…

இதுவரை ஓலமிட்டதெல்லாம் எவர் காதிலும் விழாதபட்சத்தில்…

”நேற்று” என்னவெல்லாம் நமது மூதாதையர்களுக்கு நடந்ததோ அதுவே நமது ”நாளை”யாகவும் இருக்கும்.

வரலாறு மீண்டும் தனது பாடத்தை முதலில் இருந்து தொடங்கும்.

அவ்வளவே.

(இத்தொடரை நாம் செவ்வாய்க்கிழமைதோறும் படிக்கலாம் கிழிக்கலாம்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com